குர்ஆனுக்காக வாழ்ந்து மறைந்தவர்
குர்ஆனுக்காக வாழ்ந்து மறைந்தவர்
✍️அல்ஹாபிழ்:
M.முஹம்மது அன்வரி.
பேராசிரியர்: மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரி, காயல்பட்டினம்
ஆளுமைமிக்க மனிதர்களாக நான் கருதக்கூடிய பலரில் முதன்மையானவர்.
எனதுஆசான்
"காதிமுல் குர்ஆன்'' M.P.S .கமாலுத்தீன் ஹஸ்ரத் அவர்கள்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஹஸரத் அவர்களிடமிருந்து நான்கு ஆண்டுகள் மன்றியிட்டு குர்ஆனை மனனம் செய்யும் பாக்கியத்தை பெற்றேன்.
ஹஸ்ரத் அவர்களின் நூற்றுக்கணக்கான சிஷ்யர்களில் இந்த எளிய வரையும் ஒரு சிஷ்யனாக ஆக்கித்தந்த வல்லோன்
அல்லாஹ்வுக்கு அதிகமதிகம் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன்.
ஹஸ்ரத் அவர்கள் ஒரு நடமாடும் குர்ஆன்.
தன் சொந்த பந்தங்களை அதிகம் நினைத்ததைவிட குர்ஆனையும், தன் மதரசாவையும்,
மதரசா பிள்ளைகளையும் எந்நேரமும் நினைத்து கொண்டிருந்தார்கள்.
மதரசாவில் பயின்ற மாணவர்களை தன் சொந்த பிள்ளைகளை போன்று நேசித்தார்கள்.
தன்னிடம் பயில வந்தவர்கள் நாடு போற்றும் தலைசிறந்த ஹாஃபிழ்களாக உருவாக வேண்டுமென ஆசைப்பட்டார்கள்.
அல்லாஹ் அவர்களின் துஆக்களையும், நாட்டத்தேட்டங்களையும் கபூலாக்கினான்.
ஆம்!!பார் போற்றும் தலைசிறந்த ஹாஃபிழ்களை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினான்.
படித்தது போன்று அமல் செய்ய துடித்தவர்கள் எங்கள் ஹஸ்ரத் அவர்கள்.
எல்லாரும் ஆனந்தமாக, அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது தஹஜ்ஜுத் எனும் அழகான அமலை தன் வல்லோனுக்காக எவ்வித சடைப்புமில்லாமல் நிறைவேற்றுவார்கள்.
சாதாரண வக்த் தொழுகைகள் கூட சில நேரங்களில் களாவாக தொழவேண்டிய நிலைமை நமக்கு ஏற்படும்.
ஆனால் ஹஸ்ரத் அவர்கள் தஹஜ்ஜுத் தொழுகயை தவறாமல் இடைவிடாது தொழுதார்கள் எனும் போது வக்த் தொழுகைகளின் நிலையை சொல்லவா வேண்டும்.
தஹஜ்ஜுத் தொழுகையில்
குர்ஆன் ஓதி அதை கத்ம் செய்யும் பழக்கமுடையவராக இருந்தார்கள்.
வருடத்திற்கு இரண்டு தடவைகள் ஸுப்ஹு தொழுகையில் முழுக்குர்ஆனையும் கத்ம் செய்வார்கள்.
நடைபயிற்சி மேற்கொள்ளும் போதும் குர்ஆனை ஓதிக்கொண்டே
செல்வார்கள்.
மாணவர்களிடத்தில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், எத்தனை ஜுஸ்வு வேண்டுமென்றாலும் எவ்விதமான மடுப்புமில்லாமல் பாடம் கேட்கும் அழகிய மனமுடையவர்கள்.
ஓதும் காலத்தில் ஹஸ்ரத் அவர்களிடம் நெருங்கவே ஒரு வித அச்சமாக இருக்கும்.
ரமழான் மாத விடுமுறை முடிந்து மதரசாவுக்கு வரக்கூடிய வேளையிலே மதரசாவுக்கு பக்கத்தில் இருக்கக்கூடிய முன்ஸிபாலிட்டி ஸ்டாப் வந்தவுடன் ஹஸரத் அவர்களிடம் எப்படி பாடம் சொல்லுவேன் என்பதை நினைத்து நெஞ்சமெல்லாம் நடுங்கும்.
ஓதும் காலத்தில் ஒரு கண்டிப்பும், கவனிப்பு முள்ள ஆசிரியராக எங்களிடம் நடந்து கொள்ளுவார்கள்.
ஓதி முடித்த பிறகு ஒரு தந்தையை போன்று மிக பரிவுடனும், அன்புடனும் நடந்து கொள்ளுவார்கள்.
பட்டம் பெற்ற பின்னர் ஹஸரத் அவர்களைச் சந்திக்க சென்றால் பக்கத்தில் அமரவைத்து மனம் திறந்து நம்மிடம் உரையாடுவார்கள்.
அந்நேரம் மிக்க மகிழ்ச்சியாக, ஆனந்தமாக இருக்கும்.
ஹஸ்ரத்துடன் பேசும் போது அவர்களிடம் ஓதிபட்டம் வாங்கிச் சென்ற மாணவர்களின் அருமைகளையும், மகிமைகளையும் மிகவும் பெருமையாக பேசுவார்கள்.
அவர்கள் எங்களுக்கு வெறும் குர்ஆனை மட்டும் கற்றுத் தரவில்லை.
அழகிய வாழ்க்கை பாடங்களையும் எங்களுக்கு கற்றுத் தந்தார்கள்.
ஒரு ஆசிரியர் மாணவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்..
மாணவர்கள் எப்படி ஆசிரியர்களிடமும், நிர்வாகிகளிடமும் நடந்து கொள்ள வேண்டுமெ ன்பதையும் கற்றுத் தந்தார்கள்.
மாணவர்கள்
பொய் பேசுவதை ஹஸரத் அவர்கள் வண்மையாக கண்டிக்ககூடியவர்களாக, வெறுக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.
நான்காண்டு காலத்தில் எங்களை நல்ல மாணவர்களாக, ஒழுக்கமுள்ளவர்களாக, பெற்றோருக்கு கண்குளிர்ச்சியுள்ள பிள்ளைகளாக ஆக்கினார்கள்.
ஹஸ்ரத் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை எங்களுடைய சொந்த குடும்ப உறுப்பினர்களை போன்று பார்க்க வைத்தார்கள்.
ஹஸ்ரத் அவர்களின் இந்த உயர்வுக்கு இரண்டு காரணங்களை நாம் சொல்லலாம்.
ஒன்று
அவர்கள் தஹஜ்ஜுத் தொழுகையை தவறாமல் இடைவிடாது நிறைவேற்றியது.
இரண்டு அவர்களிடமிருந்த பணிவு.
இந்த மகத்தான குணம் தான் அவர்களை இந்நிலையை அடையச் செய்தது.
தன்னிடம் ஓதிய மாணவகண்மணிகளை ரொம்பவும் நேசித்தார்கள்.
பட்டமளிப்பு விழாவின் போது ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலைப்பாக அணிவிக்கூடிய நேரத்தில் கண்ணீர் விட்டு அழுவார்கள்...
இந்த குழந்தை என்னைவிட்டு செல்கிறேதே என நினைத்து துடிப்பார்கள்..
இன்று உஸ்தாத் அவர்களை நாங்கள் மீளா உலகிற்கு வழி அனுப்பி வைக்கும் போது எங்கள் உள்ளமெல்லாம் பதறுகிறது..துடிக்கிறது
எங்கள் கண்ணியமிக்க ஹஸ்ரதை நாங்கள் இனி என்று காண்போம்...
ஹஸ்ரத் அவர்கள் மரணிக்கும் ஒரு வாரத்திற்கு முன்பு என் குடும்பத்துடன் சென்று ஹஸ்ரத் அவர்களைச் சந்தித்தேன்....
ஹஸ்ரத் அவர்களின் மருமகன் ஹஸரத் அவர்களிடம் ஸலாம் சொல்லிப் பாருங்கள் என்று என்னிடம் கூறினார்...
நான் ஹஸ்ரத் அவர்களிடம் ஸலாம் சொன்னேன்..
அல்ஹம்துலில்லாஹ்..
எனது ஸலாமுக்கு தெளிவாக பதிலளித்தார்கள்.
பிறகு ஹஸரத் அவர்களுக்காக துஆச் செய்தேன்.
துஆவுக்கு ஆமீன் கூறினார்கள்.
ஹஸ்ரத் அவர்களின் மருமகன் உங்கள் மாணவர் பாடம் சொல்லட்டுமா என ஹஸ்ரத் அவர்களிடம் கூறிய போது..
ஆம்!!
என்று தலையாட்டினார்கள்...
உடனே நான் வாக்கிஆ சூறாவிலிருந்து சில பகுதிகளை ஓதிக் காட்டினேன்..
அல்ஹம்துலில்லாஹ்.
எனக்கு
மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது...
இந்த வாரம் ஹஸரத் அவர்கள் நம்மோடு இல்லை...
குர்ஆனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த நம் ஹஸரத் அவர்களுக்கு...
யா அல்லாஹ்...!!
ஆகிறத்தின் எல்லாவிதமான நலவுகளையும், வளங்களையும், பறக்கத்துகளையும்
வாரி வழங்குவாயாக!!!
தீனின் பரிபூரணத்துவம் (கமாலுத்தீன்) பெற்றவர் என்று பெயருக்கு ஏற்றார் போல உலகில் வாழும் காலத்திலேயே நற்சான்றிதழை பெற்று, அரை நூற்றாண்டுகளாய் சமூகத்தின் முற்றத்தில் நறுமணம் கமழும் பூக்களாய், ஒளிரும் விளக்குகளாய், வலம் வந்து கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான ஃபைளுர் ரஹ்மான் ஹாஃபிழ்களை உருவாக்கிய சிற்பி இப்போது இறைவா! உன் நிழலில் இளைப்பாற வந்திருக்கிறார்கள்.
இறைவா! அவர்களின் மண்ணறையை குர்ஆனைக் கொண்டு வெளிச்சமாக்குவாயாக!
இறைவா! அவர்களின் அமல்களைக் கொண்டு விசாலமாக்குவாயாக!
இறைவா! அவர்களின் இஃக்லாஸான சேவைகளை கபூல் செய்து மண்ணறையை சுவனத்தின் பூஞ்சோலையாக ஆக்குவாயாக!
மஹ்ஷர் வாழ்க்கையை
எளிதாக்குவாயாக!
மாநபி ஸல் அவர்களின்
ஷஃபாஅத்துக்கும் ஹவ்ளுல் கவ்ஸர் நீர் தடாகத்தின் நீருக்கும் உரியவராக்குவாயாக!
உயர் படித்தரங்கள் பல கொண்ட சுவனத்தின் அனந்தரராக அவர்களை ஆக்குவாயாக!
நபிமார்கள், நபித்தோழர்கள், நாதாக்கள், உயிர்த்தியாகிகள், நல்லோர்கள் நற்தோழமையை அவர்களுக்கு வழங்கியருள்வாயாக