பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பஹ்ருல் உலூம் உஸ்தாதுல்அஸாதீத் OK.உஸ்தாத்
இஸ்லாமிய வரலாறு

பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கிய பஹ்ருல் உலூம் உஸ்தாதுல்அஸாதீத் OK.உஸ்தாத்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

பல்லாயிரக்கணக்கான அறிஞர்களை உருவாக்கிய
உஸ்தாதுல் அஸாதீத் O.K. #ஸெய்னுத்தீன்_குட்டி_முஸ்லியார் நவ்வரல்லாஹு மர்கதஹு
(1916 — 2002)
------------------------------------------------------------------------------
சென்ற நூற்றாண்டில் கேரளம் கண்ட மார்க்கப் பெருமேதைகளில் மகத்தானவர்கள் O. K. ஸெய்னுத்தீன் குட்டி முஸ்லியார் அவர்கள்.
மார்க்க அறிவை வாழ வைத்திட அல்லாஹ் தேர்ந்தெடுத்த இறை நேசச் செல்வர்களில் மாண்புமிகு ஒருவர் O.K. உஸ்தாத் அவர்கள்.

கல்விச் செல்வத்தைப் பெற்றிட உஸ்தாத் அவர்கள் கடினமாக உழைத்தார்கள். கைவசமிருந்த ஒரு ஆடையை கழுகி உலர வைத்து விட்டு, டவல் உடுத்து பள்ளியின் மூலையொன்றில் அமர்ந்து அல்ஃபியா பைத்துகளை மனப்பாடம் செய்து கொண்டிருக்கும் போதே ஸுப்ஹுக்கான பாங்கு சொல்லப்பட்ட நாட்கள் ஏராளம்...

பகல்களிலும், பகல்களாக மாறிய இரவுகளிலும் சேகரித்த அறிவுகள் பிற்காலத்தில் மலையாள மண்ணின் அறிவுலகை ஆட்சி செய்பவையாக அமைந்தன. யாருக்கும் சந்தேகம் கேட்க வேண்டிய தேவை வராதவாறு பொருளின் அனைத்து மூலைகளுக்கும் சென்று கடினமான விஷயங்களைக் கூட எளிதாகப் புரிய வைப்பதில் அபாரமான ஆற்றல் பெற்றிருந்தார்கள் உஸ்தாத் அவர்கள்...

‘பாடங்களை விளக்கிச் சொல்லும் பாங்கு மாணவர்களுக்கு மிகுந்த மகிழ்வான அனுபவமாக இருந்தது,
வார்த்தைகளுக்கு பொருள் சொல்லும் நேர்த்தியைக் கேட்கும் போது மகிழ்ச்சியில் பறப்பது போன்றிருக்கும்’ என்கிறார் உஸ்தாதின் மாணவர் ஒருவர். இதனால் உஸ்தாத் அவர்களின் வகுப்புகளை மாணவர்கள் தவற விடுவதில்லை...

அமைதியும், இறையச்சமும் ததும்பும் பரந்த தாடியைக் கொண்ட பிரகாசமான அந்த முகத்தைப் பார்க்கிறபோது இதயங்கள் நிம்மதி பெற்றன.
தமது 86வது வயதிலும்
மரணிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் வரை "ஸஹீஹுல் முஸ்லிம்" நூலைக் கற்றுக் கொடுத்தார்கள்...

மாணவப் பருவத்தில் ஆரம்பித்த கற்பித்தல் மரணம் வரை தொடர்ந்த அனுபவம் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் அபூர்வ பாக்கியம்.
கேரளத்தின் இன்றைய பிரபலமான அறிஞர்கள் உஸ்தாதின் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் மாணவர்களாக இருக்கின்றனர் பிற்காலத்தில் சமுதாயத்திற்கு பயன்தரும் திறமைசாலிகளை அல்லாஹ் உஸ்தாத் அவர்களின் தர்ஸில் இணைய வைத்தான் என்பது புரிகிறது....

கேரள மண்ணில் இன்றைக்கு நிறைந்து நிற்கும் மார்க்க அறிவு உஸ்தாத் அவர்களின் அன்பளிப்பு என்று சொன்னால் மிகையல்ல!

இன்றைய உலக இஸ்லாமியப் பேரறிஞர்களில் சிறப்பான இடத்தை வகிக்கும் கண்ணியமிகு இந்தியன் கிராண்ட் முஃப்தி, ஸுல்தானுல் உலமா, A.P. #அபூபக்கர்_பாகவி ஹஸ்ரத் அவர்கள் உஸ்தாத் அவர்களின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமும் அதிகாலை மூன்று மணிக்கு எழுகின்ற உஸ்தாத் அவர்கள், எழுந்தவுடன் ஓத வேண்டிய ஸூரத் ஆலு இம்ரானின் கடைசிப் பத்து வசனங்களை ஓதுவார்கள்.. கடுங்குளிலும் அதிகாலை குளிப்பார்கள்.. தஹஜ்ஜுத் தொழுத பின்னர் ஸுப்ஹ் வரை குர்ஆன் ஓதுவார்கள். பொருளை உணர்ந்து நிதானமாக, சப்தமாக ஓதுகின்றபோது குர்ஆனில் முழுமையாக இலயித்து விடுவார்கள்..

தண்டனைகள் பற்றிய வசனங்களை ஓதும் போது உஸ்தாத் அவர்கள் அழும் சத்தத்தை மாணவர்கள் கேட்பதுண்டு. ஸுப்ஹ் தொழுத பின்னர் பாடம் சொல்லிக் கொடுக்க அமரும் உஸ்தாத் அவர்களின் பாடங்கள் இரவு 11 மணிவரை தொடரும். இடையில் தொழுகைகள், உணவுக்காக மட்டுமே எழுந்து செல்வார்கள்...

எம்பெருமானார் முஹம்மத் முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அளவற்ற காதல் கொண்டிருந்தார்கள். கிஸ்ரா அரசன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கடிதத்தைக் கிழித்தெறிந்த நிகழ்வை ஸஹீஹுல் புகாரியிலிருந்து பாடம் சொல்லிக் கொடுக்கின்ற சந்தர்ப்பத்தில் "கண்மணியாம் நபியவர்களின் கடிதத்தையல்லவா அவன் ....... ” என்று சொல்லி நிறுத்தி பொங்கி வரும் அழுகையைக் கட்டுப்படுத்த பாடுபட்டார்கள் உஸ்தாத் அவர்கள்....

86வது வயதிலும் ஸஹீஹுல் முஸ்லிம் பாடம் நடத்திய அவர்களுக்கு முஸ்லிமும், அதன் விரிவுரையான ஷரஹ் முஸ்லிமும் மனப்பாடமாக இருந்தது.

நூற்களைப் பார்க்காமலேயே மாணவர்கள் வாசிப்பதைக் கேட்டு ஹதீஸ்களுக்கு விளக்கம் சொன்ன பிறகு "இமாம் நவவீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்ன சொல்லியுள்ளார்கள்?” என்று கேட்பார்கள். மாணவர்கள் ஷரஹ் முஸ்லிமை எடுத்து வாசித்தால் உஸ்தாத் அவர்கள் சொன்ன விளக்கம் அப்படியே அதில் காணக் கிடைக்கும்...

உஸ்தாத் அவர்களின் ஆற்றல் மிக்க பேரறிவுக்குச் சான்றாக அவர்களது கடைசி வகுப்பைச் சொல்லலாம்.

முஸ்லிமில் ஒரு ஹதீஸை வாசித்த மாணவரிடம் அதிலுள்ள வாசகத்தை மாற்றி வாசிக்க சொன்னார்கள்.
மாணவர் பழையதுபோலவே வாசிக்க மீண்டும் திருத்தி வாசிக்கப் பணித்தார்கள். ‘நான் வாசித்தது போலவே முஸ்லிமில் உள்ளது’ என்றார் மாணவர்...

‘இமாம் நவவீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்ன சொல்கிறார்கள்..?’ என்று உஸ்தாத் அவர்கள் கேட்க, ஷரஹ் முஸ்லிம் வாசிக்கப்பட்டது.
உஸ்தாத் அவர்கள் என்ன வார்த்தையைச் சொன்னார்களோ அதுவே சரியானது என இமாம் நவவி அவர்கள் சொல்லியிருப்பதைக் காண முடிந்தது "என்னிடமா விளையாடுகிறாய்?’ என்று புன்முறுவலுடன் கேட்டார்கள் உஸ்தாத் அவர்கள். இதுவே அம்மாமேதையவர்களின் கடைசி வகுப்பாக இருந்தது..

இரண்டத்தாணி, சாலியம், தலக்கடத்தூர் ஆகிய ஊர்களில் அறுபது ஆண்டுகள் தர்ஸ் நடத்திய உஸ்தாத் அவர்கள் நிறுவிய கல்வி கலைக் கூடமான ஒதுக்குங்கல் இஹ்யாவுஸ்ஸுன்னாவில் தம் கடைசி வருடங்களில் பணிபுரிந்தார்கள்.

#அஹ்ஸனி’ எனும் பட்டம் வழங்கும் #இஹ்யாவுஸ்ஸுன்னா_அரபுக்_கல்லூரி இன்று கேரளாவின் முதன்மை கல்லூரியாகத் திகழ்கிறது..

மாணவர்களைத் தமது சொந்தப் பிள்ளைகளைப் போல நேசித்த உஸ்தாத் அவர்களின் மாணவச் செல்வங்களில் யாருமே பயனற்றுப் போனதில்லை என்று அவர்களது மாணவர்கள் சொல்வதுண்டு...

உஸ்தாத் அவர்களின் மேலான வாழ்க்கையைப் பின்பற்றுவதற்கும், அப்பெருமகனாருடன் சுவனப் பூஞ்சோலைகளில் ஒன்றாய் உலா வருவதற்கும் பேரருள் நாயன் வல்லோன் அல்லாஹ் கனிந்தருள் புரிவானாக.. ஆமீன்....