தொழுகையில் கையை எப்படி கட்ட வேண்டும்

தொழுகையில் கையை எப்படி கட்ட வேண்டும்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

தொழுகையில்
கையை எப்படி கட்ட வேண்டும்..

"வ அத்திவுல்லாஹ் வஅத்திவுர் ரசூல வஉலில் அம்ரி மின்க்கும்" முஃமின்களே! அல்லாஹ்விற்கு வழிப்படுங்கள்.
இன்னும் ரசூலுக்கும் வழிப்படுங்கள்.
உங்களில் மார்க்கஞானம் உள்ளவர்களுக்கும் வழிப்படுங்கள்
(அல்குர்ஆன். 4: 59) என்று கூறுகிறான்.

இன்னொரு ஆயத்தில் (இவ்வுலகில் நற்காரியத்தில்) என்அளவில் திரும்பியுள்ளவரின் வழியை பின்பற்றுவாயாக
(அல்குர்ஆன் 31: 15) என்று கூறுகிறான்.
இதில் அல்லாஹ்விற்கும் ரசூலுக்கும் கட்டுப்படுவது என்பது ஞானவான்களான இமாம்களின் கூற்றுக்கும் வழிப்படவேண்டும் என்பது புலனாகிறது.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலம் முதல் கழிந்த நூற்றாண்டுவரை தொழுகையில் நெஞ்சின் மீது கையை கட்டக்கூடாது என்பதுதான் முஸ்லிம்களின் செயல்பாடாக இருந்தது. இறுதிநாள் நெருங்கும் தருவாயில் தோன்றியிருக்கக் கூடிய புதுமையான குழப்பவாதங்களில் ஒன்று தொழுகையில் நெஞ்சின்மீது கைகட்டுவது.

தொப்புளுக்குமேல் கட்டுவது

அஹ்லுஸ் சுன்னத்துல் ஜமாஅத்தை சார்ந்த இமாம்களான நாதாங்களில் இமாம் ஷாஃபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தனக்கு ஆதாரமாக இந்த ஹதீஸை எடுத்திருக்கிறார்கள்.
"இப்னு ஹீஜ்ர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். நான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுதேன். அவர்கள் தனது வலது கையை இடது கையின்மீது வைத்து நெஞ்சுக்கு கீழே கட்டினார்கள். (நூல் இப்னுஹுஜைமா) இந்த ஹதீஸின் பிரகாரம் தொழுகையில் நெஞ்சுக்கும். தொப்புளுக்கும் மத்தியில் கையை கட்டும்படி கூறுகிறார்கள்.

தொப்புளுக்கு கீழ் கட்டுவது

இமாம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தனக்கு ஆதாரமாக இந்த ஹதீஸை எடுத்திருக்கிறார்கள்.

ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூஹுரைரா ரலியல்லாஹு கூறியதாக அறிவிக்கிறார்கள். "தொழுகையில் முன்கையை (வலது கையை) அடுத்த கையின்மீது (இடது கையின்மீது) வைத்து தொப்புளுக்கு கீழ் கட்ட வேண்டும். (நூல் அபூதாவூத்)

வாயில் இப்னுஹுஜர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹு வணல்லம் அவர்களை வலது கையை இடது கையின்மீது தொப்புளுக்கு கீழே வைத்தவர்களாக பார்த்தேன்.
(நூல்-இப்னு அபீஷைபா)

இதன் பிரகாரம் தொழுகையில் கையை தொப்புளுக்கு கீழ் சுட்ட வேண்டும் என்று கூறுகிறார்கள். இவைகள்தான் இன்றுவரை நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆனால் இன்று புதுமைவாதிகளான வஹாபிய கொள்கைகளை பின்பற்றக்கூடிய நஜாத், தௌஹீதுவாதிகள் நெஞ்சு மேல் கையை கட்டவேண்டும் என்று கூறுகிறார்கள்.

அதற்கு ஆதாரமாக,
வாயில் இப்னுஹுஜ்ர்
ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நெஞ்சின் மீது கை கட்டுவதை பார்த்தேன்.

(நூல் -இப்னுஹுஜைமா)

இந்த ஹதீஸ் பலகீனமானது.
காரணம் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் முஅம்மல் என்பவர் இருக்கிறார். இவர் மனன சக்தி குறைந்தவர்.
எனவே இந்த ஹதீஸ் பலகீனமானது என்று இதே கிதாப் இப்னு ஹுஸைமா பாகம் 1 பக்கம் 243ல் ஓரக்குறிப்பில் கூறுகிறார்கள்.

வஹாபிகளுக்கு மறுப்பு

வஹாபிகள் "அலாசத்ரிஹி" என்பதற்கு நெஞ்சின் மீது என்கிறார்கள். இது தவறான அர்த்தமாகும். இந்த ஹதீஸை நாம் நமது அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் இமாம்கள் விளக்கம் தந்த பிரகாரம் "அலாசத்ரிஹி" என்றால் நெஞ்சுக்கு அருகில் என்று அர்த்தம் கொள்ள வேண்டும். ஏனெனில் "அலா” என்பது "மீது” என்ற அர்த்தம் கொள்வது சரிஇல்லை. "அலா" என்பதற்கு "அருகில்" என்று அர்த்தம் கொள்வது தான் சரி. இதற்கு ஆதாரமாக குர்ஆனின் வசனத்தை பார்ப்போம்.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது (குடும்பத்துடன்) மனைவியுடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தபொழுது தூரத்தில் நெருப்பை கண்டார்கள். பின்பு தனது மனைவியிடம் இங்கே தங்கி கொள்ளுங்கள் நான் அந்த நெருப்பின் அருகில் சென்று நாம் செல்லக்கூடிய வழியை பெற்று வருகிறேன் என்று கூறி சென்ற செய்தியை அல்லாஹ் கூறும்பொழுது, "அவ் அஜிது அலன் நாரி ஹுதன் " அந்த நெருப்பின் அருகில் (சென்று மேலும் செல்லக்கூடிய) வழியை நான் பெறுவேன் (20:10) என்று மூஸா அலைஹிஸ்ஸலாம் கூறியதாக குர்ஆன் கூறுகிறது.

இதில் “அலா”விற்கு அருகில் என்று அர்த்தம் வைக்காமல் "மீது" என்று அர்த்தம் கொண்டால் அந்த நெருப்பின்மீது (ஏறி நின்று) வழியை பெறுவேன் என்று தவறாக அர்த்தம் ஆகிவிடும். நெருப்பின்மீது ஏறி நிற்க முடியுமா? எனவே இங்கு அலா என்பது மீது என்று அல்ல மாறாக அருகில் என்ற அர்த்தத்தில் வரும்.

நெஞ்சுக்கு அருகில்

ஹுல்ப் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள். "நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது வலது கையை இடது கையின்மீது நெஞ்சின்
அருகில் வைத்தார்கள்.
(நூல் - அஹ்மது)

அருகில் என்ற வார்த்தைக்கு விளக்கமாக அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் செயல் அமைந்திருக்கிறது.

ஜரீருலபிய்யு
(ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்.
“இடது கை மணிக்கட்டை, வலதுகை கொண்டு பிடித்தவர்களாக தொப்புளுக்கு மேலே அலிரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது கையை வைத்ததை பார்த்தேன்.

(நூல் - அஹ்மது)

எனவே 'அருகில்' என்ற வார்த்தைக்கு 'மீது' என்று வஹாபிகள் பொருள்
கொள்வது தவறு.
இதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.

1. இந்த ஹதீஸை அறிவிக்கும் இமாம் அஹ்மது இப்னுஹம்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்களே, நெஞ்சுக்கு கீழ் கை கட்ட வேண்டும் என்ற கருத்தை கொண்டுள்ளார்கள்.

2. 'மீது' என்று பொருள் கொள்வது ஸஹாபாக்களின் ஏகோபித்த நடைமுறைக்கு மாற்றமானது.

3. 'அலா' என்ற வார்த்தைக்கு 'அருகில்' என்று பொருள் வைப்பதற்கு ஸஹாபிகளின் செயல்கள் ஆதாரமாக உள்ளது. 'மீது' என்று அர்த்தம் வைப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

4. மீது என்று பொருள் கொடுத்து வஹாபிகள் காட்டக்கூடிய ஹதீஸ் பலவீனமானது.

எனவே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஸஹாபாக்கள், இமாம்கள் ஆகியோரும் 14 நூற்றாண்டுகளாக முஸ்லிம்களின் நடைமுறை நெஞ்சின்மீது கைகளை கட்டுவது தவறு என்பதாக அமைந்துள்ளது. இந்த முஸ்லிம்களின் நடைமுறையை விட்டு விலகினால் அவனது நிலையை பற்றி அல்லாஹ் கூறும்பொழுது,

வமன் யுஸாக்கிக்கிர் ரசூல மிம்பஅதி மா தபய்யன லகுல் ஹுதா வயத்தபிஃவ் ஹைர ஸபீலில் முஃமினீன நுவல்லிஹி மா தவல்லா வநுஸ்லிஹி ஜஹன்னம வஸாஅத் மஸீரா
(4: 115)

நேர்வழி தெளிவான பிறகு
யார் ரசூலுக்கு மாறுபட்டு நடக்கிறாரோ மேலும் முமின்களின் வழியல்லாத வழியை பின்பற்றுகிறாரோ அவன் திரும்பிய வழியிலேயே அவனை செல்லவிட்டு, நரகில் அவனை சேர்ப்போம். அது சென்றடையும் இடங்களில் மிக கெட்டது என்று கூறுகிறான்.

எனவே தொழுகையில் நெஞ்சுக்கு கீழ் தொப்புளுக்கு மேல் அல்லது தொப்புளுக்கு கீழ் கையை கட்டி தொழுவோமாக. ஏனெனில் ரசூல்நாயகம் சொன்னதின் பிரகாரம் ''என்னை எப்படி தொழக்கண்டீர்களோ அவ்வாறே தொழுது கொள்ளுங்கள் என்பதாலும், சூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமை ஸஹாபிகள் அவ்வாறு கண்டிருப்பதாலும் நாமும் அவ்வாறே தொழுவோமாக.