அந்த நாட்களை எப்படி மறக்க முடியும்..
அந்த நாட்களை எப்படி
மறக்க முடியும்
சரியாக ஒரு வருடத்துக்கு முன்.
வியாழக்கிழமை
இஷா தொழுதுவிட்டு வந்து வீட்டில் அமர்ந்திருந்த போது அன்பு நண்பர் அப்துல்லா அன்வரி வந்தார்.
என் வாப்பா, உம்மா மற்றும் சில உறவினர்கள் சனிக்கிழமை உம்ரா செல்லவுள்ளனர்.
நாளை வீட்டுக்கு வாருங்கள் என்று காலையில் அழைப்பு விடுத்து சென்ற அவர்.
"உம்ராவுக்கு வாறீகளா?
நான்கு டிக்கெட்டுகள் இருக்கு.இப்போ பாதி காசு தந்தால் போதும் மீதி பின்னர் தந்தால் போதும் என்று அழைத்தார்.
காலையில் உம்ரா செல்பவர்களை வழியனுப்ப அழைத்தவர் இரவு " உம்ராவுக்கு வாறீளா? எனக் கேட்ட போது திகைத்து விட்டேன்.
என்ன பதில் சொல்வது? வியாழக்கிழமை முடியப்போகிறது. வெள்ளிக்கிழமை மட்டும் இடையில் இருக்கிறது." என் மனைவியிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன் "
என்றேன் காரணம்.
திருமணம் முடிந்த நாள்முதல் " என்னை உம்ராவுக்கு அழைத்து செல்லுங்கள்" என்றுக் கேட்டு கொண்டே இருந்தாள்.
இருவரும் சேர்ந்து உம்ரா செல்வதற்கான பொருளாதார நெருக்கடி காரணமாக " இன்ஷா அல்லாஹ் போகலாம்" என்று கூறி அவளை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தேன்.
"அப்துல்லா அன்வரி உம்ராவுக்கு அழைக்கிறார் நாளை மறுநாள் போக வேண்டும்" என்று அவளிடம் சொன்னபோது முதலில் அவள் நம்பவில்லை.
"இரண்டு நாட்களில் எப்படி சாத்தியம்?
நீங்கள் பாஸ்போர்ட் கொடுக்கவில்லை, உம்ரா வகுப்பில் பங்கேற்கவில்லை, மருத்துவ பரிசோதனை செய்யவில்லை" என்று சந்தேகங்களை அடுக்கினாள்.
"பாஸ்போர்ட் நகலை அனுப்பினால் போதும் அவர்கள் மற்றவற்றை பார்த்து கொள்வர் என்று அப்துல்லா அன்வரி சொல்கிறார் என்றேன்.
"அப்படியானால் நீங்கள் சென்று வாருங்கள் "இன்ஷா அல்லாஹ" பின்னர் நாமிருவரும் சேர்ந்து செல்லலாம்! என்று மிக்க மகிழ்வுடன் சொன்னாள்.
ஆசைப்பட்ட அவள் இன்றி நான் மட்டும் செல்வது எனக்கு சங்கடத்தைத் தந்தாலும் அவளது வற்புறுத்தலுக்கிணங்க அன்வரியிடம் வருகிறேன் என்றேன்.
அப்துல்லா அன்வரி வேறு சில ஆலிம் நண்பர்களிடமும் இச்சலுகையைக் கூறி அழைப்பு விடுத்தார். இறுதியாக நான், அப்துல்லா அன்வரி, ஸெய்யித் அன்வரி, நண்பர் ஹஸ்புல்லா முஸ்லியார் ஆகிய நால்வரும் உம்ரா போக முடிவு செய்தோம்.
மறுநாள் வெள்ளிக்கிழமை.
உம்ரா செல்லவிருக்கும் குடும்பத்தினரை சந்திக்க சென்ற போது நானும் நாளைக்கு உம்ரா வருகின்றேன் என்றபோது அவர்கள் நம்பவில்லை.
ஜும்ஆ தொழுதுவிட்டு உம்ரா செல்லும் விபரத்தை நண்பர்கள், உறவினர்களுக்கு அலைபேசி மூலம் சொன்ன போது ஆச்சரியப்பட்டனர்.எப்படி சாத்தியம்? என்றே எல்லோரும் கேட்டனர்.
உம்ராவுக்கு அழைத்து செல்வதாகக் கூறி பாவப்பட்ட பல ஆலிம்களின் பணத்தை ஆட்டையைப்போட்ட பல்வேறு விதமான பல கதைகளை சொல்லி ஏமாந்து விடாதே என எச்சரித்தனர்.
நான் சொன்னேன்.
"அப்படி ஏதும் நடக்காது.
எனக்கு தெரிந்த நம்பிக்கையான, நாணயமானவர்கள்..
துஆ செய்யுங்கள் என்று சொல்லி முடித்தேன்.
சனிக்கிழமை விடிந்தது.
இன்ஷா அல்லாஹ்.
தொடர்வோம்..
M.சிராஜுத்தீன் அஹ்ஸனி