மீலாத் விழாவும் சிலரின் சந்தேகங்களும்
#மீலாது_விழாவும்
#சிலரின்_சந்தேகங்களும்
வஹாபிகள் ஒரு நகைச்சுவையான கேள்வி கேட்கிறார்கள்.நாயகம் (ﷺ) அவர்கள் எந்த நாளில் பிறந்தார்கள் என்று கூறுகின்றீர்களோ அதே நாளில் தான் நபி(ﷺ) அவர்கள் மரணித்தும் உள்ளார்கள். இவ்வாறிருக்க அவர்களின் பெயரில் கொண்டாடும் மீலாது விழாக்கள் நபி (ﷺ) அவர்களின் பிறப்பிற்காகவா? அல்லது இறப்பிற்காகவா?
மார்க்கச் சட்டங்களைப் பற்றிய இவர்களின் அறியாமைதான் இவர்களை இதுப்போன்ற கேள்விகளை கேட்கச் செய்கிறது.பிறந்ததற்காக மகிழ்ச்சியை வெளிப்படுத்த சொல்லும் இஸ்லாம் இறந்ததற்காக துக்கம் கொண்டாட சொல்லவில்லை. பிறந்ததின் பேரிலுள்ள நன்றியின் வெளிப்பாடாக ஏழாம் தினத்தன்று அக்கீகா அறுத்து பிறருக்கு வழங்க சொல்லும் இஸ்லாம் இறந்ததின் பெயரில் கறுப்புக் கொடி நாட்டவோ, கறுப்பு நிற துணி அணியவோ சொல்லவில்லை.
7_ம் நாள், 40_ம் நாள் மற்றும் வருட ஃபாத்திஹாக்கள்.
இறந்த 40_நாள், 7_ம் நாளன்று ஃபாத்திஹா ஓதி ஸதக்கா செய்வது துக்கம் கொண்டாடுவது அல்ல. மாறாக அந்நிகழ்வுகள் அனைத்தும் மய்யித்தின் பெயரில் ஸதகா செய்வதாகும். அது மார்க்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.
நாயகம் (ﷺ) அவர்கள் பிறந்ததின் பெயரில் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக செய்யும் நற்காரியங்கள் அனைத்தும் எவ்வளவு பெரிய கூலியைப் பெற்றுத் தருகின்றன. என்பதை புகாரியின் ஹதீஸ் மூலம் புரிந்து கொள்ளலாம்.
அபூலஹபிற்கு கிடைத்த பானம்.
ஸுவைபத்துல் அஸ்லமிய்யா என்பவர் அபூலஹபின் அடிமைபெண். நபிகள் நாயகம் (ﷺ) அவர்கள் பிறந்த செய்தியை அபூலஹபிடம் சொன்னதால் அவன் தன் அடிமையைவிடுதலை செய்தான்.அபூலஹபின் இறப்பிற்கு பின் அவனுடைய உறவினர் ஒருவர்
(அப்பாஸ் ரலி) அவனை கனவில் கண்டார். உனது நிலை என்ன? எனக் கேட்க அவன் சொன்னான். ஸுவைபாவை விடுதலை செய்த காரணத்தால் எனக்கு குடிக்கக் கிட்டும் தண்ணீரை தவிர வேறொன்றும் எனக்கு கிடைக்கவில்லை.(புகாரி 2/764)
காஃபிர்களுடைய செயல்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்ற பொதுச்சட்டத்திலிருந்து நாயகம் (ﷺ) அவர்களின் பறக்கத்தின் பெயரில் இந்த சம்பவத்திற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று இமாம்கள் விளக்கம் சொல்லியுள்ளார்கள்..
தவறாக அர்த்தம் கொள்ளும் #வஹாபிகள்.
வஹாபிகள் மேலும் கூறுகிறார்கள். பிற சமயக்கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் அந்த சமயத்தையே சார்ந்தவன் என நபி (ﷺ) அவர்கள் கூறியுள்ளார்கள்
(நூல்_அபூதாவூத்)
#கிறிஸ்தவர்கள் பிறந்த நாளை விழாவாக நடத்துவது போன்று நாமும் கருதினால் இவ்விஷயத்தில் நாமும் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்துள்ளோம் என்றே இந்த நபிமொழி கூறுகிறது. இது வஹாபிகளின் வாதம்.
ஆனால் நபி மொழி அப்படி கூறவில்லை. மார்க்கத்தில் ஏவப்படாத அல்லது தடுக்கப்பட்ட விஷயங்களில் பிற மதங்களைப் பின்பற்றுவதைத் தான் நபி மொழி சாடுகிறது. மேற்சொன்ன விளக்கங்களிலிருந்து மீலாது நிகழ்ச்சிகள் மார்க்கம் அங்கீகரித்ததும், ஏவியதும் என்பதை புரிந்து கொள்ள முடியும். மார்க்கம் போதிக்கும் காரியம் மாற்றுமதத்தோடு ஒற்றுமையுள்ள காரணத்தால் விட வேண்டும் என்பது இப்லீஸ் போதிக்கும் பாடமாகும். நாம் கூறும் "அல்ஹம்துலில்லாஹ்" அவர்கள் கூறும் " கர்த்தருக்கு ஸ்தோத்திரம்" என்பதுடன் ஒற்றுமையாகிறது என்பதற்காக நமக்கு அல்லாஹ்வை புகழாமல் இருக்க முடியுமா?
மவ்லிதில் நபிகளாரை #அழைத்து_உதவி தேடலாமா?
மாலிகுத் தார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உமர் (ரலி) அவர்கள் காலத்தில் மக்களுக்கு கடுமையான வறட்சி ஏற்பட்டது. அப்போது ஒரு மனிதர் நபி (ﷺ) அவர்களின் கப்ரின் அருகில் வந்து யா ரசூலுல்லாஹ்! உங்கள் உம்மத்துக்காக மழையை கேளுங்கள், அவர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள் என்றார். நபி (ﷺ) அவர்கள் அந்த மனிதரின் கனவில் தோன்றினார்கள். அவரிடம் சொன்னார்கள். உமர் (ரலி) அவர்களுக்கு என் ஸலாமை சொல்லுங்கள், அவர்களுக்கு மழை கிடைக்குமென்றும் சொல்லுங்கள் என்றார்கள். அந்த மனிதரும் அவ்வாறே அறிவித்தார்.
(இப்னு அபீ ஷைபா,அல்பிதாயத்து வந்நிஹாயா)
இதன் அறிவிப்பு தொடர் பலமானது என்று ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) சொல்கிறார்கள்.இன்னும் ஏராளமான கிரந்தங்களில் இந்த அறிவிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வுலகை விட்டும் பிரிந்து சென்ற நாயகத்திடம் வந்து உதவி தேடியதை நாவில் இறைவன் பேசும் உமர் (ரலி) அவர்கள் அங்கீகரிக்கிறார்கள். அவ்வாறெனில் உமர் (ரலி) அவர்கள் ஷிர்க் செய்தார்கள் என்று சொல்ல புதுமை வாதிகள் தயாரா? உதவி தேடுவது ஆகுமென்றால் பாதுகாப்பு தேடுவதும் ஆகுமாகும். இவை இரண்டுக்குமிடையில் பெரிய வித்தியாசமொன்றுமில்லை. கப்ரின் அருகில் சென்றதால் கேட்டார்கள், பள்ளிகளிலிருந்து அழைத்தால் எப்படி செவிமடுப்பார்கள் என்பது ஒரு
அப்பாவித்தனமான கேள்வி.
நாம் ஒவ்வொரு நாளும் குறைந்தது பத்து தடவையாவது தொழுகையில் அத்தஹியாத்தில் ஓ நபியே! உங்கள் மீது அல்லாஹ்வின் ஸலாம் உண்டாவதாக என்று கூறுகிறோம்.தூரத்திலுள்ள நாயகம் (ﷺ) அவர்கள் கேட்காதவர்களாக இருந்தால் நபிகளாரை அழைத்து பேசச் சொன்ன இறைவனின் கட்டளை அர்த்தமற்றதாக அமையும். அந்த மாதிரியான அபாயகரமான சிந்தனைகளை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
#மறைவான_ஞானம் உண்டா.?
நபிகள் (ﷺ) அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டா? என்பதை குர்ஆனிலிருந்து ஆராய்வோம். அவன் பொருந்திக் கொண்ட ரஸூலைத் தவிர யாருக்கும் தன் மறைவான ஞானத்தை வெளிப்படுத்தமாட்டான்.(அல் குர்ஆன்)
இங்கே நாயகத்துக்கு மறைவான ஞானம் உண்டு என்பதை குர்ஆனே தெளிவுப்படுத்துகிறது. இந்த குர்ஆனை நம்பிக்கை கொண்டவர்கள்தான் நாயகம் (ﷺ) அவர்களும், ஸஹாபாக்களும், ஏனைய முஸ்லிம்கள் அனைவரும்.
நபிகள் நாயகம் (ﷺ) அவர்களுக்கு மறைவான ஞானம் உண்டு என்று நம்புவது ஷிர்க்காக இருந்தால் நாயகம் (ﷺ), ஸஹாக்கள் உட்பட அனைத்து வஹாபிச இயக்கங்கள் தவிரவுள்ள எல்லா முஸ்லிம்களும் முஷ்ரிக்குகளாக வேண்டும். இதைவிடவும் மாபெரிய பாவம் இனியொரு முஸ்லிமாலும் செய்ய முடியாது என்றே நம்புகிறோம்.
சில #அறிவில்லாத வஹாபிகள் கூறுகிறார்கள்.
"மிகவும் பெரிய கொடுமை என்னவெனில் அல்லாஹ்வை மட்டுமே அழைக்கப்பட வேண்டிய பள்ளி வாயிலிலே அவனுக்கு இணை வைக்கும் கவிதைகளை மிகவும் பக்தி பரவசத்துடன் பாடப்படுவதுதான்"
என்று வஹாபிகள் கூறுகிறார்கள்.
இவர்கள் இணை வைக்கும் இக்கவிதைகள் என்று குறிப்பிடுவது எதை என்பதை நமக்கு நன்றாக தெரியும். அவர்கள் ஷிர்க் என்று கூறிய அந்த மெளலிதுகள் அனைத்தும் குர்ஆன், ஹதீஸ் வலியுறுத்தியதுதான் என்பதற்கு நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் இமாம்களின் கிதாபுகளில் பார்க்க முடியும்.
வஹாபிகள் மேலும் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தண்டனைக்கு பயப்படக்கூடிய மக்களாக இருந்தால் தவ்பாச் செய்து உடனே இச்செயலை விட்டும் விலக வேண்டும் என்று கூறுகிறார்கள்.ஆனால் இவர்கள் அல்லாஹ்வின் ரஸூலையும், அவர்களின் தோழர்களையும், உலக முஸ்லிம்களையும் முஷ்ரிக்குகளாக்கியதை விட மாபாதகம் வேறொன்றுமில்லை.தவ்பாச் செய்ய வேண்டடியது அனைத்து வஹாபிச இயக்கங்கள் தான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
#சொற்பொழிவுகள்.
நாயகம் (ﷺ) அவர்களின் சிறப்புகளை, பெருமைகளை எடுத்து சொல்லப்படும் சொற்பொழிவுகளை நிறுத்த சொல்கிறார்கள் இந்த மார்க்கப் பற்று மிகுந்தவர்கள்.
புகழ்ச்சிகளை உள்ளடக்கிய சொற்பொழிவுக்கான ஆதாரமாக ஹஸ்ஸான் (ரலி) அவர்களுக்கு நபி(ﷺ) அவர்கள் மேடை அமைத்துக் கொடுத்ததை பார்க்க முடியும்.
மேலும் இறைவன் கூறுகிறான்.
"உங்கள் றப்புடைய அருட்கொடைகளை எடுத்து சொல்லுங்கள்" அல்லாஹ்வுடைய அருட்கொடையை எடுத்து பேசச் சொல்லும் அல்லாஹ், மற்றொரு இடத்தில் சொல்கிறான். " அனைத்து உலகிற்கும் உங்களை அருளாகவே அல்லாமல் நாம் அனுப்பவில்லை"
இந்த இரண்டு வசனங்களிலிருந்து
நபி(ﷺ) அவர்களை பற்றி பிற மக்களிடம் எடுத்து பேச வேண்டும் என்று இறைவன் ஏவுவதை விளங்க முடியும்.
மீலாது விழாவை தடுப்பவர்கள் இறைவனின் ஏவலை புறக்கணிக்கிறார்கள். அதை செயலாற்றுபவர்களை தடுக்கிறார்கள்.
#இனிப்பு_வழங்குவதும் உணவு பங்கிடுவதும்
அப்துல்லாஹிப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஒரு மனிதன் நாயகம் (ﷺ) அவர்களிடம் இஸ்லாத்தின் செயல்களில் சிறந்தது எது எனக் கேட்டார். அதற்கு கண்மணி நாயகம் (ﷺ) அவர்கள் உணவளிப்பது என பதில் கூறினார்கள்.
*(புகாரி)*
நாயகம் (ﷺ) அவர்களுக்கு இனிப்பு மிகவும் பிரியமானதாக இருந்தது. என்பது முஸ்லிம்களிடையே பிரபலமான விஷயம் மேற்கண்ட ஹதீஸிலிருந்து உணவு வழங்குதல் சிறந்த அமல் என்று வரும் போது, அது எந்த நேரத்தில் வழங்கினாலும் நன்மை கிடைக்கும் செயல்தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.நாயகம் (ﷺ) அவர்கள் கதீஜா அம்மையார் அவர்களை அதிகமாகப் புகழ்வார்கள்.சில நேரங்களில் ஆட்டை அறுத்து அதைப் பல பங்குகளாக ஆக்கி கதீஜா அம்மையாரின் தோழிகளுக்கு அதை கொடுத்து அனுப்புவார்கள்.
(புகாரி 559, முஸ்லிம் 2/284)
நாம் பள்ளிகளில் வழங்குகின்ற சோற்றையும், கறியையும் சாப்பிட மாட்டோம் என்று இறுமாப்பு கொள்கிறவர்கள் நாயகத்தின் உம்மத்தா? அல்லது இப்லீஸின் உம்மத்தா? என்பதை சிந்தனை செய்யவும்.
அதற்கு நாம் நேர்ச்சை என்று பெயர் சொல்வதால் அது அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செய்யப்பட்ட நேர்ச்சையாக ஆகாது காரணம் பிராணிகளை அறுக்கும் மோதீனார் பிஸ்மில்லாஹ் சொல்லித் தான் அறுக்கிறார்.
நபிகள் நாயகம் (ﷺ) அவர்களின் பெயரையோ, அல்லது மற்றவரின் பெயரையோ மோதீனார் சொல்லவில்லை.அதனால் அது அல்லாஹ்வுக்காக அறுக்கப்பட்டதுதான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
#புகழ்ப்பாட_நாள்_குறிப்பிடுவது_ஏன்?
இதுவரை கூறப்பட்ட ஆதாரங்களிலிருந்து நபியைப் புகழலாம் என்றும், உணவு வழங்கலாம், எனவும் நாயகம் (ﷺ) அவர்களின் சிறப்புகளை எடுத்து பேசலாம், என்றும் தான் கிடைக்கிறதே தவிர குறிப்பிட்ட நேரத்தில் தான் செய்ய வேண்டுமென்று கிடைக்கவில்லையே? என்று கேட்கலாம். குறிப்பிட்ட நேரத்தில் தான் செய்ய வேண்டுமென்று நாமும் அடம்பிடிக்கவில்லை. வருடத்தின் அனைத்து நாட்களிலும் செய்ய வேண்டிய நல்ல விஷயங்கள் தான் இவைகள்.ஆனால் நம்முடைய வாழ்க்கை அமைப்புகள், எல்லா தினங்களிலும் பள்ளியில் கூடியிருந்து இந்த செயல்களை செய்வதைவிட்டும் தடுக்கிறது.
வருடத்தின் அனைத்து நாட்களிலும் செய்வதை விட்டும் சூழ்நிலைகள் நம்மைத் தடுத்த போது நாம் இந்த மாதத்தின் (ரபீஉல் அவ்வல்) 12 தினங்களில் சுருக்கி கொண்டோம்.
12_ மாதங்களில் நின்றும் இந்த மாதத்தை தேர்ந்தெடுப்பதற்கு ஏராளமான ஆதாரங்களை காட்ட முடியும். நாயகம் (ﷺ) அவர்கள் இந்த பூமியில் வந்துதித்த அந்த மாபெரும் இறையருட் கொடையின் மகிழ்ச்சி வெளிப்பாடாகத் தான் இந்த செயல்கள் மூலம் நாம் நாடுகிறோம். ஆதலால் அவர்கள் அவதரித்த அந்த மாதம் தான் பொருத்தமானது.
அல் குர்ஆன் கூறுகிறது: ரமலான் மாதம் குர்ஆன் இறக்கப்பட்ட மாதமாகும்.அதனால் அந்த மாதத்தை அடைந்தவர்கள் அந்த மாதத்தில் நோன்பு நோற்கட்டும்.குர்ஆன் இறங்கிய நன்றியின் வெளிப்பாடான நோன்பை, அது இறங்கிய அந்த மாதத்திலேயே இறைவன் நோற்கச் சொல்கிறான்.
நபி (ﷺ) அவர்கள் மதீனாவுக்கு சென்ற போது அங்குள்ள யூதர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள்.காரணம் வினவிய போது அந்த நாளில் தான் இறைவன் மூஸா நபி (அலை) அவர்களை காப்பாற்றினான் என்றார்கள். நாங்கள் தான் அதற்கு மிகுவும் தகுதியானவர்கள் என்று சொல்லி முஹர்ரம் பத்து அன்று நாயகம் (ﷺ) அவர்கள் நோன்பு நோற்றார்கள்.
#மூஸா நபி (அலை) அவர்களை இறைவன் காப்பாற்றியதற்குரிய நன்றியை அந்த நாளிலே நாயகம் (ﷺ) அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இதன் மூலம் நன்மைகள் நிகழ்ந்ததற்குரிய நன்றி வெளியீட்டை அந்த சம்பவம் நடந்த நாளிலே நிகழ்த்துவது தான் தலைசிறந்தது.
#முஹர்ரம் பத்து அன்று நோன்பு பிடித்த நாயகம் (ﷺ) அவர்கள் ரபீஉல் அவ்வல் மாதத்தின் பன்னிரண்டாம் நாள் நாம் நடத்துவது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தவில்லையே என்று மீண்டும் கேட்காதீர்கள். அவர்களும், தோழர்களும் வாழ்க்கையின் எல்லா நாட்களிலும் நடத்தியிருக்கிறார்கள். நம் வாழ்க்கை அமைப்புகள் அதை தடுக்கின்ற காரணத்தால் மேற்கொண்ட ஆதாரங்களின் அடிப்படையில் இந்த தினங்களை தேர்ந்தெடுத்து கொண்டோம்.நாள் குறிக்கலாமா என்று கேட்கிறவர்கள் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் மாதம் ஆறாம் தேதி மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான ஆதாரத்தை குர்ஆன், ஹதீஸிலிருந்து காட்ட முடியுமா?
#விழா_கொண்டாடலாமா?
மேற்சொன்ன ஆதாரங்களிலிருந்து ரபீஉல் அவ்வலில் நாம் நடத்தும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மார்க்கம் ஏவியவை என்பதை நாம் விளங்கினோம். இனி இந்த செயல்களை விழா என்ற பெயரில் நடத்தலாமா என்று கேட்டால் முஸ்லிம் அணியிலிருந்து கொஞ்சம் நபர்களை பிரித்து அவர்களுக்கு பல்வேறு விதமான தவ்ஹீத் பெயர்கள் வைக்கலாம் என்பதற்கான ஆதாரத்தை குர்ஆன், ஹதீஸிலிருந்து காட்டும் போது இதற்கான ஆதாரத்தையும் காட்டுவோம்..
சுன்னத் ஜமாஅத்தினர் செய்த தவறு.
இங்கே சுன்னத் ஜமாஅத்தினர்
ஒரேயொரு தவறைச் செய்தார்கள். என்பதை ஒத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது.
நாயகம் (ﷺ) அவர்கள் தன்னே புகழ்ந்து எல்லா தினங்களிலும் பாடுவதற்கு மேடை அமைத்து கொடுக்கும் போது நாம் நம் மவ்லிதுகளை ரபீஉல் அவ்வலில் மட்டும் சுருக்கி கொண்டது தவறு தானே?
குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுபவர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்தும் வஹாபிகள் இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டும். எல்லா தினங்களிலும் நாயகத்தை புகழ்ந்து பாடுவதற்கான, பேசுவதற்கான வாய்ப்புக்களை அவர்கள் உருவாக்க வேண்டும். அப்போது தான் முழுமையாக சுன்னத்தை பின்பற்றுபவர்களாக மாற முடியும்.? பணமும், ஆட்பலமும் உள்ள வஹ்ஹாபிகள் நினைத்தால் அது நடக்கும். அவர்கள் இந்த நல்ல விஷயத்தை செய்ய முன் வருவார்களா? என்று பொருத்திருந்துப்
பார்ப்போம்.
2010_ ஆண்டு
பிப்ரவரி மாதம் #சத்திய_பிரகடனம்
மாத இதழில்
வெளியான கட்டுரை.
தகவல்: M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி......