மரியம்மா வயநாடு நிலச்சரிவு
#மரியம்மா
—————
வயநாடு நிலச்சரிவின் பாதிப்புக்கு ஆளான மக்கள் பல முகாம்களில்
தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களை கேரள அரசும்,
தன்னார்வ அமைப்புக்களும் சிறப்பாக கவனித்து வருகிறார்கள்.
முகாம்களில் தரப்படும் வசதிகளில் பெரும்பாலும் யாருக்கும் எந்த குறையும் இல்லை. முகாம்களில் தங்கியிருக்கிறார்கள் என்ற குறையை தவிர.
ஆனால்
ஜுலை 31ம் தேதி இரவு நிலச்சரிவில் சிக்கி மீண்டவர்கள் பலரிடமும் இன்று ஆகஸ்ட் 8 ம் தேதி வரை மிரட்சியும் பீதியும் இருக்கிறது.
பேசிக் கொண்டிருக்கிற போதே அவர்களுடைய கண்கள் சூனியமாகிவிடுகின்றன.
காதுகளை பொத்திக் கொள்கிறார்கள். தங்களது கண்னெதிரே மொத்தமாக வழிந்தோடியவர்களைப் பற்றி நினைக்கையில் மெளனமாகிவிடுகிறார்கள். அவர்களுக்கு உதவ முடியாமல் போனது பற்றி கண்ணீர் வடிக்கிறார்கள்.
எந்த ஒருவரும் தங்களுக்கு பக்கத்தில் இருந்தவரைப் பற்றி பேசாமல் இல்லை. மதமோ ஜாதியோ இதில் எந்த பாகுபாடும் இல்லை. எங்களிடம் பேசியவர்கள் எல்லோரும் எல்லாம் போய்விட்டது என்று சொன்னார்கள்.
ஆனால் சொல்லிவைத்தார் போல எவரும் தங்களுடைய இழப்புக்களை சொல்லி புலம்பவில்லை. “நங்கள் ரட்சப்பட்டு” நாங்கள் தப்பித்தோம் என்பதே அனைவருடைய அறிக்கையாக இருந்தது. அடுத்ததாக உதவியர்களை பாராட்டினார்கள்.
மேப்பாடி ஹைஸ்கூலில் இருக்கிற பெரிய முகாமில் சிலரிடம் பேசினோம். அவர்களில் ஒருவர் காணாமல் போன நிலமான முண்டக்கை பகுதியை சேர்ந்த #மரியம்மா!
60 வயதை கடந்த அந்த பெண்மணி ஒரு கதை போல விவரித்தார்.
இரவு நாங்கள் உறங்கிக் கொண்டிருந்தோம். நடு இரவில் பள்ளிவாசலில் பாங்கு அறிவிப்பு கேட்டது. (அப்படித்தான் அவர் சொன்னார்) நான் விழித்த போது அடுப்படியில் பாத்திரங்கள் உருளும் சப்தம் கேட்டது. என் மகளிடம் அது என்ன என்று பார்க்குமாறு கூறினேன்.
அவள் “எலி பாத்திரங்களை உருட்டுவதாக இருக்கும் என்று சொன்னாள். கொஞ்ச நேரத்தில் இன்னும் சப்தம் அதிகமானது. கோழிக்கோட்டிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன் வந்திருந்த எனது மகன் எழுந்து பார்த்தான். ஜன்னலை திறந்து பார்த்தவன் அம்மே! வெள்ளம் வெள்ளம் என்று கூச்சலிட்டான்.
நாங்கள் பதறி எழுந்து கதவை நோக்கி ஓடினோம். கதவை திறக்க முடியவில்லை. ஒரு பக்கம் சுவர் இடிந்து விழுந்தது. நாங்கள் என்ன செய்வதென்று திகைத்து போனோம். என் மகன் மூளையில் கால் பாதிப்பால் எழுந்திருக்க சிரமப்பட்ட தகப்பனை தோளில் தூக்கிக் கொண்டான். மிகச் சிரமப்பட்டு நாங்கள் நீந்தி காட்டில் ஏறிக் கொண்டோம். அப்போதுதான் முதல் சரிவு ஏற்பட்டிருந்தது. பேய் மழையில் காட்டில் எங்கும் ஒதுங்க உட்கார முடியாமல் நின்று கொண்டே இருந்தோம். அடுத்தடுத்த பெரும் சப்தத்தோடு சரிவுகள் ஏற்பட்டன.
அதனூடே மக்களுடைய கதற்லகளும் அழு குரல்களும் எழுந்தன.#கர்த்தாவே! என்னுடைய ஜீவியத்தில் இப்படி ஒரு சப்தத்தை கேட்ட்தில்லை.
என்று சொல்லிக் கொண்டிருக்கிற போதே #மரியம்மா கொஞ்ச நேரம் காதுகளையும் முகத்தையும் பொத்திக் கொள்கிறார்.
ஈ நிமிஷம் வர ஆ சப்தம் எண்ட காதுகளில் உண்டு. என்கிறார்.
நாங்கள் இரவு முழுவதும் எங்களுக்கு நாங்கள் பாதுகாக்கப்பட்டு விட்டோமா என்பதை புரியாமலே நின்றோம். அட்டைப்பூச்சிகள் கடித்தன.
தட்டி தட்டி விட்டபடி இருந்தோம்.
அதிகாலையில் எங்களுக்கு பரிச்சயமான முஸ்லிம் பையன்கள் தேடி வந்தார்கள். பேடிக்கண்டாம். நிங்கள் ரட்சப்பட்டு என்றார்கள். எங்களை அழைத்துச் சென்று அந்த மழையிலும் சுடு தண்ணீர் தந்தார்கள்.
ஞங்களுட வீடு எல்லம் போயி!
பட்ஷே ஞங்கள் ரட்ஷப்பட்டு என்று முடித்தார் #மரியம்மா!
அவர் தொப்பி அணிந்திருந்த எங்களை தேடி வந்து சொல்ல வந்தது பள்ளியில் கொடுத்த பாங்கினால் நான் விழித்துக் கொண்டேன் என்பது தான்.
முண்டக்கை முன்னவ்விருல் இஸ்லாம் பள்ளிவாசலின் #இமாம்_சிஹாப்_பைஜி மழைச்சேற்றுக்கு பலியாகி இருக்கலாம். ஆனல் அவர் குரல் வழி மரியம்மாவை போல பலர் உயிர் பிழைத்திருக்கிறார்கள்.
கடைசியில் உள்ள வீடியோவை காண தவற வேண்டாம்!
(நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் ராணுவம் அமைத்த பாலம் வரைக்கும் மட்டுமே பர்மிஷன் பெற்றவர்களை அனுமதிக்கிற நிலையில் ஆலிம்களுக்காக என்று முண்டக்கை வரை செல்ல ஏற்பாடு செய்த நண்பர்களுக்கு நன்றி)