வீட்டுக்கு வந்து நேர்ச்சை சோறும் அதன் அதீத சக்தியும்
*#வீட்டுக்கு_வந்த_நேர்ச்சை_சோறும், #அதன்_அதீத_சக்தியும்!!*
*#Ibrahim_Shahul_Hameed*
*சில தினங்களுக்கு முன்பு, ஊரில் உள்ள தர்காவில் வழங்கப்பட்ட நேர்ச்சை சோற்றை அன்புடன் கொண்டு வந்து கொடுத்தார் உறவினர் ஒருவர்.*
*அதை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, வீட்டுக்கு வந்த மற்றொரு உறவினரிடம் சாப்பிடுங்கள் என்று கூறிய போது "என்னது, நேர்ச்சை சோற்றை சாப்பிடுகிறீர்கள்? அது ஹராம் ஆச்சே, ஷிர்க் ஆச்சே" என்று ஏகத்துக்கு அறிவுரைகள்.*
*பொறுமையாக சாப்பிட்டு முடித்ததும், இரண்டு கேள்விகள் தான் கேட்டேன். பதில் சொல்ல முடியாமல் சென்று விட்டார்.*
*1. இந்த நேர்ச்சை சோற்றில் ஏதோ ஒரு சக்தி ஒளிந்துள்ளது என்று அச்சப்படும் நீங்கள் ஷிர்க் வைக்கிறீர்களா அல்லது இதை உணவு என்கிற ரீதியில் சாப்பிடும் நான் ஷிர்க் வைக்கிறேனா?*
*2. பாத்திஹா ஓதப்பட்ட உணவு என்று நீங்கள் கூறுவதாக இருந்தால் இன்றுமுதல், அரிசி உள்ளிட்ட பல தானியங்களை உணவாக உண்பதை நீங்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆடிப்பட்டத்தில் விதைக்கும் முன் விவசாயி, நல்ல மகசூல் பெற, தன் குலதெய்வத்தை வணங்கி, விதை நெல்லை வைத்து பூஜை செய்துதான் விதைக்கிறார். விளையும் ஒவ்வொரு மணியும் அந்த விதையில் இருந்துதான் வருகிறது. "அதை நான் பார்க்கவில்லை தானே" என்றார். இப்போது தெரிந்து கொண்டீர்கள் தானே? இனிமேல் சாப்பிடாதீர்கள் என்றேன். கிளம்பி விட்டார்.*
*பிறருடைய நோக்கத்திற்கும், செயலுக்கும் நாம் பொறுப்பாக முடியாது.*
*நண்பர்களே, உணவை உணவாக மட்டும் பாருங்கள். அதை தருபவர்களின் அன்பை பாருங்கள். அன்னதானத்தை, தானமாக பாருங்கள். அந்த உணவுக்குள் எந்த சக்தியும் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. கார்போஹைடிரேட்டும், புரதமும் தான் ஒளிந்து கொண்டுள்ளது. அதைப் புரிந்து கொள்வது தான் இறைவன் கொடுத்த பகுத்தறிவு.*
*காலங்காலமாக உங்கள் மூளையில் பதிக்கப்பட்ட போதனைகள் எனது கருத்தை ஏற்க முடியாமல் செய்யலாம். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. உங்கள் மனதை புண்படுத்துவதோ அல்லது சிலரிடம் லைக் வாங்குவதோ எனது நோக்கம் அல்ல. Controversial ஆன கருத்துக்களை ஆமோதிப்பதற்கே அச்சப்படும் சமூகம் என்பதை அறிவேன். ஆயினும் நமது வட்டத்தை தாண்டி சிந்திக்க வேண்டி இருக்கிறது.*
*இங்கு யாரும் மதத்தை பின்பற்றவில்லை. அதை கற்றுத் தருபவரைத் தான் பின்பற்றுகிறோம். அதனால் தான் ஆயிரம் பார்வைகள். ஒரு பொருளையே 360 கோணங்களில் பார்க்க முடியும் போது, ஒரு கருத்தை நோக்கிய சிந்தனைக்கு எத்தனை ஆயிரம் கோணங்கள் இருக்கும்?*
*வேத நூல்களை மனனம் செய்து, சரளமாக பேசினாலே அவர் அனைத்தும் அறிந்த ஞானி என்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். அந்த யாரோ சிலரின் பார்வைகளுக்குள் நமது சிந்தனை முடக்கப்பட்டு விட்டது. அவர்களின் பார்வையில் இருந்து சிந்திக்க பழக்கப்பட்டிருக்கிறோம். அவர்கள் பார்க்கும் கண்ணாடியை உங்களுக்கு அணிவித்து விட்டார்கள்.*
*அவர்கள், பொது சமூகத்திடம் இருந்து மட்டுமல்ல, சக சமூகத்திடம் இருந்தும் நம்மை அந்நியப்படுத்தி வெகுதூரம் கொண்டு சென்று விட்டார்கள். அதீத அச்ச உணர்வை ஊட்டி, அன்பை புறம் தள்ளி, எச்சரிக்கையை முன் கொண்டு வந்துவிட்டார்கள். ஒருவரை இன்முகத்துடன் பார்ப்பதற்கு கூட, அவரின் அக அடையாளங்களின் உட்பிரிவை தேடத் தொடங்கி விட்டோம்.*
*அவர்கள் மனதில் வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும் தான் குடிகொண்டுள்ளது. வெறுப்பு குடிகொண்டுள்ளவர், அன்புக்கு பாதை காட்ட முடியாது. சக மனிதரை மதிக்காதவர்கள் - நேசிக்காதவர்கள், இறைவனை மதிப்பதாக - நேசிப்பதாக கூறுவது ஏமாற்று.*
*இறைவன் அன்பானவன்!*
*அந்த நேர்ச்சை சோற்றின் அதீத சக்தி என்று குறிப்பிட்டது, அந்த 'உணவைக்' கொண்டு தந்தவரின் (இறைவனின்) அந்த அன்பைத் தான்!*
*சிந்தனையை விசாலப்படுத்தி, மனதை தெளிவு செய்யும் போது தான் அதை உணர முடியும்!*
❤️