ஆண் பெண் வியப்பூட்டும் வித்தியாசங்கள்

ஆண் பெண் வியப்பூட்டும் வித்தியாசங்கள்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

ஆண்_பெண்_வியப்பூட்டும்
வித்தியாசங்கள்.

உலகில் எண்ணற்ற படைப்பினங்கள் உள்ளன.வாழ்ந்துக் கொண்டிருக்கும் உயிரினங்கள் சுமார் பதினேழு லட்சத்து எண்பத்து ஐயாயிரத்து அறுநூரு ( 17,85600) வருமென ஆய்வாளர்கள் அபிப்ராயப்படுகின்றனர்*

*மேலும் பறவைகளை 166 குடும்பங்களில் 8600 இனங்களாகப் பிரித்துள்ளனர் பறவை ஆராய்ச்சியாளர்கள்.*

*மீன்களில் இன்று வரை கண்டுபிடிக்கப்பட்ட இனங்கள் நாற்பதாயிரத்தைத் தாண்டும்.இவற்றில் ஒவ்வொரு இனத்தின் எண்ணிக்கையையும் கணக்கிடுதல் இயலாத காரியம். 10 கோடி டன்னைவிட அதிகமான மீன்கள் மனிதன் உணவாகப் பயன்படுத்துகிறான்.இதில் 90 சதவீதம் கடலிலிருந்தும் பத்து சதவீதம் சுத்தமான தேங்கும் இடங்களிலிருந்தும் கிடைப்பதாகும்.*

*எதற்காக இத்தனை உயிரினங்கள்? ஒவ்வொரு உயிரினத்திலும் வெவ்வேறான இனங்கள்? ஆண்_பெண் பாகுபாடுகள்?*

*ஒவ்வொரு படைப்புக்கும் ஒவ்வொரு லட்சியத்தை, காரணத்தை அவற்றைப் படைத்த ஏக இறைவன் வைத்துள்ளான்.இயற்கையின் சரி நிகர் சம நிலையை ஏற்றத்தாழ்வின்றி நிலை நிறுத்த இவை அனைத்தும் தேவைப்படுகின்றன.*

*உலகை உட்கண்களால் பயின்ற ஆன்மீக அறிஞர்களும்,ஆய்வுக் கண்களால் படித்த அறிவியல் அறிஞர்களும் இவ்வுண்மையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.*

*அறிவியலாளர்கள் பிரபஞ்சத்தின் உயிரினங்களை மூன்றாக பிரித்துள்ளனர். உற்பத்தியாளர்கள்,பயனாளர்கள், பாக்டீரியாக்கள்.*

*இறைவன் மனித குலத்துக்கு அருளாகத் தந்த பலதரப்பட்ட தாவரங்கள்தான் உற்பத்தியாளர்கள்.இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தாவர இனங்கள் இருபத்து ஆறு லட்சத்தை விட அதிகம்.சுற்றுப் புறத்திலுள்ள கார்பன்டை ஆக்ஸைடையும், தண்ணீரையும், சூரிய ஒளியையும் சேகரித்து இவை உணவை உண்டாக்கிறது.*

*இந்த உணவை சுகமாக உபயோகிப்பவர்கள் பயனாளர்கள்.இவர்கள் வெளியே தள்ளும் கழிவுப்பொருட்களையும் பிணங்களையும் மண்ணோடு மண்ணாக சேர்ப்பவை பாக்டீரியாக்கள்.*

*இயற்கை அமைத்துள்ள உணவுத் தொடர்பு மிக விசித்திரமானது.தாவர உண்ணிகளுடையவும், மாமிச உண்ணிகளுடையவும், எண்ணிக்கையை ஒரு பிரத்யேக அமைப்பில் தொடர்பு படுத்தியுள்ள இயற்கையின் அமைப்பு விதி மீறப்படும் போது பிரச்சனைகள் உருவாகின்றன.இழப்புகள் ஏற்படுகின்றன.*

*ஒரு நிகழ்வைப் பாருங்கள்: அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திலுள்ள கைபாப் என்ற இடத்தில் மான்களும், செம்மறி ஆடுகளும், கொடூர மிருகங்களும் வாழ்ந்து வந்தன.1906 _ல் அரசாங்கம் இப்பிரதேசத்தை மான் பாதுகாப்பு பகுதியாக அறிவிப்பு செய்ததோடு கொடூர மிருகங்களை சுட்டுக் கொன்று அவற்றை முற்றாக அழித்தது இதனால் 1906 _ல் வெறும் நான்காயிரமாக இருந்த மான்கள் 1923 _ல் லட்சத்தை தாண்டியது.இதனால் ஏற்பட்ட விளைவு?*

*லட்சம் மான்களுக்குத் தேவையான உணவு கிடைக்காமல் பட்டினி மூலம் மான்கள் இறந்தன. அல்லாஹ் ஏற்படுத்திய விதியை மீற முயன்றதால்ஏற்பட்ட விளைவு இது.*

*சுருக்கமாக மனிதனுக்கு அறிந்தும், அறியாததுமான பல லட்சியங்கள் உண்டு.ஒரு விதத்தில் இல்லாவிட்டாலும் மற்றொரு விதத்தில் இணைகளை இறைவன் படைத்ததுள்ளான்.அல்லாஹ் குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்.*

*நிச்சயமாக அவன்தான் உங்களை ஆண்_பெண் என்று இரண்டு இணைகளை சிருஷ்டிக்கின்றான் (53_45)*

*ஒவ்வொரு பொருளையும் (ஆண்_பெண் கொண்ட) இணை இணையாகவே நாம் சிருஷ்டித்திருக்கின்றோம்.(இதனைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெறுவீர்களாக! (51_49)*

*பூமி முளைப்பிக்கும் (புற்பூண்டுகளையும்) யாவற்றையும் இவர்களையும் இணை இணையாகவே படைத்து, இவர்கள் (இதுவரையில்) அறியாத (மற்ற) வைகளையும் படைத்தவன் மிக தூய்மையானவன்.(36_35)*

*அனைத்து பொருட்களும், அவற்றின் இணைகளும் பிரபஞ்சத்தின் முக்கிய இனமான மனிதனுக்கு வேண்டியே படைக்கப்பட்டுள்ளது.*

*அவன்தான் பூமியையும் பூமியிலுள்ள யாவற்றையும் உங்களுக்குக்காக படைத்தான்.( 2_29)*

மனித இனைத்தையும் இணைகளாகவே அல்லாஹ் படைத்துள்ளான்.

*உங்களை நாம் இணைகளாக படைத்துள்ளோம்(78_8)*

*மனிதர்களை இனணகளாக படைத்தது அவர்களுக்கு செய்த அருட்கொடையாகும்.*

*உங்களிலிருந்தே உங்களுக்காக மனைவிகளை அல்லாஹ் படைத்திருக்கிறான் அன்றி உங்கள் மனைவிகளிலிருந்து சந்ததிகளையும் பேரன், பேத்திகளையும் உற்பத்தி செய்து மக்களுக்கு நல்ல ஆகாரங்களையும் புகட்டுகிறான்(16_12)*

*நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள் மனைவிகளை நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே அவன் படைத்து உங்களுக்குக்கிடையி ல் அன்பையும், பாசத்தையும் உண்டுபண்ணியிரிப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும் சிந்தித்து உணரக்கூடிய ஜனங்களுக்கு இதிலும் (ஒன்றல்ல) நிச்சயமாக பல அத்தாட்சிகளும் இருக்கின்றன (30_21)*

*ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவான கடைகளுக்கு பிறகு தனிப்பட்ட சில கடமைகளும் இருக்கிறது. அதனால்தான் ஆணையும் பெண்ணையும் வித்தியாசமாக அல்லாஹ் படைத்துள்ளான். ஒரே கடமைகள்தான் செய்ய வேண்டுமெனில் இரண்டு விதமாக படைக்க வேண்டியதில்லை.வித்தியாசமான கடமைகள் நிறைவேற்ற வேண்டிய காரணத்தால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏராளமான வித்தியாசங்களை காணமுடிகிறது.உடல்ரீதியாக பெண்கள் பலவீனமானவர்களாகும்.*

*ஒரு ஆணின் சராசரி உயரம் 69 இஞ்ச் என்றால் பெண்ணின் உயரம் 64 இஞ்சாகும்.ஆணின் சராசரி எடை 154 பவுண்ட் என்றால் பெண்ணின் எடை 128 பவுண்டாகும்.மூளையின் சராசரி எடை ஆணிற்கு 1375 கிராமென்றால் பெண்ணிற்கு 1260 கிராமாகும்.ஈரல், கிட்னி முதலியன முறைப்படி ஆணுக்கு 1600 கிராமும் 160 கிராமுமென்றால் பெண்ணிற்கு முறைப்படி 1500 கிராமும் 140 கிராமுமாகும் அதாவது பெண்ணிற்கு ஆணைவிட உயரத்தில் 5 இஞ்சும் தூக்கத்தில் 26 பவுண்டும், மூளையில் 115 கிராமும்,இதயத்தில் 50 கிராமும் ஈரலில் 100 கிராமும் கிட்னியில் 20 கிராமும் குறைவாக உள்ளதை நாம் பார்க்க முடிகிறது.*

*ஒரு ஆணின் இதயம் ஒரு நிமிடத்தில் 7.8 லிட்டர் ரத்தம் பம்பு செய்யும் போது பெண்ணின் இதயம் 5.5 லிட்டர் இரத்தத்தை மட்டும் தான் பம்பு செய்கிறது.*

*(மெடிக்கல் ஃபிஸியோளஜி:நேஷ்ணல் ரிசர்ச் கவுன்சில் 1969)*

*தலைமுடியில் கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன.அதனால்தான் முடியை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கின்றனர்.ஆந்திராவில் தல்லம்பாடு என்ற ஊரில் வசித்த 20 வயது வாலிபர் ராமு தன்னுடைய சகோதரன் 14 வயதான வெங்கியை அவனை பெற்றோர்கள் அதிகமாக நேசிக்கிறார்கள் என்ற காரணத்தால் கொலை செய்தான்.வெங்கி குளிப்பதற்காக சென்ற போது ராமு கல்லால் அவன் தலையில் அடித்துக் கொலை செய்து ஒரு பாறைக்கு அடியில் போட்டு விட்டான் வெங்கியின் இடது கைகளின் விரலுகளுக்கிடையில் இரண்டு முடிகள் சிக்கின.அந்த முடி ராமுவின் முடி என்று தெளிவானது.அடிபட்ட வேளையில் வெங்கி ராமுவை கடந்து சென்று பிடித்த போது அந்த முடி அவனது கைகளில் சிக்கியது.*

*முடியின் அறிவியல் சோதனை பல இரகசிய முடிச்சுகளை அவிழ்க்க உதவும்.அந்த முடி மனிதனுடையதா? மிருகத்தினுடையதா?ஆணின் முடியா? பெண்ணுக்குரியதா? உடலின் எந்தப் பகுதியிலுள்ள முடி என்பதையெல்லாம் சோதனை வாயிலாகக் கண்டறிய முடியும். அந்த முடிக்குரிய ஆணின் வயதைக் கூட கண்டறிய முடியும். (டாக்டர். முரளி கிருஷ்ணன் எழுதிய கட்டுரை பாலரமா 1981)*

*பற்களின் அமைப்பில் ஆண்,பெண் வித்தியாசமுள்ளது.ஒவ்வொருடைய பற்களின் அமைப்பிலும் வித்தியாசமான தன்மைகள் உள்ளன.என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.பற்களின் அடையாளத்தை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் ஒரு அறிவியல் கலையை Foransic Odortology கண்டுப்பிடித்துள்ளனர்.*

*குறிப்பிட்ட photographic மார்க்கங்கள் பயன்படுத்தி திருடனின் பல்லடையாளத்தின் நீளமும், அகலமும் முதலில் கண்டு பிடித்த பிறகு சந்தேகிக்கப்படும் நபரை எங்கேயாவது கடிக்க சொல்லி இந்த கடி அடையாளத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து குற்றங்களை கண்டு பிடிக்கின்றனர்.*

*மேலும் திருடனின் கடி அடையாளங்களை கூர்மையாக ஆய்வு செய்த பிறகு காயத்தில் பதிந்திருக்கும் திராவகங்களை (கொரமோஸம்) ஆய்வுக்குட்படுத்தி திருடன் ஆணா அல்லது பெண்ணா என்பதையும் கண்டறிய முடியும்.*
(அறிவியல் மாத இதழ் செப்டம்பர் _ 1985.)*

*ஆண், பெண் ஜீனுகளில் கூட வித்தியாசங்கள் உண்டு. ஆண் விந்தணு பெண் விந்தணுவை விட வேகமாக ஓடுகிறது.ஆண் விந்தணுவின் முனைப்பகுதியில் ஒளி இருக்கும். பெண் விந்தணுவில் அது இருக்காது.இதை அடிப்படையாகக் கொண்டு மஹிதோள் பல்கலைக்கழகத்தின் மெதிபோடி மருத்துவமனையில் கம்த்ரோன் ஒஸ்தானிக் என்ற மருத்துவர் கோழி முட்டையின் அண்டத்தை பயன்படுத்தி ஆண் பெண் ஜீனுகளை வேறுபடுத்தி எடுக்க முடியுமென்று சில வருடங்களுக்கு முன் சொல்லியுள்ளார்.கோழி முட்டையின் அண்டத்தை திராவக நிலையில் எடுத்து அதில் ஆண் பெண் ஜீனுகளை இட்டு XY ஜீனுகளை இரண்டு மூன்று மணி நேரம் ஓடிக்கொண்டிருக்கும் இவையை மேற்கூறிய அடிப்படையை பயன்படுத்தி வேறுப்படுத்தி ஆய்வு கூடங்களில் பாதுகாத்து கொள்ளலாம்.(சிராஜ் 17_2_1987)*

*கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை கர்ப்பிணியில் ஏற்ப்படுத்துகின்ற சலனங்களில் கூட ஆண் பெண் வித்தியாசம் இருக்கிறது.ஆண் குழந்தை என்றால் கர்ப்பிணியின் இடது கையில் நாடி துடிப்பு அதிகமாகவும், வலது கையின் நாடி துடிப்பு குறைவாகவும் இருக்கும். குழந்தை பெண் என்றால் கர்ப்பிணியின் இடது கை நாடி துடிப்பு குறைவாகவும் வலது கை நாடி துடிப்பு அதிகமாகவும் இருக்கும்.*

*இதை பயன்படுத்தி கர்ப்பிணியின் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தீர்மானிக்க முடியுமென மருத்துவர் P.k சிங்க கூறுகிறார். (சிராஜ் 29_01_1988)*

*ஆணுக்கும்,பெண்ணுக்கும் முடியில் கூட வேறுபாடு இருக்கிறதென்று நாம் குறிப்பிட்டோமல்லவா? ஆனால் வழுக்கை தலையிலும் இந்த வேறுபாடு இருக்கிறது.ஆண்கள் அதிகமானவர்களில் வழுக்கை காணும் போது பெண்களில் மிக குறைவாகவே காணப்படுகிறது. ஆண்கள் வழுக்கை ஏற்படுவதற்கு அதன் ஒரு காரணம் போதும். ஆனால் பெண்களுக்கு ஏற்பட இரண்டு மூலகங்கள் தேவைப்படுகின்றன.*

*கைரேகைகளிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் மத்தியில் வேறுபாடு இருக்கிறது.கைரேகையை சோதனைக்குட்படுத்தி ஏராளமான குற்றச்செயல்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.*

*முடித் துவாரங்கள் வழியாக வியர்வை வெளியேறுவது போல் கை ரேகை வழியாகவும் வியர்வை வெளியேறுகிறது.*

*கைவிரல்களால் ஏதாவது பொருளை அல்லது இடத்தை தொட்டால், பிடித்தால் நமக்கு தெரியாமலேயே அந்தப் பொருளில், அல்லது இடத்தில் நமது கைரேகை பதிந்துவிடும். இதையே Finger Print என்கின்றனர்.*

*வெறும் கண்களால் இந்த ரேகைப் பதிவைப் பார்க்க முடியாது. ரேகை பதிந்துள்ள இடத்தின் நிறத்துக்கு ஒப்பான ஒரு வகை பவுடரைத் தூவி பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பிரஷ் கொண்டு அந்த இடத்தை பிரஷ் செய்தால் ரேகைகள் தானாக தெரியும்.பின்னர் பிரத்யேக கேமராவினால் படம் பிடிப்பர்.*

*இந்த ரேகைப் பதிவை வைத்து குற்றவாளிகள் ஆணா? பெண்ணா? என்பதையும், குற்றவாளி யார் என்பதையும் கண்டறிகின்றனர்.*

*இதனாலேயே நாடுகள் பலவும் தம் குடிமக்களை தரம் பிரித்து அறிய அவர்களின் கைரேகையைச் சேகரிக்கிறார்கள்.*

*முகத்தை பார்க்கும் போதே ஆண், பெண் வித்தியாசத்தை சாதாரணமாக தெரிந்துக் கொள்ளலாம்.குரலை கொஞ்சம் கவனியுங்கள். இனிமையான குயில் ஓசை பெண் குரலென்றால் கம்பீரமான குரல் ஆண் குரலாக உள்ளது.ஆண்களால் செய்ய முடியாத தனித்துவமானதொரு கடமை பெண்களில் இருப்பதன் அடையாளம் தான் உடலுக்குள் இருக்கும் கருவறையும்,வெளியில் இருக்கும் மார்பகங்களும்.*

*உடல் தோற்றத்திலும், உடல் பாகங்களிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கின்ற உள்ளேயும், வெளியேயும் காண்கின்ற வேறுபாடுகளை போன்றே அவர்களின் அறிவிலும், மன நிலையிலும் வேறுபாடுகள் இருக்கின்றன.பெயர் பெற்ற அறிஞர்களும், எழுத்தாளர்களும்,விஞ்ஞானிகளும், அரசியல் பிரமுகர்களும்,சமூக சேவகர்களும் அனைவரும் ஆண்கள்தான் சில விஷயங்களில் ஆண்களைவிட திறமை வாய்ந்த பெண்களை பார்த்தாலும் பெண்களில் அதி திறமைசாலிகள் குறைவாகத்தான் உள்ளனர்.மட்டுமல்ல திறமையான ஒரு பெண் திறமையான ஒரு ஆணுக்கு ரொம்ப தூரத்திலிருப்பாள்.*

*நினைவாற்றலிலும் ஆணை பொருத்தமட்டில் பெண்ணை விட திறன் அதிகம் உள்ளவனாகவே இருப்பான்.எனவேதான் சாட்சி சொல்கிற போது ஒரு ஆண் இருக்கும் இடத்தில் இரண்டு பெண் வேண்டுமென்று குர்ஆன் கூறுகிறது.*

*"மேலும் நீங்கள் சாட்சியாகக் கூடிய உங்கள் ஆண்களில் (யோக்கியமான) இருவரைச் சாட்சியாக்குங்கள்.அவ்வாறு சாட்சியாக்க வேண்டிய இருவரும் ஆண் பாலாராகக் கிடைக்காவிட்டால் ஓர் ஆணுடன் நீங்கள் சாட்சியாக அங்கீகரிக்க கூடிய இரு பெண்களை சாட்சியாக்க வேண்டும்.ஏனெனில் பெண்கள் பெரும்பாலும் கொடுக்கல் வாங்கலை அறியாதவராக இருப்பதனால் அவ்விருவரில் ஒருத்தி தவறி விட்டாலும் மற்ற பெண் அவளுக்கு ஞாபகமூட்டி கொடுப்பாள்.*

*உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இருக்கின்ற இந்த வேறுபாடுகளை தாண்டி ஆணுக்கும் பெண்ணுக்கும் மனிதர்கள் என்ற நிலையில் பொதுவான கடமைகளுடன் சில தனிப்பட்ட கடமைகளையும் அவர்களை படைத்தவன் கொடுத்துள்ளான்.மன தைரியத்திலும், உடல் வலிமையிலும் பெண்கள் பலவீனமானவர்களாக இருப்பதால் சில கடமைகளில் பெண்களுக்கு படைத்தவன் அல்லாஹ் சில சலுகைகளை அளித்துள்ளான். ஆனால் செய்கின்ற நற்கூலிகளுக்கான பிரதிபலன் வழங்கப் பெறுவதில் ஆண், பெண் வித்தியாசமில்லை. இருவருக்கும் சமமான கூலியே வழங்கப்படும்.*

*மனிதனை படைத்ததின் நோக்கம் நல்ல காரியங்களின் மூலம் அல்லாஹ்வின் சோதனைகளில் வெற்றி பெற்று உயர் கூலி பெறுவதாகும்.*

*உங்களில் எவர் செயல்களில் மிக்க அழகானவர் என்பதில் உங்களை சோதிக்கும் பொருட்டே அவன் வாழ்வையும் மரணத்தையும் படைத்தான் (67_2)*

*செய்யும் காரியங்களுக்கு கிடைக்கின்ற கூலியில் ஆண் பெண் வேறுபாடு இல்லை என்பதை அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:*

*உங்களில் ஆண் பெண் இருபாலரிலும் எவர்கள் நன்மை செய்த போதிலும் நிச்சயமாக நான் அதை வீணாக்கி விடமாட்டேன் ஏனென்றால் உங்களில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருந்த போதிலும் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர்தான் ஆகவே கூலி கொடுப்பதில் ஆண் பெண் என்ற பாகுபாடில்லை (3_195)*

*ஆணாயினும், பெண்ணாயினும் விசுவாசங்கொண்டு நற்கருமங்களை எவர் செய்தாலும் நிச்சயமாக நாம் அவர்களை இம்மையில் நல்ல வாழ்க்கையாக வாழச் செய்வோம் அன்றி மறுமையிலோ அவர்கள் செய்து கொண்டிருந்ததை விட மிக்க அழகான கூலியை நிச்சயமாக நாம் அவர்களுக்கு கொடுப்போம்.(16_97)*

*கர்ப்பம் சுமத்தல்,பிரசவம்,பாலூட்டுதல், குழந்தை வளர்ப்பு வீட்டை பராமரித்தல் போன்ற விஷயங்களில் தக்கதான உடல் நலமும்,மன தைரியமும், கட்டுபாடும், நிதானமும் பெண்ணிடம் இருப்பதால் இந்தக் கடமைகளை இஸ்லாம் பெண்களிடம் ஒப்படைத்துள்ளது.*

பிரச்சாரம், கற்பித்தல்,ஆட்சி, நாட்டை பாதுகாப்பது ஜும்ஆ, ஜமாஅத், மய்யித்து கடமைகள் போன்ற விஷயங்களை செய்வதற்குப் பொருத்தமானவர்கள் ஆண்கள் என்பதினால் கடினமானதும், வெளி உலகத் தொடர்புடையதுமான சேவைகளை ஆண்களிடம் ஒப்படைத்திருக்கிறது.

*எனவே பெண்ணுடைய வேலை இடம் வீடும்,குடும்பமும்.ஆணுடையது வெளி உலகமும் ஆகும்.இதுதான் உலக ரீதியான தர்மமான வேறுபாடும் நீதியான சேவை அமைப்புமாகும்.*

*எதிர்கால சந்ததிகளை உருவாக்கும் பெண்களுக்கு இரவு பகலின்றி கடினமான கவனமாக நிறைவேற்ற வேண்டிய கண்டிப்பான கடமைகள் இருப்பதனால் அவர்களின் உணவு, உடை, தங்குமிடம் போன்ற அனைத்து தேவைகளையும் இஸ்லாம் ஆண்களிடம் கடமையாக ஒப்படைத்து ள்ளது.அவர்களுக்கு வேலையாட்கள் தேவைப்பட்டால் வேலையாட்களை ஏற்படுத்தி கொடுப்பது வரை கணவர்களின் கடமையாகும்.*

*சுத்தமாவதற்குத் தேவையான தண்ணீர் முதல் பல்தேய்க்கும் பிரஷ் வரை பெண்களுக்கு கொடுக்க வேண்டிய கடமை ஆண்களுக்குரியதாகும்.*

*ஆண் பெண் இரு பாலினங்களும் இயற்கையாக அமைந்த ஒரு ஈர்ப்பு ரீதியில் படைக்கப்பட்டுள்ளனர்.அதனால்தான் அந்நிய ஆண் பெண்கள் ஒன்றாக இருப்பதை இஸ்லாம் வண்மையாக தடுக்கிறது.அவர்களுக்கிடையில் வரும் உடலுறவை மட்டுமல்ல அதற்கு காரணமாக அமையும் பார்வையை கூட இஸ்லாம் தடுக்கிறது.*

*குடும்ப மரியாதை, சமூக ஒழுக்கம், சமாதான வாழ்வு போன்றவற்றை நிலை நிறுத்துவதற்காகவே ஆண் பெண்களின் தேவையற்ற சந்திப்புகளை அல்லாஹ் தடை செய்து பெண்களுக்கு பர்தாவை கட்டாயமாக்கினான்.*

*பெண்கள் தேவைக்கு மட்டும் தான் வெளியே செல்வார்கள். அதுவும் குறைவான நேரங்களில். அப்போது பர்தா அணிந்தால் போதும்.ஆனால் ஆண்கள் சேவையும், வேலைகளும் அனைத்து நேரங்களும் வெளியில்தான்.மட்டுமல்ல பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் வாழ்வதற்கு தேவையான பொருட்களை வழங்கும் கடமையும் ஆண்களுக்குரியதாகும்.*

*எப்போதும் வெளி உலகோடு தொடர்பு கொள்ளும் ஆண்கள் பர்தா அணிவது கடினம்.எனவேதான் பெண்களிடம் வெளியே செல்லும் போது பர்தா அணிய வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான்.*

*நபியே! உம்முடைய மனைவிகளுக்கும் உம்முடைய பெண் மக்களுக்கும் விசுவாசிகளின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்தாணகளைத் தங்கள் முகங்களிலிருந்து கொஞ்சம் இறக்கி கொள்ளும்படி நீர் கூறுவீராக! அதனால் அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகதிருப்பதற்கு இது மிக சுலபமான வழியாகும்.(33_59)*

*பெண்களின் பாதுகாப்பு ஆண்களிடம் ஒப்படைக்கப்பட்டது மூலம் பெண்ணிற்கு பொருளாதார கடமைகள் இல்லை. குடும்ப செலவுகளின் பாரம் ஆணின் தலையிலே கட்டி வைக்கப்பட்டுள்ளது. எனவேதான் வாரிசு உரிமைகளில் பெண்ணைவிட அதிக விகிதம் ஆணுக்கு வழங்கப்பட்டுள்ளது.முற்காலத்தில் பெண்ணுக்கு சொத்தில் பங்கு வழங்கப்படவில்லை.என்பது வேறு விஷயம்.இந்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைத்து இஸ்லாம் பெண்களுக்கு சொத்தில் உரிமை வழங்கியது. கட்டுபாடான குடும்பத்திற்கும், குடும்ப நலனுக்கும் ஒரு குடும்ப தலைவரின் ஆட்சி அவசியமாகும்.இந்த ஆட்சி யார் நடத்த வேண்டும் ஆணா? பெண்ணா? அதற்குள்ள தகுதியும், உரிமையும் ஆணுக்குதான் உள்ளது.*

*பெண்ணைவிட பல காரியங்களிலும் பதவி ஆணுக்குதான் அல்லாஹ் வழங்கியுள்ளான்.*

*அப்போது ஆட்சி பொறுப்புக்கு தகுதிவாய்ந்தவன் ஆண்தான்.பெண்களின் உணவு, ஆடை,தங்கும் வசதி போன்றவைகளின் செலவுகளெல்லாம் ஆண்தான் செய்ய வேண்டும்.எனவே பெண்களை ஆட்சி செய்வதற்கான உரிமையும் ஆண்களுக்குரியதாகும்.*

*ஆணின் பிரத்யேக தகுதியை அங்கீகரித்து எல்லா காரியங்களிலும் தலைமைத்துவ பதவியை அவனுக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான்.*

*நபித்துவ பதவியும்,வஹியும் ஆண்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது.வரலாற்றில் ஒரு பெண்ணையும் நபியாக ரஸூலாக உலகுக்கு அனுப்படவில்லை.*

*வெளி உலகத்தோடும், பெரும்திரள் மக்களோடும் தொடர்பு கொள்ள வேண்டிய புத்தி பூர்வமாக மிக கவுரவத்தோடு செயலாற்ற வேண்டியது ஒரு நாட்டின் ஆட்சி பொறுப்பு. அதற்கு தகுதிவாய்ந்தவன் ஆண் மட்டும் தான். எனவே ஒரு கிராமத்தின் ஆட்சியாக இருந்தாலும் பெண்ணுக்கு வழங்கப்படவில்லை அப்படி வழங்கி ஒரு சமுதாயமும் வெற்றி பெறவில்லை.*

*பாரசீகர்கள் கிஸ்ராவின் மகளை அவர்களின் நாட்டினுடைய ஆட்சி பொறுப்பை கொடுத்த செய்தி அறிந்த நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள.பெண்ணுக்கு ஆட்சி பொறுப்பு வழங்கிய எந்த சமுதாயமும் வெற்றி பெற்றதில்லை.*

*உங்களின் தலைவர்கள் உங்களைவிட மோசமானவர்களும் உங்களின் செல்வந்தர்கள் உங்களைவிட கஞ்சர்களாகவும் உங்களின் காரியங்களை உங்களிலுள்ள பெண் மணிகளிடம் ஒப்படைக்கும் நிலை வந்தால் பூமியின் மேல் வாழ்வதைவிட பூமியின் அடியில் வாழ்வது சிறந்தது (திர்மிதி_2266)*

*தலைமத்துவம், அதிகாரம், மேதாவித்துவம் ஆட்சியில் மட்டுமல்ல.மற்ற காரியங்களிலும் ஆணுக்குதான் வழங்கப்பட்டுள்ளது. தொழுகைக்கு தலைமை வகித்து இமாமத் செய்வதற்கு அனுமதி ஆணுக்கே வழங்கப்பட்டுள்ளது.*

*பெண்கள் மட்டுமுள்ள ஒரு ஜமாஅத்தில் பெண்களுக்கு இமாமத் செய்யலாம். ஆணுக்கு மட்டுமோ, ஆண்களும், பெண்களும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்ட ஜமாஅத் தொழுகையிலோ பெண் இமாமத் செய்ய அனுமதி இல்லை.அவர்கள் இமாமத் செய்தால் அந்த தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.*

*ஜாபிர் (ரலி) சொல்கிறார்கள்.நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு சொற்பொழிவு நடத்தினார்கள். அப்போது சொன்னார்கள் பெண்கள் ஆண்களுக்கு இமாமத் நிற்க கூடாது( இப்னுமாஜா)*

*அவ்விதமே அமைச்சர்,நீதிபதி, தூதரக்துறை,போன்ற பொது பொறுப்புகளிலும் பெண்களை நியமிக்க கூடாது.பலவீன உடல் அமைப்பும், அவளுக்கு வழங்கப்பட்ட சேவை பொறுப்பும் அதற்கு இடம் கொடுக்காது.*

*திருமணம், விவாகரத்து போன்ற காரியங்களின் அதிகாரமும் உரிமையும் ஆணுக்குதான்.எந்த ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொடுக்க வேண்டுமென்றால் அவளின் பொறுப்பாளிகளோ, அல்லது அவர்களின் பிரதிநிதியோதான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து கொடுக்க முடியாது.மட்டுமல்ல சுயமாக ஒரு பெண் தன்னை திருமணம் செய்து கொடுக்கவும் முடியாது.*

*அபூ ஹுறைரா (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள்.ஒரு பெண் வேறு பெண்ணை திருமணம் செய்து கொடுக்க கூடாது.ஒரு பெண் சுயமாக தன்னை திருமணம் செய்து கொடுக்க கூடாது. காரணம் தனியே சுயமாக திருமணம் செய்து கொடுப்பவள்தான் விபச்சாரி.(இப்னுமாஜா: 1882)*

*திருமணம் செய்து கொடுப்பதற்கான அதிகாரம் பொறுப்பாளிகளான ஆண்களிடம் இருந்தாலும் பெண்ணின் விருப்பத்தை அங்கீகரிக்காமல் தன்னுடைய விருப்பப்படி திருமணம் செய்து கொடுக்க முடியாது. எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொடுக்கும் முன் அவளின் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.வயதுக்கு வந்த பிறகுள்ள சம்மதமே ஏற்றுக் கொள்ளப்படும் அப்போது தான் சுயமாக விவேகமும், தேர்ந்தெடுப்பதற்கான தகுயியும் வருகிறது.ஆனால் தந்தை அல்லது உப்பா போன்றோர்கள் பொறுப்பாளிகளாக இருந்தால் பெண்ணின் அனுமதி இல்லாமல் திருமணம் செய்து கொடுக்கலாம்.*

*நலம் நாடுவதிலும், அன்பு காட்டுவதிலும் முன் வரிசையில் அவர்கள் நிற்பதுவே இதற்கு காரணம் வயது வந்தவர், மகள், அல்லது பேத்தி என்றால் இவர்களிடத்தில் அனுமதி வாங்குவது பொறுப்பாளிகளுக்கு (தந்தை, உப்பா) சுன்னத்தாகும்....*

*தகுதி வாய்ந்த கணவருக்கு அல்லாமல் ஒரு பொறுப்பாளியும் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க கூடாது.மதம், குடும்பம், நல்ல தொழில், ஆண்மை, சக்தி அதுபோன்று பைத்தியம், குஷ்டம் போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பும் பெற்றிருக்க வேண்டும்.*

*ரவுடி, நவீன கொள்கை காரன், மோசமான குடும்பத்தை சார்ந்தவன், கீழ்த்தரமான வேலை செய்பவன், ஆண்மையில்லாதவன், பைத்தியம் பிடித்தவன்,குஷ்ட நோயுள்ளவன் போன்றவர்களுக்கு எந்தவொரு பெண்ணையும் அவளது பூரணமான அறிவும், சம்மதவுமில்லாமல் எந்தப் பொறுப்பாளியும் திருமணம் செய்து கொடுத்தால் அத்திருமணம் செல்லுபடியாகாது.*

*திருமணத்தை போன்று தான் விவாகரத்தின் சாவியும் ஆண்களின் கையில்தான் உள்ளது. மிக கவனத்துடன் கைகாரியம் செய்ய வேண்டிய விஷயம் விவாகரத்து.திருமண உறவை துவங்குபவனும் அவன்தான் எனவே வேறுபடுவதற்குள்ள உரிமையும் அவனுக்கே வழங்கப்பட்டுள்ளது.*

*நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.விவாகரத்து செய்வதற்கான அதிகாரம் ஆண்களிடமும் அவ்வேளையில் இத்தா இருப்பது பெண்களிலும் நிலைகொள்கிறது.(பைஹகீ)*

*ஆனால் சில தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் பெண் விவாகரத்து செய்ய முற்பட்டால் அவளுக்கு குல்ஃ வாங்கலாம்.கணவனுக்கு நஷ்டயீடாக ஏதாவது கொடுத்து விவாகரத்து வாங்குவதற்குதான் குல்ஃ என்று சொல்லப்படுகிறது.*

*கணவன் பைத்தியம் பிடித்தவனோ, நோய் பிடித்தவனோ அல்லது ஆண்மையற்றவனாகவோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் திருமண உறவை ஃபஸ்க்கு நடத்தி வேறுபடுத்துவதற்கான அதிகாரமும் பெண்ணுக்கு உண்டு.*

*இஸ்லாமின் சின்னத்தை வெளிப்படும் விதத்தில் ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை பாங்கு சொல்வதும்,ஜமாஅத் நடத்துவதும், வாரம் தோறும் ஜும்ஆ நடத்துவதும் சமூகத்தின் , நாட்டின் பாதுகாப்புக்காக நிர்பந்த சந்தர்ப்பங்களில் போர் புரிவதும் சமூக கடமைகளாகும் .ஆனால் இவை ஆண்களுக்கு மட்டும் உரிய கடமைகளாகும்.பெண்கள் இவற்றிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.அவ்வாறே மய்யித்து தொழுகை, கப்ர் அடக்குவது போன்ற முக்கியமான காரியங்கள் கடமையாகுவதும் ஆண்களுக்குத்தான் ஆண் பெண் வேறுபாட்டை விவரித்தும், ஆணின் சிறப்புகளை சுட்டிக் காட்டியும் புகழ் பெற்ற குர்ஆன் விரிவுரையாளர் இமாம் ராஸி (ரஹ்) சொல்லுவதை பாருங்கள்.*

*ஆணுக்கு பெண்ணைவிட உயர்வு பலவிதத்தில் கிடைத்துள்ளது.அதில் சில இயற்கை குணங்கள் வேறு சில மத சட்டங்களாகும். இயற்கை குணங்கள், அறிவு, சக்தி போன்ற இரண்டு காரியங்களோடு தொடர்புள்ளவையாகும். அறிவும், விவேகமும் ஆண்களுக்கு அதிகமாக உள்ளது என்ற விஷயத்தில் சந்தேகமில்லை.*

*கடினமான விஷயங்களைச் செயலாற்றுவதற்கு ஆண்களுக்கு இயற்கையாகவே அதிக சக்தி உண்டு என்ற விஷயத்தில் சந்தேகமில்லை.*

*மேலும் கல்வியறிவின் விஷயத்திலும் ஆண்கள் பெண்களைவிட தகுதியுள்ளவர்களாகும்.*

*நபிமார்களும், மகா அறிஞர்களும் ஆண்களிலிருந்துதான் உருவாகியுள்ளனர். ஆட்சி பொறுப்பு, இமாமத், போர், பாங்கு சொல்வது, குத்பா, (பொது பள்ளிவாசலில்) இஃதிகாஃப் போன்ற காரியங்களும் ஆண்களில் ஒதுங்கியவையாகும்.*

*விபச்சாரம், திருட்டு,மதுபானம், விபச்சான அவதூறு, கொலை போன்ற குற்ற விசாரணைகளில் அறிஞர்களின் ஏகோபித்த கருத்தும் திருமண காரியங்களில் இமாம் ஷாஃபியின் மத்ஹபுபடி சாட்சி சொல்வதற்கான உரிமையும் ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.*

*வாரிசு சொத்தில் அதிக விகிதமும், விகிதம் பங்கீடு செய்த பிறகு வருகிற மீதத்தை முழுவதும் எடுப்பதற்கான உரிமையும் ஆண்களுக்குதான் உள்ளது.*

*தவறுதலாக கொலை செய்ததின் பிராயசித்தம் ஏற்று எடுப்பது, திருமணம் தலாக், திரும்ப எடுத்தல், பலதாரமணம் இவை அனைத்தும் ஆண்களின் உரிமையிலுள்ளதாகும்.மேலும் குழந்தைகளின் வம்சம் சேர்க்கப்படுவதும் ஆண்களில்தான் இவையெல்லாம் ஆண்கள் பெண்களை விட உயர்ந்தவர்கள் என்பதை அறிவிக்கிறது.*

*" ஆண்கள் அவர்களின் சொத்துக்களை பெண்களுக்காக செலவு செய்வதினால் அவர்கள் (பெண்கள்) மீது அதிகாரம் ஆண்களுக்குரியதாகும்" என்று கூறுகிறது குர்ஆன். அதாவது ஆண் பெண்ணுக்கு மஹ்ரும் ஜீவித செலவுகளும் வழங்குவதினால் அவனுக்கு அவளைவிட உயர்ந்த பதவி உள்ளது.
(தஃப்ஸீர் ராஸி 10/91)*

*இஸ்லாம் பெண்ணுக்கு வாழ்வு உரிமையையும்,சொத்தில் வாரிசு உரிமையும், வணக்க வழிபாட்டு உரிமையும், பொருளாதார சுதந்திரமும், கல்விச் சுதந்திரமும், கருத்துச் சுதந்திரமும் வழங்கி அவளுடைய உணவு, உடை, தங்குமிடம் போன்றவைகளின் செலவுகளை ஆண்களில் ஒப்படைத்து மகள், சகோதரி, மனைவி, தாய், விதவை போன்ற நிலைகளிலெல்லாம் அவளின் பாதுகாப்பை உறுதி செய்து கடினமான பொறுப்புகளிலிருந்து அவளை நீக்கம் செய்து பட்டு, தங்கம் போன்ற அலங்கார பொருட்களை அணிய அனுமதி வழங்கி அவ்விதம் மற்று பல சலுகைகளை அவளுக்கு வாரி வழங்கி அவளின் உரிமைகளை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி அவளிடத்தில் மிக அழகான கருணை காட்ட வேண்டுமென்று சமூகத்தோடு வஸிய்யத் செய்த பிறகு அவளின் பலவீனமான படைப்பை முன் நிறுத்தி வீட்டின் பொறுப்புகளை வழங்கி வீட்டில் அடங்கி ஒதுங்கி இருக்க வேண்டுமென்று இஸ்லாம் கூறுகிறது.*

*பெண்ணின் பொறுப்புக்களைப் பற்றி நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.*

*பெண் அவளது கணவன், வீட்டை மற்றும் குழந்தைகளை பரிபாலிப்பவள். அவைகளைப் பற்றி நாளை மறுமைநாளில் அவளிடத்தில் விசாரணை செய்யப்படும்.*

*வீடுதான் அவளின் சேவைதளம் என்பதால் அல்லாஹ் முன்மாதிரி பெண்களான நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களிடத்தில் இவ்வாறு கூறுகிறான்.*

*நபியுடைய மனைவிகளே நீங்கள் உங்கள் இல்லங்களிலிருந்து வெளிச்சென்று திரியாது வீடுகளுக்குள்ளாகத் தங்கி இருங்கள்.முன்னிருந்த அறியாத ஜனங்கள் தங்களை அலங்கரித்துக் கொண்டு வெளியில் சென்று திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்களும் திரியாதீர்கள்.
(33:33)*

*இந்த சட்டம் அனைத்து முஸ்லிம் பெண்மணிகளுக்கும் பொருந்தும் என்பதை கீழே வரும் சம்பவத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.*

*உம்மு நாயிலத்திலிருந்து அபூ ஹாத்திம் அறிவிக்கிறார்கள். அபூ பர்ஸத் என்ற சஹாபி பெண்மணி வந்த போது அவருடைய உம்மு வலதை வீட்டில் காணவில்லை.விசாரித்த போது அவர் பள்ளி வாசலுக்கு சென்றதாக தகவல் கூறப்பட்டது. அவர் பள்ளி வாசலிலிருந்து திரும்பி வந்த போது அபூ மர்ஸத் கோபத்தோடு சொன்னார். அல்லாஹீ பெண்களுக்கு அவர்கள் வெளியே செல்வதை தடுத்துள்ளான் வீட்டில் அடங்கி ஒதுங்கி இருக்க வேண்டுமென்றும் ஜனாஸாவை பின்தொடரக்கூடாது என்றும் பள்ளிவாசலுக்கு செல்லக்கூடாதென்றும் ஜும்ஆவில் கலந்து கொள்ள கூடாதென்றும் கட்டளையிடப்பட்டுள்ளது.(துர்ருல் மன்சூர் 5/194)*

*ஆண் பெண் என பாலினங்களை நிர்ணயம் செய்பவன் அல்லாஹ்*

*மிகவும் உசிதமான இந்த பாலின வேறுபாட்டில் அல்லாஹ்வையும், மறுமையையும் நம்பிக்கை கொள்கிற எந்த ஒரு பெண்மணியும் அதிருப்தி அடையமாட்டாள் அல்லாஹ் கூறுகிறான்.*

*உங்களில் சிலரைச் சிலர் மீது அல்லாஹ் மேன்மையாக்கி(அருள்புரிந்து) இருப்பதைப்பற்றி பேராசை கொள்ளாதீர்கள்.ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்தவை (அருளும் பொருளும்) உரியன அவ்வாறே பெண்களுக்கு அவர்கள் சம்பாதித்தவை உரியன ஆண் பெண் ஒவ்வொருவரும் நற்செயல்களின் மூலம் அல்லாஹ்வுடைய அருளை அவனிடமே கேளுங்கள் நிச்சயமாக அல்லாஹ் தன் அருளை எவருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பன போன்ற யாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான் (4/32)*

தகவல் M.சிராஜுத்தீன்அஹ்ஸனி.

இயக்குனர்.
மைமூன்_பப்ளிஷிங் ஹவுஸ்

திருவிதாங்கோடு....