Sirajudheen Ahsani
எழுத்தாளர்

வேதனையான ஒரு ஹஜ் காலம்.

இதை எழுதும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. கால் நூற்றாண்டு காலமாக ஒரு ஹஜ்ஜையும் செய்யாமலிருந்ததில்லை.இந்த வருடம் ஹஜ் செய்ய மிக ஆவலுடன் இருந்தேன். ஒவ்வொரு வருடமும் அல்லாஹ்வின் விருந்தினர்களில் ஒருவராக மாறுவதில் உள்ள மகிழ்ச்சி விவரிக்க முடியாதது.

மிக எதிர்பார்ப்புடன் மனதில் உள்ள அனைத்தையும் அல்லாஹ்வின் முன் சமர்ப்பிப்பதற்கான அரங்கமல்லவா ஹஜ்.

அல்லாஹ் மிகவும் கண்ணியப்படுத்திய வணக்கமான ஹஜ்ஜின் எல்லா செயல்களும் நபி இப்ராஹிம் (அலை) நபி இஸ்மாயில் (அலை) ஹாஜரா அம்மையார் ஆகியோரின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் எல்லா காலகட்டத்திலும் உலக மக்களால் நினைவு கூறுவதற்காக அல்லாஹு ஏற்படுத்தியவையாகும்.

லட்சகணக்கான மக்கள் ஒன்று திரளும் புனித மக்காவில் இவ்வருடம் சுமார் #பத்தாயிரம் விசுவாசிகள் தான் ஹஜ் செய்கின்றனர். #கோவிட்19.கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்றி ஹஜ் கர்மங்களை மக்கள் நிறைவேற்றுகின்றனர்.

கோவிட் 19 ஐ கண்டு உலகமே பயப்படும் இந்த நேரத்தில் தியாகப்பெருநாளை விசுவாசிகள் மிக கவனத்துடன் கொண்டாட வேண்டும்.ஏனெனில் நம்மை நேசிப்பவர்களை, நம்மை சுற்றியுள்ளவர்களை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.இதைத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஹதீஸில் குறிப்பிடுவார்கள்.ஒரு நாட்டில் தொற்று நோய் இருந்தால் அங்கு வசிப்பவர்கள் எங்கும் செல்லக்கூடாது. வேறு இடங்களில் வசிப்பவர்கள் அங்கும் செல்லக் கூடாது.

நம் நாடு ஏற்கனவே உலகின் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக மாறிவிட்டது. இந்தியாவில் நாள்தோறும் சுமார் #அரை லட்சம் பேர் பாதிக்கப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.மிக எச்சரிக்கையுடன் நோய் வராமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்ட நம் மாநிலத்தில் தினமும் சராசரியாக #ஆயிரம் பேர் நோயால் பாதிக்கப்படுவதை காண்கிறோம்.நாம் செய்ய வேண்டியதெல்லாம் அதிகபட்ச கவனத்துடன் இருக்க வேண்டும்.

எல்லா வழிமுறைகளையும் கடைப்பிடித்து இம்முறை பெருநாள் தொழுகையையும், குர்பானியையும் நிறைவேற்றலாமென முதல்வர் அழைப்பு விடுத்த கூட்டத்தில் உறுதியளித்தோம்.அதனால் பூரண எச்சரிக்கையுடன் இதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

கோவிட் 19 உருவாக்கியிருக்கும் பல்வேறு விதத்திலுள்ள சிரமங்கள் ஒவ்வொருவரையும் பாதிக்கும்.வாழ்க்கையின் பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது. சமூக வாழ்க்கை குறைந்து விட்டது. வேலை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. வருமானம் குறைந்துள்ளது.செலவை குறைக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்.இதை அல்லாஹ்வின் சோதனையாக பார்க்க வேண்டும். நம் ஒவ்வொரு அசைவையும் அல்லாஹ் பார்க்கிறான்.நாம் பிரார்த்தனைகளில் கவனம் செலுத்த வேண்டும்.அல்லாஹ் விரும்பாத வழிகளில் செல்லாதீர்கள்.குர்ஆன் கூறுகிறது." நிச்சயமாக கஷ்டத்தின் உடன் ஒரு இன்பம் வரும்" நம்பிக்கையாளர்கள் எப்போதும் அல்லாஹ்வின் கருணையை நம்ப வேண்டும்.

நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கை ஒரு பெரிய செய்தியைத் தருகிறது.பல்வேறு வகையான சோதனைகளை, சிரமங்களை எதிர் கொண்டல்லவா அவர்கள் வாழ்ந்தார்கள். சமுதாயத்தில் நடந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுத்த போது கொடூரமாக தாக்கப்பட்டார்கள். மட்டுமல்ல தீயில் எறியப்பட்டார்கள்.எதுவும் அவர்களது நம்பிக்கையின் வலிமையை பாதிக்கவில்லை.

அல்லாஹ்வின் அருட் கொடை ஒவ்வொன்றையும் அதன் உண்மையான பொருளில் நிறைவேற்ற முன் வந்தார்கள்.தன் மகனை தியாகம் செய்யச் சொன்ன போது அதற்கும் சம்மதித்தார்கள். அந்த உயர்ந்த அர்ப்பணிப்பின் மகிமையை மதிப்பதன் மூலம் உலகம் முழுவதும் நினைவு கூறப்பட்டு, மதிக்கப்படும் ஒரு தீர்க்கதரிசியாக அல்லாஹ் மாற்றினான்.ஹஜ்ஜின் ஒவ்வொரு செயலிலும் உலக இறுதி வரை அவர்களது வாழ்க்கையை நினைவு கூறவேண்டும்.நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் மகத்துவம் மற்றும் சிறப்புகள் பற்றி குர்ஆன் நிறையவே கூறியுள்ளது.


தியாகத்திருநாளில் வெளிப்படையான கொண்டாட்டங்கள் குறைவாக இருந்தாலும் விசுவாசிகள் பக்தியை குறைக்காமல் இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும். தக்பீர் முழக்கங்களால் நம் உதடுகளை நிரப்ப வேண்டும். பெருநாள் தினத்தின் புண்ணிய செயல்களிலொன்று குளித்தல்."பெருநாள் தினத்தின் சுன்னத்தான குளிப்பை நான் குளிக்கிறேன்" என்று நிய்யத் செய்ய வேண்டும்.சுப்ஹுக்கு பிறகு குளிப்பதும், புதிய மற்றும் அழகிய ஆடைகள் அணிவதும் சுன்னத்தான செயல்களாகும்.பெருநாள் தொழுகைக்கு பின் உணவு சாப்பிடுவதுதான் தியாகத்திருநாளில் உத்தமம்.

அத்துடன் நம்மை சுற்றி இருப்பவர்களின் கஷ்டத்தையும் பார்க்க வேண்டும். அனைவரும் பல வருடங்களாக செழிப்புடன் ஈத் கொண்டாடினர்.தற்போதைய நிலையில் எல்லோருக்கும் அது சாத்தியமாகாது. நான்கு மாதங்களாக வேலை வாய்ப்புகள் முடங்கிப்போயுள்ளன.நம்மை சுற்றி வாழும் ஏழை, எளிய, அனாதை, விதவை மக்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவிகள் புரிய வேண்டும்.குறிப்பாக மதரசா முஅல்லிம்கள்!

நம் குழந்தைகளுக்கு தீன் கல்வி சொல்லி கொடுப்பவர்கள் அவர்கள்.அவர்கள் பணிபுரியும் இடங்களின் நிர்வாகமும், மஹல்லா வாசிகளும் மதரசா முஅல்லிம்களின் குடும்பங்கள் மகிழ்ச்சியாக தியாகத்திருநாள் கொண்டாடினார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஈத் நாளில் ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்வதற்கு அதிகம் கவனம் செலுத்தினார்கள். நாம் அவர்களின் வாழ்க்கை வழிகாட்டுதல்களைப் புரிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும்.

வழக்கமாக பெருநாள் தினத்தில் பயணங்கள் முக்கியமானது. ஆனால் இந்த கோவிட் காலத்தின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு அவசரத் தேவைகளுக்கு மட்டுமே பயணங்கள் வரையறுக்கப்பட வேண்டும்.சமூக இடைவெளி இலேசாக வேண்டும் என்றால் வீட்டில் கவனமாக செலவழிப்பது நல்லது.

குவாரண்டைனில் ஓய்வெடுப்பவர்கள் மீது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். பெருநாள் கொண்டாட்டத்தின் போது தனிமைப் படுத்தும் சோகம் அவர்களை பாதித்து விடக்கூடாது.

நவீன தொழில் நுட்ப வசதிகளை பயன்படுத்தியும், சமூக இடைவெளி கடைப்பிடித்தும் அவர்களையும் பெருநாளின் மகிழ்ச்சிக்குள் கொண்டு வர வேண்டும்.

சுகாதார பணியாளர்கள், காவலர்கள் போன்றோருக்கு தேவையான உணவு மற்றும் பல்வேறு வசதிகளையும் வழங்க கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் நம் உயிரை காப்பாற்ற கடினமாக உழைக்கின்றனர்.ஈத் பெருநாளின் சந்தோஷத்தை அனைவருக்கும் பரிமாறி கொள்ள வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கின் வலிகள் இன்னும் மாறவில்லை.இம்முறை இது போன்ற துயரங்கள் வராமலிருக்க பெருநாள் தினத்தில் அனைவரும் துஆ செய்ய வேண்டும்.அடுத்த வருடம் நம் அனைவருக்கும் அழகிய முறையில் ஹஜ் செய்யும் பாக்கியம் கிடைப்பதற்கும் துஆ செய்ய வேண்டும்.பிரார்த்தனைக்கு பதில் கிடைக்கும் வாய்ப்புகள் நிறைந்த நன்னாள் இந்நாள்.

அனைவருக்கும் ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

தமிழாக்கம்.M.
சிராஜுத்தீன் அஹ்ஸனி...

இயக்குனர்.
மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ்..

திருவிதாங்கோடு.