ரமளான் சிந்தனைகள் பாகம் 30

ரமளான் சிந்தனைகள் பாகம் 30

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#ரமளான்_பிறை_30_ஸ்பெஷல்
#அஸ்ஸலாமு_அலைக்க
#யா_ஷஹ்ரு_ரமளான்
அபு ஹாஷிமா

ரமளான் முதல் பிறை தெரிந்தும் அதை ஏற்றுக் கொள்ளாமல்
நோன்பை மறுப்பதும் தவறு .
ஷவ்வால் பிறையே தெரியாமல்
நோன்பை கைவிட்டு பெருநாள் கொண்டாடுவதும் தவறு.

இந்த இரண்டுமே இப்போது நம்மிடம்
குற்றமில்லாத செயல்களாக மாறி விட்டன.

ரமளானின் ஒரு நோன்பை வேண்டுமென்றே விட்டு விடுவது
அதற்குப் பகரமாக எத்தனை நோன்பு நோற்றாலும் விடுபட்ட அந்த ரமளானின் ஒரு நோன்புக்கு ஈடாகாது.

குமரி மாவட்டம் குளச்சலில் ரமளான் முதல் பிறையை ஜமாத் நிர்வாகிகள் கண்டு
அதை முறையாக ஜமாத்துல் உலமாவுக்கும்
மாவட்ட காஜிக்கும் அறிவித்து முதல் நோன்பைநோற்றார்கள்.
அதே தினத்தில்தான் கேரளாவிலும்
அரபு நாடுகளிலும் வேறு சில நாடுகளிலும் முதல் நோன்பு நோற்றார்கள்.

தமிழ்நாட்டின் தலைமை காஜி குளச்சல் பிறையை ஏற்றுக் கொள்ளாததால்
குமரி மாவட்டம் தவிர்த்து மற்ற மாவட்ட தமிழக முஸ்லிம்கள் அடுத்தநாளே நோன்பு நோற்றார்கள்.

நோன்பு 29 முடிவுற்ற நிலையில்
நேற்றைய தினம் ஷவ்வால் பிறை தென்படவில்லை.
அதனால் குமரி மாவட்டத்திலும் கேரளத்திலும் இன்று 30 வது நோன்பை
முஸ்லிம்கள் நோற்று வருகிறார்கள்.
ரமளானின் முப்பது நோன்புகளை
நிறைவாக பிடிப்பது பெரும் பாக்கியம்.
அது குமரி , கேரள மக்களுக்குக் கிடைத்திருப்பது இறைவன் உவந்தளித்த
பெரும் கொடை.
அல்ஹம்துலில்லாஹ் !

அருமையான இந்தக் கடைசி நோன்பை
பிடிக்க வாய்ப்பிருந்தும் பிடிக்காமல் சவுதியின் பார்க்காத பிறையை
ஏற்றுக் கொண்ட சிலர் பெருநாள்
கொண்டாடி இருக்கிறார்கள் .

சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும்
உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் தோற்றம் தருவதில்லை என்ற மிக எளிமையான
உண்மையைக்கூட பலரது மனங்கள்
ஏற்றுக் கொள்ள மறுப்பதுதான்
பெரும் விந்தை.

உம்முல் குரா கலன்டரையும்
ஹிஜ்ரா கலன்டரையும் பின்பற்றும்
சில அறிஞர்கள் அதை பின்பற்றாத
மற்றவர்களை சிவகாசி கலன்டரை
பின்பற்றக் கூடியவர்கள் என்று பகடி செய்கிறார்கள்.
சிவகாசி கலன்டரை பார்த்தா குளச்சலில்
பிறை பார்த்தார்கள்.
சிவகாசி கலன்டரை குற்றம் சொல்பவர்கள்
அதை தங்கள் வீடுகளிலோ கடைகளிலோ மாட்டி இருக்க மாட்டார்கள் என்று நம்புவோம்.
சிவகாசி கலன்டரில் இன்றைய தேதி
21-04-2023 என்றுதான் போட்டிருக்கிறான்.
உம்முல் குரா கலன்டரில் ஷவ்வால் ஒன்று என்று போட்டிருக்கிறான்.
இவங்கல்லாம் பேங்க் செக்கில்
ஷவ்வால் 1 - 10 - 1444 ன்னு
அரபில எழுதித்தான் பணம் எடுப்பாங்கபோல.

எப்படியோ ...
ரமளான் வரும்போது எல்லோருக்கும் சந்தோஷம் வருகிறது .
அது நம்மை விட்டுப் போகும்போது
சங்கடம் ஏற்படுகிறது.

" ரமளானின் சிறப்பை அறிந்தவர்கள்
வருடம் முழுவதும ரமளானாக இருக்கக் கூடாதா என நினைப்பார்கள் "
என்றார்கள்
கண்மணி_நபிகள்_நாயகம்
ஸல்லல்லாஹு
அலைஹி_வஸல்லம்_அவர்கள்.

முப்பது நோன்பையும் பூர்த்திசெய்து
இறையருளையும் நபிநேசத்தையும்
உவந்து மகிழும் முஸ்லிம்கள் அனைவருக்கும் இதயம் நிறைந்த
வாழ்த்துக்கள் !