அஹ்லுஸ்ஸுன்னத்து வல் ஜமாஅத்தின் அழகிய பாதை

அஹ்லுஸ்ஸுன்னத்து வல் ஜமாஅத்தின் அழகிய பாதை

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

*#அஹ்லுஸ்_ஸுன்னத்_வல்_ஜமாஅத்தின்_அழகிய_பாதை*

*இஸ்லாம் இறைவனால் அகில மக்களுக்கு அருளாக வழங்கப்பட்ட அற்புதமான வாழ்க்கை நெறி. நபி ஆதம் (அலை) அவர்கள் முதல் அண்ணல் (ﷺ)அவர்கள் வரை தோன்றிய இறைத்தூதர்கள் அனைவரும் போதித்த மார்க்கம் இஸ்லாம் ஒன்றே!*

*இஸ்லாத்தைத் தவிர (வேறோரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவனிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்படமாட்டாது குர்ஆன்(3:85)*

*இறைவனால் அங்கீகாரம் வழங்கபெற்ற இஸ்லாம் ஆரம்பக் கட்டத்தில் குழந்தைப் பருவத்தில் இருந்தது.எனவே அப்போதைக்கு தேவைப்பட்ட சிறு சிறு சட்டங்களை இறைவன் நடைமுறைப் படுத்தினான்.*

*மக்கள் பல்கிப் பெருகினர்.ஜனத்தொகைக்கு ஏற்ப பிரச்சனைகளும் வளர்ந்தன.அக்கால கட்டங்களில் ஏக தெய்வக் கொள்கையினை வலியுறுத்தி, மக்களை நேர்வழி செலுத்த வழிகாட்டிகள் தேவைப்பட்டனர்.எனேவே அல்லாஹ் தனது தூதர்களை அவ்வப்போது அனுப்பினான்.தோன்றிய நபிமார்கள் புதுப்புது தெய்வ நம்பிக்கைகளை மக்களுக்குப் போதிக்கவில்லை.மாறாக இறைவன் விதித்த கட்டளைகளை மட்டுமே அறிவுறுத்தினர்.*

*"அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உமக்கு முன்னிருந்த பல வகுப்பாளர்களுக்கும் நாம் (நம்முடைய) தூதர்களை அனுப்பி வைத்தோம்.*
*குர்ஆன்: 16=63.*

*இவ்வாறு நபிமார்கள் மூலமாக இஸ்லாம் உலகில் கைமாறிக் கொண்டே வந்து இறுதியாக மனித சமுதாயம் பல்கிப் பெருகி வழிகேடுகள் நிறைந்த ஒரு கட்டத்தில் அண்ணல் பெருமான்(ﷺ)அவர்கள் தோன்றினார்கள்."எனினும் அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு முத்திரையாக (இறுதி நபியாக)வும் இருக்கிறார்.*
*(குர்ஆன் 33=40)*

*இறுதி நபியாகத் தோன்றிய அண்ணல் (ﷺ)அவர்களின் அருமைத் தோழர்கள் மற்ற நபிமார்களின் சீடர்களைப் போன்றில்லாமல் உண்மையான உள்ளத்தோடு அண்ணலரின் கஷ்ட, நஷ்டங்களிலும் தோள்கொடுக்க ஏன் இன்னுயிரையே கொடுக்கத் துணிந்து நின்றனர்.*

*நபிமணித் தோழர்கள் நாயகம் (ﷺ)அவர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி ஒழுகினர்.அண்ணலரின் ஆணைக்கு மாறாக இம்மியும் அவர்கள் நடக்கத் துணியவில்லை.*

*எனவேதான் உம்மத்தே முஹம்மதிய்யாவின் உன்னத வழிகாட்டிகளாக ஸஹாபாப் பெருமக்கள் திகழ்கின்றனர்.*
*இறைவன் அவர்களைப் பொருந்திக்கொண்டான் அவர்கள் அவனைப் பொருந்திக் கொண்டனர் "என இறைமறை போற்றுமளவுக்கு தம் வாழ்வியலை அமைத்துக் கொண்டு அனைத்துத் துறைகளுக்கும் முன்னோடியாக திகழ்ந்தனர் அவர்கள்.*

*அண்ணல் நபி (ﷺ) அவர்கள் தம் தோழர்களைக் குறித்து "எனது தோழர்கள் நட்சத்திரங்களை போன்றவர்கள் அவர்களில் எவரைப் பின்பற்றினாலும் நேர்வழி பெறுவீர்கள் என்று புகழ்ந்துரைத்தார்கள்.*
*நூல்: ரஸீன், மிஷ்காத்.*

*இத்தகைய சிறப்பார்ந்த தோழர்களின் வழிமுறைகளையும் பின்பற்றுபவர்கள் தாம் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினர்.*

*குர்ஆனையும், ஹதீதையும் மட்டும் எடுத்துக் கொண்டு ஸஹாபாக்களின் வழிமுறைகள் தேவையற்றவை என்று கூறினால் அவன் உண்மையான முஸ்லிமல்ல!ஏனெனில் இஸ்லாத்தின் வழிகாட்டிகள் அவர்கள். ஒரு கட்சிக்கு வழிகாட்டும் தலைவர்களின் கொள்கைகளை, வழிமுறைகளை ஏற்காதவன் அக்கட்சியின் உண்மையான விசுவாசமுள்ள தொண்டனாக முடியாதல்லவா?எனவே நபித்தோழர்களின் வழிமுறைகளில் குறை காண்பவன் தன்னே முஸ்லிம் எனக் கூறிக் கொள்வதற்கே அருகதையுடையவன் அல்ல.*

*" இஸ்ரவேலகள் 72 கூட்டங்களாக பிரிந்தனர் எனது உம்மத் 73 கூட்டங்களாக பிரிவர் அவர்களில் ஒரு கூட்டத்தினரைத் தவிர அனைவரும் நரகவாசிகள், யாரசூலுல்லாஹ்! அந்த ஒரு கூட்டம் யாது? என ஸஹாபாக்கள் வினவ நானும், எனது ஸஹாபாக்களும் எந்தக் கொள்கையில் இருக்கின்றோமோ அக்கொள்கையுடையோர்.*
*நூல்; திர்மிதி.*

*இந்த நபிமொழிக்கு விளக்கம் எழுதிய ஹலரத் முல்லா அலீ காரி (ரலி) அவர்கள் தமது மிர்காத்தில் "சந்தேகத்திற்கிடமின்றி அவர்கள் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் தாம்" என்று பகர்கின்றார்கள்.*

*நபித் தோழர்களின் செயல் முறைகளுக்கும், அபிப்ராயங்களுக்கும் இஸ்லாமிய ஷரீஅத் முக்கியத்துவம் அளிக்கிறது.அவர்களின் கருத்தினை ஏற்றுக் கொண்டால் தான் ஷரீஅத்தின் சட்ட விளக்கங்களில் ஒரு தீர்மானமான முடிவுக்கு வர இயலும்.*

*ஸஹாபாக்கள் செய்த ஒரு செயல் அது நபிபிரானுடைய காலத்தில் இல்லை என்றிருக்குமாயின் அதுவும் ஷரீஅத்தில் அங்கீகாரம் பெற்றதாகும்.இதனை ரஸூல் (ﷺ) அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.என்பதையே "எனது தோழர்களில் யாரைப் பின்பற்றினாலும் நேர்வழி பெறுவீர்கள்" என்ற நபிமொழி உறுதிப்படுத்துகிறது.*

*உதாரணமாக ஜும்ஆவுக்கு இரண்டு பாங்குகள் இன்று நடைமுறையில் உள்ளது.ஆனால் அண்ணல் நபி (ﷺ) அவர்கள், அபூபக்கர் சித்தீக் (ரலி) உமர் (ரலி) ஆகியோர் காலத்தில் இரண்டு பாங்குகள் கிடையாது.உஸ்மான் (ரலி) அவர்கள் தான் இரண்டு பாங்கை நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள்.இதனை அக்காலத்தில் வாழ்ந்த ஸஹாபாக்கள் ஏகோபித்து ஒத்த கருத்துடன் ஏற்றுக் கொண்டனர்.எவரும் ஆட்சேபனை செய்யவில்லை.*

*உஸ்மான் (ரலி) அவர்களின் இச்செயலைக் குறைகாண்பவன் அவன் உஸ்மானை மட்டுமல்ல அதன்மூலம் அண்ணல் நபி (ﷺ) அவர்களை குறை காண்பவனாகின்றான்.*

*இன்றைக்கும் புதுக்கொள்கைக்காரர்கள், குர்ஆனையும், ஹதீதையும் எடுத்து கொண்டு அவற்றுக்கு தவறான விளக்கங்களை தந்து பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றனர்.*

*இதனைக்குறித்து அண்ணலர் (ﷺ) சொன்னார்கள். "பிற்காலத்தில் வாழ்பவர்கள் அனேக அபிப்ராய பேதங்களை சந்திப்பர் அந்நேரத்தில் என்னுடையவும், நேர்வழிப்பெற்ற கலீபாக்களுடையவும் வழிமுறைகளை நீங்கள் பின்பற்றிச் செல்லுங்கள். அதனை உறுதியாகப் பற்றிப்பிடித்து கடைவாய் பற்களினால் கடித்துப் பிடித்து கொள்ளுங்கள்.*
*நூல்: இப்னு மாஜா.*
*அபூ தாவூது.*

*இன்றைய சூழலின் அவல நிலை குறித்து அண்ணலர் (ﷺ) அவர்களின் முன்னறிவிப்பு இது. எனவே ஸஹாபாக்களின் வழிமுறைகளை பின்பற்றி ஒழுகுவது நம்மீது கடமை!*

*ஆக நபி பெருமானார் (ﷺ) அவர்களுடையவும், ஸஹாபாக்களுடையவும் வழிமுறைகளை விமர்சனம் செய்யாமல் ஏற்றுக் கொண்டு.*

*கொள்கை அடிப்படையில் இமாம் அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) அவர்கள், இமாம் அபூ மன்சூர் அல் மாதுரிதி (ரலி) அவர்கள் ஆகிய இருவரில் ஒருவரையும், சட்டத்துறையில் இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்கள், இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள், இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள், இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்)அவர்கள் ஆகிய நால்வரில் ஒருவரையும் பின்பற்றி ஷரீஅத்தின் அழகிய பாதையில் நடப்பவர்கள் தாம் அஹ்லுஸ்ஸுன்னத்தி வல் ஜமாஅத்தினர்.*

*நபிகளாரும், தோழர்களும் கற்றுத் தந்த ஷரீஅத்தின் வழி முறைகளை கட்டிக்காப்பது மத்ஹபுகள் தான் என்பதில் ஐயமிருக்க முடியாது.மத்ஹபை விலக்கி வைத்து விட்டு ஷரீஅத்தின் படி நடப்பது என்பது சாத்தியமற்றது ஏனெனில் மத்ஹபுகளின் துணையின்றிச் சென்றால் ஷரீஅத்திலிருந்து வெளியேறிவிட ஏதுவாகும்."மத்ஹபுகள் தேவையற்றவை"என்போரின் இன்றைய நிலையும் இதுதான்..*

*நவீன வாதிகளுடன் சுன்னத் வல் ஜமாஅத்தினர் நடத்தி வரும் கொள்கை போராட்டம் இன்று நேற்று தொடங்கியதல்ல! ஸஹாபாக்களின் காலத்திலேயே இவர்கள் கவாரிஜிய்யா, கத்ரிய்யா,முஃதஸிலா என்ற பெயரில் தோன்றினர்.எனினும் சுன்னத் வல் ஜமாஅத்தின் பெருமைக்குரிய மேதைகள் அவர்களுடன் கொள்கைப் போர் புரிந்து அவர்களது குழப்பவாதங்களுக்கு பதிலடி தந்தனர்.இன்றும் அந்த நிலை தொடர்கிறது..*

*"அல்லாஹ்வின் ஏவலை நிலை நிறுத்தக்கூடிய ஒரு கூட்டத்தினர் எனது சமுதாயத்தில் என்றுமிருப்பர்.மாறு செய்வோர் அவர்களுக்கு எந்த தீங்கையும் விளைவித்து விட முடியாது. இவர்கள் வெளிப்படையாகவே இருப்பர்(இவர்களே வெற்றி பெறக்கூடியவர்கள்)*
*நூல்:முஸ்லிம்.*
*பாகம்=2 பக்கம்_123*

#தகவல்:* *M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி*