வீண் விரயம் செய்யாதீர்கள்
ரமளான் சிந்தனைகள்
பிறை....5
வீண்_விரயம்_செய்யாதீர்........
اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا
ஏனென்றால், மிதமிஞ்சி செலவு செய்பவர்கள் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தன் இறைவனுக்குக் கூட நன்றி செலுத்தா(து மாறு செய்)தவன். (அல்குர்ஆன் : 17:27)
இஸ்லாம் ஒரு கட்டுக்கோப்பான மார்க்கம். கட்டுப்பாடுகளைக் கொண்ட மார்க்கம். ஒரு முஸ்லிம் எப்படியும் வாழ முடியாது. இப்படித்தான் வாழ வேண்டும் என்று சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.அந்த வகையில் பொருளாராத்தை திரட்டுவதிலும் அதை செலவு செய்வதிலும் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. பொருளாதாரத்தை செலவு செய்யும் விஷயத்தில் இஸ்லாம் விதித்த கட்டுப்பாடு அந்த பொருளாதாரத்தை வீண்விரயம் செய்யாமல் இருக்குதல்.
இது என் பணம் நான் சம்பாதித்தது. இது என் உணவு நான் சமைத்தது. அதை எப்படியும் செய்வதற்கு எனக்கு உரிமை உண்டு என்று ஒருவன் விதன்டாவாதம் பேசினால் அவனை விட முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது. இவ்வாறு கேட்டதினால் தான் ஷுஐப் அலை அவர்களின் சமூகம் அழிவை சந்தித்தார்கள்.
الُوْا يٰشُعَيْبُ اَصَلٰوتُكَ تَاْمُرُكَ اَنْ نَّتْرُكَ مَا يَعْبُدُ اٰبَآؤُنَاۤ اَوْ اَنْ نَّـفْعَلَ فِىْۤ اَمْوَالِنَا مَا نَشٰٓؤُا اِنَّكَ لَاَنْتَ الْحَـلِيْمُ الرَّشِيْدُ
அதற்கவர்கள் "ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதைகள் வணங்கிய தெய்வங்களையும், நாங்கள் எங்கள் பொருள்களில் எங்கள் விருப்பப்படி நடந்து கொள்வதையும் விட்டுவிடும்படியாக (நீங்கள் எங்களுக்குக் கட்டளை இடும்படி) உங்களுடைய தொழுகையா உங்களைத் தூண்டுகிறது? நிச்சயமாக நீங்கள் மிக்க கண்ணியமுள்ள நேர்மையாளர்தாம்" என்று (பரிகாசமாகக்) கூறினார்கள். (அல்குர்ஆன் : 11:87)
நம் பணம் தான். ஆனால் நம் விருப்படி செலவழிப்பதற்கு நமக்கு அனுமதி இல்லை. நம் உணவு தான் ஆனால் நம் விருப்பப்படி அதை செய்வதற்கு நமக்கு அனுமதி இல்லை.எல்லாவற்றிற்கும் இஸ்லாம் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இப்படித்தான் வாழ வேண்டும் என்று வரையரைகளை கொடுத்திருக்கிறது. அப்படித்தான் ஒரு முஸ்லிம் வாழ வேண்டும்.
இன்று பகட்டுக்காகவும் பெருமைக்காகவும் புகழுக்காகவும் வாழுகிற இந்த வாழ்க்கையில் எத்தனை வீண்விரயங்களை செய்து கொண்டிருக்கிறோம். பொருளாதாரத்தை வீணடிக்கிறோம், தண்ணீரை வீணடிக்கிறோம், பொன்னான நேரங்களை வீணடிக்கிறோம், நம் இளமையை வீணடிக்கிறோம்,திருமணம் என்ற பெயரால் பணத்தையும் உணவையும் வீணடிக்கிறோம், அன்றாடம் வீட்டில் எவ்வளவோ உணவுகளை கீழே கொட்டுகிறோம்.
உலகில் 100 கோடி பேர் பசியால் அவதிப்படுகிறார்கள். ஆனால் வருடம் தோறும் 280 மில்லியன் டன் உணவு தானியங்கள் வீணடிக்கப்படுகின்றன என்று ஐ.நா. உணவு அமைப்பு கூறுகிறது.நாம் வீணடிக்கும் ஒவ்வொன்றுக்கும் இறைவனிடத்தில் பதில் சொல்ல வேண்டும் என்பதை மறந்து விடக்கூடாது.
இஸ்லாம் வீண்விரயம் செய்வதை வன்மையாக கண்டிக்கிறது.
كلوا واشربوا ولا تسرفوا انه لا يحب المسرفين
உண்ணுங்கள் பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்வோரை அவன் (அல்லாஹ்) நேசிப்பதில்லை”. (அல்குர்ஆன் : 7 ; 31)
كُلوا واشرَبوا وتَصدَّقوا والْبَسوا ما لم يخالِطْهُ إسرافٌ أو مَخيَلةٌ
உண்ணுங்கள், பருகுங்கள், தரமம் செய்யுங்கள், ஆடை அணியுங்கள். ஆனால், அதில் விரயமும், கர்வமும் கலந்து விடக் கூடாது”(இப்னுமாஜா ; 2920)
أنَّ مُعَاوِيَةَ كَتَبَ إلى المُغِيرَةِ: أنِ اكْتُبْ إلَيَّ بحَدِيثٍ سَمِعْتَهُ مِن رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ، قالَ: فَكَتَبَ إلَيْهِ المُغِيرَةُ: إنِّي سَمِعْتُهُ يقولُ عِنْدَ انْصِرَافِهِ مِنَ الصَّلَاةِ: لا إلَهَ إلَّا اللَّهُ وحْدَهُ لا شَرِيكَ له، له المُلْكُ وله الحَمْدُ، وهو علَى كُلِّ شيءٍ قَدِيرٌ ثَلَاثَ مَرَّاتٍ، قالَ: وكانَ يَنْهَى عن قيلَ وقالَ، وكَثْرَةِ السُّؤَالِ، وإضَاعَةِ المَالِ، ومَنْعٍ وهَاتِ، وعُقُوقِ الأُمَّهَاتِ، ووَأْدِ البَنَاتِ
முஆவியா ரலி அவர்கள் முஃகீரா இப்னு ஷுஅபா ரலி அவர்களுக்கு (ஒரு கடிதம்) எழுதியிருந்தார்கள். அதில், 'இறைத்தூதர் ﷺ அவர்களிடமிருந்து தாங்கள் செவியேற்ற ஹதீஸ் ஒன்றை எனக்கு எழுதியனுப்புங்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்கள். அப்போது முஃகீரா ரலி அவர்கள் (பின்வருமாறு) எழுதினார்கள்: நபி ﷺ அவர்கள் தொழுது முடித்தவுடன், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானோர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது எல்லாப் புகழும் அவனுக்கே சொந்தம். அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன்' என்று கூறுவார்கள். மேலும், நபி ﷺ அவர்கள், 'இவ்வாறு சொல்லப்பட்டது; (இவ்வாறு அவர் சொன்னார் என்று (ஊர்ஜித மில்லாதவற்றை, அல்லது தேவைக்கதிகமாகப் பேசுவது, அதிகமாக கேள்வி, அல்லது யாசகம் கேட்பது, செல்வத்தை வீணாக்குவது, (அடுத்தவருக்குத் தரவேண்டியதைத்) தரமறுப்பது, (அடுத்தவருக்கு உரியதைத்) தருமாறு கோருவது, அன்னையரைப் புண்படுத்துவது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றுக்குத் தடை விதிப்பவர்களாக இருந்தார்கள். (புகாரி : 6473)
فعَن عبد الله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم مَرَّ بِسَعْدٍ وهو يتوضأ فقال: ما هذا الإسراف؟ فقال: أفي الوضوء إسراف؟! قال: نعم، وإن كنتَ على نهرٍ جارٍ
ஒழு செய்து கொண்டிருந்த சஃது ரலி அவர்களை நபியவர்கள் கடந்து சென்றார்கள். என்ன இது வீண் விரயம் என்று கேட்டார்கள். ஒழுவில் கூட வீண் விரயம் உண்டா என்று அவர்கள் கேட்ட போது, ஆம், நீ ஓடக்கூடிய நதியில் இருந்தாலும் அதிலும் வீண்விரயம் இருக்கிறது என்று சொன்னார்கள். (அஸ்ஸுனனு வல் அஹ்காம் ; 1/108)