அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நாயகத்தின் மகத்தான சேவகர்

அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நாயகத்தின் மகத்தான சேவகர்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அனஸ்_இப்னு_மாலிக்
ரழியல்லாஹு_அன்ஹு

நாயகத்தின்_மகத்தான_சேவகர்..

திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது தோழர்களில்
மிகப் பிரபலமானவர் அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.
நாயகத்திற்கு தொடர்ச்சியாக பத்து ஆண்டு காலம் சேவை செய்தார்கள்
என்ற பாக்கியம் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மட்டுமே உரிமை கொண்டாட முடியும்.
நாயகத்தின் வாழ்க்கை வரலாறு குறிப்பிடும் போது அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை தவிர்க்க கொள்ள இயலாது.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மரணம் வரை நாயகத்திற்க்காக சேவை செய்தார்கள் என்பதுவே அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மிகவும் உயர்ந்த, முக்கியமானதுமான விசேஷம்...

#பனூ_நஜ்ஜார்:
#சிறந்த_குடும்பம்..

அன்ஸாரிகளில் மிகவும் உயர்வான சிறந்த குடும்பம்தான் பனூ நஜ்ஜார் இந்த குடும்பத்தில்தான் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்தார்கள்.
மேலும் மகான் அவர்கள் ஹஸ்ரஜ் குலத்தைச் சார்ந்தவருமாகும்.
நஜ்ஜார் என்ற நபரில்
இவர்களின் பரம்பரை சென்றடைவதால் அவர்களது குலம் பனூ நஜ்ஜார் என்ற பெயரில் அறியப்படுகிறது.
தைமுல்லாஹி இப்னு அம்ர் இப்னுல் ஹஸ்ரஜ் என்பதுதான் குலத்தின் தலைவருடைய யதார்த்த பெயர்.

பனூ நஜ்ஜார் குலத்தின்
வேர்கள் ஏமனாகும்.
அவர்களது பூர்வீகர்களில் அம்ர் என்ற நபர் ஏமனுக்கு சென்ற போது அவர்களது சக கிளை குலங்களான அவ்ஸ், ஹஸ்ரஜ், குஸாஆ, ஆலுஜஃப்னா, அஸ்த், போன்றவர்கள் ஏமனிலிருந்து வெளியேறினார்கள்.
பலரும் பல நாடுகளுக்கு சென்று வசிக்கத் துவங்கினார்கள்.
கடைசியில் அவ்ஸ்
ஹஸ்ரஜ் மதீனாவுக்கு வந்தனர்.
இவ்வாறு தான் பனூ நஜ்ஜார் குலத்தினர் மதீனாவில்
வளர்ச்சயடைய துவங்கினர்..

அனஸ் இப்னு மாலிக் அல் காதிமுல் அமீன்

#உம்மு_ஸுலைமின்
#தங்க_மகன்....

அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தாயார் உம்மு ஸுலைம் அவர்களாகும்.
ஹரம் இப்னு மில்ஹான் என்பவரின் மகள்தான் இவர்.
இந்த மங்கையின் யதார்த்த பெயர் ஸஹ்லா என இப்னு ஹஜர் சொல்லியுள்ளார்
றுமைஸா எனவும்,
உனைஸா எனவும்
முலைகா எனவும் சில கருத்துக்கள் உண்டு. சில அறிவிப்பில் குமைஸாஃ என்றும் காண முடிகிறது..

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

நான் சுவனத்தில் நுழைந்து போது ஒரு காலடி சத்தம் கேட்டேன்.

அப்போது நான் கேட்டேன்.

இது யாருடைய சத்தம்.

அது அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தாயாரின் சத்தம் என வானவர்கள் பதிலளித்தனர்.

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மகத்துவத்தை புரிந்து கொள்ள மேற்கூறப்பட்ட
அறிவிப்பை போதுமாகும்.
மாலிக் இப்னு நள்ர் என்பவர் தான் உம்மு ஸுலைம் அவர்களது முதல் கணவர்.
இவர் தான் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை.
இத்திருமணம் அறியாமை காலகட்டத்தில் நடைப்பெற்றது.
இவருக்கு பின்னர் அபூ தல்ஹா என்பவர் உம்மு ஸுலைம் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

#மாலிக்கின்_மகள்...

உம்மு ஸுலைம் அவர்களின் அறியாமை காலகட்டத்தில் உள்ள கணவர் மாலிக் இப்னு நள்ர் என்று நாம் சொன்னோம் அல்லவா..?

மதீனா நகரத்தில் இஸ்லாம்
வந்தடைந்ததும் உம்மு ஸுலைம் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தனது கணவரிடம் இந்த செய்தியை அறிவிக்கவும் செய்தார்கள்.
அவரை உம்மு ஸுலைம் அவர்கள்
இஸ்லாத்தின் பால் அழைத்தபோது அவர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.
மேலும் கடும் சினம் கொண்டார்.
கோபம் தணியாமல் நாட்டைவிட்டு ஷாம் தேசத்திற்கு சென்று அங்கேயே மரணமடைந்தார்.
இதற்கு பிறகுதான் அபூ தல்ஹா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் உம்மு ஸுலைம் அவர்களை திருமணம் செய்ய அனுமதி கோரினார்கள்.
அவ்வேளையில் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க முடியாது என உம்மு ஸுலைம் அவர்கள அடம்பிடித்ததால் கடைசியில் அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

#பறாஃயின்_சின்ன_தம்பி..

அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் பெரிய பெரிய சகோதரர்தான் பறாஃ இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்

இவர் இஸ்லாமில் அறியப்பட்ட வீரராக திகழ்ந்தார்.
நாயகத்துடன் உஹுத், கந்தக் போன்ற போர்களில் கலந்து கொண்டுள்ளார்.
தன்னுடைய பதினைந்தாம் வயதில்தான் உஹுத் போரில் கலந்து கொண்டார்.
அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிலிருந்து அறிவிக்கப்படும் நபிமொழி.

பறாஃ இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் குரல் அனைவரையும் ஈர்க்கக்கூடியதாக இருக்கும்.
பல பயணங்களிலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக அவர் பாட்டு பாடுவார்.
ஒரு முறை பாடும் பாடும் போது அவரது இனிய குரலின் இனிமையில் பெண்கள் கூட்டம் கூடினார்கள்.
உடனே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடத்தில் பாடுவதை நிறுத்த சொன்னார்கள்.
உடனே அவரும் பாடுவதை நிறுத்திக் கொண்டார்.
(அல் முஸ்தத்ரக்)

பறாஃ இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக ஏராளமான பணி விடைகள் செய்தார்கள் என பல அறிவிப்புகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது..

#இஸ்லாத்தின்_பால்...

அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை மாலிக் இப்னு நள்ர் ஷாம் தேசத்திற்கு சென்று அங்கேயே மரணம் அடைந்ததால்
அவர்களுக்கு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து எல்லா விஷயங்களையும் கவனித்துக் கொண்டது தாயார் உம்மு ஸுலைம் அவர்களாகும்.

அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் குழந்தை பருவத்திலேயே தாயார் உம்மு ஸுலைம் அவர்கள் தனது மகனுக்கு இஸ்லாத்தை பற்றிய அறிவுகளை பகிர்ந்து கொடுக்கவும்,
ஷஹாதத்தை சொல்லி கொடுக்கவும் செய்தார்கள்.
தந்தை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தாயார் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை இஸ்லாமிய முறையில்தான் வளர்த்தார்கள்.
குழந்தை பருவத்திலேயே பாதகமான விளைவுகள் சந்தித்த போதிலும் மகான் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்பது அவர்களது பெரும் பாக்கியமாகும்.
அத்துடன் அவரது தாயாரின் கடின உழைப்பும் இதில் உள்ளன.

மதீனா நகரில் வைத்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகரித்தது.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் வருகிறார்கள் என்ற செய்தியை மதீனா வாசிகள் அறிந்தவுடன்
வேறு குழந்தைகளுடன் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் மதீனா நகரின் நுழைவு வாயிலில் நாயகத்தை வரவேற்க காத்திருந்தார்கள்.
தன்னுடைய தேனன்பின், பேரன்பின் ஆருயிரே பார்ப்பதற்கான எண்ணிலடங்கா பேராவல் அவர்களை அலட்டிக் கொண்டு இருந்தது..

அனஸ் இப்னு மாலிக்
அல் காதிமுல் அமீன்.
பக்கம்.. 70

#திரு_சந்நிதியில்..

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பத்து வருடங்கள் சேவை செய்த பாக்கியம் அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மட்டுமே கிடைத்த ஒரு பாக்கியமாகும்.
திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வந்த போது அபூ தல்ஹா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் எனது கைபிடித்து நாயகத்தின் முன்னிலையில் இவ்வாறு
மொழிந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதரே
இந்த குழந்தையின் பெயர் அனஸ் என்பதாகும்.
இவர் ஒரு அறிவாளி.
எனவே இன்று முதல் அவர் உங்களுக்கு சேவை செய்து கொள்வார்..

அன்று முதல் நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சேவை செய்ய துவங்கினேன்.
அவர்களுடைய பயணங்களிலும் மற்ற நேரங்களிலும் நான் அவர்களுடன் இருப்பதுண்டு.
நான் நாயகத்திற்கு செய்து கொடுத்த காரியங்களில் இதற்காக இதைச் செய்தாய் என்றோ செய்யாத விடயங்களில் ஏன் இதை செய்யவில்லை என்றோ இதுவரை இப்போதும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டது கிடையாது..

எல்லா வேளையிலும் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நாயகத்துடன் இருந்தார்கள்.
ஒரு முறை ஒரு நபித்தோழர் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இவ்வாறு கேட்டார்.
தாங்கள் பத்ர் போரில் பங்கேற்றீர்களா..?

உடனே மகான் அவர்கள் கடும் கோபத்துடன்.
நான் பத்ரில் கலந்து கொள்ளாமல் எங்கே செல்ல...?
ஸியறு அஃலாமுந்நுபுவ்வா.

#நாயகத்தின்_பாடசாலையில்..

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அன்பும்,
செல்லமும் கொடுத்து தன் சொந்த பிள்ளையைப் போல வளர்த்தினார்கள்.
குட்டி மகனே!! என்றுதான் பலதடவை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்தார்கள்.
தேவையான அறிவுரைகளும், நெறிமுறைகளும் வழங்கி வந்தார்கள்.

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு முறை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு என்னிடம் கூறினார்கள்.

குட்டி மகனே!
நீ உன் குடும்பத்தாரிடம் செல்லும் போது ஸலாம் உரைக்க வேண்டும்.
இது மூலம் உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் அபிவிருத்தி அதிகமாகும்.

இன்னொருமுறை இவ்வாறு கூறினார்கள்.

குட்டி மகனே!!
தொழும் போது திரும்பி பார்க்காதே!
அது பெரும் விபத்தாகும்.

இப்படி தேவைக்கேற்ப தாராளமான அறிவுரைகளை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வழங்கினார்கள்.
அதை அனைத்தையும் அவர்கள் தனது வாழ்வில் கடைப்பிடித்தார்கள்.

இன்னொரு அறிவுரையை கவனியுங்கள்..

மகனே!!
இதயத்தில் யார் மீதும் வன்மமும், வெறுப்பும் வைக்காதே..
(திர்மிதி).....

#குட்டி_அனஸ்..

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில வேளைகளில் குட்டி அனஸ் என தன்னை அழைத்ததாக குறிப்பிட்டுள்ளார்கள்.

ஒருமுறை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை அவர்களின் ஒரு தேவைக்காக அனுப்பி வைத்தார்கள்.
நான் சந்தையில் சென்றடைந்த போது ஓரிடத்தில் குழந்தைகள் விளையாடி கொண்டிருப்பது என் கவனத்தில்பட்டது.

நான்
அக்குழந்தைகளின் விளையாட்டில் மெய்மறந்து நின்று விட்டேன்.
ரொம்ப நேரமான போது என்னுடைய பிற்பகுதியில் யாரோ ஒருவர் பிடித்து கொண்டார்கள்.
நான் சட்டென்று திரும்பி பார்த்தேன்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிற்கிறார்கள்.
அவர்கள் என்னைப் பார்த்து புன்னகைத்த படியே கேட்டார்கள்.

குட்டி அனஸே!!
நான் ஒப்படைத்த காரியத்தை செய்து விட்டாயா..?
அல்லாஹ்வின் தூதரே..
நான் இதோ நிறைவேற்றுகிறேன் என்று கூறினேன்.
(முஸ்லிம்)

ஒப்படைத்த விஷயம் செய்வதில் தாமதம் ஏற்பட்ட போதும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை திட்டவோ,
அவர்கள் மீது கோபம் கொள்ளவோ செய்யவில்லை.
மிகவும் பரிவுடன் விஷயத்தை கேட்டு கொண்டார்கள்.
இந்த இடத்தில் குட்டி அனஸே என்ற அழைப்பு கவனிக்க வேண்டிய
சுட்டிக் காட்ட வேண்டிய விஷயமாகும்.

தன் கீழில் வேலை பார்க்கும் ஊழியர்களிடமும்,
வேறு தொழிலாளர்களிடமும் கெட்ட வார்த்தைகள் பேசுபவர்களும், வரம்பு மீறி நடந்து கொள்பவர்களும் நபிகளாரின் வாழ்வியலை கடைபிடிப்பது அவசியமாகும்....

#பொறுப்புகளை_நிறைவேற்றுவதில் #பக்குவம்.

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு
அவர்கள் சிறு வயதின் போதிலும்
மிகவும் பக்குவமுடைய
வர்களாகத்தான் அவர்களுடைய செயல்பாடுகளும்,
தலையீடுகளும் இருந்தது.
நாயகத்தின் சேவகராக இருப்பதினால் பல முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் பலதும் கையாள வேண்டி இருக்கும்.
அந் நேரங்களில் மகான் அவர்கள் எவ்விதமான கவனக்குறைவோ, அலட்சியமோ ஏற்படுத்தியது இல்லை.

அறிஞர் ஸாபித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்து அறிவிக்கிறார்கள்.

நான் ஒரு முறை குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தேன்.
அந்நேரத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கள் அருகில் வந்து ஸலாம் உரைத்தார்கள்.
பிறகு என்னை அவர்களது ஒரு தேவைக்காக அனுப்பி வைத்தார்கள்.
நான் உடனடியாக அவர்கள் கூறிய விஷயத்தை செய்வதற்கு சென்று விட்டேன்.
அதனால் வீட்டிற்கு செல்ல தாமதம் ஏற்பட்டது.

வீட்டிற்கு வந்த போது தாயார் கேட்டார்கள்.

ஏய்!! அனஸ் ஏன் வீட்டிற்கு வர தாமதமானது.

என்னை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு தேவைக்காக அனுப்பி வைத்தார்கள்.
என்று பதிலுரைத்தேன்.

என்ன தேவை என தாயார் கேட்டார்கள்.

அது இரகசியம் என நான் கூறினேன்.

அப்படியானால் நாயகத்தின் இரகசியத்தை நீ யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று தாயார் எனக்கு உபதேசம் செய்தார்கள்.

இந்த சம்பவம் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சீடரான ஸாபித் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சொல்லும் போது இவ்வாறு கூறினார்கள்.

ஹே!!
ஸாபித் இந்த இரகசியம் என்ன யாரிடமாவது நான் சொல்லி இருந்தால் உங்களுக்கு நான் அதை கூறியிருப்பேன்.

பாருங்கள் தாயாரின் முன்னிலையில் கூட நாயகத்தின் இரகசியத்தை வெளிப்படுத்தாமல் பக்குவமாக நடந்து கொண்டார்கள்.
இது நிகழ்ந்தது அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறுபிராயம்
என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இன்னொரு நபரின் இரகசியங்களை பாதுகாப்பது பக்குவத்தை குறிக்கும் காரியமாகும்.
இரகசியங்களை பாதுகாப்பதில் அதிகமானோர் தோல்வியடைகிறார்கள்
இதனால் தான் பல்வேறு ஆபத்துகள் ஏற்படுகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
நம்பிக்கைக்குரிய பாதுகாவலர் தான் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்.
அந்த காரியத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மீது திடமான நம்பிக்கை உண்டு.

யாரிடமும் சொல்ல மாட்டேன் என கூறி தனது நண்பனிடமிருந்து கேட்ட விஷயத்தை பிறரிடம் (மற்ற நண்பர்களிடம்) கூறுவது நம் நண்பனுக்கு செய்கின்ற நம்பிக்கை துரோகம் ஆகும்.

#குழந்தை_பருவ_நினைவுகள்..

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பலமுறை நகைச்சுவைகள் சொல்லி அவர்களை மகிழ்ச்சியடையச் செய்வார்கள்.
சில சமயங்களில் இரு காதுகள் உள்ளவனே என்று விளையாட்டாக அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழைப்பார்கள்.

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் சகோதரி ஒருமுறை அவர்களிடம் கூறினார்கள்.

ஹே..
அனஸ் நீ சிறுவனாக இருக்கும் போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம் வீட்டிற்கு வருகைப் புரிந்தார்கள்
அப்போது உனது தலைமுடி இரு கூம்புகளாக நிறுத்தி நிறுப்பது அவர்களது கவனத்தில்பட்டது.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உனது தலைமுடியை தடவி விட்டு உனது அபிவிருத்திக்காக பிரார்த்தனை செய்தார்கள்.

பிறகு இப்படி சொன்னார்கள்.

இந்த குழந்தையின் தலையில் காண்கிற இரண்டு கூம்புகளை எடுத்து மாற்றுங்கள்.
இது யூதர்களின் வழிமுறையாகும்..

முடியை கிராப் செய்வது,
முடியை தாறுமாறாக வெட்டுவது,
மருதாணி அல்லாத சாயங்கள் பூசுவது போன்றவை இஸ்லாம் தடுத்த காரியங்களாகும்.
முடியின் மீது சாயங்கள் பூசுவது தொழுகை போன்ற வணக்கங்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதற்கு காரணமாக அமையும்.

#உம்மு_ஸுலைம்_ரழியல்லாஹு #அன்ஹா_கேட்டு_பெற்ற_பிரார்த்தனை..

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு
அவர்கள் அறிவிக்கிறார்கள்..

திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு தடவை உம்மு ஸுலைம் அவர்களிடம் சென்றார்கள்.
அப்போது அம்மையார் நாயகத்திற்கு பேரீச்சம் பழமும்,நெய்யும் வழங்கினார்கள்.

ஓ உம்மு ஸுலைம்..
இந்த பேரீச்சம் பழம் அதன்
தோல் பாத்திரத்திலும்,
நெய்யை அதன் பாத்திரத்திலும்
திருப்பி வைத்து விடுங்கள்.
நான் நோன்பாளி ஆகும்.
என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

பின்னர் வீட்டின் ஒரு மூலையில்
வைத்து சுன்னத்தான தொழுகையை நிர்வகித்தார்கள்.
பிறகு உம்மு ஸுலைம் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் வேண்டி துஆச் செய்தார்கள்.
அப்போது உம்மு ஸுலைம்
சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதரே எனக்கு பிரத்தியேகமாக ஒரு விஷயம்
சொல்ல இருக்கிறது..

என்ன விஷயம் சொல்லுங்கள்..
உங்களது சேவகர் எனது அன்பு மகனார் அனஸுக்காக துஆச் செய்யுங்கள்.

அல்லாஹ்வே!!!

அனஸிற்கு நீ செல்வமும்
சந்தானங்களும் வழங்குவாயாக..
அவருக்கு நீ அபிவிருத்தி வழங்குவாயாக..
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருகரம் உயர்த்தி அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள்..

இப்போது அன்ஸாரிகளில் மிகவும் செல்வந்தர் நானாகும்.

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்காக பெருமானார் பல தடவைகள் துஆச் செய்ததாக இமாம் முஸ்லிமின் அறிவிப்பில் காண இயலும்..

ஒரு தடவை அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்.

எனக்கு ஏராளமான செல்வம் உண்டு.
எனது மகன்களும்,
பேரக் குழந்தைகள் இப்போது நூறுக்கும் மேற்பட்டோர் இருக்கின்றனர்..

மற்றொரு அறிவிப்பில் இவ்வாறு காணலாம்..

ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது வீட்டிற்கு அருகே கடந்து சென்றார்கள்.
நாயகத்தின் காலடி ஓசையை
கேட்ட என்னுடைய தாயார்
இவ்வாறு கூறினார்கள்.

யா ரஸுலுல்லாஹ்.
எனது குட்டி அனஸிற்கு
வேண்டி நீங்கள் துஆச் செய்யுங்கள்..

அவ்வேளையில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்காக மூன்று பிரார்த்தனை செய்தார்கள்.
அதில் இரண்டின் பலனை அனுபவித்து விட்டேன்.
மூன்றாவது பிரார்த்தனை மறுமை வாழ்வில் அனுபவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் உள்ளேன்..

அனஸ் இப்னு மாலிக்
அல் காதிமுல் அமீன்
பக்கம். 78

#மறுமை_நாளில்..

நாயகத்திற்கு சேவை புரிவதின் இறுதி இலக்கு மறுமை நாளின் வெற்றியாகும்.

அதையும் அனஸ் கேட்டு பெறுகிறார்கள்.

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

நான் நாயகத்திடம் இறுதி நாளில் எனக்காக ஷஃபாஅத் செய்வதற்கு கேட்டு கொண்டேன்.

நிச்சயமாக நான் உனக்கு ஷஃபாஅத் செய்யலாம் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

யா ரஸுலுல்லாஹ்..
இறுதி நாளில் நான் உங்களை எங்கே தேடுவது..?

என்னை ஸிராத் பாலத்தின் அருகே தேடுங்கள் என்றார்கள்.

உங்களை அங்கே காணவில்லை என்றால்..?
என நான் கேட்டேன்.

மீசானின் பக்கம் தேடுங்கள் பாருங்கள்..

அங்கேயும் காணாவிட்டால்.?
என நான் கேட்ட போது..

நான் ஹவ்ளின் அருகாமையில் இருப்பேன்.
இந்த மூன்று இடங்களில் ஒரு இடத்தில் நீ என்னை பார்க்காமல் இருக்கமாட்டாய்.
(திர்மிதி)

பாருங்கள்..
அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகவும் துல்லியமாக தேட வேண்டிய இடம்வரை கேட்டறிந்து ஷஃபாஅத் செய்ய வேண்டும் என்ற வாக்குறுதியை பெற்றுக் கொண்டார்கள்..

ஒருமுறை மகான் அவர்கள் இவ்விதம் கூறினார்கள்..

யா ரஸுலுல்லாஹ்..
இறுதி நாளில் நான் உங்களுடைய சிறு சேவர் என்று கூறும் போது நீங்கள் என்னை கவனிக்க வேண்டும்..
(அல் பிதாயத்து வந்நிஹாயா.)

#நாயகத்தின்_மரணத்திற்கு_பின்..

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாழ்க்கை நாயகத்துடன் லயித்து சேர்ந்த ஒன்றல்லவா..?

அனைத்தையும் விட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவர் நேசித்தார்.
அதனால் நாயகத்தின் மரணத்திற்கு பின்னரும் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் முகத்தில் ஒருவித சோகம் படிந்து இருந்தது.
ஒருமுறை மகான் அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவு காணாத ஒரு தினமும்
என்னிலிருந்து விடை பெற்றது கிடையாது.
பிறகு மகான் அவர்கள் தேம்பித் தேம்பி அழுதார்கள்.

வாழும் காலத்தில் நாயகத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த அன்பின் ஆழம்தான் வஃபாத்திற்கு பிறகும் நாயகத்தை சந்திக்க வைத்தது.

திருநபியை கனவு காண்பது பெரும் பேறாகும்.
நாயகத்தை கனவில் பார்த்தால் அது ஷைத்தானியத் ஆகாது என நபி நவின்ற ஏராளமான நபி மொழிகளைப் பார்க்க முடியும்...

#நாயகத்தின்_சுன்னத்தை #பின்பற்றுவதில்_காட்டிய_ஆர்வம்..

புண்ணிய பூமான் முத்து முஹம்மது முஸ்தஃபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருசுன்னாக்களை பின் பற்றுவதில் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மிகுந்த ஆர்வமும்,
கவனமும் காட்டுவார்கள்.

சுமாமத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்..

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுகையில் நீண்ட நேரம் நிற்பது காரணமாக அவர்களின் இரு காலிலும் வீக்கம் ஏற்படுவது உண்டு..

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலிலும் நீர் வீக்கம் ஏற்படுவது உண்டு என்பது நாம் அறிந்த விஷயமல்லவா.?
அனஸ் ரழியல்லாஹு அன்ஹு
அவர்கள் இரவு நேர வணக்க வழிபாடுகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டார்கள்.

அபூஹுரைரா ரழி அவர்கள் கூறினார்கள்.
உம்மு ஸுலைமின் மகனைவிட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகையோடு ஒத்துபோகின்ற தொழுகை தொழுகின்ற ஒருவரையும் நான் பார்த்தது இல்லை.

இந்த ஹதீஸில் உம்மு ஸுலைமின்
மகன் என்று குறிப்பிடுவது அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்தான் என ஹதீஸ் கலை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஸுமாமத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பேசும் போது சில வார்த்தைகளை தொடர்ச்சியாக மூன்று தடவை கூறுவார்கள்.

பின்னர் மகான் அவர்கள் கூறுவார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில வார்த்தைகளை தொடர்ச்சியாக மூன்று முறை கூறுவதுண்டு..
முஸ்னத் அஹ்மத்

#அற்புதங்களின்_தோட்டம்..

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பெருமானாரின் துஆ பறக்கத்தால் ஏராளமான தோட்டங்கள் கிடைத்தது.
அவையில் எப்போதும் பழங்கள் காய்த்துக் கொண்டு இருந்தது.
வருடத்தில் இரு முறை அனஸ் ரழியல்லாஹு அவர்கள் அறுவடை செய்வார்கள்.

அபுல் ஆலியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்.

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பத்து வருடங்கள் சேவை செய்தார்கள்.
நாயகம் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு துஆச் செய்தார்கள்.
அது காரணமாக அவர்களின் தோட்டங்கள் அனைத்தும் வருடத்தில் இரு தடவை விளைச்சல் கொடுத்தது.
மகான் அவர்களின் தோட்டத்தில் ஒரு கஸ்தூரி செடி இருந்தது.
அது மிகையான அளவில் கஸ்தூரி வாசனை தருவதாக இருந்தது.
அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு
அல் காதிமுல் அமீன்
பக்கம். 165

ஒரு தடவை மகான் அவர்களின் தோட்ட வேலையாள் இவ்வாறு கூறினார்.
உங்கள் தோட்டத்திற்கு தண்ணீர் தேவைப்படுகிறது.
அதில் உள்ள செடிகள் அனைத்தும் வாடி வருகிறது.
உடனே மகான் அவர்கள்
தனது மேலாடையை அணிந்து வெளியில் வந்து தொழ பின்னர் அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள்.
உடனே கார்மேகம்
வரத் துவங்கியது,
உடனே அவர்களது தோட்டத்தில் சரியான மழை பெய்தது.
தோட்டத்திற்கு தேவையான தண்ணீர் கிடைத்தது.
எல்லா இடங்களிலும் தண்ணீர் நிறைந்து கவிந்தது.

இந்த நிகழ்வை கூறிய பின்னர் பிரபல வரலாற்று ஆய்வாளர் ஹாபிழ் தஹபி இவ்வாறு கூறுகிறார்..

இது அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு இறைவன்
வழங்கிய வெளிப்படையான கராமத்தாகும்.

வல்லோன் அல்லாஹ்
மகான் அவர்களது பறக்கத்தைக் கொண்டு
இரு உலகிலும் சந்தோஷமும், மகிழ்வும் தந்தருள்வானாக..

Reference..
_____________

புகாரி
முஸ்லிம்
திர்மிதி
அபூதாவூத்
இப்னுமாஜா
முஸ்னத் அஹ்மத்
அல் முஸ்தத்ரக்
தஹ்தீபுத்தஹ்தீப்
அனஸ் இப்னு மாலிக்
அல் காதிமுல் அமீன்
ஸியரு அஃலாமுந்நுபுவ்வா
அல் பிதாயத்து வந்நிஹாயா