சிலரின் எல்லை மீறிய வாதங்கள்
#சிலரின்_எல்லை_மீறிய_வாதங்கள்...
சில வீடியோ கிளிப்புகள் கவனத்தில் பட்டதால் எழுதுகிறேன்...
ஒருவரிடமிருந்து வரும் அசாதாரண நிகழ்வுகளையும், அற்புதங்களையும் சரியாகப் புரிந்து கொள்வதில் சாதாரண மக்கள் பல வேளைகளிலும் தோல்வி அடைந்துள்ளனர்.
முன்பே இப்படித்தான் இருந்து வருகிறது. அவர்கள் அசாதாரணத்தைப் பார்க்கும் நேரத்தில்
பலருக்கும் ஒருவர் கடவுளாகவோ அல்லது தெய்வீக அவதாரமாகவோ மாறிவிடுவார்...
யூசுஃப் நபி (அலை) அவர்களின் அசாதாரண அழகை நேரில் பார்த்த பெண்கள் வியப்புடன் சொன்ன விடயத்தை குர்ஆன் கூறுகிறது.
"இவர் ஒரு மனிதர் அல்ல,
இது ஒரு உயர்ந்த வானவர்"
ஒரு மனிதனில் இந்தளவு அசாதாரண அழகு இருக்க முடியாது என்று அவர்கள் முடிவு செய்தனர்.
இதேபோன்ற அனுபவம் யூதர்களுக்கும் உண்டு.
தவ்ராத்தை மனப்பாடம் செய்பவர்கள் யாரும் இல்லாத நேரத்தில்,
அது சாத்தியமற்றது என்று கருதப்பட்ட காலத்தில் உசைர் தவ்ராத்தை மனப்பாடம் செய்தார்,
அத்தோடு அவரை அவர்கள் கடவுளின் மகனாக்கினர்.
உசைர் கடவுளின் மகன் என்று யூதர்கள் அறிவித்தனர்.
ஈஸா
நபி (அலை) அவர்கள்
இறந்தவர்களை உயிர்ப்பித்து, தொழுநோயைக் குணப்படுத்தி அற்புதங்களைச் செய்த போது
ஈஸா (அலை) அவர்கள் கிறிஸ்தவர்களுக்கு கடவுளானார்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர், ஒரு அடிமை, ஒரு படைப்பு என்று குர்ஆன் பல இடங்களில் அறிவித்திருப்பது இந்த கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் படிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்
அவர் சந்திரனைப் பிளந்தபோதும், மரங்கள் மற்றும் விலங்குகளுடன் பேசியபோதும், அவரது கைகளில் இருந்து நீரூற்றுகளை உருவாக்கி அற்புதங்களைச் செய்தபோதும்
குர்ஆன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் படைப்பு என்று மக்களை உணர்த்திக் கொண்டே இருந்தது....
நான் ஒரு எளிய அடிமை என்று நபி (ஸல்) அவர்கள் எத்தனையோ இடங்களில் கூறியுள்ளார்கள்.
திரு நபியின் வாழ்க்கையை
வானளாவு போற்றிப் புத்தகங்கள், கவிதைகள் எழுதிய அனைவரும் இந்த எச்சரிக்கையைக் கடைப்பிடித்துள்ளனர்.
இமாம் பூஸுரி (ரஹ்) அவர்கள் புர்தாவில் அனைத்து நல்ல விஷயங்களையும் புனித நபிக்குக் கூறலாம்.
ஆனால் சொல்லி சொல்லி கடைசியில் படைப்பாளர் என்று சொல்லாதீர்கள்
என கூறுகிறார்கள்...
கல்க் மற்றும் ரிஸ்க் போன்ற அனைத்து அருட்கொடைகளின் வஸீலாதான் ஆரம்ப ரசூல் (ஸல்) அவர்கள் என்று உறுதியாக நம்பினாலும்
ரப், காலிக் அல்லது ராசிக் போன்ற எந்த வெளிப்பாடுகளும் ரசூலைப் பற்றி அலங்காரமாகக்கூட பயன்படுத்துவதில்லை...
இந்த எச்சரிக்கையைத்தான் அவுலியாக்கள் விடயத்தில் நமது முன்னோர்கள் இதுவரை கடைப்பிடித்து வந்தனர்.
தற்போது அதைத்தான் பலர் இப்போது இல்லாதாக்கியுள்ளனர்.
ஷைகுனா CM வலியுல்லாஹி அவர்கள் முகம்மது நபியின் அவதாரம் என்ற வாதம்
சிலருக்கு உண்டு என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன்.
சிலர் இப்போது அதைத் தாண்டியும் பேசியுள்ளனர்.
ரிஸாலத்திற்கு அப்பாலுள்ள ஸிர்ரு என்றொரு பேச்சையும் கேள்விப்பட்டேன்.
என்னவொரு சீரியஸான சப்ஜெக்ட் இது!
நுபுவ்வத், ரிஸாலத்தின் பதவிக்கு தக்கதான ஒரு விலாயத்தா?
முன்பொரு ஆலிமின் உரையைக் கேட்டேன்.
அஜ்மீர் காஜா ரழியல்லாஹு
அவர்களை ரசூலுல்லாஹி என்று குறிப்பிடுகிற ஒரு உரை....
இது ஒரு அலங்கார பிரயோகம் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லி விட்டு நகர்ந்து போகிற விஷயமல்ல..
இதையெல்லாம் முன்கூட்டியே எதிர்பார்த்து தான் நமது உலமாக்கள் எல்லை மீறிய பேச்சுக்களையும்,
அவுலியா ஸ்நேகத்தின் பெயரில் நடக்கும் தவறான அணுகுமுறை களையும் கட்டுப்படுத்தச் சொன்னார்கள். அறிவற்ற சாமானியர்களிடையே இத்தகைய எல்லை தாண்டிய நடைமுறைகள் ஏற்படுத்தக்கூடிய ஆபத்தை அறிஞர்கள் முன்னரே அறிந்து வைத்திருந்தனர்..
வழக்கத்திற்கு மாறாக காணப்படும்
எந்த ஒரு அதிசயத்தையும் கண்டாலும் சாதாரண மக்கள் அதொரு அதிசயமாகவே கருதுவார்கள்.
மனிதர்களால் நிகழ்த்தப்படும் அற்புதங்கள் முஃஜிஸத், கராமத், இர்ஹாஸ், மஊனூத், இஹானத், இஸ்தித்ராஜ் எனப் பல்வேறு வகைகளாகும்.
சில அற்புத காரியங்கள் அவ்லியா என்றல்ல ஐந்து வக்த் தொழாத ஏன் முழுமையான நம்பிக்கை கூட இல்லாத ஒருவரிடமிருந்தும் வெளிப்படும்.
அவையெல்லாம் வேறுபடுத்திப் பார்க்கும் திறன் பெற்றவர்களல்ல சாதாரண மனிதர்கள்.
அப்படிப்பட்டவர்கள் முன்பாகத்தான்
மைக் கட்டி, தத்பீரின் நிலையைக் குறித்து பயான் செய்கிறார்கள்...
என் சாதாரண நண்பர்களிடம் ஒன்றைச் சொல்கிறேன்..
நபிகள் நாயகத்துடன் வாழ்ந்த எந்த ஒரு தோழரின் இடத்தையும் ஷெய்கு ஜீலானி உட்பட எந்த அவ்லியாவும் அடைய முடியாது.
நான்கு கலீஃபாக்கள் உட்பட எந்த ஒரு நபித்தோழரும் அவர்கள் எவ்வளவு உயர்ந்தாலும் எந்த நபியின் பதவியையும் அடைய முடியாது.
100,000 க்கும் மேற்பட்ட நபிமார்களில் யாரும் படைத்த அல்லாஹ்வுக்கு சமமானவர்கள் அல்ல.
அனைத்தும் படைப்புகள் மட்டுமே..
நாம் ஸியாரத் செய்து, தவஸ்ஸுல் செய்து, இஸ்திகாஸா செய்யும் அனைத்து நபிமார்களும், அவுலியாக்களும், ஸாலிஹீன்களும் நம்மை இறைவனாகிய அல்லாஹ்விடம் கொண்டு செல்லும் வஸீலாக்கள் மட்டுமே.
அல்லாஹ் நன்கு அறிந்தவன்
✍🏻 சமீர் அஹ்ஸனி மலப்புறம் கேரளா..
தமிழில்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி