கந்தூரியும் கெளது நாயகமும்
.........#கந்தூரியும்_கௌது_நாயகமும்..!.....
*ரபீயுல் ஆகிர் மாதத்தில் உலகெங்கிலும் வாழும் முஸ்லீம்கள் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களை நினைவுகூர்ந்து கந்தூரி வழங்குகின்றனர்.
அதைக் கொண்டு பசியில் வாடும் அநேகருக்கு உணவு கிடைக்கிறது.
அவ்லியாக்களின் ஜீவிய காலத்திலும் அவர்களின் மறைவிற்குப் பின்னும் அவர்களின் விருப்பங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்படுகிறது என்பதற்கு கந்தூரி ஒரு சான்று..!
ஒருமுறை அஷ்-ஷைகு முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குத்பாவில் பின்வருமாறு உரையாற்றினார்கள்:
"பசித்தவனின் வயிற்றுக்குக் கொடுக்கப்படும் ஒரு கவள உணவு, ஆயிரம் பள்ளிவாசல் கட்டிடங்கள் கட்டுவதை விடவும், கஃபாவிற்கு போர்த்தப்படும் ஜரிகைத் திரையை விடவும், இரவெல்லாம் இறைவனை நின்று வணங்கி சிரம் பணிவதை விடவும், மறுப்பாளர்களுக்கு எதிராக வாளேந்தி போரிடுவதை விடவும், வருடம் முழுவதும் வெயிலில் நோன்பிருப்பதை விடவும் சிறந்ததாகும், பசித்தவனுடைய வயிற்றுக்குச் செல்லும் மாவிலிருந்து வெளிப்படும் ஒளியானது பிரகாசமான சூரியனின் ஒளியைப் போன்றதாகும், பசித்தவருக்கு உணவளிப்பவர் உண்மையில் மகிழ்ச்சியானவர், உலகின் செல்வங்கள் அனைத்தும் எனக்கு வழங்கப்பட்டாலும் அவற்றை பசித்தோருக்கு உணவளிக்க செலவிடுவேன்." என்றார்கள்.
சுமார் 900 வருடங்களை நெருங்கி முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களை நினைவுகூர்ந்து அவர்களின் நேசர்கள் தொடர்ந்து உணவு வழங்குகின்றனர்..
சமீப காலங்களில் இதற்கு எதிராக பிரச்சாரம் செய்து நன்மையான ஒரு காரியத்தை பித்அத் என்றும் ஷிர்க் என்றும் கூறி மக்களை வழிகெடுக்கின்றனர்..
இவர்களின் பேச்சை பொருட்படுத்தாமல் இறைநேசர்களின் வழியில் நடப்பது இஸ்லாமியர்களுக்கு நன்மை பயக்கும்..!
இஸ்லாத்தில் சிறந்தது எது? என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்ட போது, "நீ அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் உரைப்பதும்' பசித்தவருக்கு உணவளிப்பதும் ஆகும்." என்றார்கள்.
எனவே அவ்லியாக்களின் பெயரில் கொடுக்கப்படும் கந்தூரி மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்றல்ல ஆகுமாக்கப்பட்ட ஒன்றே என்றறிந்து கொள்வோம், கியாமநாள் வரையில் அவர்களைத் தொடர்ந்து நினைவுகூறுவோம்..!
ஆக்கம்: கலீல்இப்ராஹீம்
தகவல்:
M_சிராஜுத்தீன்_அஹ்ஸனி