பள்ளிவாசலில் வைத்து பாட்டு கச்சேரியா..?
பள்ளிவாசலில் வைத்து
பாட்டுக்கச்சேரியா?
சினிமாப் பாடல்களைப் போல " இராகம் போட்டு மவ்லித் ஓதுகின்றனர்" அதாவது பாட்டுக் கச்சேரி நடத்துகின்றனர். என்பதும் விமர்சகர்களின் அரிய கண்டு பிடிப்புகளில் ஒன்று!
இறைநேசச் செல்வர்களை கொச்சைப் படுத்தி அருவருப்பான அங்க அசைவுகளுடன் மேடைகளில் சினிமா பாடல்கள் பாடுகின்ற புத்திசாலிகள்(!) தான் மவ்லிதுகள் மீது இப்படியொரு விமர்சனத்தை வைக்கின்றனர் என்பது கேலிக்குரியது.
வசனங்களை வசனங்களாகப் படிக்க_ ஓத வேண்டும்.
பாடல்களைப் பாடல்களாகப் பாட வேண்டும்.
பாடல்களை வசனங்களாக சொன்னால் அது பாடல் அல்ல.
பாடல்கள் பாடும்போது ராகமிருக்கும், தாளமிருக்கும்.
மவ்லிதுகள் வசனங்களையும், பாடல்களையும் கொண்டது.
எனவே வசனங்களை ஓதுகின்றனர், பாடல்களை பாடுகின்றனர்.
மவ்லிதுகளிலுள்ள பாடல்களைப் பாடுகின்ற போது அந்த ராகத்தில் வேறு பாடல்கள் எதுவும் இருக்கக் கூடாதா?
அல் குரஆனை அழகிய குரலில் இனிமையாக ஓத வேண்டும் என்று கூறுகிறார்கள் நபியுல்லாஹ் (ﷺ) அவர்கள்.
நபியுல்லாஹ் (ﷺ) அவர்கள் சொல்வதாக பர்ராஃ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
*زينوا القرأن باصواتكم*
உங்களுடைய குரலைக் கொண்டு அல்குர்ஆனை அழகாக்குங்கள்.
இனிய குரலில் குர்ஆனை ஓதுங்கள்.
பர்ராஃ இப்னு ஆஸிஃப் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:*
நபி (ﷺ) அவர்கள் இஷாத் தொழுகையில் " வத்தீனி வஸ்ஸெய்தூனி " அத்தியாயத்தை ஓதுவதை செவிமடுத்தேன். நபியுல்லாஹ் (ﷺ) அவர்களின் குரலைவிட இனிமை மிக்க வேறொருவருடைய குரலை நான் கேட்டதே இல்லை.
(புகாரி, முஸ்லிம்,
ரியாழுஸ்ஸாலிஹீன் :1013)
மக்காவில் நபியுல்லாஹ் (ﷺ) அவர்கள் திருமறை அல்குர்ஆன் ஓதுவதை குறைஷிகள் கேட்க நேர்ந்தால் அந்தக் குரல் இனிமையில், அல்குர்ஆனின் வசீகரத்தில் சொக்கிப் போய் நின்று விடுவார்கள்.
அதனாலேயே வெளியூர்களிலிருந்து வருபவர்கள் நபியுல்லாஹ் (ﷺ) அவர்களின் கிராஅத்தில் மனதைப் பறிகொடுத்து மதம் மாறி விடுவார்களோ என்று பயந்து மக்காவின் எல்லையிலேயே அவர்களை தடுத்து நிறுத்தி " முஹம்மது அல் குர்ஆன் ஓதுவதை கேட்காதீர்கள்; என்று அறிவுரை(?) கூறி காதுகளில் பஞ்டைத்து அனுப்புவர் குறைஷிகள்.
ஜுபைர் இப்னு முத்இம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:*ன
"அண்ணல் நபி (ﷺ) அவர்கள் மஃரிபுத் தொழுகையில் " அத்தூர்" அத்தியாயத்தை ஓதுவதை கேட்டேன். நபியுல்லாஹ் (ﷺ) அவர்களின் இனிமை மிக்க குரலைவிட வேறொரு அல்லது கிராஅத்தை நான் கேட்டதே இல்லை.
(இப்னு கஸீரின் ஃபழாயிலுல் குர்ஆன்)
"ஜுபைர் (ரலி) அவர்கள் இஸ்லாமுக்கு வர இதுவே காரணமாக அமைந்தது. அழகிய கிராஅத் இறையச்சமுடைய இதயத்திலிருந்து வெளிப்படும்" என்று குறிப்பிடுகிறார்கள் இப்னு கஸீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்.
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
"ஓரிரவு நான் சற்று நேரம் வெளியே சென்று விட்டு திரும்பி வந்த போது அண்ணல் நபி (ﷺ) அவர்கள் " எங்கே சென்றிருந்தீர்? எனக் கேட்டார்கள். " தங்களுடைய தோழர்களில் ஒருவர் அல்குர்ஆன் ஓதுவதை கேட்டு கொண்டிருந்தேன். அவருடைய கிராஅத்தைப் போன்று இனிமையான கிராஅத்தை நான் கேட்டதில்லை" என்று சொன்னேன். அவர் ஓதும் கிராஅத்தைக் கேட்பதற்காக எழுந்து சென்ற நபியுல்லாஹ் (ﷺ) அவர்களுடன் நானும் போனேன்.
கிராஅத்தைக் கேட்டு விட்டு நபியுல்லாஹ் (ﷺ)அவர்கள் கூறினார்கள். " அவர் அபூ ஹுதைபா அவர்களுடைய மவ்லா ஸாலிம் அவர்களாவர். இவரைப் போன்ற ஒருவரை என்னுடைய சமுதாயத்திற்குத் தந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
(இப்னு கஸீரின் ஃபழாயிலுல் குர்ஆன்)
நபியுல்லாஹ் (ﷺ) அவர்கள் மதீனப் பெருநகருக்கு வருகை தந்த போது பெண்களும், சிறுமிகளும் மகிழ்வு மிகக் கொண்டு இனிமை மிக்க குரலில் வாழ்த்துப்பா பாடி வரவேற்ற நிகழ்ச்சியை இஸ்லாமிய வரலாறு பதிவு செய்துள்ளது.
இனிமையான குரலுக்கு ஈர்ப்பு சக்தி அதிகம். இனிமையான கிராஅத்தை கேட்கிற போது மனதில் இறைபக்தி நிரம்பி வழியும். அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது புரியும்.
கஃபத்துல்லாஹ்வில் ஐநேரத் தொழுகை மற்றும் தராவீஹ் தொழுகைகள் நடத்த பல இமாம்கள் உள்ளனர் அவர்களில் ஒருவர் அப்துர் ரஹ்மான் ஸுதைஸி. அவரது கிராஅத் அட்சர சுத்தமாக, இனிமையாக இருக்கும்.
இப்போது மிக அதிகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் கிராஅத் ஒலி நாடாக்களில் முதலிடம் வகிப்பது ஸுதைஸியின் கிராஅத் ஒலி நாடாக்கள்.ஹஜ், உம்ராக்களுக்குச் சென்று வந்தவர்களுக்கு இந்த உண்மை தெரியும்.
எனவே நபியுல்லாஹ் (ﷺ) அவர்களின் வரலாற்றுத் துளிகளை உள்ளடக்கிய மவ்லித் பாக்களை இனிய குரலில்தான் பாட வேண்டும்.அதில் தவறு காண்பவர்களின் புத்தியைப் பரிசோதிக்க வேண்டும்.
இன்ஷா அல்லாஹ்
தொடரும்.
தகவல்:M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.