மலிக்குல் முளப்ஃபர் மகத்தான மன்னர்
#மலிகுல்_முளப்ஃபர்
#மகத்தான_மன்னர்....
வரலாற்றில் மலிகுல் முளப்ஃபர் என்ற பெயரில் பல மன்னர்கள் இருந்தாலும் மீலாத், மவ்லித் விழா விஷயத்தில் குறிப்பிடப்படுபவர் அபூஸயீத் குக்குபரி இப்னு ஜைனுதீன் இப்னு அலி அவர்கள் ஆவார்.
மலிகுல் முளஃப்பர் அவர்கள் ஹிஜ்ரி 549-630 காலகட்டத்தில் கலீஃபா ஸுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கு முழுமையான ஆதரவளித்து, ஸுல்தான் அவர்களின் கீழ் இர்பல் பகுதிகளை ஆட்சி செய்தார். மேலும் ஸலாஹுத்தீன் அய்யூபி அவர்கள் தனது சகோதரி ராபியா காத்தூனை அவருக்கு திருமணமும் செய்துகொடுத்தார்.
மன்னர் முளஃப்பர் அவர்களின் தந்தையாரும், சிறந்த போர்வீரருமான ஜைனுதீன் அலி குஜக் அவர்கள்தான் இர்பலை ஒரு நகரமாக உருவாக்கினார். ஏராளமான பகுதிகளில் அவர் ஆதிக்கம் செலுத்திய போதிலும் அவற்றை மௌஸிலில் குத்புதீனின் வாரிசுகளான ஆட்சியாளர்களுக்கு வழங்கி விட்டு இர்பலை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
மதரஸாக்கள் மற்றும் பிற நிறுவனங்கள் உட்பட ஏராளமான வக்ஃபு சொத்துக்களை அவர் வைத்திருந்தார். நன்மையை இலட்சியமாகக் கொண்ட நட்பு, குடும்ப உறவுகள் மற்றும் நல்ல சூழ்நிலைகள் மன்னர் முளப்ஃபரை வடிவமைத்தது
அதிகாரப்பூர்வமான, பிரபலமான வரலாற்றாசிரியர்கள் பலரும் மன்னர் முளப்ஃபரைப் பற்றி எழுதியுள்ளனர்.
அல்பிதாயா வந்நிஹாயா இப்னு கஸீர், வஃபாயத்துல் அஃயான் இப்னு கல்லிகான் ஷஹ்ரத்துத் தஹாப் இப்னு இமாத் மிர்ஆத்துஸ் ஸமான் இப்னுல் ஜவ்ஸி, அல்ஹாவி லில் ஃபதாவா இமாம் ஸுயூத்தி தாரீக் ஹஃபிழ் அத்தஹபி, என முளஃப்பர் மன்னரின் வரலாறு கூறும் பட்டியல் நீண்டு செல்கிறது.
அவரது நற்பண்புகள், சேவைகள் மற்றும் அய்யூபி பாரம்பரியத்தை அவர் செயல்படுத்திய விதம் அனைத்தும் வரலாறு ஆகும்.
அவரது ஆன்மீகம், அரசியல் மற்றும் சமூக சேவைகள் வரலாற்றாசிரியர்களால் பெரிதும் சிலாகித்து எழுதப்பட்டுள்ளன. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாத் தினக் கொண்டாட்டம் தொடர்பான விரிவான செய்திகளும், பாராட்டுகளும் அவற்றில் குறிப்பிடத்தக்கவை
மன்னர் முளப்ஃபர் தனது சொந்த விருப்பப்படி துவங்கிய ஒரு செயல் என்ற நிலையில் இதை ஒரு மோசமான வழக்கம் என்று எந்த அறிஞரும் குறிப்பிடவோ அல்லது விமர்சிக்கவோ செய்யவில்லை.
மலிகுல் முளப்ஃபர் பற்றி இப்னு கல்லிகான் அவர்கள் கீழ்க் கண்டவாறு எழுதுகிறார்.
"அவரைப் போன்ற நன்மைகள் செய்த வேறு எந்த மன்னரையும் எனக்குத் தெரியாது. அவர் பல நற்செயல்களையும், சமூக சேவைகளையும் செய்தார். தர்மம் செய்வதை மிகவும் விரும்பினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு நாளும் ஏழை, எளிய, வறிய மக்களுக்கு ரொட்டி குவியல்களை விநியோகித்தார். உதவி கேட்க வரும் ஏழைகள் எப்போதும் அவரது வீட்டைச் சுற்றி காணப்படுவார்கள். அவர்களுக்கு ஆடைகளையும், இதர உதவிகளையும் வழங்குவார்.
இதற்காக பல்வேறு பகுதிகளில் சிறப்பு விநியோக மையங்கள் அமைக்கப்பட்டன. ஊனமுற்றோர் மற்றும் பார்வையற்றோர் தங்குவதற்கு வீடுகள் கட்டிக் கொடுத்தார். அவ்வீடுகள் எப்போதும் அகதிகளால் நிரம்பியிருந்தன. திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் அவர்களைச் சந்திப்பார். ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து அவர்களின் நல்வாழ்வுக்கான உதவிகள் செய்வார். அந்த மக்களுடன் நகைச்சுவையாக உரையாடுவார். அவர்களின் தனிமை மற்றும் உதவியற்ற தன்மையின் வலியை நீக்கினார்.
விதவைகள், அனாதைகள் மற்றும் தெருக் குழந்தைகளுக்கு அவர் தனி வீடுகள் நிறுவினார். குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கவும், அவர்களைப் பராமரிக்கவும் வளர்ப்புத் தாய்மார்களை நியமித்தார். அத்தகைய வீடுகளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் கிடைப்பதற்கு வழி வகைகள் செய்தார். அவற்றின் நிர்வாகத் திறனை உறுதி செய்வதற்காக அவ்வப்போது அங்கு சென்று கண்காணித்தார்.
ஷாஃபி மற்றும் ஹனஃபி மத்ஹபுகளைக் கற்பிப்பதற்காக மதரசாக்கள் நிறுவி, ஆசிரியர்களை நியமித்தார். அவற்றைப் பார்வையிட்டு உணவு தயாரித்து வழங்கி, நபி புகழ் அமர்வுகளை ஏற்பாடு செய்தார்.
அவரது வாழ்க்கையின் ஒரே மகிழ்ச்சி, கவிதைகள் பாடச் சொல்லி கேட்பதுதான். ஆனால் அதற்காக மார்க்க விரோதமான மார்க்கம் தடை செய்த எதையும் பயன்படுத்தவோ அல்லது அத்தகைய பொழுதுபோக்குகளை தனது நாட்டிற்கு கொண்டு வரவோ அனுமதிக்கவில்லை.
நாட்டில் ஸூஃபிக்களுக்காக இரண்டு மையங்களை அவர் நிறுவினார். நிரந்தர குடியிருப்பாளர்கள் மற்றும் வழி போக்கர்கள் என எப்போதும் ஏராளமான ஸூஃபிகள் அங்கு தங்கி இருந்தனர். நிறுவனத்தையும், அதன் குடியிருப்பாளர்களையும் பராமரிப்பதற்காக பல வக்ஃபுகளை நிறுவினார்.
ஸூஃபிக் குடியிப்புகளில் தங்கும் ஸூஃபிகள் திரும்பிச் செல்லும்போது தங்கள் பயணச் செலவுகளைச் பெற்றுச் செல்ல வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்தார். மன்னர் பெரும்பாலும் அவர்களுடன் நேரம் செலவிடுவதை விரும்பினார்.
வருடத்தில் இரண்டு தடவைகள் காஃபிர்கள் கைகளில் சிக்கிய முஸ்லிம்களை மீட்பதற்காக, உயர் பதவியில் உள்ளவர்களின் நட்பு குழுக்களை அண்டை நாடுகளுக்கு அனுப்பினார். யாத்ரீகர்களுக்கு சேவை செய்ய தன்னார்வலர்களை நியமித்தார். ஹரமைனுக்கு வருபவர்களின் தேவைகளுக்குப் பயன்படுத்த ஆயிரக்கணக்கான தங்க நாணயங்களுடன் குழுக்களை அனுப்பினார். அரஃபாவிலும் பிற இடங்களிலும் நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்தினார்." (வஃபாயத்துல் அயான்)
இப்னு கஸீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகிறார்கள்.
"மலிகுல் முளஃப்பர் நீதிமான், புத்திசாலி மற்றும் துணிச்சலானவர். ஹிஜ்ரி 549 முஹர்ரம் 27 செவ்வாய்க்கிழமையன்று மெளஸிலில் பிறந்தார். பதினான்கு வயதில் ஆட்சிக்கு வந்தார். அவர் தனது அதிகாரப்பூர்வ அரச வாழ்க்கையில் ஆன்மீகமும், இலட்சியங்களும் கெட்டு போகாமல் பாதுகாத்தார். அவரைப் பார்த்தவர்களும், அறிந்தவர்களும் அவரது நிர்வாக நடவடிக்கைகளை வரலாற்றில் பதிவு செய்தனர்.
வரலாற்றாசிரியர்களில் யாருக்கும் மன்னர் முளஃப்பர் மீது எந்த வெறுப்பும் இருக்கவில்லை. ஆனால் பின்னர் வந்த சில மத சீர்திருத்த வாதிகள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாத் விழாவைக் கொண்டாடுவதைக் காரணம் காட்டி பித்அத் சம்பந்தமாக அவதூறுகளைப் பரப்பினர். அவர்களுக்கு அப்போது சரி, பின்னரும் சரி மார்க்க அறிஞர்களின் ஆதரவு இருக்கவில்லை.
அவர் ஹிஜ்ரி 630 ரமளான் 14 வெள்ளிக்கிழமை இரவு தனது இல்லத்தில் வைத்து வஃபாத்தானார். அவரது அன்புக்குரிய மனைவி ரபியா காத்தூன் ஹிஜ்ரி 643 இல் வஃபாத்தானார். மன்னர் முளப்ஃபர் அவர்களின் கப்ர் ஷரீஃப் கூஃபாவிலும், ரபியா அவர்களின் கப்ர் காசியூனிலும் உள்ளன.