ரவ்ழாவின் சுற்றுச் சுவர்களில் பதிக்கப்பட்டு இருக்கும் முத்திரைகள்.
#ஹுஜ்ரத்துஷ்_ஷரீஃபா_சுவரில்
#புனித_முத்திரைகள்......
அண்ணல் எம்பெருமானார் முஹம்மத் முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓய்வெடுக்கும் புனித இடம் — அல்ஹுஜ்ரத்துஷ் ஷரீஃபா. அதிசயங்களின் சொர்க்கமான அந்தப் புனித இடம் எக்காலத்தும் மிகுந்த பயபக்தியுடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது!
உண்மையான முஃமின்களுக்கு தங்களுடைய சொந்த இல்லங்களைவிட மிகுந்த நேசத்திற்குரியது ஹபீப் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகத்துவமிக்க இல்லம். ஏனெனில் அவ்வில்லம் புனிதமானது, மகத்துவம் மிக்கது, அருள் வளம் மிக்கது.
அங்கு கால் பதிக்கவும், தரிசிக்கவும், ஹுஜ்ரத்துஷ் ஷரீஃபாவுக்கு முன் நின்று ஸலாமும், ஸலவாத்துச் சொல்லவும் முஃமின்களின் மனம் எப்போதும் ஏங்கிக் கொண்டிருக்கும். அந்த ஆசையை நிறைவேற்றுவதே நபி மணிக் காதலர்களின் வாழ்நாள் ஆசை! அந்த ஆசை நிறைவேறுவதற்காக இரவும் பகலும் ஸலாமும், ஸலவாத்துமாய் நாட்களை எண்ணுகின்றனர்.
அவர்கள் அந்தப் புனித தர்பாரை அடைந்து விட்டால் மற்ற அனைத்தையும் மறந்து விடுகின்றனர். கண்களிலும், காதுகளிலும், இதயத்திலும் ஹபீப் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமே! கண்களிலிருந்து அவர்களை அறியாமல் வழியும் கண்ணீர்த் துளிகள் தீராத அன்பின் முத்திரைகளாக அந்த சொர்க்கத்தில் விழும்.
அங்கு தங்கி இருக்கும் பாக்கியமான நாட்களில் உறக்கத்தின் போது, கனவுகளில் அண்ணல் அவர்களின் ஒளிமயமான பொன் வதனம் காட்சி தந்தால் . . . ஓ! அது எத்துணை மகத்தானதொரு பேறு!
இறைவன் அனைத்து நாட்டங்களையும் நிறைவேற்றுவானாக ஆமீன்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓய்வெடுக்கும் ஹுஜ்ரத்துஷ் ஷரீஃபா முதல் மிம்பர் வரையுள்ள ரவ்ழா ஷரீஃப், அந்த வழியே முஃமின்கள் ஸலாம் சொல்ல நடந்து செல்லும் பாதை, சுவர்கள், தூண்கள், வாயில்கள், வளைவுகள் மற்றும் மிம்பர் ஆகியவற்றில் நபிமணிக் காதலர்களின் மனதை வருடும் கவிதைகளும், வசனங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. கடந்த கால ஆட்சியாளர்கள் இதில் மிகுந்த கவனமும், ஆர்வமும், அக்கறையும் செலுத்தியதை வரலாற்று நூல்களில் காணலாம். (உதாரணத்துக்கு டாக்டர் அந்தர் சுல்ஹீ அவர்களின் லம்ஹாதும் மினல் மஆலிமின் நபவிய்யா (-لمحات من المعالم النبوية)
அந்த சுவனப் பூந்தோப்பில் வெவ்வேறு காலகட்டங்களில் பொறிக்கப்பட்ட எழுத்தோவியங்களைப் படித்து முடிக்க நீண்ட நேரம் தேவைப்படும். பல காரணங்களால் அங்கு அதிக நேரம் செலவிட முடிவதில்லை.
يا خير من دفنت بالقاع أعظمه ..........
نفسي الغداء لقبر أنت ساكنه ..........
என்ற வரிகள் ஹுஜ்ராவின் சுவர் தூண்களின் மீது தங்க நிறத்தில் அழகாக பொறிக்கப்பட்டிருப்பதைத் தெளிவாகக் காணலாம். சுவரில் வரிசையாக பொறிக்கப்பட்டிருக்கும் மஹப்பத் நிறைந்த கவிதை வரிகள் வாசிப்பவர்களின் மனதுக்கு இதமாகவும், கண்களுக்கு குளிர்ச்சியாகவும் இருக்கின்றன.
يا سيدي يا رسول الله خذ بيدي........
يا من تفجرت الأنهار نابعة .........
يا من يقوم مقام الحمد منفردا .......
இக்கவிதைகளில் பெரும்பாலானவை ஸெய்யிதுனா முஹம்மத் முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நேரடியாக அழைக்கும், உதவி தேடும் வரிகள் என்பது மிகவும் ஆச்சரியமானது.
சவுதி ஸலபி படையெடுப்பிற்கு முன் ஹரமைனிக்கு ஒரு பொற்காலம் இருந்தது. வரண்டுபோன நஜ்தியன் வஹாபிசத்தின் ஊடுருவலுக்குப் பின் புனிதத் தலங்களில் இருந்த பல புனித நினைவுச் சின்னங்கள் சிதைக்கப்பட்டன, அழிக்கப்பட்டன. பலரும் பலதையும் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்றனர். இந்தக் கருப்பு கரங்கள் ஹுஜ்ரா சுவர்களில் பொறிக்கப்பட்டிருந்த பல கவிதைகளை பார்வையாளர்களின் கண்களில் இருந்து மறைக்க வண்ணம் பூசி மறைக்கவும் முயன்றன.
رب الجمال تعالى الله خالقه ..........
என்ற வரி பச்சை மேற்பரப்பில் தங்க நிறத்தில் தெளிவாகத் தெரியும்; ஆனால் அதற்கு முன் உள்ள வரிகள் பச்சை வர்ணம் பூசி மறைக்கப்பட்டுள்ளது.
ஹுஜ்ராவின் கதவுக் கைப்பிடியில் உலகப் புகழ் பெற்ற அமர காவியமான கஸீததுல் புர்தாவின் கவிதை வரிகள் பித்தளையில் பொறிக்கப்பட்டுள்ளன.
ஹுஜ்ரா ஷரீஃபிலும், ரவ்ழா ஷரீஃபிலும், புனித மதீனாவில் பிற முக்கிய இடங்களிலும் மிச்சமிருக்கும் விலைமதிப்பற்ற வரலாற்றுச் சின்னங்களைப் பதிவு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால்.
நவீன தொழில் நுட்பத்தின் உதவியுடன் அவை சேகரிக்கப்பட்டு பின் வரும் தலைமுறைகளுக்கு கைமாறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் . . . . .
ஆனால் ஹாஜ்! ஹாஜ்! என்ற ஷுர்த்தாவின் அழைப்பு வந்தால் ஒன்றும் நடக்காது. அவர்கள் ஆட்சியாளர்களின் ஏவலாளர்கள் அல்லவா!
தமிழில்:
சிராஜுத்தீன்_அஹ்ஸனி