Sirajudheen Ahsani
எழுத்தாளர்

மாபெரும் ஆனந்தம்

ரமலான் இன்று இவ்வையகத்தை நிழலிட ஆரம்பித்திருக்கும்.
ரமலான் மாதம் இஸ்லாமிய மார்க்கத்திலும் இஸ்லாமிய வாலாற்றிலும் ஓர் தனி பெரும் சிறப்பினை பெற்றிருக்கிறது. ரஜப் மாதம் முதல் பிரார்த்தனை செய்தும் எதிர்பார்த்தும் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்த புதுவசந்தம் நம்மை வந்தடைந்துவிட்டது. இந்த ரமளான் வரை நம் ஆயுளை நீட்டி தந்த அல்லாஹ்வுக்கு காலமுழுவதும் சிரம் பணிந்தாலும் மிகையாகாது. எவ்வளவு பெரிய பாக்கியம். நான் இந்த மாதத்தில் மிகுந்த பக்தியுடன் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவேன் என்று ஒவ்வொருவரும் மனதில் உறுதியுடன் இருக்க வேண்டும். இந்த மாதத்தில் எவ்வளவு மகத்தான தினங்கள் வர இருக்கிறது. ஒரு நேரத்தையும் நாம் வீணாக செலவழிக்கக் கூடாது. ரமளானின் மாண்பையும் கண்ணியத்தையும் புரிந்து செய்லபடுவோம்.

நரக விடுதலை..
________________________

நரகத்திலிருந்து விடுதலை பெறுவதுதான் ஒரு முஃமினின் முக்கிய குறிக்கோள். இதற்கு நாம் ரமளான் மாதத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் நோன்பு பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயம் ஆகும். அதாவது நரகத்தின் விடுதலைக்கான சக்தி வாய்ந்த கோட்டையாகும். (அஹ்மத்)

நோன்பு, நரகத்திலிருந்து விடுதலை கிடைப்பதற்காக ஒரு அடிமை பயன்படுத்துகிற கேடயமாகும். (பைஷக்கீ)

நீங்கள் போரில் ஆயுதம் ஏந்தி நிற்பீர்களே அதுபோன்றுதான் நோன்பும் நரகத்தை விட்டு மனிதனை பாதுகாக்கும் ஆயுதமாக இருக்கிறது. (இப்னுகுலைமா)

வாசனை வீசும் வாய் நாற்றம்

நோன்பு பிடித்த மனிதனின் வாயிலிருந்து வெளியேறுகின்ற நாற்றத்திற்கு முக்கிய சிறப்பும் மகத்துவமும் இருக்கிறது. இந்த நாற்றம் (வாயிலிருந்து வெளியேறும்) கஸ்தூரியின் மணத்தை மிகைத்துவிட முடியும். எனவேதான் நேன்பு பிடித்தவன் மதிய வேளைக்கு பிறகு (மிஸ்வாக்) பல்துலக்குவது கூட அருவருக்கத் தக்க செயல் (கறாகத்) என்று இமாம்கள் கூறுகிறார்கள்.

நாயகம்(ஸல்) கூறுவதைப் பாருங்கள், என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த இறைவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை கஸ்தூரியின் வாடையை விடவும் சிறந்ததாகும். (புகாரி)

இஃப்தார் துஆ
__________________________

நோன்பு திறக்கும் சந்தர்ப்பம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும். ஒரு புனிதமான செயலின் முடிவை நாம் எதிர்நோக்கி இருக்கிறோம். எனவே அந்த வேளையில் மனிதன் கேட்கின்ற துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.

நாயகம் (ஸல்) கூறுகிறார்கள். நோன்பாளிக்கு நோன்பு திறக்கும் நேரத்தில் ஒரு துஆ உண்டு. அல்லாஹ் அந்த துஆவை நிராகரிக்கமாட்டான். திருநபி துஆ செய்வதை நான் பார்த்துள்ளேன் (பைஹக்கீ/அத்தர்ஹிப்)

நோயாளியை சந்திப்பது
___________________________

பரிசுத்த ரமளானின் சிறப்பை விவரிக்கும் வேளையில் ஒரு தடவை நாயகம்(ஸல்) கூறினார்கள்,
நிச்சயம் ஷஹ்று ரமளான் என் சமுதாயத்தின் மாதமாகும். அவர்களில் ஒருவர் நோய்வாய்ப்பட்டால் மற்றவர்கள் அவரை சந்திக்கிறார்கள். பொய்யும் அவதூறும் கூறாமல் ஒரு முஸ்லிம் நோன்பு பிடிக்கிறான் எனில் அவனின் செயல் மிகவும் சிறப்பு வாய்ந்தமையாகும், நிர்ப்பந்த தொழுகையை கடைபிடிப்பவன் இருட்டை கடந்து செல்லுகின்றான் என்றால் பாம்பு தான் அணிந்து இருக்கும் சட்டையிலிருந்து வெளியேறுவதுப் போன்று இவனும் பாவங்களிலிருந்து வெளியேறுவான்,

இந்த திருநபி வசனத்தில் ரமளான் காலத்தில் நோயாளியை சந்திப்பதின் முக்கியத்துவத்தை பார்க்க முடிகிறது, புண்ணியங்கள் பூத்து குலுங்கும் இந்த ரமளான் மாதத்தில் நோயாளியை சந்திப்போமென்று உறுதிமாழி எடுப்பது புண்ணியம் நிறைந்த செயலாகும்.

ஒவ்வொருதினமும் ஒரு தேடுதல்...
___________________________

ரமளான் மாதத்தில் ஒவ்வொரு தினங்களிலும் ஏராளமான தள்ளுபடிகள் அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான். திருநபி(ஸல்) கூறுவதைப் பாருங்கள்,

நிச்சயமாக ஒவ்வொரு முஸ்லிமிற்கும் ரமளானில் ஓரோர் தினமும் பதில் கிடைக்கின்ற ஓரோ பிரார்த்தனைக்கான வாய்ப்புகள் இருக்கிறது (அத்தரிஹீப் வத்தர்கீப்)

இந்த ஹதீஸின்படி பரிசுத்த ரமளானில் கேட்பதற்காக 30 காரியங்களின் பட்டியலை நாம் தயார் செய்து வைக்க வேண்டும். குடும்பம், இம்மை, மறுமை வெற்றி நரக பாதுகாப்பு போன்றவற்றை உள்கொண்டதாக இருக்க வேண்டும் நம் பிரார்த்தனை.

திக்ரின் மாதம்
___________________

திக்ர் என்ற சொல்லின் முக்கிய அர்த்தம் (நினைவு கூறுவது) என்பதாகும். அல்லாஹ்வை நினைவு கொள்ள பயன்படுத்தப்படும் மந்திர ஒலிகள்தான் திக்றுகள். பலவித அத்காறுகள் உண்டு. மிக முக்கியம் வாய்ந்த திக்ர் லாயிலாஹ இல்லல்லாஹு என்பதுதான், பரிசுத்த ரமளானில் மற்ற புண்ணிய கர்மங்கள் போன்று திக்றுக்கும் முக்கியத்துவம் உண்டு. நாயகம் (ஸல்) கூறுகிறார்கள்,

ரமளானில் திக்றுகள் சொல்கிறவனின் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது (தப்ரானி, பைஹக்கி)

பாவ விடுதலை
‌_____________________

ரமளானின் முதல் 10 தினங்கள் ரஹ்மத்தின் தினங்களாகும். இனி வருவது மஃபிரத்தின் தினங்கள். பாவங்கள் செய்வது மனித இயல்பு. ஆனால் அவற்றிலிருந்து மன்னிப்பு கோருவது ஈமானிகமான செயல். அதற்கான ஒரு தங்க வாய்ப்புதான் ரமளான். அதைப் பயன்படுத்த தெரியாதவனை விட பெரிய முட்டாள் உலகில் வேறுயாருமில்லை.

பாவங்கள் பலவிதம் உண்டு.
சிறிய பெரிய பாவங்கள் இந்த ரமளானை பயன்படுத்தி மனதை அழுக்குகளிலிருந்து அகற்றிவிட வேண்டும். எல்லா பாவங்களையும் மன்னிக்கின்ற இறைவன் அல்லாஹ் மட்டும்தான்.

நாயகம் (ஸல்) கூறுகிறார்கள்.

எவன் ரமளான் மாதத்தை அடையப்பெற்று அதில் நோன்பு நோற்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரவில்லையோ அவன் அல்லாஹ்வுடைய அருளுக்கு அருகதையற்றவனாகிவிடுகிறான்.

பதிவு செயல்கள் தவிர்க்காமல் இருக்க வேண்டும்.
___________________________

நீங்கள் பதிவாக செய்கிற புண்ணிய அமல்கள், அவை செய்யாத ஒருவருக்கு மத்தியில் சென்ற காரணத்தால் அவைகளை செய்யாமல் தவிர்ப்பது சரியா? தற்பெருமையை பயந்து அப்படி செய்யாமல் தவிர்ப்பது பற்றி கூறுவதைப் பாருங்கள், ஷரஹ் ஸுதூரில்

ஷைத்தானின் சாணக்கிய தந்திரத்தைப்பற்றி சொல்லட்டுமா?
ஒரு நபர் ளுஹா, தஹஜ்ஜத் முக்கியமான அக்காறுகள் பதிவாக செய்து கொண்டிருப்பார். அவ்வேளையில் அவையொன்றும் செய்யாத சமூகத்தில் செல்ல நேரிட்டால் தற்பெருமையை பயந்து இந்த பதிவு அமல்களை அவர் தவிர்த்து விடுவார். இது ஒரு சரியான முட்டாள்தனம்.
காரணம் இவர் முன்காலத்தில் செய்து வந்ததே இவருடைய மனத்தூய்மையின் அடையாளம்.
தன் விருப்பமில்லாமலும், போதமில்லாமலும் வருகிற சிந்தனை இவனை பொறுத்த மட்டில் முக்கியத்துவமில்லாமல் ஆகிவிடுகிறது. அந்த வேலையில் அந்த அமல்களை செய்வதுதான் ஷைத்தானுக்கு எதிரான ஜிஹாத்.

சிபாரிசுக்காரர்களுக்கு உறுதுணையாக இருங்கள்...
___________________________

சிபாரிசு என்பது மறுமை வாழ்க்கையைப் போன்று இம்மை வாழ்க்கையிலும் முக்கியம் வாய்ந்த ஒன்றாகும்.
சிபாரிசுசெய்பவர்கள் நம்மை பாதுகாப்பார்கள் என்பது நிராகரிக்க முடியாத ஒரு உண்மையாகும். இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த சிபாரிசுக்காரர்கள் பற்றி நாயகம் (ஸல்) கூறுவதைப் பாருங்கள்

நோன்பும் திருக்குர்ஆனும் (நோன்பாளிக்காக மறுமையில்) பரிந்து பேசும். இறைவனே! பகற்பொழுதிலே உண்ணாமலும், புணராமலும் அவனைத் தடுத்திருந்தேன், அவனுக்காக என் சிபாரிசை ஏற்றுக்கொள்வாயாக! என்று நோன்பு வேண்டிக்கொள்ளும்.

என்னை ஓதி இரவெல்லாம் தூங்காமல் அவனை தடுத்து இருந்தேன். எனவே அவனுக்காக என் பரிந்து பேசுதலை ஏற்றுக்கொள்வாயாக என திருக்குர்ஆனும் கூறும்

எனவே இவற்றின் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப் படும். மேற்கூறப்பட்ட இரண்டு சிபாரிசுக்காரர்களும் ஒன்று கூடும் மாதம் தான் ரமளான். சிபாரிசுக்காரர்களை சொந்தமாக்கியவன் வெற்றியடைந்துவிட்டான்.

தராவீஹ் மீது ஆர்வமூட்டல்
___________________________

ரமளானின் ஒரு தனி சிறப்பல்லவா தராவீஹ் தொழுகை. புண்ணிய பூர்ணமாய் தராவீஹ் தொழுகையை மக்களுக்கு அதிகம் ஆர்வமூட்டினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் :
நபி (ஸல் ) அவர்கள் ரமலான் இரவுத் (தராவீஹ்) தொழுகை விசயமாக வலியுறுத்தி கட்டளை பிறப்பிப்பதை தவிர்த்து ஆர்வமூட்டி வந்தார்கள். அவர்கள் கூறுவார்கள் யார் ரமலான் இரவில் ஈமானோடும் நன்மை நாடியும் தொழுவாரோ அவருடைய முன் செய்த (சிறு) பாவங்கள் அதன் மூலம் மன்னிக்கப்படும். பின்பு மாநபி (ஸல்) இவ்வுலகை துறந்தார்கள். அப்பொழுதும் தராவீஹ் ஜமாஅத் இன்றி அவ்வாறே இருந்தது. பின்பு ஹழரத் உமர்(ரலி) ஆட்சி காலத்தில் ஜமாஅத்தாக தொழுகை நடத்தினார்கள்.

பொறுமை வேளை
__________________________

பொறுமை காக்க தெரியாதவன் என்றென்றும் பிரச்சினையில் அலைந்து திரிந்து கொண்டிருபான்.
எல்லாவேளையிலும் கடைபிடிக்க வேண்டிய ஒன்றுதான் பொறுமை. ரமளான் நமக்கு அளிக்கும் மிகப்பெரிய பாடமும் பொறுமைதான். நாயகம் (ஸல்) கூறுவதைப்பாருங்கள்.

இது (ரமளான்) சகிப்புத் தன்மையின் மாதமாகும். மேலும் சகிப்புத் தன்மைக்கு பிரதிபலன் சுவனபதியாகும்.
(இப்னு குஸைமா)

நான்கு விசயங்கள்.
________________________

ரமளான் மாதம் துஆவுக்கு அதிக ஆர்வமூட்டப்பட்ட மாதம். துஆவில் மிகவும் மிகைத்து நிற்க வேண்டியது நான்கு துஆக்களாகும். திருநபி (ஸல்) கூறுவதைப் பாருங்கள்

ரமளான் மாதத்தில் நான்கு காரியங்களை அதிகம் செய்து வாருங்கள். அவையில் இரண்டு இறைவனின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக. கலிமா தய்யிபாவும் இஸ்திக்பார் அதிகம் செய்வதுமாகும். இன்னும் இரண்டு உங்ககளுக்கு மிகவும் இன்றியமையாததாகும். அவை சுவனம் வேண்டுதலும் நரகிலிருந்து பாதுகாப்பு கோருவதுமாகும்.

(பைஹக்கி.இப்னு குஸைமா)

ஸுஜூதை அதிகரிக்க வேண்டும்..
___________________________

ரமளானில் மனிதன் செய்கிற ஒரு ஸுஜுதிற்கு மகத்தான நன்மைகள் சொல்லப்பட்டிருக்கிறது.

ஷஹ்று ரமளானில் இரவிலோ பகலிலோ செய்கிற ஒரு ஸுஜுதிற்கு 500 வருட பயண தூரத்திற்கு சமமான நிழல் தருகிற ஒரு மரம் அந்த மனிதனுக்கு பகரமாக அளிக்கப்படும். மேற்கூறிய ஸுஜுதில் எல்லா வகையான ஸுஜுதும் உள்படும். ஹக்ர், திலாவத் போன்றவை உள்படும்.

போர் சிந்தனை
_____________________

போரைப்பற்றி நமக்குத் தெரியும்.
தியாகிகளுக்கு கிடைக்கிற நன்மையும் பதவியும் நாம் அறிவோம்.
ஆனால் ஜிஹாத் சிந்தனையும் அதைப்பற்றிய படிப்பினையும் நாம்நினைவில் கொள்வது மகத்தான ஒரு அமலாகும். ரமளானில் பத்ர் போரைப்பற்றி சிந்தனை ஜிஹாதின் மீது ஆர்வமூட்டுவராக இருக்க வேண்டும்.

தர்மத்தை நிலைநாட்டவும் வன்முறையை அகற்றவும் அல்லாஹ்வின் திருக்கலிமத்தை வையகமெங்கும் ஒலிக்க செய்யவும் நம் தியாகங்கள் அமைய வேண்டும்.

தொழுகையிலுள்ள ஸுஜுத்...
___________________________

ரமளான் மாதத்தில் மனிதன் தொழுகையில் செய்கின்ற ஸுஜுதின் நன்மைகளை அளவிடமுடியாது. தராவிஹிலும் அல்லாமலும் நிறைய ஸுஜுது செய்கிற வாய்ப்பு ரமளான் மாதத்தில் கிடைக்கிறது. சுன்னத் தொழுகை, தராவீஹ் தொழுகை, எல்லா ஃபர்ளு தொழுகையும் மிகவும் கவனத்துடன் நிறைவேற்ற நாம் தயாராக இருக்க வேண்டும். நாயகம் (ஸல்) கூறுவதைப்பாருங்கள்.

ஆதமுடைய மக்களின் அமல்களெல்லாம் ஒரு நன்மைக்கு. அதுபோல் பத்து நன்மையாக எழுநூறுவரைக்கும் இரட்டிப்பாக்கப்படும்.

மலக்குகளின் பாவ மன்னிப்பு தேடுதல்.
___________________________

ரமளானில் நன்மைகளை அடைய நாம் அதிகம் ஆர்வம் செலுத்த வேண்டும். ஒரு நோன்பிற்கே அதிக நன்மைகள் வாக்குறுதி செய்யப்பட்டதாக பிரமாணங்கள் அறிவிக்கிறது. இதோ ஒரு ஹதீஸ்

ரமளானின் ஒன்றாவது நோன்பை பிடித்தால் அது போன்று ஒரு தினம் வரும்வரை அவரின் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. அது மட்டுமட்லலாமல் 60000 மலக்குகள் சூரிய அஸ்தமனம் வரை அவருக்காக பாவ மன்னிப்பு தேடுகிறார்கள்.

நரக விடுதலை
____________________

நரகம் மிகவும் கொடூரமானது. அதிலிருந்து விடுதலையும் பாதுகாப்பும் பெறுவதுதான் ஒரு முஃமினின் முக்கிய லட்சியம்நரக சிந்தனை மனிதனை பாவங்களிலிருந்து அகற்றிவிடும் அல்லாஹ் மனிதர்களக்கு நரகத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக ரமளானின் கடைசி பத்தை வழங்கியுள்ளான். அதைப்பற்றி இதோ ஒரு ஹதீஸ். ரமளானின் ஒவ்வொரு இரவிலும் இறைவன் நரகத்தை விட்டும் பத்து லட்சம் பேர்களை உரிமைவிடுவதோடு அதன் ஜும்ஆவுடைய தினத்தில் ஒவ்வொரு மணிக்கும் பத்து லட்சம் பேர்களை உரிமைவிடுகிறான்.

லைலத்துல் கத்ரின் மகிமை.
___________________________

பல இரவுகள் நம்மிடத்தில் கழிந்திருந்தாலும் சில இரவுகள் நன்மைகளை நமக்கு வாரி இறைத்து விட்டு செல்கின்றன. அவற்றில் மிஃராஜ், பராஅத், லைத்துல்கத்ர் இரவில் நின்று வணங்கினால் அதிக நன்மையுண்டு மேலும் ஆயிரம் மாதங்கள் நின்று வணங்கினால் என்ன நன்மை கிடைக்குமோ அனைத்தையும் இந்த இரவிலேயே தருகிறேன் என இறைவன் வாக்களித்துள்ளான்..

முன் வாழ்ந்த சமுதாயத்தினரின் வயதையும் அமல்களையும் இப்போதுள்ள சமுதாயத்தினரின் வயதையும் சொன்னார்கள். சென்ற காலம் வாழ்ந்த சமுதாயத்தினரின் நன்மையை இப்போதுள்ளவர்கள் அடைய முடியாது. இருவரும் நன்மையில் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காக 1000 மாதங்களைவிட சிறந்த லைலத்துல் கத்ர் இரவை அன்பளிப்பாக வழங்கியுள்ளான்.

பேரீச்ச பழத்தின் மகத்துவம்.
___________________________

நோன்பு காலங்களில் பேரிச்சபழம் சாப்பிடுவது ஒரு புண்ணியமான காரியம். இதைப்பற்றி விவரிக்கும் ஏராளமான ஹதீஸ்களை பார்க்க முடியும். இதோ உங்ஙகள் பார்வைக்கு ஒரு ஹதீஸ்.

நோன்பு திறப்பதைத் துரிதப்படுத்துங்கள். உங்களில் ஒருவர் நோன்பு திறந்தால் பேரீத்தங்கனி கொண்டு திறக்கவும். ஏனெனில் நிச்சயமாக அது பரக்கத் ஆகும்.
அதனை அவர்கிடைக்கப்பெறவில்லையாயின் நீரருந்தி நோன்பு திறக்கட்டும். ஏனெனில் நிச்சயமாக அது அகத்தையும் புறத்தையும் சுத்தப்படுத்தும் சாதனமாகும்.

நோன்பு திறப்பதின் மகத்துவம்..
___________________________

நோன்பு நேற்பது மூலம் உலகில் வாழும் ஏழை, எளிய மக்களின் பசி, பஞ்சம், பட்டினி, வறுமையை அறிய உணர முடிகிறது. அவ்வேளையில் அவர்களுக்கு ஒரு வேளை உணவு கொடுக்கும்போது நம் மனம் எவ்வளவு சந்தோசமடையும், மட்டுமல்ல ஏழை எளிய மக்களுக்கு உதவி புரிவது என்பது மகத்தான நன்மை தரும் காரியமாகும். நாயகம் (ஸல்) கூறினார்கள்.

யார் ஒரு வாய் அளவுக்கு பாலோ, தண்ணீரோ அல்லது பேரீத்தங்கனியோ கொடுத்து நோன்பு திறக்க வைக்கிறாரோ மேலும் நோன்பாளிக்கு வயிறார உணவு கொடுக்கிறாரோ அவருக்கு மறுமையில் அல்லாஹ் தனது ஹௌளிலிருந்து தண்ணீர் அருந்த செய்வான். இதனால் அவனுக்கு சுவனபதி எய்தும் வரை தாகமே ஏற்படாது.

ஸஹ்ர்
______________

நோன்பாளி ஒருபோதும் தவிர்க்க கூடாத அமல்தான் (ஸஹ்ர்). நடுநிசி முதல் ஸஹ்ரின் நேரம் ஆரம்பமாகிறது. ஸஹ்ரின் மகத்துவத்தைப்பற்றி நாயகம் (ஸல்) கூறுவதை பாருங்கள்

ஸஹ்ர் செய்து கொள்ளுங்கள், ஏனெனில் ஸஹ்ர் செய்வதில் பறக்கத் இருக்கிறது. ஸஹ்ர் சாப்பிட்டு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒரு பேரீத்தம்பழம் அல்லது ஒரு மிடர் தண்ணீர் பருகியேனும் ஸஹர் செய்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் ஸஹர் சாப்பிடுபவர்கள் மீது ரஹ்மத் சொரிகின்றனர்.

பரிபூரண நோன்பு
_________________________

நம்முடைய நோன்பு வெறும் வயிற்றில் மட்டும் ஒதுங்கிவிடக்கூடாது. அல்லாஹ்வின் கட்டளை ஏற்று அவனுக்காக நாம் நோன்பு நோற்கின்றோம். நோன்பு நோற்பதன் மூலம் நம்மிடத்தில் என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டுமோ அவை ஏற்பட வேண்டும்.

பொய், புரட்டு, பித்தலாட்டம், தவறான நடவடிக்கை போன்றவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும். அதேபோல நோன்பு காலங்களில் கண்டிப்பாக தீய நடவடிக்கைகளிலிருந்து மிகத்தூரமாகி இருக்க வேண்டும் என்பதை விளக்கும் ஹதீஸை பாருங்கள்:

யார் பொய்யான பேச்சையும், பொய்யான தீய நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ அவர் பசித்திருந்தாலும் தாகித்திருந்தாலும் அல்லாஹ்வுக்கு எத்தகையத் தேவையுமில்லை என்று நபி (ஸல்) கூறினார்கள்.

இஃதிகாப்
__________________

இறைவனுக்காக பள்ளியில் தங்கி இருப்பது (இஃதிகாப் ) சுன்னத் ஆகும். ரமளான் மாதத்தில் இருப்பது பலமான சுன்னத். குறிப்பாக ரமளான் பிந்திய நாட்களில் இஃதிகாஃப் மஸஜிதில் ஒரு நிமிடம் இருப்பதாக இஃதிகாஃப் நிய்யத்துடன் தங்கினாலும் இஃதிகாபின் பலன் கிடைக்கும். இஃதிகாஃப் இருப்பவர் பாவங்களிலிருந்து பாதுகாக்கப் படுகிறார். மேலும் நற்கிரியையும் மனிதனுக்கு கிடைக்கும். எழுதப்படுகிறது. நன்மைகள் இவருக்கும்

ஜகாத்தை புறக்கணிக்காதீர்கள்..
___________________________

நமது மார்க்கத்தில் வணக்கங்கள் இரு வகைப்படும். 1. உடல் சம்பந்தமான வணக்கங்கள், பொருள் சம்பந்தமான வணக்கங்கள். தொழுகை, உடல் சம்பந்தமான வணக்கங்களில் முதல் அந்தஸ்தை பெற்றிருப்பதைப் போன்று பொருள் சம்பந்தமான வணக்கங்களில் ஜகாத் முதல் இடத்தை வகிக்கிறது..

எனவேதான் குர்ஆனில் சுமார் 30 இடங்களில் தொழுகையும் ஜகாத்தையும் இணைத்து சொல்லப்பட்டுள்ளது. இவை இரண்டும் இணைந்தால்தான் தீன் பரிபூரணமாகும். தொழுவோம் ஆனால் ஜகாத் கொடுக்க மாட்டோம் என வாதம் புரிந்தவர்களுடன் அபூபக்கர்(ரலி) அவர்கள் போர் புரிந்ததற்குரிய காரணமும் இதுவேயாகும்.

இனி மன்னிப்பு இல்லை
___________________________

ரமளான் வந்தடைந்து அதில் வாழ்வதற்கு வாய்ப்பு கிடைத்தும் அவனின் பாவங்கள் மன்னிக்கப்படவில்லை என்றால் இவனைவிட மிகப்பெரிய நஷ்டவாளி வேறுயார் இருக்க முடியும்? நாயகம் (ஸல்) கூறுவதைப்பாருங்கள்:

எவர் ரமளான் மாதத்தை அடையப்பெற்று அதில் நோன்பு நோற்று அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரவில்லையோ அவர் அல்லாஹ்வுடைய அருளுக்கு அருகதையற்றவராக ஆகிவிடுகிறார்.

கடைசி தினம்
________________________

நாயகம் (ஸல்) கூறுகிறார்கள், ரமளானின் ஒவ்வொரு இரவிலும் இறைவன் நரகத்தை விட்டு பத்து லட்சம் பேர்களை உரிமைவிடுவதோடு அதன் ஜும்ஆவுடைய தினத்தில் ஒவ்வொரு மணிக்கும் பத்து லட்சம் பேர்களை உரிமைவிடுகிறான். மேலும் ரமளானின் கடைசி இரவில் முதல் தேதி விடுதலை செய்த அளவுக்குவிடுதலை செய்கிறான். (அத்தர்ஹிப்)

ஷவ்வால் மாத ஆறு நோன்புகள்..
___________________________

எவர் ஒருவர் ஷவ்வால் மாத ஆறு தின நோன்பு பிடிக்கிறாரோ அல்லாஹ் அவரில் பாவங்களை மன்னிக்கிறான். மேலும் அவர் அன்று பிறந்த பாலகனைப் போலாவதோடு ஆண்டு முழுவதும் நோற்றவரை போல் ஆகிறார்.

இந்த ஆறு நோன்புகள் ஷவ்வால் மாதத்தில் எப்போது பிடித்தாலும் சுன்னத் நிறைவேறும். ஆனால் நோன்பு பெருநாள் அடுத்து தொடராகவுள்ள ஆறு நாட்களில் நோன்பு பிடிப்பதே சிறந்ததாகும்.

சுட்டிப்பிறை சிறுவர் மாத இதழின் ரமளான் மாத சிறப்பு மலரில் இடம் பெற்றது