ரமளான் வினா விடை பாகம் 26
புனித_ரமளான்
வினா_விடை
பாகம்_26
119 : லைலதுல் கத்ர் என்று பெயர் சொல்லப்படுவதற்கான காரணம்...?
அறிஞர்கள் இது சம்பந்தமாகப் பல காரணங்களைக் கூறுகின்றார்கள். அதிலும் மிக முக்கியமான இரண்டு காரணங்கள் காணப்படுகின்றன.
முதற்காரணம்: இந்த இரவு மிக கண்ணியமும் மகத்துவமும் அபிவிருத்தியும் பொருந்திய இரவாகும். அல்லாஹ் கூறுகின்றான்: நாம் அதை அபிவிருத்தி செய்யப்பட்ட ஓர் இரவில் இறக்கினோம். (அத்துகான்:3)
இரண்டாவது காரணம்: அந்த இரவில்தான் அவ்வருடத்தில் நடக்கவிருக்கின்ற மனிதர்களின் கால வரையறைகளையும் உணவு விஸ்தீரணங்களையும் மனிதனுக்கு அல்லாஹ் நிர்ணயித்த அனைத்தையும் மலக்குமார்கள் எழுதுவார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: அந்த இரவில்தான் உறுதிசெய்யப்பட்ட ஒவ்வொரு காரியமும் பிரிக்கப்படுகின்றன. (அத்துகான்:4)
120 : அந்த இரவு தற்போதும் உள்ளதா? அல்லது அது உயர்த்தப்பட்டுள்ளதா?
அந்த இரவு தற்போதும் இருக்கின்றது என்பதே மிகச் சரியான கருத்தாகும்.
121 :லைலதுல் கத்ர் எந்த இரவில் ஏற்படும்?
இந்த விடயத்தில் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்கள்.
இமாம் அல்ஹாபிழ் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னுடைய பத்ஹுல் பாரியில் நாற்பது கூற்றுக்களைக் கொண்டுவந்துள்ளார்கள்.
122 : இருபத்தி ஏழாவது நாளில் ஏற்படுவதற்கு மிக வாய்ப்புள்ளது என்பதற்கு ஆதாரம் உண்டா...?
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அஹ்மத் (2149) என்ற கிரந்தத்தில் ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது.
அதாவது, ஒரு மனிதர் நபிகளாரிடத்தில் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு நின்று தொழுவது கடினமாக உள்ளது. எனவே, எனக்கு ஓர் இரவை ஏவுங்கள். அந்த இரவில் அல்லாஹ் எனக்கு லைலதுல் கத்ருடைய பாக்கியத்தை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். நபியவர்கள் கூறினார்கள்: 'நீ ஏழாவது நாளை பற்றிப்பிடித்துக்கொள்!
அத்தோடு உபை இப்னு கஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இருபத்தி ஏழாவது தினத்தில்தான் வரும் என்று சத்தியம் செய்பவராக இருந்தார்.' (முஸ்லிம்:762)
123 : லைலதுல் கத்ர் இரவின் அடையாளங்கள்
1. அந்த இரவு குளிராகவோ, சூடாகவோ இருக்காது. மாறாக சாந்தமாகவும் அமைதியாகவும் காணப்படும்: நபியவர்கள் கூறியதாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அந்த இரவு இலகுவானதாகவும் ஒளிமயமானதாகவும் இன்னும் குளிரற்றதாகவும் சூடற்றதாகவும் காணப்படும்.” (இப்னு குஸைமா: 2190, இப்னு ஹிப்பான்: 3688)
இந்த ஹதீஸைப் பொறுத்தவரையில் பலவீனமானதாக இருந்த போதிலும் அதை உறுதிப்படுத்தும் முகமாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் வாயிலாக இப்னு குஸைமாவில் (2192) இன்னொரு ஹதீஸ் பதிவாகியுள்ளது. எனவே, இந்த ஹதீஸ் பலமுள்ள ஹதீஸாக மாறிவிடுகின்றது. (அஸ்ஸஹீஹா: 2190)
2. மழை பொழியும்: இதற்கு ஆதாரமாக அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் வாயிலாக புஹாரீ, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் ஒரு செய்தி பதிவாகியுள்ளது. நபியவர்கள் கூறுகின்றார்கள்: “நான் தண்ணீரிலும் களிமண்ணிலும் சுஜுது செய்பவனாகக் கனவில் கண்டேன்.”
3. அன்றைய நாள் காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மங்கிய நிலையில் காணப்படும்: நபியவர்கள் கூறியதாக உபை இப்னு கஃப் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அன்றைய நாள் காலையில் சூரியன் அதன் ஒளிக்கதிர்கள் மங்கிய நிலையில் உதயமாகும்.” (முஸ்லிம்: 762)
124 : அந்த இரவுகளில் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன?
அந்த இரவுகளை நாம் அதிகம் நின்று வணங்குவதிலும் துஆக் கேட்பதிலும் கழிப்பது நபிவழியாக இருக்கின்றது. நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “யார் லைலதுல் கத்ர் இரவில் ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்த வண்ணமும் நின்று வணங்குவாரோ அவருடைய முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” (புஹாரீ: 1901, முஸ்லிம்: 759)
ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் நபிகளாரிடத்தில் அல்லாஹ்வின் தூதரே! லைலதுல் கத்ர் இரவை நான் அடைந்துகொண்ட சமயத்தில் எதைக்கூற வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? எனக்கேட்டேன். அப்போது நபியவர்கள்
اللهم إنك عفو تحب العفو فاعف عني
என்ற துஆவைக் கூறுவாயாக எனக் கூறினார்கள்.” (அஹ்மத், ஸஹீஹ் இப்னு மாஜா: 3105, ஸஹீஹுத் திர்மிதீ: 2789)
125 : லைலதுல் கத்ருடைய சிறப்புக்கள்
1. இது குர்ஆன் இறங்கிய இரவாகும். அல்லாஹ் கூறுகின்றான்: “நாம் இந்தக் குர்ஆனை லைலதுல் கத்ர் என்ற இரவில் இறக்கிவைத்தோம்.” (அல்கத்ர்:1)
2. அல்லாஹ் அந்த இரவின் விவகாரங்களை கண்ணியப்படுத்தியுள்ளான். அல்லாஹ் கூறுகின்றான்: “(நபியே!) லைலதுல் கத்ர் இரவு எது? என்பதை உமக்கு அறிவித்தது எது?” (அல்கத்ர்:2)
3. இவ்விரவு லைலதுல் கத்ர் இரவல்லாத ஏனைய ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும். அல்லாஹ் கூறுகின்றான்: “லைலதுல் கத்ர் இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும்.” (அல்கத்ர்:3)
4. சங்கைமிக்க மலக்குமார்களும் ரூஹ் எனப்படும் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் இவ்விரவில் இறங்குவார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: “மலாஇகாமார்களும் ரூஹ் என்ற ஜிப்ரீலும் அவ்விரவில் இறங்குவார்கள்.” (அல்கத்ர்:4)
5. ஈமானுடையவர்களுக்கு அவ்விரவு சாந்தியானதாக இருக்கும். அல்லாஹ் கூறுகின்றான்: “அதிகாலை உதயாமாகும் வரை இவ்விரவு சாந்தியானதாகும்.” (அல்கத்ர்:5)
லைலதுல் கத்ர் இரவு மறைக்கப்பட்டதற்கான நோக்கம்
இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:
லைலதுல் கத்ர் இரவு மறைக்கப்பட்டதன் நோக்கம் என்னவென்றால் அந்த நாளை மக்கள் தேடிக்கொள்வதில் அதிகம் முயற்சி செய்வார்கள் என்பதாகும். அது குறிப்பிடப்பட்டிருப்பின் அந்த நாளில் மாத்திரம் அமலை சுருக்கிக் கொண்டிருப்பார்கள் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.
126 : லைலதுல் கத்ர் என்பது இந்த உம்மத்தினருக்கு மாத்திரம் குறிப்பாக்கப்பட்டதா?
இது விடயத்தில் இமாம் நவவீ அவர்கள் இந்த உம்மத்தினருக்கு மாத்திரம் குறிப்பாக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றார்கள்.
*****************************
இன்ஷா அல்லாஹ்
தொடரும்...
வெளியீடு
M.P.H.
திருவிதாங்கோடு...
குமரி மாவட்டம்.....