Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#அகிலத்தூதர்_புவனத்தில்
#உதித்த_போது.

கோதறப் பழுத்த மதுரமே கனிந்த கொவ்வை வாய் அரம்பையர் வாழ்த்தி, வரவேற்க அன்னை #ஆமீனா தம் வயிற்றிலிருந்து பூதல மீதினில் "தீனெனும் பயிர்க்கோர் செழுமழையெனலாய், இருளெனும் குபிரின் குலமறுத்தற நெறி விளக்க மறுவிலாதெழுந்த முழுமதி"யாய் 'வையகமெல்லாம் வாழ்த்தெடுப்ப' வந்தார்கள் நபிகள் கோமான்
(ஸல்) அவர்கள்!*

பேரருளின் தாயகமாய் விளங்கிய பெருங்குணக்குன்று நாயகம்(ஸல்) அவர்கள், இவ்வையகத்தில் வந்துதித்த காலை பெரும் அற்புதங்கள் பலவற்றை அல்லாஹ் நிகழ்த்தி காட்டி அண்ணலரின் வருகையினை அகிலத்தவருக்கு அறிவித்தான்.

வானுலகிற்குச் செல்லும் சில #ஷெய்த்தான்கள், இறைவனால் அமரர்களுக்கிடப்படும் ஆணைகளை ஒட்டுக்கேட்டு வந்து தத்தம் எஜமானர்களான சோதிடர்களுக்கு சொல்லி வந்தன! அவற்றைச் செவிமடுக்கும் #அச்சோதிடர்கள் ஊராருக்கு பொய்யையும், புளுகலையும் பன்மையாய்க் கலந்து கூறி ஏமாற்றி வந்தனர்! பெருமானார் பிறந்த காலை இப்படி ஒட்டுக்கேட்கச் செல்லும் ஷெய்தான்கள் எரி நட்சத்திரங்களால் எறியப்பட்டு விரட்டப்பட்டார்கள்.

#கஃபாவினுள்ளே கொலு வைக்கப்பட்டிருந்த விக்ரகங்கள் தலை கீழாய் விழுந்து உருண்டன! சிதறிமாய்ந்தன!*

நீண்ட நெடுங்காலமாக #பாரசீகர்களால், எண்ணையும், நெய்யும் வார்க்கப்பட்டு, வணங்கப்பட்டு வந்த யாக நெருப்பு அணைந்தது.

#ஸாவா எனும் நகரத்தில் இருந்த வற்றாத ஏரி வற்றி வரண்டு போயிற்று. அத்தோடு அது நெருப்பையும் கக்கியது!

#மதாயின் நகரத்திலிருந்த மன்னன் கிஸ்ராவின் அரண்மனை தூளாயிற்று!

#பேய்_ஜின்கள் எல்லாம் அலறிப்புடைத்துக்கொண்டு ஓடி ஒளிந்தன! உலகமே ஒளிமயமாய் காட்சி தந்தது!

இவைகளன்றி இன்னும் எத்தனையோ வகை அற்புதங்கள் பெருமானாரின் பிறப்பினால் ஏற்பட்டது.

ரஹ்மத்துன் லில் ஆலமீனாக
ரப்புன் லில் ஆலமீனால் அனுப்பபட்ட அண்ணலர் நபி (ஸல்) அவர்களின் பிறப்பினால் அகிலமே புத்தொளிபெற்றது! அனாச்சாரங்கள் அழிந்தன!! அமைதி தவழ்ந்தன!!!

ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

எழுதியவர்.
மர்ஹுமா_M_மைமூனா_காதர்.

தகவல்.
M.சிராஜுத்தீன்_அஹ்ஸனி.