Sirajudheen Ahsani
எழுத்தாளர்

கருத்ததரங்கு ஓன்றில் பேச எழுந்த
பிரபல பேச்சாளர் ஒருவர், தங்க மோதிரமொன்றை தூக்கி பிடித்து
சபையோருக்கு காட்டினார்.

இது சுத்தமான 22 கரட் தங்கத்தினாலான மோதிரம். இதனை பெற்றுக்கொள்ள விரும்புபவர் யார்?

என அங்கு குழுமியிருந்தவர்களிடம் கேட்டார். சபையில் கைகள் ஒவ்வொன்றாய் உயரத் தொடங்கின.

பின்னர் அவர் மெழுகுவர்த்தி யொன்றை எரியச் செய்து குறடு ஒன்றின் உதவியுடன் அந்த மோதிரத்தை மெழுகுவர்த்திச் சுவாலையில் பிடித்தார்.

சிறிது நேரத்தில் புகைக்கரி பட்டு அம்மோதிரம் முற்றிலும் கறுப்பாக மாறியது.

இப்போது இதனைப் பெற்றுக் கொள்ள யார் விரும்புகிறீர்கள்?" எனப் பேச்சாளர் கேட்டார்.

சபையிலிருந்த அனைவருமே கை உயர்த்தினர்.

நல்லது. நான் செய்வதைக் கொஞ்சம் கவனியுங்கள்" என்று கூறிய பேச்சாளர்,

தனது கையிலிருந்த மோதிரத்தை கீழே போட்டுப் பாதணியினால் மிதித்து நன்றாக தரையில் அழுத்தித் தேய்த்தார்.

பின்னர் அதனை உயர்த்தி பிடித்து, இப்போது இதனைப் பெற விரும்புபவர் யாரும் உண்டா? எனக் கேட்டார்.

அப்போதும் சபையில் இருந்த அதிகமானோர் கைகளை உயர்த்தினர்.

சரி, இப்போது நான் செய்வதை பாருங்கள்!" எனக் கூறிய அவர் அந்த மோதிரத்தைக் கீழே போட்டு ஒரு சுத்தியலால் அடித்து உருக்குலையச் செய்தார்.

தகர்ந்து உருக்குலைந்து போன அந்த மோதிரத்தைத் தூக்கிப் பிடித்த அவர்,

இனிமேலும் யாராவது இதனை பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா?" என்று கேட்டார். அப்போதும் முன்போலவே கைகள் உயர்ந்தன.

பின்னர் அவர் சபையோரை பார்த்துப் பேசத் தொடங்கினார்:

நண்பர்களே! உங்களுக்கு ஒரு நல்ல படிப்பினையை வழங்குவதற்காகவே நான் இதனைச் செய்தேன். பாருங்கள்!

நான் இந்த மோதிரத்துக்கு என்ன ஆக்கினை செய்த போதிலும் நீங்கள் அதனைப் பெற்றுக்கொள்ளவே விரும்புகிறீர்கள்.

ஏனெனில் நான் கொடுத்த வதைகளினால் இந்த மோதிரத்தின் பெறுமதியில் எவ்விதக் குறைவும் ஏற்படவில்லை.

இதே போன்று உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் எடுக்கும் தீர்மானங்கள் காரணமாக அல்லது நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்;

நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம் அல்லது அடித்து நொறுக்கப்படலாம். இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப் பற்றித் தாழ்வாக மதிப்பிட்டுவிடக் கூடாது.

ஏனெனில், அப்படி என்ன நடந்தாலும் உங்கள் பெறுமதி ஒருபோதும் குறையாது.

நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் விசேசமானவர். அதனை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.

நேற்றைய ஏமாற்றங்கள் நாளைய கனவுகளை நசுக்கிவிட ஒருபோதும் இடம் கொடுக்காதீர்கள்.