Sirajudheen Ahsani
எழுத்தாளர்

ஹலீமா பீவி கண்ட அதிசயங்கள்..

திருநபி. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பாலூட்டிய ஹலீமத்துஸ் ஸஃதிய்யா ரலி அவர்கள் குறித்து இந்நூல் விளக்குகிறது..

பாலூட்டிய பாக்கியவான்கள்...

நபி (ஸல்) அவர்களுக்கு தாய்ப்பால் கொடுத்தவர்கள் பாக்கியம் பெற்றவர்களாகும்.
அந்த காலகட்டத்தில் அரேபியாவில்
பரவலாக நிலவிய
ஒரு சம்பிரதாயம் தான் தன் குழந்தைகளுக்கு மற்றொருவர்
தாய்ப்பால் கொடுப்பது.
இந்த அடிப்படையில், நபி (ஸல்) அவர்களுக்கு பல சகோதரிகள் தாய்ப்பால் கொடுத்தனர்.
அவர்களில் முக்கியமான
ஒருவர்
ஹலிமத் ஸஃதிய்யா (ரழி) அவர்கள்.
இவரைத் தவிர
நபி (ஸல்) அவர்களுக்கு வேறு பலர் தாய்ப்பால் கொடுத்துள்ளனர்
அந்த தாய்மார்களின் பெயர் பட்டியலை பாருங்கள்:

1. ஆமினா பின்த் வஹப் (ரழி) அவர்கள்..

ஆமினா பின்த் வஹப் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் தாயார் ஆவார்.
அவர்கள் ஏழு நாட்கள் முத்து நபி (ஸல்) அவர்களுக்கு தாய்ப்பால் கொடுத்தார்கள்.
அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நான்கு வயதாக இருந்தபோது அபவாஃ என்னும் இடத்தில் வைத்து வஃபாத்தானார்கள். அவர்கள் மதீனாவில் உள்ள நபி (ஸல்) அவர்களின் தாய்மாமாக்களைப் பார்த்து மக்காவிற்குச் செல்லும் வழியில் வைத்து வஃபாத்தானார்கள்.

2 :ஷுவைபத்

ஷுவைபத் என்பவர்
அபூ லஹபின்
அடிமைப் பெண் ஆவார்.
நபி (ஸல்) அவர்களின் பிறப்புச் செய்தியைக் கேள்விப்பட்ட அபூலஹப் ஸுவைபத்தை விடுவித்ததாக கிரந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸுவைபத் இஸ்லாத்தைத் தழுவினாரா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டும் காலத்தில், அவர் தனது மகன் மஸ்ரூஹுக்கும் தாய்ப்பால் கொடுத்துள்ளார்.
ஹலீமத்துஸ் ஸஃதிய்யா (ரலி) நாயகத்திற்கு பாலூட்டுவதற்கு முன்பு
சிறிது காலம் மட்டுமே
ஸுவைப் நாயகத்திற்கு
தாய்ப்பால் கொடுத்தார், நபி (ஸல்) அவர்களுக்கு முன்பு ஹம்ஸா என்ற ஒரு நபருக்கும்
நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு, அபூ சல்த் பின் அப்துல் அசாத் என்ற ஒரு குழந்தைக்கும் ஸுவைபத் தாய்ப்பால் கொடுத்துள்ளார்..
நபி (ஸல்) அவர்களின் பிறப்பை அபூ லஹபுக்கு அறிவித்தது ஸுவைபத்து தான் அதனால்தான் அபூ லஹப் ஸுவைபத்தை விடுவித்தார் எனவும்
கூறப்படுகிறது
மேலும் இதன் விளைவாக ஒவ்வொரு திங்கட்கிழமையும்
அபூ லஹபின் தண்டனை குறைக்கப்படுகிறது என்றும் இமாம் சுஹைலி (ரஹ்) கூறியுள்ளார்.

3. உம்மு ஹம்சா.

பனூ ஸஃத் கோத்திரத்தைச் சேர்ந்தவர்
உம்மு ஹம்ஸா அவர்கள்.
இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படும் ஒரு செய்தி:
நபி (ஸல்) அவர்கள் ஹலீமத்துஸ் ஸஃதிய்யா (ரழி) அவர்களிடமிருந்து தாய்ப்பால் குடிக்கும் கட்டத்தில் தான் உம்மு ஹம்சா நாயகத்திற்கு தாய்ப்பால் கொடுத்தார்.'

4. கவ்லா பின்துல் முன்திர்.

கவ்லா பின்த் அல்-முன்திர் பின் ஸைத் பின் லபீத் இ கிராஷ் பின் அமீர் பின் அதிய்யி பின் நஜ்ஜார் உம்மு புர்தத்துல் அன்சாரிய்யா என்பதுதான்
இவர்களது
தந்தைவழிப் பரம்பரை
மேலும் இவர் நபி (ஸல்) அவர்களுக்கு தாய்ப்பால் கொடுத்ததாக
இமாம் அதவ்வியைப் போன்ற அறிஞர்கள்
கூறியுள்ளனர்.

5. உம்மு அய்மன் பரகா
(ரலி) அவர்கள்

உம்மு அய்மன் (ரலி) அவர்கள் ஆமினா (ரலி) அவர்களுக்கு மகப்பேறு பராமரிப்பு அளித்தவர் என்றும் கருத்துக்கள் உள்ளன.
இந்தக் கருத்தை யூசுப் சாலிஹி போன்ற வரலாற்றாசிரியர்கள் வலுப்படுத்தியுள்ளனர்.

6. பனூ ஸுலைம் கோத்திரத்தைச் சேர்ந்த
ஒரு பெண்.

7. பனூ ஸுலைம் கோத்திரத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்.

8. பனூ சுலைம் கோத்திரத்தைச் சேர்ந்த மூன்றாவது ஒரு பெண்.

இந்த மூன்று பெண்களின் பெயர்கள் வரலாற்றில் பதிவு செய்ததாக காண முடியவில்லை..

அபூ உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

'ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் பனூ ஸுலைம் கோத்திரத்தினரின் வசிப்பிடத்தைக் கடந்து சென்றார்கள்.
அந்த சமயத்தில்
மூன்று பெண்கள் அவருக்குப் பாலூட்டினார்கள்.
(ஸுபுலுல் ஹுதா. 1/378)

9 : உம்மு ஃபர்வா (ரழி) அவர்கள்

வரலாற்றாசிரியர் அல்-முஸ்தக்ஃபிரியின் கூற்றுப்படி
உம்மு ஃபர்வா
நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டியவர்களில் ஒருவர்.
சிலர் அவர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்ததாகவும் கூறுகிறார்கள்.

10. ஹலீமத்துஸ் ஸஃதிய்யா (ரழி) அவர்கள்

ஹலீமா பின்த் அபுது ஐப் பின்
அப்துல்லாஹ் பின் சிஜ்னத் பின் ரிஸாம் பின் நாஸிரத் பின் ஃபுஸய்யா பின்
ஸஃத் பின் பக்ர் பின் ஹவாசின் என்பதுதான் இவர்களது தந்தை வழிப் பரம்பரை.

அவர் உம்மு கப்ஷா என்ற பட்டப்பெயரிலும் அறியப்படுகிறார். (ஸுபுலுல் ஹுதா 1/378)


‌ சகோதரர்கள்

நபி (ஸல்) அவர்களுக்குத்
பால்குடி உறவு மூலம் பல சகோதரர்கள் உண்டு.
அவர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. ஹம்சத் பின் அப்துல் முத்தலிப் (ரழி) அவர்கள்.

தியாகிகளின் தளபதி என்று பெயரில் அறியப்படும் ஹம்சா (ரழி) அவர்கள்
நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தையும் பால்குடி உறவு மூலம் சகோதரருமாவார்.

இப்னு அப்பாஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலி (ரழி) அவர்கள்
நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்:

'அல்லாஹ்வின் தூதரே, ஹம்சாவின் மகளை நீங்கள் திருமணம் செய்து இருக்கலாமே? அவர்கள் ஒரு உயர் குரைஷ் குடும்பத்தைச் சேர்ந்தவர்களல்லவா?

அவள் பால்குடி உறவு மூலம் என் சகோதரனின் மகள்.
என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (இப்னு மாஜா 1938)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பாலூட்டிய உம்மு ஹம்ஸா ஹலீமத்துஸ் ஸஃதிய்யா
போன்றோரிலிருந்து தான் ஹம்ஸா (ரழி) அவர்களும்
பால் குடித்தார்கள்.

2 : அபூ சலமா (ரலி) அவர்கள்.

அப்துல்லாஹ் இப்னு அப்துல் அசத் இப்னு ஹிலால் (ரலி) என்பதுவே அபூ சலமா (ரலி) அவர்களின் யதார்த்தமான பெயர். நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தின் ஆரம்பத்திலேயே இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.

உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்கும் அபூ சலமாவுக்கும் தாய்ப்பால்
ஸுவைபத் என்ற பெண்மணிதான் தந்தார்கள்.
(புகாரி. 5101)

3. மஸ்ரூஹ்

ஸுவைபத் நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டும் காலத்தில் மஸ்ரூஹ் என்ற குழந்தைக்கும்
பாலூட்டினார்கள் என்பதை
நாம் முன்னர் விளக்கியுள்ளோம். புண்ணிய நபி (ஸல்) அவர்களும் கதீஜா (ரலி) அவர்களும் ஸுவைபத்தை கண்ணியப்படுத்தவும்
அவருக்காக
ஆடைகளை மெக்காவிற்கு அனுப்பி வைக்கவும் அவரது மகன் மஸ்ரூஹைப் பற்றி நலம் விசாரிக்கவும் செய்வது வழக்கம்
(ஸுபுலுல் ஹுதா. 1/377)

4. அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரலி) அவர்கள்..

உமைமா பின்த் அப்துல் முத்தலிப் என்பவர் தான் இவரது தாயார்.
நபி (ஸல்) அவர்கள் தாருல் அர்கமில்
தங்கள் போதனைகளை பரவலாக்குவதற்கு முன்பே இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்.
பத்ர் மற்றும் உஹதுப் போர்களில் பங்கேற்ற அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் அபிசீனியாவிற்கும் பின்னர் மதீனாவிற்கும் குடிபெயர்ந்தார்கள். (அல்-இஸ்திகாபா. 3/878)

5. அப்துல்லாஹ் இப்னு
அல்-ஹாரிஸ்.

இவர் நபி (ஸல்) அவர்களின் தந்தைவழி சகோதரர் என்று யூசுஃப் ஸாலிஹி
பதிவு செய்துள்ளார்.

6. ஹஃப்ஸ் இப்னு அல்-ஹாரிஸ்.


இவரும் நபி (ஸல்) அவர்களின் தந்தைவழி சகோதரர் என்று
இமாம் இப்னு ஹஜர் அல்-அஸ்கலானி கூறியுள்ளதாக
யூசுப் சாலிஹி கூறியுள்ளார்.

7. உமையா பின்த் அல்-ஹாரிஸ்.

உமையா பின்த் அல்-ஹாரிஸ்
நபி (ஸல்) அவர்களின் மற்றொரு சகோதரி ஆவார்.
அபு சயீத் அல்-லைசபுரி (ரலி) அவர்கள் இதை தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.

8. ஷைமா

ஷைமாவுக்கு ஹுதாஃபா என்றும் பெயரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஷைமா ஹலீமா பீவி (ரலி) அவர்களின்
மகள் ஆவார்.
அபூ வஜ்ஸத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருமுறை ஷைமா நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்:

'அல்லாஹ்வின் தூதரே, தாய்ப்பால் உறவுமுறை மூலம் நான் உங்கள் சகோதரியாகும்.'

'அதற்கு என்ன ஆதாரம்?' -நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

'நாம் முட்டு குத்தி விளையாடிக் கொண்டிருந்தபோது
என் முதுகில் நீங்கள் கடித்ததற்கான அடையாளம் இன்னும் இருக்கிறது என்று
ஷைமா கூறினார்.

உடனடியாக நபி (ஸல்) அவர்கள் ஷைமாவை அடையாளம் கண்டு, தனது விரிப்பை விரித்து அதன் மீது உட்கார உத்தரவிட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஷைமாவுக்கு மக்ஹுல் என்ற அடிமையைக் கொடுத்து அவருக்கே அவர்களை மணமுடித்து வைத்ததாக சில ஹதீஸ்களில் பார்க்க முடியும்...


ஹலீமா பீவி (ரலி)‌ அவர்கள் இஸ்லாத்திற்கு
வந்த போது ...

ஹலீமா பீவி (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டது குறித்து பல ஹதீஸ்கள் உள்ளன.
அபுல்-ஃபரஜ் இப்னுல்-ஜவ்ஸி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

'நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி) அவர்களை மணந்த பிறகு ஹலீமா (ரலி) அவர்கள் ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை காண வந்தார்கள்
அந்த நேரத்தில் நாட்டில் கடுமையான பஞ்சம் நிலவியது.
கதீஜா (ரலி) அவர்கள் இதைக் கண்டு ஹலீமாவுக்கு நாற்பது ஒட்டகங்களையும், தொண்ணூறு ஆடுகளையும் கொடுத்தார்கள்.
ஹலீமா பீவி மகிழ்ச்சியுடன் திரும்பினார்கள். பின்னர் சில நாட்கள் கழித்து அவர்கள்
தன் கணவருடன் திரும்பி வந்து நபி (ஸல்) அவர்களிடம் நம்பிக்கையுடன்
சத்தியம் செய்து நபித்துவத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
(ஸுபுலுல் ஹுதா. 1/383)

காளி இயாழ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்..

'ஹலீமத்துஸ்ஸஃதிய்யா
(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது, அவர் தனது மேல் விரிப்பை விரித்து, அவர்களை அதன் மீது உட்கார வைத்து,
அவர்களின் தேவைகளை நிறைவேற்றி கொடுத்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு, அபூபக்கர் (ரலி) அவர்களும் ஹலீமத்துஸ் ஸஃதிய்யா (ரலி) அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.
உமர் (ரலி) அவர்களின் காலத்தில் ஹலீமத்துஸ் ஸஃதிய்யா
மதீனாவிற்கு ஒரு குழுவுடன் வந்தார்.
உமர் (ரலி) அவர்கள் ஹலீமா பீவியை கண்ணியப்படுத்தி வரவேற்றார்கள்
(அஸ்-ஷிஃபா. 2/52)

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வார்த்தைகள்...

அல்-ஹாஃபிழ் முகலத்தாய்‌ (ரலி) கூறுகிறார்கள்:

ஹிஜ்ரி 838
ரபீயுல்-ஆகிர் 22
ஞாயிற்றுக்கிழமை
இரவில்
ஈஸா நபி (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை நான் என்
கனவில் கண்டேன்.
நான் அவரிடம் கேட்டேன்:

'நபி (ஸல்) அவர்களுக்கு பாலூட்டிய ஹலீமத்துஸ் ஸஃதிய்யா (ரலி) அவர்களின் சிறப்பு என்ன..?

'உண்மையில்,
அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
அல்லாஹ் அவரை பொருந்திக் கொண்டுள்ளான் என ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பதிலளித்தார்கள். (ஸுபுல்-ஹுதா. 1/384)

மேற்கண்ட சம்பவத்தை விவரித்த அல்-ஹாஃபிழ் முகல்லதாய் (ரலி) அவர்கள் துருக்கியில் பிறந்தவர்.
ஆனால் அவர்
எகிப்தில் தான்
தனது மார்க்க பிரச்சார பணிகளை மேற்கொண்டார்.
அவர் சஹீஹ் புகாரிக்கு விளக்கவுரை உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை படைத்துள்ளார் (அல்-அஃலாம். 7/275)

(ஹலீமா பீவி
கேட்ட அழைப்பு)

ஹலீமா பீவி (ரலி) அவர்கள் முத்து நபி (ஸல்) அவர்களை தாய்ப்பால் கொடுப்பதற்காக ஏற்றுக்கொண்டபோது பல அற்புதங்கள் நிகழ்ந்தன.
இமாம் அவ்ஃபி (ரலி) அவர்கள் கூறினார்கள்:

ஹலீமத்துஸ் ஸஃதிய்யா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை அழைத்துச் செல்ல மெக்காவிற்கு வந்தபோது அப்துல் முத்தலிப் அவர்கள் பாட்டு வடிவில் ஒரு அழைப்பைக் கேட்டார்:

ஆமினாவின் மகன் முஹம்மது அமீனாகும் (நம்பிக்கையாளர்)
அவர் படைப்பில் சிறந்தவர். நம்பிக்கையான
ஹலீமா அவருக்குப் பாலூட்ட வந்திருக்கிறாள்.
அவள் எல்லாக் குறைகளிலிருந்தும் விடுபட்டவள், அவளுடைய ஆடைகள் சுத்தமாக இருக்கின்றன. அவளைத் தவிர வேறு யாரிடமும் முஹம்மதுவை நம்பி ஒப்படைக்காதே.
இது அல்லாஹ்வின் முடிவு.
(ஸுபுலுல் ஹுதா. 1/386)

ஆமினா (ரலி) அவர்கள்
நபி (ஸல்) அவர்களை ஹலீமா பீவியிடம் பாலூட்டுவதற்காகக் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டார்.

ஹலீமா (ரலி) அவர்கள் தனது கணவரிடம் கூறினார்கள்:

ஓ கணவரே!! மெக்காவில் உள்ள ஆமீனாவின் அனாதையான முஹம்மதுவை அவருக்குப் பாலூட்ட நாம் ஏற்றுக் கொள்வோம்..

இதைக் கேட்ட கணவர் அதை ஒப்புக்கொண்டார். அவர்கள் மெக்காவுக்குப் புறப்பட்டனர்.
ஹலீமா பீவி அவர்கள் ஆமீனாவின் (ரலி) வீட்டைத் தேடினர்.
ஹலீமா பீவி அவர்கள்
ஆமினா (ரலி)‌அவர்களின் முன்னிலையில் வந்தடைந்தார்.
பின்னர் ஆமீனா (ரலி) ஹலீமா அம்மையார் அவர்களிடம் கூறினார்கள்:
'ஓ ஹலீமா பனூ
சஃத் கோத்திரத்தைச் சேர்ந்த அபு துஐபின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு என் மகனைப் பாலூட்டக் கொடுக்க மூன்று இரவுகள் எனக்கு அறிவுறுத்தப்பட்டது.
என்றார்கள்...

நிச்சயமாக
நான் பனூ சஃஅத் கோத்திரத்தைச் சேர்ந்தவள்.
என் கணவர்
அபூ துஐபின் குடும்பத்தைச்
சேர்ந்தவர் என
'ஹலீமா பீவி மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.
(ஸுபுலுல் ஹுதா 1/387)

கொலை முயற்சி

ஹலீமா பீவி நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தபோது, அவரது வீட்டிலும், சுற்றுப்புறங்களிலும்
பல அதிசயங்கள் நிகழ்ந்தன.
ஒரு முறை அவர் முத்து நபி (ஸல்) அவர்களுடன் உக்காள் சந்தைக்குச் சென்றார்.
பின்னர் ஒரு ஜோதிடர் ஹலீமா பீவி அவர்களுக்கு அருகில் ஒரு குழந்தை அமர்ந்திருப்பதைக் கண்டார்.
அந்தக் குழந்தையைப் பார்த்து வியந்த ஜோதிடர்
இவ்வாறு கூக்குரல் விடுத்தார்:

'ஓ மக்களே, இந்தக் குழந்தை உங்கள் அதிகாரத்தை பறித்து விடுவார்.
இந்த குழந்தையை கொல்லுங்கள்.'

இதைக் கேட்டதும், ஹலீமா பீவி குழந்தையுடன் அவர்களிடமிருந்து விரண்டு ஓடி தப்பிவிட்டார்கள்.
அல்லாஹ் அவர்களைக் காப்பாற்றினான். (ஸுபுல்-ஹுதா. 1/387)

மக்காவின் குரைஷிகள் தங்கள் தலைமை பதவியை, அதிகாரத்தை இழந்துவிடுவோம் என்று மிகவும் பயந்தார்கள். அதுதான் புனித நபி (ஸல்) அவர்கள் மீதான அவர்களின் விரோதத்திற்கு முக்கிய காரணம்.
இந்த சம்பவத்திலிருந்து, பாலூட்டும் வயதிலிருந்தே நபி (ஸல்) அவர்களை கொலை செய்து கொள்ள வழிகளைத் தொடங்கினர் என்பது தெளிவாகிறது.

ஆடுகளில் காணப்பட்ட
அபிவிருத்திகள்..

ஹலீமத்துஸ் ஸஃதிய்யா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்..

'நபி (ஸல்) அவர்கள்
பனூ சஃஅத் கோத்திரத்திற்கு வந்ததிலிருந்து எங்களுக்கு ஐஸ்வர்ய நாட்களாக இருந்தது அந்த நேரத்தில் எங்களை விட வேறு யாருக்கும் அதிக செழிப்பும் அபிவிருத்தியும் இருந்தது இல்லை
நான் மேற்சொன்ன சொன்ன பறக்கத்துகளை என் ஆடுகளிலும் கண்டேன்.
அந்த நேரத்தில் அதிக பால் உற்பத்தி செய்த ஆடுகள் என்னுடையவை.
மற்ற ஆடுகள் அனைத்தும் வறண்டு இருந்தன
கொஞ்சம் கூட பால் உற்பத்தி செய்யவில்லை. இறுதியாக, அவர்கள் தங்கள் ஆடுகளை என் ஆடுகளுடன் மேய விட்டார்கள்.
ஆனாலும் அவர்களின் ஆடுகள் இன்னும் முன்பு போலவே இருந்தன.
(ஸுபுலுல் ஹுதா. 1/387)

முத்து நபி (ஸல்) அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பறக்கத் காரணமாகவே ஹலீமா பீவிக்கு இந்த பாக்கியம் அனைத்தும் கிடைத்தது
அகில உலக அருட்கொடையான
நபி (ஸல்) அவர்களின் வருகையின் மூலம் பறக்கத்துகளை நேரடியாக அனுபவித்தவர் ஹலீமத்துஸ் ஸஃதிய்யா (ரலி) அவர்கள்.

கஸ்தூரியுள்ள வீடுகள்..

ஹலீமா பீவி அவர்கள் கூறுகிறார்கள்:

'நான் முத்து நபி (ஸல்) அவர்களுடன் என் வீட்டிற்கு வந்தபோது, பனு சஃஅத் கோத்திரத்தின் ஒவ்வொரு வீட்டிலும் கஸ்தூரியின் வாசனை உணரப்பட்டது.
அவர்கள் அனைவரும் குழந்தையை விரும்பினர்.
இது ஒரு அசாதாரண குழந்தை என்பதையும் அவர்கள் உணர்ந்தார்கள்.
பனூ சஃஅத் கோத்திரத்தைச் சேர்ந்த எவருக்கும் நோய் ஏற்பட்டாலோ அல்லது ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டாலோ, அவர்கள் ஹலீமா (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்து நபி (ஸல்) அவர்களின் கையை பாதிக்கப்பட்ட பகுதியில் வைப்பார்கள்.
இதன் விளைவாக, அவர்கள் குணமடைவார்கள். அவர்களின் ஒட்டகங்கள் அல்லது ஆடுகள் நோய்வாய்ப்பட்டாலும், அவர்கள் அதையே செய்து பலனைக் காண்பார்கள்.’
(ஸுபுலுல் ஹுதா. 1/387)

இதுபோன்ற முஃஜிஸத்துக்களையும்,
கராமத்துக்களையும்
பார்த்து 'சிரிக்கும்' சில புதுமை வாதிகள் உள்ளனர்.
அவர்களின் கொள்கைகளின் முனையை ஒடிக்கும்
பல சம்பவங்கள் ஆதாரபூர்வமான புத்தகங்களில் உள்ளன.


தாய்ப்பால் நிறுத்துதல்..

ஹலீமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பூரணமாக இரண்டு வயது வரை தாய்ப்பால் கொடுத்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தாய்ப்பால் குடிப்பதை நிறுத்திய வேளையில் முதலில் சொன்ன வார்த்தைகள் 'அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ், சுப்ஹானல்லாஹ்' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

தாய்ப்பால் குடிப்பதை நிறுத்திய பிறகு நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஆண்டுகள் ஹலீமா (ரலி) அவர்களுடன் தங்கினார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நான்கு வயது இருக்கும்போது, ஹலீமா பீவி நபி (ஸல்) அவர்களுடன் மெக்காவுக்குப் பயணம் செய்து கொண்டிருந்தார். 'ஸுரூர்' பள்ளத்தாக்கில் எத்தியோப்பியர்கள் குழுவைச் சந்தித்தார். நபி (ஸல்) அவர்களின் கண்களில் சிவந்திருப்பதைக் கண்டதும்
அவர்கள் கேட்டார்கள்:

'அவரது கண்களுக்கு ஏதேனும் நோய் இருக்கிறதா?'

'இல்லை, அது பிறப்பிலிருந்தே உள்ளது என்று ஹலீமா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

உடனே அவர் ஒரு தீர்க்கதரிசி' என்று அவர்கள் கூறினர்.
(ஸுபுல் ஹுதா. 1/388)

நபி (ஸல்) அவர்களுடன் சுவனத்தில் நுழையும் பேரின்ப பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்கியருள்வானாக ஆமீன்.


குறிப்புகள்...
___________________________

ஸஹீஹுல் புகாரி.

இப்னு மாஜா.

ஸுபுல் ஹுதா.

அஷ்-ஷிஃபா.

அல்-இஸ்திகாப்

அல்-அஃலாம்.