நாயகத்தின் இரவு வாழ்க்கை குறித்து
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
இரவு வாழ்க்கை குறித்து
அலசும் சிறுநூல்
#இரவு...
பகல் இரவுகளின் தொடர் சுழற்சி அல்லாஹ் உலகில் ஏற்படுத்திய மிகப்பெரும் அருட்கொடையாகும்.
பகல் வேளை உழைப்பதற்கும்,
இரவு நேரம் ஓய்வு எடுப்பதற்கும் என குர்ஆன் பல இடங்களில் தெளிவுப்படுத்துகிறது.
قُلْ اَرَءَيْتُمْ اِنْ جَعَلَ اللّٰهُ عَلَيْكُمُ الَّيْلَ سَرْمَدًا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ مَنْ اِلٰـهٌ غَيْرُ اللّٰهِ يَاْتِيْكُمْ بِضِيَآءٍؕاَفَلَا تَسْمَعُوْنَ
(நபியே!) நீர் கூறுவீராக: "மறுமை நாள் வரை அல்லாஹ் உங்கள் மீது இரவை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்துவிட்டால் அல்லாஹ்வையன்றி உங்களுக்கு (பகலின்) வெளிச்சத்தைக் கொண்டுவரக்கூடிய கடவுள் யார்? என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் செவியேற்க வேண்டாமா?"
قُلْ اَرَءَيْتُمْ اِنْ جَعَلَ اللّٰهُ عَلَيْكُمُ النَّهَارَ سَرْمَدًا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ مَنْ اِلٰـهٌ غَيْرُ اللّٰهِ يَاْتِيْكُمْ بِلَيْلٍ تَسْكُنُوْنَ فِيْهِؕ اَفَلَا تُبْصِرُوْنَ
"மறுமை நாள்வரை உங்கள்மீது அல்லாஹ் பகலை நிரந்தரமாக இருக்கும்படிச் செய்துவிட்டால், நீங்கள் எதில் ஓய்வு பெறுகிறீர்களோ அந்த இரவை அல்லாஹ்வையன்றி உங்களுக்குக் கொண்டுவரும் கடவுள் யார்? என்பதை நீங்கள் (சிந்தித்துப்) பார்த்தீர்களா? (இவ்வுண்மையை) நீங்கள் நோக்கவேண்டாமா?" என்று கூறுவீராக!
وَمِنْ رَّحْمَتِهٖ جَعَلَ لَـكُمُ الَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوْا فِيْهِ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ
இன்னும் அவன்
தன் அருளினால் உங்களுக்கு இரவையும் பகலையும் உண்டாக்கினான்; நீங்கள் அதில்
(இரவில்) ஓய்வு பெறும் பொருட்டும்
நீங்கள் அதில் (பகலில்) அவன் அருளைத் தேடும் பொருட்டும், (உண்டாக்கினான்; இதற்காக அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!
#தூக்கம்
உறக்கம் அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளில் மிகவும் முக்கியமானதாகும்.
குர்ஆன் இந்த விஷயத்தை பல இடங்களில் குறிப்பிடுகிறது.
அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை (உழைப்பிற்கு ஏற்றவாறு) மீண்டும் எழுவதற்காக ஆக்கியிருக்கிறான்.
அல் ஃபுர்கான்_47
இன்னுமொரு வசனத்தில் அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்..
وَّجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا ۙ
மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக நாம் ஆக்கினோம்.
وَّجَعَلْنَا الَّيْلَ لِبَاسًا ۙ
அன்றியும், இரவை (உங்களுக்கு) ஆடையாக நாம் ஆக்கினோம்.
وَّجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا
மேலும், பகலை உங்கள்
வாழ்க்கைக்குரிய (வற்றைத் தேடிக்கொள்ளும்) நேரமாக நாம் ஆக்கினோம்.
உறக்கம் மனிதனின் ஆரோக்கியத்தை நிலைநிறுத்துகிறது.
தேவையான அளவு தூங்க வேண்டும் என்றுதான் மதமும் கட்டளையிடுகிறது.
இரவில் கொஞ்சமும் தூங்காமல் வணக்க வழிபாடுகளில் ஈடுபடும்
ஒருவரைக் குறித்து திருநபியிடம் சொல்லப்பட்ட போது
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு பதிலுரைத்தார்கள்.
நான் உங்களில் வைத்து அல்லாஹ் மீது பயபக்தி மிகவும் பயபக்தியுடயவன்.
நான் இரவு நேரங்களில் தூங்கவும், இபாதத் செய்யவும் செய்கிறேன்.
தூக்கமின்றி வணக்கங்களில் மட்டுமாக ஈடுபடும் போது உடல் பலவீனமாகும்.
அதன் காரணமாக வணக்கங்கள் செய்ய முடியாமல் ஆகிவிடும்.
எனவேதான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்...
#நாயகத்தின்_உறக்கம்
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தூக்கமும்,
அதன் ஒழுங்கு முறைகளும் வரலாறு குறித்து வைத்துள்ளது.
அவைகளின் கோர்வை தான்
இந்த சிறு நூல்.
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது போர்வையில் ஒன்றாக படுக்கும் போது கதைகள் சொல்வார்கள்.
(அல் முஃஜமுல் அவ்ஸத்
6068)
மனைவிகளிடம் அதிக நேரம் பேசுவது அவர்கள் மீது இருக்கும் அன்பின்
வெளிப்பாடாகும்.
அந்த அன்பின் அடையாளமாகத்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஷாவிற்கு பிறகு தனது மனைவிகளிடம் பேசுவார்கள்.
பயனற்ற பேச்சுக்கள் இஷாவிற்கு பிறகு பேசுவது கராஹத்தாகும்.
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்..
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஷாவுக்கு முன் தூங்கவோ,இஷாவிற்கு பிறகு தேவையற்ற பேச்சுக்களோ
பேசிக் கொண்டு இருக்கமாட்டார்கள்.
(இப்னுமாஜா 702)
ஆனால்
தேவையானதும், நன்மையான விஷயங்கள் பேசலாம்.
உமர் ரழியல்லாஹு அன்ஹு
அவர்கள் கூறினார்கள்..
ஒரு நாள் இஷாவுக்கு பின்னர் நிர்வாக காரியங்கள் குறித்து நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
அந்நேரத்தில் நான் அவர்களுடன் இருந்தேன்.
ஸுபுலுல் ஹுதா. 7/249
#பிரகாசம்_இல்லாத_வீட்டில்..
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்..
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளிச்சம் இல்லாத அறைக்குள் சென்றால்.
அங்கே விளக்கை எரிய வைத்து பிறகுதான் அமர்ந்து கொள்வார்கள்.
மஜ்மஉஸ்ஸவாயித் 8/64
இருளடைந்த இடங்களில் ஆபத்து ஒளிந்திருக்கும் வாய்ப்பு உள்ளதால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த முறையை
கையாண்டார்கள்.
#விளக்கை_அணைத்தல்.
தூங்கும் போது விளக்கை பற்ற வைப்பதால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது
தூங்குவதற்கு முன் அதை அணைத்து கொள்ள வேண்டும் என்பதுதான் நாயகத்தின் கட்டளை..
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நாயகத்திடமிருந்து அறிவிக்கிறார்கள்..
நீங்கள் தூங்கும் வேளையில் விளக்கை அணைக்காமல் படுக்காதீர்கள்.
புகாரி.. 6293
அபூ மூஸல் அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்..
மதீனா நகரில் ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
இவ்விஷயம் நாயகத்திடம் கூறிய போது அவர்கள் கூறினார்கள்.
தீ உங்களின் எதிரியாகும்.
எனவே நீங்கள் தூங்கும் போது விளக்கை அணைத்து விடுங்கள்..
(புகாரி)
#வுளூஃ_செய்வது..
தூங்குவதற்கு முன் வுளூஃ செய்வது சுன்னத் என்று பல மார்க்க சட்ட நூற்களில் காண முடியும்..
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்
புண்ணிய பூமான் ரஸுலுல்லாஹ் அவர்கள் தூங்க நாடினால் தொழுகைக்காக வுளூஃ செய்வது போன்று வுளூஃ செய்வார்கள்..
ஸுபுலுல் ஹுதா 7/250
இரவின் இடைப்பகுதியில் எழ நேரிட்டு மீண்டும் படுக்கும் போது
வுளூஃ செய்யும் விஷயத்தில் கவனம் செலுத்துவார்கள்..
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவு எழும்பும்
போது இயற்கை தேவைகள் நடத்திய பின்னர் தூங்க செல்லும் முன் வுளூஃ செய்து கொள்வார்கள்..
ஸுபுலுல் ஹுதா 7/250
#ஸுறுமா_இடுவது..
தூங்குவதற்கு முன் ஸுறுமா இடுவது சுன்னத்தாகும்.
அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்..
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கறுப்பு நிற ஸுறுமா இருந்தது.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூங்குவதற்கு முன் இரு கண்களிலும் மூன்று முறை ஸுறுமா இடுவார்கள்..
இது இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிற ஹதீஸிலும் பார்க்க முடியும்.
ஸுறுமா இடுவது ஒற்றை முறைகளாக ஆக்குவது பிரத்யேகமாக சுன்னத்தாகும்.
#இரவு_நேரத்தில்_ஜனாபத்.
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்..
இரவில் ஜனாபத் ஏற்பட்ட பின்னர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உறங்க நாடினால் மர்ம உறுப்புக்களை கழுகி தொழுகைக்காக செய்வது போன்று பூரணமாக வுளூஃ எடுத்துக் கொள்வார்கள்..
இரவு நேரத்தில் ஜனாபத் ஏற்பட்டு குளிக்க இயலவில்லையெனில்
தூங்குவதற்கு முன் வுளூஃ செய்வது சுன்னத்தாகும்.
எந்நேரமும் சுத்தம் பேணுவதில் பெரிய மகத்துவம் உண்டு.
இரவு நேரத்தில் ஜனாபத் ஏற்பட்டு தூங்க செல்வதற்கு முன் வுளூஃ செய்வதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் தயம்மம் செய்து கொள்வார்கள் என ஹதீஸ் விரிவுரையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
#மல்லாந்து_படுப்பது.
அப்துல்லாஹ் இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்..
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது ஒரு காலை இன்னொரு காலின் மீது ஏற்றி வைத்து மல்லாந்து படுப்பார்கள்.
முஸ்னத் அஹ்மத்
ஆண்களுக்கு மல்லாந்து படுப்பது ஆகுமாகும்
பெண்கள் மல்லாந்து படுப்பது நல்லதல்ல.
அப்படி படுத்து தூங்கும் பெண்களை எழுப்புவது சுன்னத்தாகும்.
இமாம் ஷர்வானி ரஹ்மத்துல்லாஹி அவர்கள் அறிவிக்கிறார்கள்..
சில நபர்களை தூக்கத்திலிருந்து எழுப்புதல் சுன்னத்தாகும்..
அவர்கள்..
1 : தொழுபவர்களின் முன்னால் தூங்குபவரை.
2 : முதல் ஷஃப்பில் தூங்குபவரை.
3 : பள்ளிவாசல் மிஹ்ராபில் தூங்குபவரை.
4 : மேற்கூரை இல்லாத கட்டிடத்தின் மேல் தூங்குபவரை.
5 : சுப்ஹுக்கு பிறகு சூரியன் உதிப்பதற்கு முன் தூங்குபவரை.
6 : அஸருக்கு பிறகு தூங்குபவரை.
7 : வீட்டில் தனித்து தூங்குபவரை.
8 :மல்லாந்து படுத்தும் தூங்குபவரை (பெண்ணை)
9 : குப்புறப் படுக்கும் ஆணையும் பெண்ணையும்.
10 : தஹஜ்ஜுத் தொழுகைக்காக வேண்டி
11: ஸஹ்ர் உணவு சாப்பிடுவதற்கு
12: அரஃபாவில் நிற்கும் நேரத்தில் தூங்குபவரை..
#குப்புறப்_படுத்தல்..
அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருநாள் பள்ளிக்குள் நுழைந்தார்கள்.
அந்நேரத்தில் ஒருவர் பள்ளிக்குள் குப்புறப் படுத்திருந்தார்.
உடனே நாயகம் அவரை எழுப்பி விட்டு சொன்னார்கள்.
எழுந்திரு!
இது நரக வாசிகளின் படுக்கையாகும்.
(அல் அதபுல் முஃப்ரத்)
குப்புறப் படுப்பதை தடுக்கக்கூடிய ஏராளமான ஹதீஸ்கள் இருக்கிறது.
கைஸ் இப்னு திஹ்ஃபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது தந்தையிடமிருந்து அறிவிக்கிறார்கள்.
நான் ஒரு தடவை பள்ளிக்குள் குப்புறப் படுத்திருப்பது நாயகத்தின் கவனத்தில்பட்டது
உடனே அவர்கள் தங்களது காலைக் கொண்டு தட்டி எழுப்பி இவ்வாறு கூறினார்கள்.
குப்புறப் படுக்கிறீர்களா.?
இது அல்லாஹ் வெறுக்கும் ஒரு படுக்கையாகும்..
(இப்னு மாஜா. 3723)
#வலது_பக்கம்_திரும்பி.
வலது பக்கம் திரும்பி படுப்பது சுன்னத்தாகும்.
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
நீங்கள் தூங்குவதற்கு சென்றால் போர்வையை உதறுங்கள்,போர்வைக்குள் என்ன இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியாதல்லவா...?
பிறகு பிஸ்மி சொல்லி வலது பக்கமாக சரிந்து படுங்கள்...
(முஸ்லிம் 2714)
#குறட்டை_விடுவது..
காற்று வாய்க்குள் நுழையும் போது தான் சாதரணமாக குறட்டை ஏற்படுகிறது.
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூங்கும் போது
அவர்கள் மூச்சு விடும் சத்தம் கேட்பதுண்டு.
அந்த சத்தம் கேட்கும் போது தான் நாயகம் தூங்கி விட்டார்கள் என்பதை நாங்கள் புரிந்து கொள்வோம்.
அல் அதபுல் முஃப்ரத்
புண்ணிய ரஸுலுல்லாஹ் அவர்கள் பயங்கரமாக குறட்டை விடுவார்கள் என்பதல்ல இந்த ஹதீஸின் பொருள்.
மாறாக எந்தவொரு மனிதனும் தூங்கும் போது மூச்சை கொஞ்சம் கனமாக இழுத்து விடுவார்களல்லவா அதைப் பற்றி தான் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
#கை_கவிழில்...
ஹஃப்ஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்..
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தூங்கும் போது வலது பக்கம் சரிந்து படுத்து கையை கவிழுக்கு கீழே வைப்பது உண்டு.
அத்துடன் சில திக்ருகளும் சொல்வார்கள்.
அபூதாவூத்.
தூங்குவதற்கு முன்பாக பல சூராக்களும் திக்ருகளும், ஓத வேண்டும்.
சூரத்துல் ஃபாத்திஹா,
இக்லாஸ், முஅவ்விதத்தைனி,
ஆயத்துல் குர்ஸிய்யி,
ஆமனர்ரஸுல் துவங்கிய சூராக்களும்
சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்,
அல்லாஹு அக்பர் போன்ற திக்ருகளும் ஓதி
தூங்கினால் ஷைத்தானுடைய தொந்தரவுகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்
தூங்குவதற்கு முன் செல்போன் மூலம் ஆபாசமான காரியங்களை பார்த்து விட்டு அதை நிலையில் தூங்கும் இளைய தலைமுறை குறைவில்லை.
அந்த மாதிரி சூழலில் மரணம் நிகழ்ந்தால் தடுக்கப்பட்டவை பார்த்து
அல்லது செவியுற்று மரணித்தவராகிவிடுவோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..
#கனவு...
மகான் கத்தாதா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்..
திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு சொல்வதை நான் கேட்டுள்ளேன்.
கனவு மூன்று வகையாகும்.
தூங்குவதற்கு முன்புள்ள யோசனையின் காரணமாக தூக்கத்தில் காண்பது தான் #முதல் வகை.
ஷைத்தானிலிருந்து உண்டாகுவதுதான் #இரண்டாவது வகை.
அவ்வாறான கனவுகளை கண்டால் ஷைத்தானிலிருந்து பாதுகாவல் தேடி இடது பாகம் பார்த்து துப்ப வேண்டும்.
இப்படி செய்யும் போது ஆபத்துகளிருந்து தப்பித்து விடலாம்.
அல்லாஹ் விடமிருந்து வருகின்ற நல்ல அறிவிப்புகள் தான் #மூன்றாம் வகை
விசுவாசிகளின் கனவு நுபுவ்வத்தின் நாற்பது அம்சங்களில் நின்றும் ஒரு அம்சமாகும்.
சில காலை பொழுதில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிக்கு வந்தால் நபித்தோழர்களிடம் அவர்கள் பார்த்த கனவு க்கான விளக்கங்களை சொல்லி கொடுப்பார்கள்..
#சுவிசேஷங்கள்...
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்..
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்..
ரிஸாலத்தும், நுபுவ்வத்தும் முடிவடைந்துவிட்டது
எனக்கு பின்னால் நபியோ,ரஸுலோ வரப்போவதில்லை.
ஆனால் சுவிசேஷங்கள் உண்டு..
அப்போது நபித்தோழர்கள் கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதரே
சுவிசேஷங்கள் என்றால் என்ன..?
நல்லோர்கள் காண்கிற நல்ல கனவு தான் சுவிசேஷங்கள் என்று பதிலுரைத்தார்கள்..
புகாரி 6990
நல்லோர்கள் காண்கிற நல்ல கனவுக்கு தனித்துவம் இருக்கிறது.
என இந்த ஹதீஸ்களிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் எல்லா கனவுகளும் எல்லோரிடமும் சொல்லக் கூடாது.
அதற்கு சில விதிமுறைகள் மதம் கூறுகிறது.
அபூ ரஸீனுல் உகைலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்..
கனவு ஒரு பறவையின் காலில் தொங்கி கிடக்கிறது.
யாரிடமாவது கூறும் போது அது கீழே விழுகிறது.
அதனால் கனவுகளை அறிஞர்களிடமும்,
நன்மை நாடுபவர்களிடமும்,
அறிவாளிகளிடமும் இன்றி வேறு யாரிடமும் சொல்லாமல் இருப்பது நல்லது..
திர்மிதி (2288)
பறவைகளில் தொங்கி கிடக்கிறது என்பது ஓரு அலங்கார வார்த்தையாகும்.
எல்லா கனவும் எல்லோரிடமும் சொல்வது மூலம் ஆபத்து ஏற்படலாம்.
எல்லா கனவுகளுக்கும் விளக்கம் இருக்க வேண்டும் என்பது இல்லை.
விளக்கங்கள் யாருக்கும் சொல்லக்கூடிய விஷயம் இல்லை.
எனவே இதுபோன்ற தேவைகளுக்கு நல்ல படித்த கற்றுத் தேர்ந்த
அறிஞர்களை மட்டுமே அனுக வேண்டும்...