அநீதி இழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை யாரையும் சும்மா விடாது
அநீதியிழைக்கப்பட்டவனின்
பிரார்த்தனையை_அஞ்சுங்கள்..
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள்
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை
யமன் நாட்டுக்கு (கவர்னராக) அனுப்பி வைத்தார்கள்.
அப்போது அண்ணலார்
( اتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ، فَإِنَّهَا لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ ) "அநீதியிழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையை அஞ்சுங்கள். ஏனெனில், அவர் செய்யும் பிரார்த்தனைக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை" என்று கூறினார்கள். நூல்:- புகாரீ-2448, முஸ்லிம்-29, திர்மிதீ-1937
சவூதி அரேபியாவைச் சேர்ந்த அறிஞர் முஹம்மத் அப்துர் ரஹ்மான் அல்அரீஃபீ அவர்கள் கூறுகிறார்கள். எனது நண்பர் ஒருவர் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தவர். மிகுந்த இறையச்சமுடையவர். குர்ஆனைக்கொண்டு ஓதிப்பார்ப்பதில் தேர்ச்சிப்பெற்றவர்.
ஒருமுறை என்னிடம் அவர் தமது அனுபவம் ஒன்றை கூறினார்:
என்னிடம் மிகப் பெரிய ஓர் வியாபாரி வந்து, "ஹள்ரத்! எனது இடக்கையில் மிகுந்த வலியாக உள்ளது.
என்னால் இரவில் தூங்க முடியவில்லை. பகலில் சற்று இளைப்பாறகூட முடியவில்லை.
இதற்காக நான் நிறைய மருத்துவர்களை ஆலோசித்து, நிறைய மருந்துகளையும் உட்கொண்டுவிட்டேன்.
அதனால் எந்த பயனும் கிடைக்கவில்லை.
வலிதான் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இது எனது வாழ்க்கையையே துன்பமாக ஆக்கிவிட்டது.
என்மீது கண்ணேறு பட்டிருக்கலாமோ, அல்லது என்மீது யாராவது மந்திரித்து ஊதிவிட்டிருக்கலாமோ என்று அஞ்சுகிறேன்" என்றார்.
நான் குர்ஆனின் பல வசனங்களைகொண்டு ஓதிவிட்டேன். இருப்பினும் அவருடைய நிலையில் மாற்றமில்லை. அவர் எனக்கு நன்றி சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இதே போன்று மூன்று முறை என்னிடத்தில் ஓதி பார்ப்பதற்கு வந்தார். நானும் எனக்குத்தெரிந்த வசனங்களையெல்லாம் ஓதிவிட்டு பார்த்தேன். இருப்பினும் அவருடைய நிலையில் மாற்றமில்லை. அவருடைய வலி மட்டும் அதிகரித்துக்கொண்டே போனது.
பிறகு இறுதியாக நான் அவரிடம், "உங்களுடைய இந்த வலி, நீங்கள் ஏற்கனவே செய்துவிட்ட பாவங்களுக்கான தண்டனையாக இருக்கலாம்; அல்லது நீங்கள் பலவீனர் யாருக்காவது அநியாயம் செய்திருக்கலாம்; அல்லது யாருடைய உரிமையையாவது பறித்திருக்கலாம்; அல்லது வேறு ஏதேனும் தவறு செய்திருந்தால் அதற்காக உடனடியாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்டுவிட்டு, நீங்கள் பிறரிடமிருந்து பறித்துக்கொண்ட உரிமைகளை அவர்களுக்கு உரிய முறையில் வழங்கிவிடுங்கள்; உங்களுடைய கடந்த காலப் பாவங்கள் அனைத்திற்கும் அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுங்கள்" என்று கூறினேன்.
நான் சொன்னதை விரும்பாத அந்த வியாபாரி, "நான் ஒருபோதும் யாருக்கும் அநியாயம் செய்யவில்லை; யாருடைய உரிமையிலும் வரம்புமீறவில்லை" என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
பல நாட்களுக்குப் பிறகு நான் அவரை ஒருமுறை சந்தித்தேன். அவர் எந்த மருந்தும் சிகிச்சையும் இல்லாமல் தமது கை நலமாகிவிட்டதாக தெரிவித்தார். "அது எப்படி?" என்றேன். அவர், “ஹள்ரத்! நீங்கள் கூறியவற்றை நான் ஆழமாக சிந்தித்தேன். அப்போது என்னுடைய நினைவுக்கு ஒன்று வந்தது.
அதாவது, நான் எனது வீட்டை மாளிகையைப் போன்று கட்டிக்கொண்டிருந்தபோது எனது அந்த வீட்டுக்கு அருகில் ஒரு துண்டு நிலம் இருந்தது. நான் அதையும் என் நிலத்தோடு சேர்த்துக் கொண்டு என் வீட்டை மேலும் அழகுபடுத்த விரும்பினேன். அந்தத் துண்டு நிலம் ஒரு விதவைப் பெண்ணுக்குரியதாக இருந்தது. நான் அந்த நிலத்தை அப்பெண்ணிடம் விலைக்கு கேட்டேன். ஆனால், அப்பெண் தர மறுத்துவிட்டாள். இறுதியாக நான் என் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த துண்டு நிலத்தையும் கைப்பற்றிவிட்டேன். பிறகு அவள் அந்த நிலத்திற்கு அடிக்கடி வந்து, அங்கு கட்டடப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களிடம் சத்தமிடுவாள். அவர்களை வேலை செய்யவிடாமல் தடுக்க முயல்வாள். ஆனால், அவர்களோ அவளைப் பைத்தியக்காரி என நினைத்து கேலி செய்வார்கள். அவள் அங்கு வந்து அழுவாள். வானத்தை நோக்கிக் கைகளை ஏந்துவாள். நான் அதை என் கண்களால் கண்டுள்ளேன்.
ஒருவேளை அவள் இருள் சூழ்ந்த இரவுகளில் எனக்கு எதிராக செய்த பிரார்த்தனைதான் மிகக் கடுமையாக என்னை பாதித்துவிட்டது என்று நினைத்தேன். அவளைத் தேடி அலைந்து ஒரு வழியாக அவளைக் கண்டுபிடித்துவிட்டேன். நான் அவளை சந்தித்து, அழுது, என்னை மன்னிக்குமாறு கெஞ்சினேன். அவருடைய நிலத்திற்கான அபராதத் தொகையை அவள் பெற்றுக்கொள்ளச் சம்மதிக்கும் வரை, நான் அங்கேயே அமர்ந்துவிட்டேன். பிறகு அவள் என்னை மன்னித்து எனக்காகப் பிரார்த்தனை செய்தாள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவள் பிரார்த்தனைக்குப்பின் தன் கைகளைக் கீழே போட்டதும் என் கைகள் நலமடைந்ததை உணர்ந்தேன். மேலும், அவளுடைய பிரார்த்தனைதான் எந்த மருந்தும் குணப்படுத்த முடியாத என் கைகளைக் குணப்படுத்தியது" என மன உருக்கத்தோடு கூறினார். நூல்:- இஸ்தம்திஃ பிஹயாதிக்க பக்கம்-238
எனவே, நாம் யாருக்கும் அநீதமிழைத்துவிடாமல் நம்மை தற்காத்துகொள்ள வேண்டும். அப்படியே நாம் ஏதோ ஒரு சூழ்நிலையில் அநீதமிழைத்துவிட்டாலும்கூட உடனே உஷாராகி அவனிடம் உரிய வகையில் மன்னிப்பு தேடிட வேண்டும். அவன் மனதார மன்னித்துவிட்டால் தப்பித்தோம். இல்லையெனில் நம் நிலை படுமோசமாகிவிடும் என்பதில் கவனம் தேவை.
நமக்கு ஏற்பட்டுள்ள தீராத நோய்க்கு வாழ்நாளில் நாம் பிறருக்கு செய்துவிட்ட அநீதம்கூட காரணமாக இருக்கலாம். எனவே, இது குறித்து நாம் யோசிக்க வேண்டும்.