இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரி
இமாம்_அபுல்_ஹஸன்_அல்_அஷ்அரி (ரழி) அவர்கள்
அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமே! அதனை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ் நபிமார்களை மக்களிலிருந்து தேர்ந்தெடுத்து அனுப்பினான். இவர்கள் பல சிரமங்கள் சகித்தும் இன்னும் பல கஷ்டங்கள் அனுபவித்தும் இந்த புனித மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைத்தார்கள். எதிரிகளுடைய பல தாக்குதல்களுக்கு ஆளாகியும் கூட அல்லாஹ்வின் பொருத்தத்திற்காக பொறுமையுடன் முன்னேறிக் கொண்டிருந்தார்கள் இறுதியில் வெற்றியும் அடைந்தார்கள்.*
*இந்த தூய இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைப்பதற்காக இறுதித் தூதராக வந்த கண்மணி நாயகம் முஹம்மது முஸ்தஃபா நபியுல்லா அவர்களும் அனுபவித்த கஷ்டங்களுக்கு அளவே கிடையாது. இவ்வாறு பராமரித்த இந்த மார்க்கத்தை எப்படி பேண வேண்டுமோ அந்த முறையில் நபித்தோழர்கள் பேணி காத்தார்கள் பின் வந்த தாபிஈன்களும் சஹாபாப் பெருமக்களிடம் இருந்து எவ்வாறு கற்றுக் கொண்டார்களோ அதே முறையில் இமாம் பெருமக்களுக்கும் கற்றுக் கொடுத்தார்கள்.*
*இவ்வாறு தங்களுடைய வாழ்க்கையை தீனுக்காக அர்ப்பணித்து மாபெரும் சேவைகள் செய்தவர்கள் இமாம்கள்.*
*பெரும்பாலும் மக்களுக்கு மத்ஹபுகளுடைய நான்கு இமாம்களை பற்றி மட்டுமே தெரிந்திருக்கும் அகீதாவுடைய இமாம்களைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். மார்க்க சட்டங்களில் நான்கு இமாம்களில் ஒரு இமாமை பின்பற்றுவது கட்டாயம் ஆனதைப் போன்று அகீதாவிலும் இரண்டு இமாம்களில் ஒரு இமாமைப் பின்பற்றுவது அவசியமாகும்.*
1 : *இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரி (ரழியல்லாஹு அன்ஹு)*
2 : *அபூ மன்சூரில் மாதுரீதி (ரழியல்லாஹு அன்ஹு)*
*இந்த இரண்டு இமாம்களுக்கு மத்தியில் ஒன்றிரண்டு விஷயங்களில் மட்டுமே கருத்து வேறுபாடுள்ளது. அதும் பெயரளவில் வெளித்தோற்றத்தில் மட்டுமே உள்ரங்கத்தில் கருத்து வேறுபாடு இல்லை.இதில் பெரும்பாலும் ஷாபிஈ மத்ஹபைப் பின்பற்றுபவர்கள் அகீதா விஷயத்தில் அஷ்அரி இமாமை பின்பற்றுகிறார்கள். அபூ ஹனீபா இமாமை பின்பற்றக் கூடிய மக்கள் அகீதா விஷயத்தில் மாதுரீதீ இமாமை ஏற்றுக் கொள்கிறார்கள். அதனால் நம்முடைய இமாமாகிய அஷ்அரி இமாமைப் பற்றி தெரிந்து கொள்வது அவசிமாக இருக்கிறது.*
*இமாம் அஷ்அரி (ரழியல்லாஹு) வின் வாழ்க்கை வரலாறு.*
*ஹிஜ்ரி 260_ல் பஸறாவில் பிறந்தார்கள். இவர்கள் நபி (ﷺ) அவர்கள் சொன்ன உத்தம நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் ஆவார்கள்.*
*கண்மணி நாயகம் (ﷺ) கூறினார்கள்.*
*خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم*
*என்னுடைய நூற்றாண்டு என்பது நூற்றாண்டுகளிலேயே மிகவும் சிறந்தது. பிறகு அடுத்த நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் மிகவும் சிறந்தவர்கள். இன்னும் அதற்கு அடுத்த நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் மிகவும் சிறந்தவர்கள்.*
*இந்த ஹதீஸ் காட்டுவது முதல் மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள் மிகவும் சிறந்தவர்கள். நம்முடைய இமாமும் இந்த சிறப்பான மூன்றாவது நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். இமாமவர்களின் பெயர் அலீ என்பதாகும். தந்தையின் பெயர் இஸ்மாயீல் அஷ்அரி இமாமின் புனைப்பெயர் அபுல் ஹஸன் அபூ மூஸல் அஷ்அரி (ரழி) அவர்களுடைய பரம்பரையில் பிறந்த பேரப்பிள்ளையாவார்கள்.*
*எமனில் அஷ்அரிய்யா வம்சத்தின் சிறப்பு.*
*ஸஹாபியான அபூ மூஸல் அஷ்அரி தலைமையில் 50_க்கும் 60 _க்கும் மத்தியில் வரும் ஒரு கூட்டம் நாயகம் (ﷺ) அவர்கள் மதீனாவுக்கு வந்துவிட்டார்கள் என்ற செய்தி அறிந்தவுடன் எமனிலிருந்து மதீனா நோக்கி கப்பல் பயணம் செய்தார்கள். பயணத்தின் போது கப்பலின் திசை மாறியதால் அவர்கள் அபீசீனியாவில் சென்று இறங்கினார்கள். அங்கு நஜ்ஜாஸி அரசரின் பாதுகாப்பில் வாழக்கூடிய ஸஹாபாக்களின் கூட்டத்தில் சேர்ந்து சிறது காலம் தங்கினார்கள். இந்த ஸஹாபாக்களும் மக்காவில் இருந்து எதிரிகளின் தொல்லையால் அபீசீனியாவிற்கு பயணம் செய்தவர்கள் ஆவார்கள். பின்பு அனைவரும் கைபர் போரில் முஃமின்கள் வெற்றி பெற்ற போது மதீனாவுக்கு வந்து சேர்ந்தார்கள். வரும் போது அபூமூஸல் அஷ்அரி (ரலி) கூறினார்கள்.*
*غدا نلقي الاحبة محمد وحزبه*
*நாம் நேசிக்ககூடிய முஹம்மது நபி (ﷺ) அவர்களையும், அவர்களின் கூட்டத்தாரையும் நாளை பார்க்கப் போகிறோம்.என்று பலமுறைக் கூறி மகிழ்ச்சி அடைந்தார்கள்.*
*கண்மணி நாயகம் (ﷺ) அவர்களை பார்ப்பதற்கு முன்னே நபி நேசத்தையும், இஸ்லாத்தையும் புரிந்தவர்கள்.*
*அவர்கள் அல்லாஹுவை நேசிக்கிறார்கள் அவனும் அவர்களை நேசிக்கிறான். இப்படிப்பட்ட ஒரு கூட்டத்தை அல்லாஹ் தஆலா கொண்டு வருவான்.*
*فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه*
*என்ற வசனம் இறங்கிய போது கண்மணி நாயகத்தின் (ﷺ) பக்கத்தில் அமர்ந்திருந்த அபூ மூஸாவைப் பார்த்து அல்லாஹ்த்தஆலா புகழ்ந்த அந்த கூட்டத்தார்கள் உங்களுடைய கூட்டத்தார்கள் என்றார்கள்.*
*இன்னும் இவர்கள் வந்த போது நாயகம் (ﷺ) கூறினார்கள்.*
*இரக்க உள்ளம் படைத்த, இன்னும் மென்மையான உள்ளம் இருக்கும் கூட்டத்தார்களாகிய எமன் நாட்டவர்கள் வந்துள்ளார்கள்.*
*இன்னும் நாயகம் (ﷺ) கூறினார்கள்.*
*நிச்சயமாக அஷ்அரி குடும்பத்தை சார்ந்தவர்கள் போரின் போது உணவு தீர்ந்து விட்டாலோ, அல்லது மதீனாவில் வைத்து தங்களின் குடும்பத்தார்களுக்கு உணவு குறைந்து விட்டாலோ ஒரு துணியில் அவர்கள் தங்கள் அருகில் இருக்கும் உணவை ஒன்று சேர்ப்பார்கள். பிறகு அதை சமமாக ஒவ்வொரு பாத்திரத்திலும் பங்கிட்டு கொடுப்பார்கள் அதனால் அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் நானும் அவர்களை சார்ந்தவர்வரே.*(புகாரி)*
*நாயகம் (ﷺ) அவர்கள் சொன்னதாக அபூ மூஸல் அஷ்அரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.*
*இறைவா அப்துல்லாஹ் இபுனு கைஸ் என்பவருடைய பாவங்களை நீ மன்னித்து விடு. கியாமத் நாளில் மிகவும் சங்கையான இடத்தில் நுழையச் செய்வாயாக. இந்த ஹதீஸில் கூறப்பட்ட அப்துல்லாஹ் இப்னு கைஸ் என்பவர் அபூ மூஸல் அஷ்அரி (ரழி) அவர்களே.. (புகாரி.)*
*நாயகம் (ﷺ) அவர்கள் சொன்னதாக ஹுதைஃபா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.*
*கண்மணி நாயகம் (ﷺ) அவர்கள் ஒரு நபருக்காக துஆ செய்தால் அதனுடைய பறக்கத் அந்த நபருக்கும் அவரின் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் வந்து சேரும்.* *(முஸ்னது அஹ்மது)*
*மேலே கூறப்பட்ட ஹதீதுகள் அனைத்தும் நம்முடைய இமாமான அபூ ஹஸனுல் அஷ்அரியுடைய பாட்டனாருடைய சிறப்பைச் சுட்டிக்காட்டுகின்றது. இச்சிறப்பு நம்முடைய இமாம் அவர்களுக்கும் பொருந்தும் என்பதில் சந்தேகமில்லை.*
*இமாமவர்களின் நற்பண்புகள்.*
*குர்ஆன் விரிவுரையாளரும், ஹதீது கலை வல்லுனர்களும், பெரும்பாலும் அஷ்அரி இமாமை பின்பற்றக்கூடியவர்கள். இன்னும் மார்க்க சட்ட வல்லுனர்களும் அஷ்அரி இமாமைப் பின்பற்றுகிறார்கள். இதுவே இமாமுடைய நற்பண்புக்கு மிகப்பெரிய சான்று.இமாமவர்கள் மிகவும் பணிவுத் தன்மை உள்ளவராகவும், வெட்கக்குணம் உள்ளவர்களாகவும், மிகவும் பேணுதலும், சிறந்த நற்குணமும் உடையவராக திகழ்ந்தார்கள். பார்க்கும் போது கம்பீர தோற்றம் உடையவராகவும் திகழ்ந்தார்கள்.*
*ஒரு முறை அஷ்அரி (ரலி) இமாம் தன்னுடைய எதிரியுடன் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.அவ்விவாதத்தில் தன்னுடைய எதிரி வெற்றி பெற்றார்.அப்போது அந்த எதிரியை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு பாமர மனிதன் தன் கையிலிருந்த பாதாமையும், திராட்சையையும் இமாமின் மீது எறிந்தான் அதற்கு இமாமவர்கள் நீங்கள் என்ன செய்கிறீர்கள் வெற்றி பெற்றவர் நீங்கள் ஏற்றுக் கொள்ள கூடியவரல்லவா என்மீது எறிந்த பொருளை அவருக்கு கொடுத்திருக்கலாம்.நானோ தோற்றுவிட்டேன் என கூறினார்கள்.இந்த நற்குணத்தை புரிந்து கொண்ட எதிரியும் கூட இமாமவர்களை பின்பற்றக்கூடியவராக மாறினார்.*
*இமாமவர்கள் மிகவும் நினைவாற்றல் உடையவராகவும் இருந்தார்கள். அதற்கு சான்றாக அபூ அப்தில்லாஹ் என்பவர் கூறுகிறார்கள்.*
*நான் ஒரு முறை அஷ்அரி இமாமைத் தேடி பஸறாவுக்குச் சென்றேன்.அப்போது அவர்கள் விவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள். எதிரிகளாக முஃதஸிலத் என்ற வழிதவறிய கூட்டம் வாதம் செய்து கொண்டிருந்தார்கள்.இந்த எதிரிகள் அனைவரும் தங்களுடைய அனைத்து கேள்விகளையும் கேட்டு முடிந்த போது இமாமவர்கள் நிதானமாக ஒவ்வொரு நபரிடமும் தங்களுடைய கேள்வியும் கூறி பதிலையும் சொல்லி முடித்தார்கள்.அனைவருக்கும் தக்கபதில் கூறி முடித்த பிறகு இமாம் வெளியே வந்தார்கள்.அப்போது நான் இமாமவர்களை பார்த்துக் கொண்டிருந்தேன்.ஏன் பார்த்து கொண்டிருக்கிறீர்கள் என வினவிய போது நான் கேட்டேன் உங்களுக்கு எத்தனை நாக்குகள், எத்தனை கண்கள், எத்தனை செவிகள் அதற்கு இமாம் சிரித்தபடி நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என கேட்டார்கள். நான் ஷீறாவிலிருந்து வருகிறேன் என்று கூறினேன். பின்பு இமாமுடன் சேர்ந்து நானும் தோழமைப் பெற்றேன்.இச்சம்பவம் இமாமுடைய பொறுமைக்கும் நினைவாற்றலுக்கும் ஒரு எடுத்துக்காட்டு.*
*இமாமவர்கள் வழி தவறிய பித்அத் வாதிகளோடு மிகவும் வெறுப்புடையவராக இருந்தார்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.*
*அபூ அலி ஸாஹிர் (ரலி) சொல்கிறார்கள். என்னுடைய மடியில் வைத்து தான் அஷ்அரி இமாம் வஃபாத்தானார்கள். ரூஹ் பிரியும் நேரத்தில் ஏதோ சொல்வது போன்று தெரிந்தது. அப்போது என்னுடைய தலையை இமாமவர்களின் பக்கத்தில் கொண்டு சென்றேன். அவர்கள் (அல்லாஹ் முஃதஸிலத் என்ற வழிதவறிய கூட்டத்தார்களை சபிக்கட்டும்) என்று துஆ செய்ய கேட்டேன். மரணிக்கும் நேரத்திலும் கூட கண்மணி நாயகம் (ﷺ) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்திற்கு மாற்றமான குழப்ப கொள்கையோடு இமாம் காட்டிய வெறுப்பு குறிப்பித்தக்கது இமாமவர்கள் வாழ்ந்து காட்டியது போன்று நாமும் இன்றுள்ள பித்அத் கூட்டத்தாரோடு வெறுப்புள்ளவராக வாழ வேண்டும்.*
*இமாம் அஷ்அரி (ரலி) வின் புகழ்.*
*நாயகம் (ﷺ) கூறுகிறார்கள். ஒவ்வொரு நூற்றாண்டு டைய துவக்கத்திலும் மக்களுக்கு நபியின் திருசுன்னத்துக்களை கற்றுக் கொடுக்க கூடிய நாயகத்தின் மீது கூறப்படும் பொய்யான விஷயங்களை தடுக்ககூடிய ஒரு நபரை அல்லாஹு நிர்ணயிப்பான்.*
*இந்த ஹதீதின் விளக்கத்தில் இமாம் பெருமக்கள் சொல்கிறார்கள்.முதலாவது நூற்றாண்டில் இவ்வாறு திகழ்ந்தவர்கள் கலீஃபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரழி) ஆவார்கள்.இரண்டாவது நூற்றாண்டில் நம்முடைய மத்ஹபின் இமாமான முஹம்மது இப்னு இத்ரீஸுஸ் ஷாபிஈ (ரழி) மூன்றாவது நூற்றாண்டில் நம்முடைய அக்கீதாவின் இமாமான அபுல் ஹஸனுல் அஷ்அரி (ரழி) ஆவார்கள்.*
இன்ஷா அல்லாஹ்.
தொடரும்.
தகவல்.M.சிராஜுத்தீன் அஹ்ஸனி.