முஸ்லிம்களை காஃபிராக்கும் தவ்ஹீத் வாதிகள்

முஸ்லிம்களை காஃபிராக்கும் தவ்ஹீத் வாதிகள்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

முஸ்லிம்களை காஃபிராக்கும் தவ்ஹித் வாதிகள்

கியாமத் (கடைசி) காலத்தின் அடையாளங்களாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எண்ணிய பல விஷயங்களில் இன்று நமது சமுதாயத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதில் ஒன்றுதான் அல்லாஹ்வின் நேசர்களான அவ்லியாக்களின் கந்தூரி விழா நடக்கும் நேரத்தில் மார்க்கத்தைப் பற்றிய ஆழமான அறிவு இல்லாமல் சில சிறுவர்கள் வெளியிடும் துண்டு பிரசுரங்கள் இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட சுன்னத்தான கப்ருஸியாரத்தை சமாதி வழிபாடாக சித்தரித்து இதை செய்து வரும் இன்றைய மக்களையும் செய்து வந்த முன்னோர்களையும் இணைவைப்பவர்கள் என்று முத்திரை குத்துகின்றன.

குர்ஆனிலும் ஹதீதிலும் சொல்லப்பட்ட கருத்துக்களைத் தான் அந்த பிரசுரங்கள் குறிப்பிடுகின்றன
என்றால் அவற்றை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் குர்துஆன் ஹதீஸுக்கு முற்றிலும் முரண்பட்ட விஷக் கருத்துக்களை அந்த சிறுவர்கள் பிரச்சாரம் செய்யும் போது நம்மால் மௌனமாக இருக்க முடியவில்லை.

பிரசுரத்தின் வரிகளை பரிசோதிப்போம் சமாதி வழிபாடு சமாதிகளை கட்டி அதற்கு விழாக்கள் எடுப்பது.
ஊர்வலம் நடத்துவது சமாதியில் சந்தனம் பூசுவது.
மாலையிடுவது மரியாதை செய்வது.
மவ்லூது பஜனைகள் பாடுவது.
நேர்ச்சைகள் வழங்குவது சமாதிகளின் பெயரில் கச்சேரிகள்,
மிருக ஊர்வலங்கள் நடத்துவது.
சமாதியில் முறையிடுவது உண்டியல் வைத்து வசூலிப்பது இவை எல்லாம் ஷிர்க்கான அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்ற காரியங்களாகும் என்று குழப்பவாதிகள் கூறுகின்றனர்.

மேற்கூறப்பட்ட விஷயங்களை ஷிர்க் என்று கூறினார்களே மல்லாமல் இவை ஷிர்க் என்பதற்க்கு எந்தவிதமான ஆதாரங்களையும் அவர்கள் முன்வைக்கவில்லை.
"ஷிர்க் என்றால்
அல்லாஹ்வுக்கு இணை வைப்பது.
"இணைவைத்தல் என்றால் அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தமான ஒரு பண்பு அல்லாஹ் அல்லாத ஒருவருக்கு இருப்பதாக நம்புவதாகும். அல்லாஹ்வுடைய பண்புகளை படைப்புகளுக்கு இருப்பதாக நம்பும் நிலை மேற்கூறப்பட்ட எந்த செயலிலும் அமையவில்லை.

1: சமாதி வழிபாடு -----
கப்ரு ஸியாரத் என்ற சுன்னத்தைப்பற்றி சமாதி வழிபாடு என்ற சொல்லைப் பயன்படுத்தியது. அறியாமையின் உச்ச கட்டமாகும்.
ஸியாரத்துக்கு வரும் எந்த முஸ்லிமும் கப்ரில் இருக்கும் இறைநேசரை அல்லாஹ் என்றோ வணக்கத்திற்குரியவர் என்றோ நம்பவில்லை அல்லாஹ்வுக்குரிய எந்த பண்பும் இவர்களுக்கு இருப்பதாக நம்பவில்லை நம்மைப் போன்று இவர்களும் அல்லாஹ்வின் ஓர் அடிமை என்றே நம்புகிறார்கள். அப்படியானால் இது எவ்வாறு சமாதி வழிபாடாக மாறியது?

2. சமாதிகளை கட்டுவது சமாதியில் மாலையிடுவது இவைகளை இணைவைத்தல் என்று சொல்கிறது குழப்பப்பிரசுரம் இந்த செயல்களில் எங்கே இணை வைத்தல் வருகிறது? அல்லாஹ்வுக்கு மட்டும் தான் சமாதி கட்ட வேண்டும் அல்லாஹ்வுக்கு மட்டும்தான் மாலை போட வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தால் கப்ருகளை கட்டுவதையும் மாலையிடுவதையும் இணை வைத்தல் என்று ஏற்று கொள்ளலாம். ஆனால் அல்லாஹ்வுக்கு சமாதி கிடையாது.
அவன் அழியாதவன்.
நித்திய ஜீவனுள்ளவன். அல்லாஹ்வுக்கு இருக்கவே முடியாத ஒரு செயலை கப்ரில் செய்தால் அதை இணை வைத்தல் என்று எந்த புத்திக்கும் ஒத்துக் கொள்ள முடியாது.

3. இது போன்று தான் விழாக்கள் எடுப்பது. ஊர்வலம் நடத்துவது. சந்தானம் பூசுவது, உண்டியல் வைத்து வசூலிப்பது இவைகளெல்லாம் அல்லாஹ்வுக்காக செய்ய முடியாத செயல்கள், அல்லாஹ்வுக்கு இருக்க முடியாத பண்புகள் இவற்றை செய்தால் அது இணைவைத்தல் ஆகும் என்று சொல்பவரை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

4. கப்ருக்கு மரியாதை செய்வதை குழப்பவாதிகள் இணைவைப்பின் பட்டியலில் சேர்த்துள்ளார்கள்.
ஆனால் கப்ருக்கு மரியாதை செய்வது இஸ்லாம் ஏவும் கடமைகளில் ஒன்று.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்.
நீங்கள் கப்ருகளின் மீது உட்காதீர்கள்
(திர்மிதி பக்கம்-203
முஸ்லிம் பக்கம்-312) என்ற ஹதீஸ் கப்ரை இழிவுபடுத்தக் கூடாது, மரியாதை செய்ய வேண்டும் என்று ஏவுகிறது.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஏவக்கூடிய ஒன்றை ஷிர்க் என்று சொன்னவர்கள் எவ்வளவு பெரிய அநியாயக்காரர்கள்!

5. மவ்லிது ஓதுவது என்றால் உலகை விட்டு பிரிந்து போன நல்லாடியார்களை கவிதைகளாகவும் உரைநடைகளாகவும் புகழ்வதைதான் மவ்லித் என்ற பெயரில் நாம் செய்து வருகிறோம். இது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அங்கீகரித்த மகத்தான ஒரு சுன்னத் ஆகும்

றுபய்யி பின்த் முஅவ்வித் (ரலியல்லாஹு அன்ஹா) அறிவிக்கிறார்கள் -
நான் கணவன் வீட்டில் நுழையும் வைபவத்தின் போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்னிடம் வந்தார்கள் எனது விரிப்பில் அமைந்தார்கள். அடிமை பெண் தஃப் அடித்து பத்ருப் போரில் கொல்லப்பட்ட ஸஹாபாக்களை புகழ்ந்து பாடிக் கொண்டருந்தார்கள்.
(புகாரி பக்: 570)

நபி (ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம்) அவர்கள் மன்னிலையில் ஸஹாபாக்களால் செய்யப்பட்டு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் அங்கீகாரத்தை பெற்ற ஒரு உண்ணியமான செயலைத் தான் இந்த இளைஞர்படை ஷிர்க் என்று சொல்லுகிறார்கள்.

மிருக ஊர்வலம் நடத்துவதும் ஷிர்க் என்று குழப்பவாதிகள் கூறுகிறார்கள்.
ஒரு ஊர்வலத்தின் முன்னால் ஒன்றிரண்டு யானைகளை கொண்டு செல்வதில் அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தமான பண்பை படைப்புக்கு கொடுப்பது எங்கே வருகிறது.
அப்படிச் செய்தால் தானே இணைவைத்தல் உருவாகும் அது இங்கே இல்லையே!

மேலும் சில ஆண்டுகளுக்கு முன் (வஹாபிகள் பல இயக்கங்களாக சிதறுவதற்க்கு முன்னால்) த.மு.மு.க.வால் தஞ்சையில் தமிழக வஹாபிகளின் தலைவர் பி.ஜேயின் முன்னிலையில் நடைபெற்ற தஞ்சை பேரணியில் 10,000 ரூபாய் வாடகையில் இரண்டு குதிரைகள் வாங்கப்பட்டு பேரணியின் முன்னால் விடப்பட்டது யானை ஊர்வலம் ஷிர்க் என்றும் குதிரை ஊர்வலம் சுன்னத் என்றும் விளக்கிச் சொன்ன குர்ஆன் வசனத்தையோ ஹதீஸயோ காட்டுவார்களா?

7. சமாதிகள் பெயரில் கச்சேரிகள் நடத்துவது கச்சேரிகள் எங்கு நடந்தாலும் அவை தடுக்கப்பட்ட வேண்டியவை.
காரணம் அதில் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட ஒன்றான சங்கீதம் வருகிறது.
கச்சேரிகளை பல ஊர்களில் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் அதற்கு ஆலிம்களின் அங்கீகாரம் இல்லை.
காலம் காலமாக ஆலிம்கள் கச்சேரிகளை எதிர்த்தே வருகிறார்கள்
ஆலிம்களின் எதிர்ப்பின் காரணமாக பல ஊர்களில் இப்போது கச்சேரி நிறுத்தப்பட்டுவிட்டது


சங்கீதம் இருக்கும் காரணத்தால் தான் கச்சேரிகள் தடுக்கப்பட்டதாகிறது என்று வரும்போது எதிலெல்லாம் சங்கீதம் இருக்கிறதோ அவை அனைத்தும் தடுக்கப்பட வேண்டும். சினிமா பாடல் சி.டிகள், சங்கீதம் பதிவு செய்யப்பட்ட செல்போன்கள், கார்கள். இவற்றிலுள்ள சங்கீதத்தையும் அவர்கள் பழித்திருக்க வேண்டும் ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு சமாதிகள் பெயரில் கச்சேரிகள் மட்டும் குறிப்பிடுவது வலிமார்கள் மீது இவர்களுக்கு இருக்கும் குரோதத்தைத் தானே காட்டுகிறது?

8. நேர்ச்சைகள் வழங்குவது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஏவிய தர்மம் என்ற சுன்னத்தை சேர்ந்ததாகும்.
தர்மங்களில் உணவு பொருளை தர்மமாக வழங்குவது மிகவும் புண்ணியமானதாகும். அப்துல்லாஹ் இப்னு அம்ற் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள்.
ஒரு மனிதர் நபி
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேட்டார். இஸ்லாத்தின் செயல்பாடுகளில் சிறந்தது எது? நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள் உணவளிப்பது (புகாரி பக்கம்-6) இந்த சிறப்பான சுன்னத்தைக் கூட ஷிர்க் என்று சொல்லிவிட்டார்கள் இந்த பெரும் பாவிகள்.

9. இணைவைப்பின் வரிசையில் இணைக்கப்பட்ட மற்றொரு செயல் சமாதியில் முறையிடுவது.
அல்லாஹ் அல்லாத ஒருவரிடம் உதவி தேடிவிட்டால் அது ஷிர்க் ஆகிவிடும் என்பதற்கு எந்த ஆதரமும் இல்லை மாறாக அல்லாஹ் அல்லாத ஒருவரை தெய்வம் என்ற நம்பிக்கையிலோ அல்லது அல்லாஹ்வுக்குரிய ஒரு பண்பை பெற்றவர் என்ற நம்பிக்கையிலோ அழைத்தால் தான் ஷிர்க் ஆகும் அப்போது தான் இணை வைத்தல் உருவாகும்.

அல்லாஹ் சொல்கிறான் அல்லாஹ்வுடன் வேறு தெய்வத்தை அழைக்காதீர்கள் (26:213) கப்ரில் போய் உதவி தேடுபவர்கள் - கப்ரில் இருக்கும் இறை நேசர் அல்லாஹ்வின் அடிமைதான் சுயமாக எதையும் செய்வதற்கு சக்தியற்றவர் என்றும் அதே நேரத்தில் அவ்லியாக்கள் அல்லாஹ் அளித்த ஆற்றலைக் கொண்டு உதவுவார்கள் என்றே நம்புகிறார்கள்.
இது முற்றிலும் தவ்ஹிதுக்கு உட்பட்ட நம்பிக்கை.
இதை ஷிர்க் என்று சொல்பவர்கள் உண்மையான முஸ்லீம்களை காஃபிர்களாக்கும் கொடுமைக்கு ஆளாகுகிறார்கள்.

இறுதியாக சமுதாய மக்களிடம் ஒரு வேண்டுகோள் மார்க்கத்தைப் பற்றிய எந்த ஞானம் இல்லாத அல்லாஹ்வின் மறுமை விசாரணையைப்பற்றி எந்த அச்சமும் இல்லாத சில இளைஞர்கள் தவறான வழி காட்டுதல்களின் அடிப்படையில் இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிரான நச்சுக் கருத்துக்களை பரப்புவது சமுதாயத்தின் ஒரு சாபக்கோடாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில் அவர்களை கண்டிக்கவும் தடுக்கவும் வேண்டிய கடமை ஆலிம்களுக்கும் சமுதாய தலைவர்களுக்கும் உண்டு என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் நம்மையும் நம் சுற்றத்தார்களையும் நம்மைச் சாந்தவர்களையும் வழிகேட்டில் ஆவதை விட்டும் காப்பாற்றுவானாக! ஆமின்!