காஃப் நாயகத்தின் பரிசுத்த இதயத்தை அறிமுகப்படுத்தும் நூல்

காஃப் நாயகத்தின் பரிசுத்த இதயத்தை அறிமுகப்படுத்தும் நூல்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#காஃப்

இச்சிறு நூல்
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்த இதயத்தை அறிமுகப்படுத்துகிறது...

பரிசுத்த குர்ஆனில் ஒரு அத்தியாயத்தின் பெயர் ق என்பதாகும்.
இந்த அத்தியாயத்தின் முதல் வசனம் ق என்ற எழுத்தைக் கொண்டு துவங்குகிறது.
இந்த எழுத்திற்கு பல குர்ஆன்
விரிவுரையாளர்களும் பல்வேறு விளக்கங்கள் அளித்துள்ளனர்.

பூமியை சுற்றி நிற்கும் ஒரு மலையின்
பெயர்தான் ق என்று இக்ரிமா ரழியல்லாஹு அன்ஹு
அவர்கள்
அபிப்பிராயப் படுகிறார்கள்.
இது அல்லாஹ்வின் பெயர் என இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.
இது குர்ஆனின் பெயரென சில முஃபஸ்ஸிருகள் சொல்லியுள்ளனர்.

ஆனால் இப்னு அத்தாஃ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் விளக்கத்தை பாருங்கள். ق என்பதை கொண்டு
திருபியின் இதயத்தின் சக்தியை அல்லாஹ் சத்தியம் செய்துள்ளான்.

குர்ஆன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இதயத்தைப் பற்றி மற்றொரு இடத்தில் இவ்வாறு கூறுகிறது.
1. (நபியே!) உமது உள்ளத்தை நாம் உமக்கு விரிவாக்கவில்லையா?

இந்த வசனத்தின் விளக்கவுரையில்
இமாம் ராஸி அவர்கள் இவ்வாறு பதிவு செய்கிறார்கள்.

ஒரு தடவை திருநபியிடம் நபித்தோழர்கள் கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதரே!
இதயம் விசாலமாக்கப்படுமா..?

ஆம்..
விசாலமாக்கப்படும்..

அதன் அடையாளம் என்னவென்று சஹாபாக்கள் கேட்டனர்.. வஞ்சகத்திலிருந்து விலகி நிற்பது,
சுவனத்தை ஆசைப்படுவது,
மரணத்திற்கு தயாராகுவது போன்றவை இதயம் விசாலமாக்கப்பட்டதின் அடையாளமாகும்..

நாயகத்தின் இதயம் விசாலமாக்கப்பட்டு இருந்தது என்பதின் பொருள் அவர்களது திருகல்பில் அறிவும், தத்துவ ஞானமும் நிறைக்கப்பட்டு இருந்தது என்பதாகும்..

#ஜிப்ரீல்_அலைஹிஸ்ஸலாம்
#அவர்களும்_நாயகத்தின்
#இதயமும்.

புண்ணிய ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது கல்பை பற்றிய குறிப்புகள் குர்ஆன் பல இடங்களில் கூறியுள்ளது..

சில உதாரணங்களை பார்க்கலாம்..

யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதியாவான் என்று நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி, உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கிவைக்கிறார்; அது, தனக்கு முன்னுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடியதாகவும், வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.

ஒரு தடவை யூதர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள்.

ஓ முஹம்மத்...
பூர்வகால நபிமார்களுக்கெல்லாம் அல்லாஹ்விடமிருந்து ள்ள தகவல்களை எத்திவைத்தது
ஒரு மலக்காகும்.
தாங்களுக்கு அது போன்றதொரு மலக்கு இருக்கிறார்கள் எனில் சொல்லுங்கள் நாங்கள் அவரை அங்கீகரிக்கலாம்.

உண்டு..
எனக்கு வஹ்யி எத்திவைப்பது ஜிப்ரீல் எனும் வானவராகும்.

அவர் எங்களது எதிரி
அவரை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம்.
இவ்வேளையில் தான் மேற்கூறப்பட்ட வசனம் அருளப்பட்டது..

திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பரிசுத்த இதயத்தில் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவதரித்தார்கள், ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் குர்ஆனை நாயகத்தின் இதயத்தில் இறக்கி வைத்தார்கள் என்று இரண்டு விளக்கங்கள் இந்த வசனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வசனத்தில்
திரு நபியின் இதயத்தை சொல்லக் காரணம் ஞானம், அல்லாஹ்வை குறித்த சிந்தனை போன்றவற்றின் மையப்பகுதி இதயம் என்பதினாலாகும்.
குர்துபி 2/36

இதுப்போன்ற மற்றொரு குர்ஆன் வசனத்தை கவனியுங்கள்..

وَاِنَّهٗ لَـتَنْزِيْلُ رَبِّ الْعٰلَمِيْنَؕ‏

மேலும், நிச்சயமாக இது அகிலத்தாரின் இறைவனால் இறக்கிவைக்கப்பட்டதாகும்.

نَزَلَ بِهِ الرُّوْحُ الْاَمِيْنُۙ‏

(அல்லாஹ்வின் கட்டளைப்படி) நம்பிக்கைக்குரிய ஆன்மா
(வானவர் ஜிப்ரீல்) இதைக் கொண்டு இறங்கினார்.

عَلٰى قَلْبِكَ لِتَكُوْنَ مِنَ الْمُنْذِرِيْنَۙ‏

(நபியே!) அச்சமூட்டி எச்சரிப்பவராக நீர் இருப்பதற்காக உம் இதயத்தின் மீது (இவ்வேதத்தை இறக்கினார்).

#இளகிய_மனம்..

மிக இளகிய மனமுடையவர்கள் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
எனவேதான் உலக மக்களை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஈர்த்தார்கள்.
இதை குர்ஆன் அழகாக எடுத்துச் சொல்கிறது.

அல்லாஹ்வின் கருணையினால்தான் நபியே நீர் அவர்களிடம் கருணை காட்டுகிறீர்கள். நீங்கள் கொடூரமானவராகவோ அல்லது கடின உள்ளம் கொண்டவராகவோ இருந்திருந்தால், அவர்கள் நிச்சயமாக உங்களைக் கைவிட்டிருப்பார்கள். எனவே அவர்களை மன்னித்து, அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள், மேலும் அவர்களுடன் ஆலோசனை நடத்துங்கள்.

குடும்பத்தினர், தோழர்கள், அனைவரிடமும் நல்லவிதமாக நடந்துக் கொண்டார்கள்.
அழகிய உபதேசங்கள் மூலம் சமூகத்தை திருத்தினார்கள்.
ரஊஃப், ரஹீம் போன்ற பெயர்கள் நாயகத்தின் சிறப்பு பெயர்களில் பட்டதாகும்.
இதுவும் நாயகத்தின் விசாலமான இதயத்தை சுட்டிக் காட்டும் பெயர்களாகும்.
மட்டுமல்ல குர்ஆன் வழங்கிய பெயர்களுமாகும்.

#மிஷ்காத்...

புண்ணிய ரஸுலின் இதயத்தை பரிசுத்த குர்ஆன் ஒரு உதாரணத்தின் மூலமாக சொல்கிறது..
அல்லாஹ் வானங்கள், பூமி ஆகியவற்றின் ஒளியாக இருக்கிறான்; அவனுடைய ஒளிக்கு உதாரணம்: ஒரு மாடத்தைப் போன்றிருக்கிறது: அதில் ஒரு விளக்கு இருக்கிறது; அவ்விளக்கு ஒரு கண்ணாடியினுள் இருக்கிறது; அக்கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும்; அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எரிக்கப்படுகிறது; அது கீழ்த்திசையைச் சேர்ந்ததுமன்று: மேல்திசையைச் சேர்ந்ததுமன்று; அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளிவீச முற்படும்; (இவை எல்லாம் சேர்ந்து) ஒளிக்கு மேல் ஒளியாகும்:

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த வசனத்தைக் குறித்து கஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்ட போது மேற்பட்ட வசனத்திலுள்ள உதாரணம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இதயத்தைப் பற்றி என கூறினார்கள்..

வசனத்தில் சொல்லப்பட்ட விளக்கு திருகல்பும்,மாடம் பரிசுத்த நெஞ்சுமாகும்.
அதுபோலவே நெஞ்சை பிரகாசிக்கும் நட்சத்திரங்களுடன் உவமைப்படு த்தியதையும் பார்க்க முடியும்....

#முதல் தடவை நெஞ்சு பிளக்கப்பட்டது

திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பரிசுத்தமான நெஞ்சு நான்கு தடவை திறக்கப்பட்டு இதயம் வெளியில் எடுக்கப்பட்டது என யூசுஃப் என்ற வரலாற்று ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.
அதில் ஒரு தடவை திருநபியின் சிறுவயதில் பனூ ஸஃத் குலத்திலே ஹலீமா அம்மையாருடன் வசிக்கும் வேளையில் நிகழ்ந்தது..

(நபியே!) உமது உள்ளத்தை நாம் உமக்கு விரிவாக்கவில்லையா?
என்று குர்ஆன் சொன்னது இந்த நெஞ்சு திறக்கப்பட்ட நிகழ்வைக் குறித்துதான் என அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஒரு அறிவிப்பில் காண முடியும்..
(ஸுபுலுல் ஹுதா 2/59)

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்..

நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வருகைத் தந்து நபி (ஸல்) அவர்களை மயக்குமுறச் செய்து, நெஞ்சைத் திறந்து இதயத்தை வெளியே எடுத்தார். அதில் ஒட்டியிருந்த ஒரு துண்டை அகற்றிவிட்டு ‘இது உம்மிடமிருந்த ஷைத்தானின் பங்காகும்’ என்று கூறி, தங்கத் தட்டில் இதயத்தை வைத்து அதில் ஜம்ஜம் தண்ணீரை ஊற்றிக் கழுவினார். பிறகு அந்த இதயப் பகுதிகளை ஒன்றிணைத்து நெஞ்சினுள் திரும்பப் பதித்துவிட்டார். இதைக்கண்ட சிறுவர்கள் ஹலீமாவிடம் ஓடோடி வந்து “முஹம்மது கொலை செய்யப்பட்டார்” என்றனர். நபி (ஸல்) அவர்களை நோக்கி அனைவரும் விரைந்தனர். அவர் நிறம் மாறிக் காட்சியளித்தார்.

அனஸ் (ரழி) கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்களின் நெஞ்சில் தைக்கப்பட்டதற்கான அடையாளத்தை நான் கண்டேன்.”
(ஸஹீஹ் முஸ்லிம்)

உத்பத் இப்னு அப்துஸ்ஸலமி அறிவிக்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

நான் பனூ ஸஃத் குலத்தில் ஹலீமா அம்மையாரின் வீட்டில் வசிக்கும் போது என் சகோதரருடன் வெளியில் விளையாட சென்றேன்.
அப்போது நாங்கள் சாப்பாடு எடுத்துச் செல்லவில்லை.
கொஞ்சம் தூரம் நடந்து ஒரு பாறைக்கு அருகில் வந்த போது நான் என் சகோதரரிடம் கூறினேன்.

நான் இங்கே நிற்கிறேன்.
நீ வீட்டிற்கு சென்று உம்மாவிடம் உணவு வாங்கி வா...
அவர் நாயகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க உணவு வாங்க வீட்டிற்கு விரைந்தார்.
நான் பாறைக்கு அருகில்
அவருக்காக காத்திருந்தேன்.
அதற்கிடையில் பருந்து போன்ற இரண்டு பறவைகள் எனது அருகே பறந்து வந்தது.
இவரையா நாம் தேடுகிறோம் என ஒரு பறவை என்னைப் பார்த்து மற்ற பறவையிடம் கேட்டது.
ஆம் இவரைத்தான் நாம் தேடுகிறோம் என்று மற்ற பறவை பதில் கூறியது.

அந்நேரத்தில் அவர்கள் என்னை மலர்த்தி கிடக்கச் செய்து நெஞ்சை பிளந்து இதயத்தை வெளியில் எடுத்தனர்.
அதில் ஒட்டியிருந்த அதில் கறுத்த இரண்டு துண்டுகளை அகற்றினர்.
பிறகு ஒரு பறவை சொன்னது.

கொஞ்சம் மஞ்சள் கட்டையை கொண்டு வாருங்கள்.
அதைக் கொண்டு எனது சரீரத்தின் உட் பகுதியை கழுவிய பின்னர் இப்படிச் சொன்னது.
கொஞ்சம் குளிர்ந்த நீரைக் கொண்டு வாருங்கள்.
கொண்டு வரப்பட்ட குளிர்ந்த நீரைக் கொண்டு எனது இதயம் கழுவப்பட்டது.

ஞானத்தை கொண்டு வாருங்கள்.
பின்னர் ஞானத்தை கல்பில் நிறைக்கப்பட்டு இனி இதை மூடுங்கள் என்று ஒரு பறவை மற்ற பறவையிடம் கூறியது.

பிறகு அந்த இதயப்பகுதிகளை ஒன்றிணைத்து நெஞ்சினுள் திரும்ப பதித்து விட்டு நுபுவ்வத்தின் முத்திரை பதிக்கப்பட்டது..

___________________________

#இரண்டாம் தடவை நெஞ்சு பிளக்கப்பட்டது...

பேரருள் நாயகத்தின் நெஞ்சு இரண்டாம் தடவை பிளக்கப்பட்டது அவர்களது பத்தாவது வயதில் என்று யூசுஃப் ஸாலிஹி பதிவு செய்துள்ளார்..

உபய்யி இப்னு கஃப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிலிருந்து அறிவிக்கப்படும் செய்தி
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார்கள்..

நாயகமே!!
நுபுவ்வத்தின் முக்கிய கட்டங்கள் எவ்வாறு இருந்தது..

அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

நான் எனது பத்தாவது வயதில் பாலைவன பூமியில் நடக்கும் போது இரண்டு பேர் வானிலிருந்து என் அருகே வந்தனர்.
அவர்கள் என்னை பிடித்தனர்.
அவர்களைப் போன்ற மனிதர்களையோ, அவர்கள் அணிந்து இருக்கும் ஆடையைப் போன்ற ஆடையையோ இதுவரை நான் பார்த்தது இல்லை

அவர்கள் என்னைக் கிடத்தினார்கள்.
எனது நெஞ்சைக் கீறினார்கள்.
அப்போது இரத்தமோ,வலியோ ஏற்படவில்லை.
பின்னர் தங்கப் பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து எனது வயிற்றைக் கழுவினர்.
பிறகு எனது நெஞ்சை அவர்கள் பிளத்தினர்.
இதயத்தை வெளியில் எடுத்தனர்.

இந்த இதயத்திற்கு பொறாமை, வஞ்சகம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு வழங்குங்கள் என்று ஒருவர் கூறினார்.
உடனே அதிலிருந்து ஒரு இரத்த சதையை வெளியில் எடுத்து எறிந்தனர்.
இனி இதயத்தில் கருணை, கிருபையை நிறையுங்கள்.
பிறகு வெள்ளிப் போன்று பிரகாசிக்கும் ஒன்றை அதில் நிறைத்தனர்.
பிறகு அதில் ஒரு விதமான தூளை தூவினர்.
கடைசியாக எனது பெருவிரலில் ஊதினார்கள்.
அத்துடன் எனது இதயம் பழைய நிலைக்கு திரும்பிது.

#மூன்றாம் தடவை நெஞ்சு பிளக்கப்பட்டது..

திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதராக அனுப்பப்பட்ட வேளையில் தான் மூன்றாவது தடவை நெஞ்சு பிளக்கப்பட்டது.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்..

ஒரு ரமளானின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கதீஜா அம்மையாரும் வணக்கத்தில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் நேரத்தில் ஓர் இரவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளியே சென்றார்கள்.
அப்போது வானிலிருந்து ஒரு சத்தம் கேட்டது.

அஸ்ஸலாமு அலைக்கும்.

இது ஜின்னின் சத்தம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நினைத்தார்கள்.
சத்தம் கேட்டவுடன் கதீஜா அம்மையார் நாயகத்தின் அருகில் சென்றார்கள்.
நாயகத்தின் அச்சத்தை கண்டு கதீஜா அம்மையார் நாயகத்திடம் என்ன சம்பவித்தது என்று கேட்டார்கள்.
கேட்ட சப்தத்தை குறித்து பீவியிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்..

நாயகமே!?
நீங்கள் மகிழ்ச்சி அடையுங்கள்..
நீங்கள் கேட்ட சத்தத்திற்கு பின்னால் ஒரு நன்மை வர இருக்கிறது.

சில தினங்களுக்கு பிறகு மற்றொரு இரவில் நாயகம் வெளியேச் சென்றார்கள்.
அவ்வேளையில் ஜீப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை பார்த்தார்கள்.
அவரது ஒரு இறக்கை கிழக்கிலும் மற்றொரு இறக்கை மேற்கிலும் விரித்து வைத்துக் கொண்டு இருந்தார்கள்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதைப் பார்த்தவுடன் பயந்து வீட்டிற்கு ஓடி விட்டார்கள்.
உடனே வீட்டின் வாசல் முன் என்னைத் தடுத்து நிறுத்தி ஏதோ சில விஷயங்கள் என்னிடம் கூறினார்கள்.
மீகாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்கி வந்தார்கள்.
ஜீப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நாயகத்தைப் பிடித்து மலர்த்தி கிடத்தினார்கள்.
பின்னர் நெஞ்சை பிளந்து இதயத்தை வெளியே எடுத்தார்கள்.
பிறகு ஸம்ஸம் தண்ணீர் நிறைக்கப்பட்ட பாத்திரத்தை கொண்டு வந்து கல்பை அதில் கழுவினார்கள்.
பின்னர் பழையபடி இதயத்தை அதை இடத்தில் வைத்து தைய்த்தார்கள்
பிறகு அவர்களது முதுகில் நுபுவ்வத்தின் முத்திரையை பதித்தனர்.

குறித்த அந்த
முத்திரையின் குளிர்ச்சி இதயத்தில் அனுபவப் படுவது உண்டு என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல வேளைகளில் சொல்லியுள்ளார்கள்...

#நான்காம் தடவை நெஞ்சு பிளக்கப்பட்டது..

இஸ்ராஃ மிஃராஜ் பயணத்திற்கு முன்னோடியாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெஞ்சு நான்காம் தடவையாக பிளக்கப்பட்டு இதயத்தை வெளியில் எடுக்கப்பட்டது.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வல்லவா இஸ்ராஃ மிஃராஜ்.

மக்காவிலிருந்து பைத்துல் முகத்தஸ் வரையிலான பயணத்திற்கு இஸ்ராஃ என்றும் அங்கிருந்து அல்லாஹ்வை தரிசிக்க சென்ற பயணத்திற்கு மிஃராஜ் என்றும் அறியப்படுகிறது..

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம்

நபி(ஸல்) அவர்களின் மக்கா வாழ்வின் போது நடைபெற்ற மிக அற்புதமான நிகழ்ச்சி மிஃராஜ். நபிகளாரின் இந்த விண்ணுலகப் பயணம் படிப்பினைகளும், பாடங்களும் நிறைந்தது. இறைத்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் மிஃராஜ் - விண்ணுலகப் பயணத்தை உண்மையென உறுதியாக நம்புவது இறைநம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.

மிஃராஜ் நிகழ்வின் சுருக்கம்

நபி (ஸல்) அவர்களின் சிறியதந்தை அபூதாலிப் அவர்களின் மகளான உம்மு ஹானி(ரலி) அவர்களின் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது நபி(ஸல்) அவர்கள் எழுப்பப்பட்டு ஜம்ஜம் கிணற்றுக்கு அருகில் அழைத்து வரப்பட்டார்கள். அங்கே அவர்களது நெஞ்சு பிளக்கப்பட்டு அதிலிருந்து அவர்களது இதயம் எடுக்கப்பட்டது. அது ஜம்ஜம் நீரால் கழுவப்பட்டு ஞானத்தால் நிரப்பப்பட்டது. பின்பு அங்கிருந்து புராக் எனும் வாகனத்தில் ஜீப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் தனது இஸ்ராஃ மிஃராஜ் பயணத்தை மேற்கொண்டார்கள்.
ஸுபுலுல் ஹுதா 2/62.

இதுபோன்ற நெஞ்சு பிளக்கப்பட்ட சம்பவங்கள் மூலம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு
மன தைரியமும், திடமான நம்பிக்கையும்
உருவானது.

இந்த சம்பவங்களை மறுப்பவர்களும் அதொரு கற்பனை மட்டுமே என கருதுபவர்களும்,
சொல்லி திரிபவர்களும்
விவரம் இல்லாத மூடர்கள் என்று இமாம் யூசுஃப் ஸாலிஹி பதிவு செய்துள்ளார்கள்.
ஸுபுலுல் ஹுதா 2/65.

அல்லாஹ் நம் அனைவரையும் பரிசுத்த இதயங்களின் சொந்தக்காரர்களாக ஆக்கியருள்வானாக