அஹ்மத் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

அஹ்மத் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

அஹ்மத்_முஹம்மத்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்..

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏராளமான பெயர்கள் உண்டு.
அதில் சிலது குர்ஆனிலும்,
ஹதீஸிலும் வந்துள்ளது.
மற்று சிலது பண்டைய கால அறிஞர்களின் நூல்களில்
காணக்கூடியவையாகும்.
அதில் மிகவும் முக்கியத்துவம் பெற்றதும், மகத்துவம் உள்ளதும் முஹம்மது, அஹ்மத் என்ற இரண்டு பெயர்களாகும்.
அந்த இரு பெயர்களைப் பற்றிய செய்திகள், மற்றும் அவற்றின் சிறப்புக்களைக் குறித்து இந்த நூலில் தொகுத்து வழங்கி உள்ளோம்..

முஹம்மது எனும் பெயர் குர்ஆனில்.
_________________________________________

திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முஹம்மது என்ற பெயர் குர்ஆனில் நான்கு இடங்களில் சொல்லப்பட்டுள்ளது...

1 : முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்;
(ஆலு இம்ரான். 144)

2 : முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.
(அல் அஹ்ஸாப்_40)

3 : ஆனால், எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, முஹம்மது மீது இறக்கி அருளப்பட்ட (வேதத்)தின் மீது - இது அவர்களுடைய இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையாக இருக்கிறது என்று நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் போக்கி, அவர்களுடைய நிலையையும் சீராக்குகின்றான்.
(முஹம்மது_2)

4 : முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்;
(அல் ஃபத்ஹ்_29)

அல்லாஹ் தனது திருமறையில் நபிமார்களை அழைக்கும் போது அவர்களின் பெயர்களைக் கொண்டு கூப்பிடுகிறான்.
ஆனால் நபி (ஸல்) அவர்களை அழைக்கும் போது அவர்களை தூதரே, நபியே என்று அழைக்கிறான்.
மா நபியின் பெயரைக் கொண்டு அல்லாஹ் ஓரு இடத்திலும் அழைக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்..

ஒருவர் தனக்கு கீழ் உள்ளவரை அழைக்கும் போது அவரின் பெயரைச்சொல்லி அழைப்பதும் உண்டு. பெரும்பாலும் அவரிடம் இருக்கும் மிக உயர்ந்த தன்மைகளைச் சொல்லி அழைப்பதும் உண்டு. இப்படித்தான் நபி (ஸல்) அவர்களை அழைக்கும் போது அவர்களிடம் இருந்த மிக உயர்ந்த பண்பான நபித்துவத்தையும், தூதுத்துவத்தையும் சொல்லி அழைக்கிறான்.
அத்தோடு மனிதர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைக்கும் போது சாதரண மக்களை அவர்களின் பெயரைச் சொல்லி அழைப்பது போன்று அழைக்க கூடாது என்றும் தடுத்திருக்கிறான்.
உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப் போல் இத்தூதரை அழைக்காதீர்கள்! உங்களில் மறைந்து நழுவி விடுவோரை அல்லாஹ் நன்கறிவான். அவருடைய கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்குத் துன்பம் ஏற்படுவதையோ, துன்புறுத்தும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளவும்.
அல் குர்ஆன் (24 : 63).

ஹம்து என்ற சொல்லின் உருமாற்றம் தான் முஹம்மது.
ஹம்து என்றால் புகழ் என்று அர்த்தம்.
முஹம்மது என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்களை பார்க்க முடியும்.
புகழப்பட்ட நபர் என்ற ஒரு அர்த்தம் இதற்கு உண்டு.
திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் புகழ்ந்து பேசுவதற்கு காரணமாக இருக்கும் செயல்கள் மூலம் உலக மக்கள் அனைவரும் நபியை புகழ்கிறார்கள் என்று சுருக்கம்.
இந்த பெயரை வைப்பதற்கு தாயார் ஆமீனா பீவியிடம் ஏவப்பட்டது.
பிரபல வரலாற்று அறிஞர் இப்னு அறிவிக்கிறார்கள்

ஆமீனா பீவிக்கு பிரசவம் நடந்த வேளையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிபிடம் ஒரு தூதரை அனுப்பி இவ்விதம் கூறினார்கள்.

ஓ அப்துல் முத்தலிப்.
உங்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.
சீக்கிரம் நீங்கள் இங்கே வாருங்கள்..

அப்துல் முத்தலிப் மிக்க மகிழ்ச்சி பெருத்து ஆமீனா பீவியை நோக்கி விரைந்தார்கள்.
குழந்தையைக் கண்டு ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்கள்.
பிரசவ வேளையில் நடந்த அற்புத காரியங்கள் அனைத்தையும் ஆமீனா பீவி அப்துல் முத்தலிபிடம் சொல்லி ஆனந்தமடைந்தார்கள்.
குழந்தைக்கு வைக்க வேண்டிய பெயர் கூட ஆமீனா பீவியிடம் சொல்லப்பட்டு இருந்தது.
அந்த அடிப்படையில் அப்துல் முத்தலிப் முஹம்மது என்ற பெயரை வைத்தார்கள்.

(ஸீறத்து இப்னு ஹிஷாம் 1/160)

அப்துல் ஹகம் ரழியல்லாஹு அன்ஹு அறிவிப்பு செய்கிறார்கள்.

திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த ஏழாம் தினம் பாட்டனார் அப்துல் முத்தலிப் ஜனங்களை வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
அனைவரும் உணவு அருந்திய பின்னர் கேட்டனர்

ஓ அப்துல் முத்தலிப்
தாங்கள் குழந்தைக்கு என்ன பெயர் சூட்டினீர்கள்..

அப்துல் முத்தலிப்.
முஹம்மது என்று பதிலுரைத்தார்.

முஹம்மதா..?
உங்களுடைய குடும்பத்தில் யாருக்கும் இல்லாத பெயர் அல்லவா இது..?
என்று ஆச்சரியத்துடன் அவர்கள் கேட்டனர்..

ஆமாம்....
வான பூமியிலுள்ளவர்கள் இந்த குழந்தையின் பெயரை சொல்வதின் மூலம் தன்னை புகழ்த்தப்படுவதற்க்காக இந்த பெயரை சூட்டினேன் என அப்துல் முத்தலிப் விளக்கம் அளித்தார்கள்..

அதிகமான அளவில் அல்லாஹ்வை புகழும் நபர் என்ற ஒரு அர்த்தமும் இந்த பெயருக்கு உள்ளது.
உலகில் மிக அதிகம் அல்லாஹ்வை புகழ்த்திய, ஸ்துக்கிற நபர் நாயகத்தை தவிர வேறு யாராவது உண்டா..?

முஸ்லிமும் முஹம்மதும்.
____________________________________

முஸ்லிமல்லாதவர் இஸ்லாத்தில் நுழையும் போது இரண்டு ஷஹாதத் கலிமா மனதால் உறுதி செய்து நாவால் மொழிய வேண்டும்.

لا اله الا الله محمد الرسول الله.

என்பதுதான் ஷஹாதத் கலிமா.
அல்லாஹ்விலுள்ள நம்பிக்கையும், தூதரிலுள்ள
நம்பிக்கையும் இதன் பொருள்.
இந்த ஷஹாதத் கலிமா விலும் நாயகத்தின் பெயரான முஹம்மத் என்ற பெயர் சொல்லப்பட்டிருப்பது மிகவும் கவனிக்கத்தக்கது.
இங்கே முஹம்மத் என்ற பெயருக்கு பதிலாக வேறு பெயர்களை மொழிந்தால் அது ஷஹாதத் கலிமாவாக ஏற்கபடாது என ஃபிக்ஹ் நூற்களில் பார்க்க முடியும்..

முஹம்மத் என்ற பெயருக்கு மற்ற பெயர்களை விட சிறப்புகள் உண்டு என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்..

அத்தஹிய்யாத்தும் முஹம்மதும்..
________________________________________

தொழுகையின் ஃபர்ளுகளில் உட்பட்டது தான் அத்தஹிய்யாத்.
இதன் எழுத்துக்களை கவனமாக உச்சரித்தும்,
தவறுதல் இல்லாமல் சொன்னால் மட்டுமே
தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும்.
அத்தஹிய்யாத்திலும் ஷஹாதத் கலிமாவின் வசனங்கள் இருக்கிறது.
இங்கேயும் முஹம்மத் என்ற பெயரைத்தான் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதிலும் முஹம்மத் என்ற பெயருக்கு பதிலாக மற்ற பெயர்களை பயன்படுத்தினால் அத்தஹிய்யாத் சரியாகாது என்று இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹ் கூறியுள்ளார்கள்..

அர்ஷும்_ முஹம்மதும்..
___________________________________________

அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு படைப்பு தான் அர்ஷ்
அர்ஷைப் பற்றி குர்ஆனில் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.
குர்ஆன் 25 தடவை சொன்னதில் ஒரு வசனம் இப்படி இருக்கிறது..

அர்ஷின் மேல் அல்லாஹ் மற்றும் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆகியோர் நாமம் பொறிக்கப்பட்டிருப்பதாக இமாம் ஹாகீம் ரழியல்லாஹு அன்ஹு மற்றும் அறிவிப்பு செய்யும் ஹதீஸ்களில் பார்க்க முடியும்..
அதில்
எழுதப்பட்டிருப்பதும் முஹம்மத் என்ற பெயராகும்.
மற்ற பெயர்கள் ஒன்றும் அதில் எழுதப்படவில்லை.
இதுவும் முஹம்மத் என்ற பெயருக்கு இருக்கும் மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது.
ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சில பிழைகள் ஏற்பட்ட போது அர்ஷின் மேல் எழுதப்பட்ட நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயரை முன்னிறுத்தி பிரார்த்தித்தார்கள் என்று அறிவிப்புகளில் பார்க்க முடியும்..

ஆதம் நபியும் முஹம்மதும்...
_______________________________________

முதல் மனிதனும், முதல் நபியும் ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களல்லவா..?
சுவனத்தில் வைத்து தான் அவர்களை படைக்கப்பட்டது..
ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் பல்வேறு வெகுமதிகளை வழங்கியுள்ளான்.
அதனால் தான் மலக்குகள் அனைவரும் ஆதம் நபிக்கு சிரம் பணிந்ததும், இறைக் கட்டளையை அங்கீகரிக்காத ஷைத்தான் சுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டதும்.

ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுவனத்தில் அபூ முஹம்மத் என்ற சிறப்பு பெயரில் அழைக்கப்பட்டார்கள்.
முஹம்மதின் தந்தை என்பதுதான் இதன் அர்த்தம்.
ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு எண்ணிலடங்கா சந்ததியினர் இருந்தும் இந்த பெயரில் அழைப்பது மூலம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகத்துவமும் முஹம்மத் என்ற பெயரின் சிறப்பையும் புரிந்து கொள்ள முடியும்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பிறவி நிகழ்வதற்கு முன்னரே
அவர்களின் முஹம்மத் என்ற பெயர் அறிவிக்கப்பட்டுவிட்டது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள இயலும்.
அல்லாஹ்வின் அறிவுறுத்தலின்படி தான் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முஹம்மத் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது..

சுலைமான் அலை முஹம்மதும்...
_______________________________________

உலகை ஆண்ட ஒரு ஆட்சியாளர்தான் சுலைமான் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.
அவர்களைப்பற்றி குர்ஆனில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது
உலகிலுள்ள அனைத்தையும் சுலைமான் நபி அலைஹிஸ்ஸலாம் கீழ்ப்படுத்தி
யிருந்தார்கள்.
குர்ஆனின் வசனத்தை கவனியுங்கள்

மேலும் ஸுலைமானுக்கு ஜின்கள் மனிதர்கள் பறவைகள் ஆகியவற்றிலிருந்து அவரது படைகள் திரட்டப்பட்டு, அவை (தனித் தனியாகப்) பிரிக்கப்பட்டுள்ளன
(அந்நம்லு.. 17)

இது சுலைமான் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருளாகும்.
காற்றும் அவர்களின் விருப்ப பிரகாரம் பயணித்தது என்று மற்றொரு வசனத்தில் பார்க்க முடியும்.
திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முஹம்மது என்ற பெயரை மொழியும் போதுதான் ஷைத்தான்கள் தனக்கு கீழ்ப்படுவார்கள் என்று இப்னு இமாத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்..
ஸுபுலுல் ஹுதா 1/408.

நூஹ் நபி அலைஹிஸ்ஸலாம் .. வும் முஹம்மதும்...
________________________________

புராதன கால நபிமார்களுக்கெல்லாம் நழி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முஹம்மத் என்ற பெயர் அறிமுகம் உண்டு என்பதை மேற் குறிப்பிட்டவையிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.
அல்லாஹ்வின்
தூதர்களில் சங்கை மிகுந்தவரும் குர்ஆன் பெயர் எடுத்துக கூறிய ஒரு நபி தான் நூஹ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

950_ வருடங்கள் மத பிரச்சாரம் நடத்திய இறைத்தூதர் நூஹ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

இருந்த போதிலும் துச்சமான மக்கள் மட்டுமே இஸ்லாத்திற்கு வருகைத் தந்தனர்.
இறுதியில் இறை மறுப்பாளர்களுக்கு தண்டனை வழங்க அல்லாஹ் தீர்மானித்த வேளையில் இந்த விபரத்தை நூஹ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கூறினான்.

நூஹ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், விசுவாசிகளையும் அல்லாஹ் வெள்ளப்பெருக்கிலிருந்து காப்பாற்றினான்.
அல்லாஹ் ஆரம்பத்திலேயே நூஹ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கப்பல் கட்டுவதற்கு உத்தரவிட்டு இருந்தான்.
அதனால் அவர்கள் கப்பல் கட்டினார்கள்.
தாமதிக்காமல் வெள்ளப்பெருக்கும் வந்தது.
நூஹ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களும், விசுவாகளும், மற்று உயிரினங்களும் கப்பலில் ஏறி பயணித்தனர்.
கப்பல் பயணிப்பதற்கு வேண்டி முஹம்மத் என்ற பெயரை நூஹ் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மொழிந்தார்கள் என்று
யூசுஃப் ஸாலிஹி அறிவிப்பு
செய்துள்ளார்கள்...

ஜாஹிலிய்யத்தும் முஹம்மதும்..
__________________________________

திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகைக்கு முன்பு ஜாஹிலிய்யா காலகட்டத்திலேயே முஹம்மத் என்று சிலருக்கு பெயர் வைக்கப்பட்டதாக அறிவிப்புகளில் பார்க்க முடியும்.

முஹம்மத் இப்னு அதிய்யி கூறுகிறார்.

நான் ஒரு தடவை என் தந்தையிடம் கேட்டேன்.

வாப்பா!!
நீங்கள் எதற்காக எனக்கு முஹம்மத் என்ற பெயரைச் சூட்டினீர்கள்.
முன்னர் நான் பனூ தமீம் குத்தார்களுடன் ஒரு பயணம் மேற்கொண்டேன்.
பயணத்திற்கு மத்தியில் ஒரு சின்ன அருவிக்கரை யில் ஒதுங்கினோம்.
அப்போது ஒரு புரோகிதர் வந்தார்.
அவர் சொன்னார்..
வெகு விரைவில் உங்கள் சமூகத்தில் ஒரு தூதர் வருகைத் தருவார்.
நீங்கள் அவரை ஏற்றுக் கொள்ள வேண்டும்..

தூதரா..?
அவரின் பெயர் என்ன..?
பெயர் முஹம்மத் என்பதாகும்.
இதுக் கேட்டு நாங்கள் ஊருக்கு திரும்பினோம்.
பிறகு அந்த பயணத்தில் இருந்த அனைவரது மனைவிமார்களும் கர்ப்பிணியானார்கள்.

நாங்கள் எல்லாரும் பிறந்த குழந்தைகளுக்கு முஹம்மத் என்ற பெயர் வைத்தோம்.
அப்படித்தான் உனக்கு முஹம்மத் என்ற பெயர் சூட்டப்பட்டது என்று தந்தை விவரித்தார்.

இருபது குழந்தைகளுக்கு ஜாஹிலிய்யா காலகட்டத்தில் இந்த பெயர் சூட்டப்பட்டது என நூல்களில் பார்க்க முடியும்..

ஜாஹிலிய்யா காலகட்டத்தில் முஹம்மத் என்ற பெயர் சூட்டப்பட்ட வர்களின் பெயர் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளன..

1 : முஹம்மத் இப்னு உஹைஹா.

2 : முஹம்மத் இப்னு உஸாமத் ப்னு மாலிக்.

3 : முஹம்மத் இப்னுல் பர்ர ப்னு துரைஃப்.

4 : முஹம்மத் இப்னுல் ஹாரிஸ் ப்னு ஹுதைஜ்.

5 : முஹம்மத் இப்னு ஹிர்மாஸ்.

6 : முஹம்மத் இப்னு குஸாயி.

7 :முஹம்மத் இப்னு கவ்லிய்யி.

8 : முஹம்மத் இப்னு ஸுஃப்யானு ப்னு முஜாஸிஃ.

9 : முஹம்மத் இப்னு அதிய்யி.

10 : முஹம்மத் இப்னு உத்பத்.

11 : முஹம்மத் இப்னு உமர்

12 : முஹம்மத் இப்னு யுஹ்மத்.

13 : முஹம்மத் இப்னு யஸீத்.

14 : முஹம்மதுல் உஸ்திய்யி.

15 முஹம்மதுல் ஃபுகைமிய்யி.
ஸுபுலுல் ஹுதா. 1/410

தவ்ராத்தும் முஹம்மதும்
_______________________________

பூர்வ வேதமான தவ்ராத்திலும் முஹம்மத் என்ற பெயர் இருப்பது சில நிகழ்வுகளிலிருந்து தெளிவாகிறது..

பனூ இஸ்ரவேலில் நூறு வருடங்கள் பாவங்கள் மட்டுமே செய்த ஒருவர் மரணமடைந்தார்.
மக்களெல்லாம் அவரை இழிவாக கருதினர்.
அப்போது மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் இவ்வாறு வஹ்யி இறக்கினான்.

மூஸா நீங்கள் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்துங்கள்.

யா அல்லாஹ்..!!!
அவர் வாழ்நாள் முழுவதும் உனக்கு மாறு செய்து நடந்தவரல்லவா..?

ஆம்.. அவர் பாவம் செய்துள்ளார்.
ஆனால் அவர் தவ்ராத் வேதத்தை வாசிக்கும் போதெல்லாம் முஹம்மத் என்ற நாமத்தை முத்தம் கொடுத்து அதை கண் மீது வைக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தார்.
அதனால் தான் அவரது பாவங்களுக்கு மன்னிப்பு வழங்கி ஹுருல் ஈன் பெண்களை அவருக்கு இணையாக ஆக்கியுள்ளேன் என்று கூறினான்..

வானமும் முஹம்மதும்..
____________________________

உலகம் முழுவதும் நாயகத்தின் கீர்த்திகளாகும்.
அல்லாஹ் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கண்ணியப்படுத்தி கவுரவப்படுத்தி ஏற்பாடு செய்த பயணம் தான் இஸ்ராஃ மிஃராஜ்..
அந்த பயணத்தில் பல்வேறு வகையான அற்புதங்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டார்கள்.

இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பு செய்கிறார்கள்..

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்..

எல்லா வானங்களிலும் எனது பெயர்கள் பொறிக்கப்பட்டு இருப்பதை எனது மிஃராஜ் பயணத்தின் போது பார்த்தேன்..

இந்த நபிமொழி ஏராளமான ஸனதுகளின் மூலம் அறிவிக்கப்பட்ட ஹதீஸாகும்.
மேலும் இந்த நபிமொழி ஸஹீஹ் என்று ஹதீஸ் கலை வல்லுநர்கள் அறிவித்துள்ளனர்..

அஹ்மத் குர்ஆனில்..
____________________________

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறப்பு வாய்ந்த மற்றுமொரு பெயர் தான் அஹ்மத் எனும் பெயர்..
குர்ஆனில் இந்த பெயரை காணமுடியும்..

மேலும், மர்யமின் குமாரர் ஈஸா: “இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹமது” என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் “இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள்.
ஸூரத்துஸ் ஸஃப்ஃபு
வசனம்.. 6

திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன்பாக அஹ்மத் என்ற பெயர் எவருக்கும் சூட்டப்படவில்லை என நூற்களில் பார்க்க முடியும்..
திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னர் இந்த பெயர் முக்கியமாக வழங்கப்பட்டது இமாம் ஸீபைவைஹி அவர்களின் உஸ்தாதான கலீல் என்பவரின் தந்தைக்காகும்.
ஆனால் அபுந்நழ்ர் என்ற நபருக்குத் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னர் முதலாவதாக இந்த பெயர் சூட்டப்பட்டது என்ற கருத்தும் உண்டு.

இவருக்கு அஹ்மத் என்றல்ல யுஹ்மது என்றுதான் சூட்டப்பட்டது என சில அறிஞர்கள் திட்டவட்டமாக கூறுகின்றனர்..

அஹ்மதும் முஹம்மதும்.
____________________________

இந்த இரு பெயர் களுக்கும் வெவ்வேறான அர்த்தங்கள் இருக்கிறது.
மிகவும் அதிகமாக புகழப்படும் நபர் என்று முஹம்மத் என்பதற்கு அர்த்தம் உள்ளது என்பதை நாம் முன்பு குறிப்பிட்டோம்...

அஹ்மத் என்பதற்கு மக்களில் மிகவும் மகத்தான புகழ் கிடைக்க வேண்டிய நபர் என்பதாகும்.
அதாவது முஹம்மத் புகழின் எண்ணிக்கையையும், அஹ்மத் புகழின் வெகுமதியையும் குறிக்கிறது.
இது அல்லாது வேறு பல அபிப்பிராயங்களும் உண்டு.

ஆதாரங்கள்..

அல் பிதாய வந்நிஹாயா
ஸீரத்து இப்னு ஹிஷாம்
ஸுபுலுல் ஹுதா
தாரீக்கு பக்தாத்.

++++++++++++++++++++++++++++++++

தமிழில்:
M.சிராஜுத்தீன்_அஹ்ஸனி.