ஆடம்பரமில்லா மலப்புறம் ஆலிம்களின் திருமணங்கள்
ஆடம்பரமில்லா
மலப்புரம் ஆலிம்களின்
திருமணங்கள்..
பொதுவாக கேரள முஸ்லிம்களின் திருமணத்தில் ஆடம்பரத்திற்கும், வீண் விரயத்திற்கும் பஞ்சமிருக்காது...
ஆடம்பர விஷயத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்த ஏராளமான திருமணங்களும் இருக்கின்றன...
மலப்புரத்தில் ஓதிய பத்து வருடத்தில் ஏராளமான திருமணங்களுக்கு சென்றிருக்கிறேன்...
ஆனால் ஆலிம்களின் திருமணங்களில் கலந்துகொள்வது ஒரு சிறந்த அனுபவமும் உற்சாகமும் ஆகும்.
இது மற்ற திருமணங்களிலிருந்து வேறுபட்ட ஒரு தனித்துவமான, சிறப்பான பாணியைக் கொண்டு இருக்கும்....
மலப்புரத்தை பொறுத்தவரை கூடுதல் கல்யாணமும் வீடுகளில் வைத்து தான் நடக்கும்..
கல்யாணத்திற்கு முந்தைய நாள் கல்யாண புது மாப்பிள்ளையின் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடுவார்கள்....
இஷா தொழுகைக்குப் பிறகு, திருநபி மத்ஹ் (புகழ்) பாடல்கள்,புர்தா ஷரீஃப் அல்லது மஜ்லிஸுன்னூர், மன்கூஸ் மவ்லித் போன்றவைகளை அழகான ராகத்தில் பாடுவார்கள்...
வீட்டு முற்றத்தில் அழகான சிறிய அளவிலான மேடை அமைக்கப்பட்டிருக்கும்..
பார்வையாளர்கள் (புதுமாப்பிள்ளையின் உறவினர்கள்) அனைவரும் ஒன்றாக சேர்ந்து அந்த மஜ்லிஸில் கலந்து கொண்டு அவர்களும் ஓதுவர்.....
இறுதியில் திருமணம் செய்துகொள்ளும் தங்களது நண்பருக்காக ஸெய்யித்மார்களை வைத்து (திருநபி குடும்பத்தினர்) நீண்ட ஒரு பிரார்த்தனையுடன் மஜ்லிஸை நிறைவு செய்வார்கள்..
அடுத்த நாள், பல மார்க்க அறிஞர்களும் முத்தஅல்லிம்களும் (மார்க்க கல்வி பயிலும் மாணவர்கள்) திருமணத்திற்கு ஒன்றுகூடுவார்கள் ...
மாஷா அல்லாஹ் ...
முபாரக்கான சங்கமம் ...
பின்னர் புது மாப்பிள்ளை புத்தம் புதிய உடை அணிந்து திருமணத்திற்கு தயாராகுவார்..
திருமண விஷயத்தில் தீனின் எல்லா மரியாதையையும் மற்றும் சுன்னாவையும் கடைபிடித்து முறைப்படி காரியங்களை செயல்படுத்துவர்...
எல்லாவற்றிற்கும் அறிவார்ந்த நண்பர்கள் உடன் இருப்பார்கள்.
ஆடம்பரமோ, கேலிக்கூத்துகளோ தாறுமாறான மட்டற்ற மகிழ்ச்சியோ அங்கே பார்க்கவே முடியாது...
பிறகு புதுமாப்பிள்ளையை அவரது தந்தை கையைப் பிடித்துக் கொண்டு கீழே இறங்கி வருவார்..
உஸ்தாத்மார்கள் மற்றும் முத்தஅல்லிம்கள் "தாலஅல் பத்ரு..." என்ற நபி புகழ் வரிகளை முழக்கமிட்டு புதுமாப்பிள்ளையையும், திருமண விருந்தினர்களையும் நிக்காஹ் மஜ்லிஸிற்கு அழைத்துச் செல்வார்கள்.
பிறகு ஆலிம்களும், முத்தஅல்லிம்களும், ஊர்வாசிகளும் நிறைந்து காணப்படும் அந்த மஜ்லிஸில் வைத்து நிக்காஹ் நடைபெறும்...
திருமண விழாவைத் தொடர்ந்து மணமகனுக்காக உஸ்தாதுமார்கள், மற்றும் புது மாப்பிள்ளையின் நண்பர்கள் அனைவரும் பிரார்த்தனைகள் செய்வார்கள்..
பிறகு திருமண வாழ்க்கையைக் குறித்து ஒருவர் கொஞ்சம் நேரம் பேசுவார்...
அந்த பேச்சுக்கு மத்தியில் மணமகனைக் குறித்து அறிமுகம் செய்யப்படும். (இதை அவரோடு படித்த மதரசாவிலுள்ள மாணவர் மன்றத்தின் நிர்வாகிகள் செய்வார்கள்..)
பிறகு மணமகன், மணமகளின் பெயர்களையும் மற்றும் இருவரது தந்தையின் பெயர்களையும் இணைத்து திருமண பாடலைப் பாடுவார்கள்.
பெரும்பாலும் அரபியில் தான் இந்த பாடலைப் பாடுவார்கள்...
பிரேம் செய்யப்பட்ட அந்த பாடல் வரிகளை இரு குடும்பத்தினரிடமும் வழங்கப்படும்.
"வலீமா விருந்து சாப்பிட்டு பிறகு, அனைவரும் ராஹத்தாக (மனநிம்மதியாக) மனமக்களை பிரார்தித்து விட்டு விடைபெற்று செல்வார்கள்...
திருமணங்கள் ஆடம்பரமும், கேலிக்கூத்தும், வீண்விரயமுமாக்கப்பட்ட இந்தக் காலகட்டத்தில் நிச்சயம் உலமாக்களின் திருமணங்களில் நல்ல முன்மாதிரி இருக்கிறது..
மலப்புரத்தில் நான் ஓதும் காலத்தில் பங்கெடுத்துக் கொண்ட ஆலிம்களின் ஏராளமான கல்யாணங்களும் எளிமையான, வீண்விரயமும் இல்லாத கல்யாணங்கள்தான்...
இந்த கொரோனா காலத்தில் கூட பணத்தை வாரி எறிந்து தன் கெத்தை வெளிப்படுத்தும் நபர்களை என்னத்த சொல்ல...
M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி...