அறிவை மதிக்கும் மக்கள்
அறிவை_மதிக்கும்_மக்கள்.
✍️ஏ.பி.அபூபக்கர்_பாகவி.
(கிராண்ட் முஃப்தி ஆஃப் இந்தியா..)
தமிழில்: M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி.
மலேசியப்_பிரதமர்_அன்வார் இப்ராஹிமின் விருந்தினராக நான் அந்த நாட்டுக்குச் சென்றது முதல் திரும்பியது வரை என்னை மிகவும் கவர்ந்தது மலேசிய மக்களின் மரியாதையும் மற்றும் இல்ம் (கல்வி) மீதான அவர்களின் ஆர்வமுமாகும்.
கேரளாவைப் போலவே மலேசிய மக்களும் ஷாஃபி மத்ஹபைப் பின்பற்றுகிறார்கள்.
அனைத்து பள்ளிவாசல்களிலும்
மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஜமாத் தொழுகைக்கு ஒன்று கூடுகிறார்கள்.
இளைஞர்கள், அதிகாரிகள் மற்றும் சிறுவர்கள் பள்ளிவாசலுக்கு தவறாமல் வருகைப் புரிந்து இல்மின் (அறிவின்) மஜ்லிஸில் கலந்து கொள்கின்றார்கள். எங்கும் சத்தமோ, அலப்பறைகளோ இல்லை. தொழுகைக்குப் பிறகு நடைபெறும் திக்ர் மற்றும் துஆவுக்குப் பிறகே மக்கள் பிரிந்து செல்கிறார்கள்..
பெரும்பாலும் அரசாங்க செலவிலேயே பல வேளைகளிலும் மத ஆய்வு வகுப்புகள் மற்றும் தர்ஸுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
மலேசியாவில் அந்நாட்டை பூர்விகமாகக் கொண்ட மத அறிஞர்கள் குறைவாகவே உள்ளனர். ஆனால் மார்க்க அறநிலையத் துறையின் கீழ் கல்வியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கும் வகையில் கல்லூரிகளை அமைப்பதில் அரசு மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகத் தெரிகிறது.
உலகின் பெரும்பாலான சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்களை தங்கள் நாட்டிற்கு அழைக்கவும், மத கலந்தாய்வு நடத்தவும், குர்ஆன் விரிவுரைகளை ஏற்பாடு செய்யவும் மலேசிய அரசாங்கமும்,பல்வேறு பல்கலைக்கழகங்களும், அமைப்புகளும் மற்றும் வசதி படைத்தவர்களும் அடிக்கடி வாய்ப்புகளை வழங்குவதில் மும்முரமாக செயல்படுகின்றனர்.
அந்நாட்டு மக்கள் மிகுந்த ஆர்வத்துடனும், ஒழுக்கத்துடனும் இந்த அறிவின் மஜ்லிஸுககளில் கலந்து கொள்கின்றனர்.
ஆரம்பம் முதல் கடைசி வரைக்கும்
எல்லா மக்களும் மிகவும் கவனத்துடன் உட்காருவார்கள். சந்தேகங்களைக் கேட்டு குறிப்புகள் எழுதுவார்கள், வகுப்புகளில் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.
பெண்கள் பிரத்யேக திரைக்கு பின்னால் இருந்து மத விஷயங்களைக் கேட்பார்கள்.
நாட்டின் பிரதமரும், அமைச்சர்களும்,
உயர் அதிகாரிகளும் எந்த ஒரு சிறப்பு அம்சமும் இல்லாமல் சாதாரண மக்களைப் போல் முழு நேரமும் இல்மின் மஜ்லிஸில் பங்கேற்பது நம்மை ஆச்சரியப்படுத்தும்.
உத்தியோகபூர்வ சடங்குகளுக்கு பிறகு, அவர்கள் மற்ற தேவைகள் மற்றும் தங்களது அலுவல்கள் பக்கம் திரும்புவார்கள் என்று நாங்கள் எண்ணுகிறோம்.
ஆனால் மஜ்லிஸுகளின் ஆரம்பத்திலும் முடிவிலும் இருப்பதன் மூலம் இல்மை எந்த அளவுக்கு கண்ணியப்படுத்துகிறார்கள்
என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
அறிவின் மஜ்லிஸின் மீதான அணுகுமுறையில்
நம் பிரதேசங்களும் இப்படி மாற வேண்டும் என்பதே
என் விருப்பம்.
ஆன்லைன் புரோகிராம்கள் அதிகரித்த காலத்தில் அனைத்தும் ஆன்லைனில் கேட்டால் போதும் நேரடியாக மஜ்லிஸுகளில் பங்கேற்க தேவையில்லை என்ற எண்ணம் பலரையும் ஆன்மீக மஜ்லிஸுகளிலிருந்து பின்வாங்க வைத்துள்ளது.
ஆன்மிக மஜ்லிஸுகள் மற்றும் மார்க்க படிப்புக்கான இடங்கள்,நேரங்கள் அவற்றுக்கென்று சில புனிதத்தன்மையைக் கொண்டுள்ளன.
இதுபோன்ற மஜ்லிஸுகளில் முழு நேரமும் மரியாதையுடனும், பக்தியுடனும் இருக்க நாம் முயற்சி செய்ய வேண்டும்.
மலேசியாவின் நிர்வாகத் தலைநகரான புத்ராஜெயாவில் உள்ள புத்ரா மஸ்ஜிதில் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் ஸஹீஹ் அல்-புகாரி தேசியக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் மீதான விருப்பத்தாலும் அவர்களின் வாழ்க்கையைப் பின்பற்றும் ஆர்வத்தாலும்தான் மக்கள் இத்தகைய தளங்களில் பங்கேற்கத் தூண்டப்படுகிறார்கள் என்று உணர்ந்து கொண்டேன்.
ஒவ்வொரு ஹிஜ்ரா ஆண்டின் தொடக்கத்திலும் ஸஹீஹுல் புகாரி சங்கமம் ஏற்பாடு செய்யப்படும் என்றும் பிரதமர் இந்த மேடையில் அறிவித்திருந்தார்.
மலேசியாவில் மவ்லிது மஜ்லிஸுகளும்,
நபி புகழ் சங்கமங்களும் ஏராளமாக ஏற்பாடு செய்யப்படுகிறது. அரசாங்கத்தால் நடத்தப்படும் மசூதிகளிலும் அதிகாரப்பூர்வமாக இத்தகைய சபைகள் நடைபெறுவதைக் காண முடியும்.
மலேசிய தேசிய மசூதி என்று அழைக்கப்படும் கோலாலம்பூரில் உள்ள மஸ்ஜித் நெகாரா மற்றும் புத்ராஜெயாவில் உள்ள மஸ்ஜித் புத்ரா ஆகிய இடங்களிலெல்லாம் குர்ஆன், ஹதீஸ் அறிவு சங்கமங்கள் மற்றும் நபி புகழ் மஜ்லிஸுகளும் நடைபெறும்.
பொது மக்கள்,
மார்க்க அறிஞர்கள், மாணவர்கள் உட்பட ஏராளமானோர் இந்த மஜ்லிஸுகளில் கலந்து கொள்கின்றனர்.
சாதாரண ஆண்கள் கூட தலையில் தொப்பி அணிந்து சுன்னத்துகளைக் கடைபிடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
பேன்ட் அணிந்திருந்தாலும் அவற்றின் மேல் துணி உடுத்துகிற பாரம்பரிய ஆடைமுறை பொதுவாக காணப்பட்டு வருகின்றன. உலமாக்கள் மற்றும் ஸெய்யித்மார்கள் மூலம் பறக்கத் பெற்றுக் கொள்வதற்காக அவர்களின் கைகளை முத்தம் செய்யும் பழக்கம் மலேசியர்கள் மத்தியில் உள்ளது
மலேசியா மற்றும் இந்தோனேசியா மக்களிடம் பணிவு அதிகம்.
யாரையும் கஷ்டப்படுத்துகிற அல்லது துன்புறுத்துகிற குணத்தை அவர்களிடம் காணமுடியாது.
குறிப்பாக வெளிநாட்டினர் மீதான அணுகுமுறை குறிப்பிடத் தக்கது.
தங்களுடைய விருந்தினர்களிடம் மிகுந்த மரியாதை காட்டுவதும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், வசதிகளையும் செய்து கொடுப்பதும் அவர்களின் வழக்கம்.
பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்கள், உயர் பிரமுகர்கள், அறிஞர்களுடன் உரையாடவும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது
இந்தப் பயணத்தின் பெரும் நன்மை என்று சொல்லலாம்.
நான் என்ற நிலையில் அல்ல இது எனக்கு கிடைத்தது மாறாக
ஒரு மார்க்க அறிஞர் என்ற வகையில்தான் அவர்கள் எங்களை ஏற்றதும் எங்களுக்கு வாய்ப்பளித்ததும்.
அல்ஹம்துலில்லாஹ்..
மலேசிய அரச குடும்பத்தின் வசிப்பிடத்தை அனைவருக்கும் அணுக முடியாது.
உத்தியோகபூர்வ விருந்தினராக இருந்ததால் நாங்கள் மன்னரின் இல்லத்திற்கு அழைக்கப்பட்டோம் மிகுந்த மகிழ்ச்சியுடன் மன்னர் அல் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா மற்றும் அவரது குழுவினர் எங்களை வரவேற்று, உபசரித்து, வழியனுப்பி வைத்தனர். . அவருடனான சந்திப்பின் போது, இந்தியா மற்றும் கேரளாவின் வரலாறு, கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் மத பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்ள முடிந்தது.
மலேசிய அரசு இப்போது இந்தியாவுடன் நல்லுறவைப் பேணி வருகிறது.
முன்பு சாதாரண இந்தியர்களுக்கு விசா கிடைப்பது சற்று கடினமாக இருந்தது. புதிய பிரதமர் பதவிக்கு வந்த பிறகு இந்த விவகாரத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
45 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள் பணிபுரிய அனுமதி பெற முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலான இந்திய புலம்பெயர்ந்தோர் உணவகங்கள்
மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் வேலை செய்கிறார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளாக சூப்பர் மார்க்கெட்களுக்கு பணி அனுமதி கிடைக்கவில்லை.
இந்த சிரமத்தை புலம்பெயர் அமைப்புக்கள் சுட்டிக்காட்டிய போது, பிரதமருடனான சந்திப்பின் போது இந்த விடயம் குறித்து அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்றேன்..
விரைவில் சாதகமான சூழ்நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கூறிய சீர்திருத்தத்தின் மூலம் மலையாளிகளுக்கு அதிக வேலை வாய்ப்புகளை வழங்க முடியும்.
அதே சமயம் திறமையான மற்றும் படித்தவர்களுக்கு மலேசியாவில் பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
ஒரு தொழிலில் திறமை பெறுவது என்பது மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே நான் அடிக்கடி உணர்த்துகிற ஒரு விஷயமாகும்.
அப்போது நமக்கு உலகில் எங்கும் டிமாண்ட் இருக்கும்.
பல இந்தியர்கள் சாதாரண சூழ்நிலையில் வேலை செய்வதைப் பார்த்து, நமது இளைஞர்களுக்கு வேலை திறன்களைப் பெறுவதன் முக்கியத்துவத்தை மீண்டும் எழுப்ப வேண்டும் என்று நான் உணர்ந்தேன்.
மிகவும் துடிப்பான,
மத, தார்மீக உணர்வு மற்றும் ஒழுக்கமான சமுதாயத்தை அறிந்து கொள்ள முடிந்தது என்பது தான் மலேசிய பயணம் மூலம் எனக்கு கிடைத்த முக்கிய அனுபவங்களில் ஒன்று, இதுபோன்ற அனுபவங்கள், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு, ஒரு மஜ்லிஸிலிருந்து இன்னொரு மஜ்லிஸிற்கு அதிக உற்சாகத்துடன் பயணம் செல்ல நம்மைத் தூண்டும்.
இல்ம் மற்றும் உலமாக்கள் மீது மிகுந்த மரியாதை கொண்ட மக்களுடன் என்னால் பழக முடிந்தது என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
அல்ஹம்துலில்லாஹ்....
வெளியீடு
M. P. H.
திருவிதாங்கோடு
குமரி மாவட்டம்..