பல நாள் கனவு நிறைவேறிய தருணம்

பல நாள் கனவு நிறைவேறிய தருணம்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

பல நாள் கனவு நிறைவேறிய தினம்

ஏழாம் வகுப்பு படிக்கும் போது தான் குளச்சலிலிருந்து திருவைக்கு குடியேறி வந்தோம்.

திருவை பள்ளிகூடத்தில் சேர்ந்து பள்ளிப்படிப்பை தொடந்தேன்.

ஆனால் மதரசாவுக்கு என்ன செய்ய?

குளச்சலில் ஸமஸ்த கேரளா பாடம் திட்டம் உண்டு.

திருவையில் அந்நேரம் ஸமஸ்த கேரளா பாடத்திட்டம் வரவில்லை. பொதுவாக பெத்தம்மாக்களிடம் தான் அந்த நேரத்தில் பிள்ளைகள் ஓதி வந்தார்கள்.

பிறகு ஹத்தாதியா மதரசாவில் இலங்கை காரர் ஒருவர் ஓதி கொடுக்கிறார் என்று கேள்விப்பட்டு நான் உட்பட பலரும் அங்கு போய் சேர்ந்தோம்.

இலங்கையை சேர்ந்த ஸக்கீ அஹ்மது என்கிற ஒரு மாணவர் கொஞ்சம் காலம் திருவையிலும் பிறகு தக்கலை ஸமதானிய்யா அரபிக்கல்லூரியிலும் ஓதிக்கொண்டிருந்த காலம்..

சாயங்கால வேளையில் சைக்கிளில் தக்கலையிலிருந்து திருவைக்கு வந்து எங்களுக்கு ஓதி தந்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

நாளடைவில் ஏராளமான பிள்ளைகள் மதரசாவில் சேர ஆரம்பித்தார்கள்.ஒரு உஸ்தாது மட்டும் போதாது என்ற நிலை ஏற்பட்டது.

பிறகு மாலிக் ஸமதானி,
ஸமது ஸமதானி,
அன்சர் ஸமதானி,
கலீல் றஹ்மான் காதிரி,
ஹம்ஸா ஸமதானி இப்படி ஏராளமான உஸ்தாதுமார்களும் பிள்ளைகளுக்கு ஓதி கொடுக்க வரத்துவங்கினார்கள்.

ஸக்கீ உஸ்தாத் ஒரு திறமையான மனிதர், குறுகிய காலத்திலேயே பல மொழிகளை கற்றுத்தேர்ந்தவர், அவர் ஓதும் கல்லூரியிலும் மிக நன்றாக படிப்பவர், எவருக்கும் புரியும்படியாக வகுப்பு எடுக்கும் திறமைக் கொண்டவர்,

லீவு நாட்களில் கலீல் உஸ்தாத் அவர்களின் வீட்டில் தங்குவார்கள். அந்நேரங்களிலும் பிள்ளைகளுக்கு அதிகமாக நேரம் எடுத்து பாடம் சொல்லி கொடுப்பார்கள்..

நான், முஹம்மது அன்வரி போன்றோர் அரபிக்கல்லூரிக்கு செல்ல காரணமாக இருந்தவர்களும் அவர்களே!

அவர் இலங்கை காரராக இருந்தாலும் குமரி மாவட்டத்தில் அவர் போகாத ஊரே கிடையாது.

அவரது பட்டமளிப்பு விழாவுக்கு உஸ்தாதின் குடும்பத்தினர் பல பேர் வந்த வேளையில் நம் வீட்டிற்க்கும் வருகைப் புரிந்தார்கள்.

எனக்கு சின்ன வயதிலேயே இலங்கைக்கு போக வேண்டும். உஸ்தாதின் ஊரை பார்க்க வேண்டுமென்பது எனது நீண்ட நாள் ஆசை. ஆனால் அது பல காலமாக நிறைவேறாமலேயே இருந்தது.

கழிந்த வருடம் இந்த தினத்தில் தான் என் ஆசை நிறைவேறியது.

இறையருளால் இலங்கைக்கு சென்று உஸ்தாதை சந்தித்தேன்.

மாஷா அல்லாஹ்.

நல்ல முறையில் கவனித்தார்கள், பல வலிமார்களின் தர்காக்களுக்கு ஸியாரத் செல்லும் பாக்கியம் கிடைத்தது.

உஸ்தாது அவர்கள் அங்கே ஒரு ஹிஃப்ளு மதரசா நடத்தி வருவதோடு ஏராளமான சமூக சேவைகளும் செய்து வருகிறார்கள்.

மதரசா பிள்ளைகளுக்கு தேவையான ஏராளமான புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்கள்.

நல்ல பணிவு, அழகான பேச்சு, நல்ல குணம், நல்ல உபசரிப்பு என உஸ்தாதை குறித்து ஏராளமாக சொல்லலாம்.

இலங்கை முஸ்லிம்களை குறித்தும் ஏராளம் சொல்ல இருக்கிறது.

குறிப்பாக முஸ்லிம்களின் தமிழ் பேச்சு என்னே மிகவும் கவர்ந்தது.

அவர்கள் குழந்தைகளை மகன், மகள் என்று அழைப்பதை கேட்டாலே மெய்சிலிர்க்கும்.

இலங்கை ஒரு பறக்கத்தான பூமி, எல்லா வளங்களும் கொண்ட அழகான பூமி.

உஸ்தாது அவர்களின் ஒரு அண்ணன் கொழும்பில் வஃபாத்தானார்கள்.
அவர்கள் தக்கலை ஸமதானிய்யா மதரசாவுக்கு தாராளமாக உதவி செய்யக்கூடியவர்கள்.

அவர் மரணித்து மூன்று தினங்கள் கழிந்த பிறகு அவர்களின் குடும்பத்தினரை சந்திக்க தக்கலை ஸமதானிய்யா மதரசா நிறுவனர், குமரி மாவட்ட ஜமாஅத்துல் உலமா தலைவருமான அபூ ஸாலிஹ் ஹழரத் அவர்கள் இலங்கைக்கு வந்தார்கள்.

பிறகு இரு தினங்கள் கழித்து உஸ்தாதின் வீட்டுக்கு வந்தார்கள்.பழைய நினைவுகள் குறித்து இரவில் பேசிக்கொண்டிருந்தோம்.

மறுநாள் இலங்கையிலுள்ள முக்கியமான ஸியாரங்களுக்கு செல்ல நாடியிருந்தோம்.மறுநாள் விடிந்தது.ஸியாரங்களுக்கு செல்கிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்தேன்.
ஆனால் தீடிரென இரவில்
அபூ ஸாலிஹ் ஹழ்ரத் அவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் ஆகிவிட்டது.ஸியாரத் பயணம் ரத்தானது.இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால் அவ்விடங்களுக்கு இனியும் செல்ல வேண்டும்..

இரண்டு வாரம் அங்கு தங்கினேன் நாட்கள் நகர்ந்ததே தெரியவில்லை.

ஒரு சின்ன அறுவை சிகிச்சை முடிந்து உஸ்தாத் அவர்கள் ஓய்வில் இருக்கிறார்கள்.அல்லாஹ் அவர்களின் நோயை விரைவில் குணப்படுத்தி அருள்புரிவானாக!..

இன்ஷா அல்லாஹ் நேரம் கிடைக்கும் போது இனியும் இலங்கை பயணம் குறித்து விரிவாக எழுதலாம்.

M.#சிராஜுத்தீன் அஹ்ஸனி.