போர் களத்தில் சிங்கத்தின் கர்ஜனை
உவைஸ் இப்னு அபீ வக்காஸ்.
(போர் முகத்தில் சிங்கத்தின் கர்ஜனை)
போரையும், மோதலையும்
இஸ்லாம் ஒருபோதும் ஊக்குவித்ததில்லை. சகிப்புத்தன்மையே இஸ்லாத்தின் அடையாளம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவரது தோழர்களும் மக்காவில் பல வன்முறைகளையும், சித்திரவதைகளையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. அவ்வேளையில் அவர்கள் பொறுமையை கையாண்டு மற்றவர்களிடம் பொறுமையாக இருக்கும்படி கட்டளையிட்டார். கடைசியில் நிம்மதியாக வாழ முடியாமல் போனபோதும்
தன் எதிரிகளை போருக்கோ,
போராட்டத்திற்கோ அழைக்கவில்லை.
மாறாக, அவர் தனது பூர்வீக நிலத்திலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றார்கள்.
ஆனால் அதற்குப் பிறகும் எதிரிகள் பல்வேறு வழிகளில் தாக்குதலைத் தொடர்ந்தனர்.
அப்போது எதிர்வினையாற்றுவதைத்தவிர வேறு வழியிருக்கவில்லை.
பிறகு, நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் தற்காப்பு நடவடிக்கைகளில்
ஈடுபடத் தொடங்கினர்.
தங்களது உயிருக்குக்கூட ஆபத்து என்ற நிலையில்தான் இஸ்லாம் இத்தகைய எதிர்ப்புப் போராட்டங்களுக்கு முன்முயற்சி எடுத்தது.
இத்தகைய கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிலர் போர்களத்தில் இறந்தனர்.
அவர்கள் 'ஷஹீத்' அதாவது தியாகிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் ஆரோக்கியம், செல்வம் மற்றும் அனைத்து வசதிகளையும் இஸ்லாத்திற்காக அர்ப்பணித்தவர்களாகும்.
இஸ்லாத்தில் 'ஜிஹாதி' மற்றும் 'தியாகி' என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளாத சிலர் இருக்கிறார்கள்.
இஸ்லாம் ஒருபோதும் குழப்பங்களுக்கும், மோதலுக்கும் வழிவகுக்கவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட குழுக்கள் இஸ்லாத்தின் பெயரால்
இவ்வாறான கூட்டங்கள் செயல்படுகிறார்களெனில்
இஸ்லாத்தையும், அதன் போராட்டங்களையும் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களாகும். உண்மையில் அவர்கள் இஸ்லாத்தை அழிப்பவர்கள்.
உயிருள்ள தியாகிகள்
அல்லாஹ்வின் பாதையில் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு பல பெருமைகள் உண்டு. அவர்களைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு அறிவித்துள்ளது.
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்!
மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர், உணவளிக்கப்படுகின்றனர்.
தமக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். தம்முடன் (இதுவரை) சேராமல் பின்னால் (உயிர் தியாகம் செய்து) வரவிருப்போருக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
இந்த வசனத்தின் விளக்கவுரையில்
இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் மேற்கோள் காட்டிய ஹதீஸைக் கவனியுங்கள்.
இப்னு அப்பாஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உஹதுப் போரில் உங்கள் சகோதரர்கள் வீரமரணம் அடைந்த போது, அல்லாஹ் அவர்களின் ஆன்மாக்களை வானத்தின்
பச்சைப் பறவைகளின் கூடுகளில் வைத்தான்.
அவர்கள் சொர்க்கத்தின் ஓடைகள் மற்றும் பழத்தோட்டங்கள் வழியாக பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அவர்கள் அதன் உணவையும் பானத்தையும் சுதந்திரமாகப் பயன்படுத்தினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
'நாங்கள் இங்கு உயிருடன் இருக்கிறோம் என்றும்,
சொர்க்க உணவு வழங்கப்படுகிறது எனவும்
பூமியில் உள்ள நமது நண்பர்களுக்கு யாராவது தெரிவித்திருந்தால் அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் போர்களத்தில் போராட முன் வந்திருப்பார்கள்.
அப்போது அல்லாஹ் கூறினான்:
'அதை நான் அவர்களிடம் சொல்கிறேன்.
அவ்வேளையில் தான்
இந்த வசனம் இறங்கியது
(குர்துபி.4/268).
பத்ர் போரிலே தியாகிகள்...
இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான தற்காப்புப் போர்களில் ஒன்று பத்ர்.
மற்ற போராட்டங்களில் பங்கேற்றவர்களை விட இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மிக உன்னதமான உயர்வும்,மகத்துவமும்
உண்டு.
சஹாபிகளில் சிலருக்கு கிடைத்த மிகப் பெரிய பட்டம் இது.
பத்ரில் முன்னூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டாலும் பதினான்கு ஸஹாபாக்களே ஷஹீதானார்கள். அவர்களின் பெயர்களைக் கவனியுங்கள்...
1 : உமைர் இப்னு அபீவக்காஸ்.
2 : ஸஃப்வா னுப்னு வஹப் ரழியல்லாஹு அன்ஹு
3 : துஸ்ஷிமாலைன் அப்துல் அம்ர் ரழியல்லாஹு அன்ஹு
4 மிஹ்ஜஃ இப்னு ஸாலிஹ் ரழியல்லாஹு அன்ஹு
5 ஆகிப் இப்னு அல்-புகைர் (ரழியல்லாஹு அன்ஹு)
6 : உபைததுப்னுல்
ஹாரிஸ் (ரழியல்லாஹு அன்ஹு)
7 : ஸஃது இப்னு கைசாமா (ரலியல்லாஹு அன்ஹு)
8 முபஷ்ஷிர் பின் அப்துல் முன்திர் (ரழியல்லாஹு அன்ஹு)
9 : ஹாரிஸத் பின் சுராகத் (ரழியல்லாஹு அன்ஹு)
10 : ராஃபிஈ இப்னுல் முஅல்லா (ரழியல்லாஹு அன்ஹு)
11 : உமைர் இப்னுல் ஹுமாம் ரழியல்லாஹு அன்ஹு
12 : யஸீத் பின் அல்-ஹாரிஸ் (ரழியல்லாஹு அன்ஹு)
13 முவ்வித் இப்னு அல்-ஹாரிஸ் (ரழியல்லாஹு அன்ஹு)
14 அவ்ஃப் இப்னுல் ஹாரிஸ் (ரழியல்லாஹு அன்ஹு)
இதில் உமைர் பின் அபிவக்காஸ் (ரலி) அவர்களின் வாழ்க்கையும், குடும்பம் மற்றும் தியாகம் ஆகியவற்றை உள்ளடக்கியது இந்த சிறிய படைப்பு.
நபித்தோழர்களில்
முக்கியமானவர்தான்
உமைர் பின் அபிவக்காஸ் (ரழி) அவர்கள்.
முர்ரத்தின் மகன்,
கிலாபின் மகன், சுஹ்ரத்தின் மகன், அப்துமனாபின் மகன்,
வுஹைபின் மகன் அபு வக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தான்
மகான் அவர்களின் தந்தை.
இவர்களது குடும்பம் மக்காவில் நன்கு அறியப்பட்ட குடும்பமாகும்.
குஸேயின் மகன்,
அப்த் மனாஃபின் மகன், அப்த் ஷம்ஸின் மகன்,
உமையத்தின் மகன்,
மற்றும் சுஃப்யானின் மகளான ஹம்னா என்பவர் தான் உமைர் பின் அபிவக்காஸ் (ரலி) அவர்களின் தாயார்.
அவர் மதீனாவுக்குத் ஹிஜ்ரத் சென்றபோது, நபி (ஸல்) அவர்கள் உமைர் பின் அபிவக்காஸ் (ரழி) மற்றும் அம்ர் பின் முஆத் (ரஹ்) அவர்களுக்கு இடையே ஒரு பிரத்யேக சகோதரத்துவத்தை ஏற்படுத்தி இருந்தார்கள்.
மகான் அவர்கள் குரைஷிகளில் பனுஸுஹ்ரா கோத்திரத்தைச் சேர்ந்தவர்.
(மஃரிஃபத்து
ஸஹாபா 4/2084)..
உமைர் பின் அபி வக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களிலேயே இஸ்லாத்தை மார்க்கமாக ஏற்றுக் கொண்டு மதீனாவுக்கு புலம் பெயர்ந்தார்கள்.
(உஸ்துல் காபா 4/287)
அபு வக்காஸின் மகன்
உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் தந்தை அபு வக்காஸ் என்ற பெயரில் அறியப்பட்டு இருந்தார்.
அவரது உண்மையான பெயர் மாலிக் பின் வுஹைப். எத்தியோப்பியாவிற்கு குடிபெயர்ந்தவர்களில் அவரும் ஒருவர்.
அபு வக்காஸ் ஒரு சஹாபி என்று அப்பான் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள், ஆனால் அபூ மூஸா (ரஹ்) அவர்கள் இந்தக் கருத்தை ஏற்கும் வேறு எந்த வரலாற்று அறிஞரையும் காணவில்லை என்று கூறியுள்ளார். இருப்பினும்,
அவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) காலத்தில் இறந்துவிட்டார் என்று சில அறிஞர்கள்
கருத்து தெரிவித்துள்ளனர். (உஸ்துல் காபா: 5/51)
அபு வக்காஸின் தந்தை பெயர் வுஹைப் என்றும் உஹைப் எனவும் பார்க்க முடிகிறது.
(அல் இஸாபா 3/484)
இமாம் பகவி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு பதிவு செய்கிறார்கள்.
அபு வக்காஸ் கூஃபாவில் வாழ்ந்தாலும்,
தனது எழுபத்து நான்கு வயதில் மதீனாவில் வைத்து தான் மரணமடைந்தார். அவருக்கு வயது என்பது இருக்கும் என்றும் கூறப்படுகிறது
முஃஜமு ஸஹாபா 3/3
ஹம்னாவின் எதிர்ப்பு
ஹம்னா பின்த் சுஃப்யான் என்பவர் தான் உமைர் பின் அபீவக்காஸின்
தாயார் என்பதை நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.
அபு உஸ்மான் (ரழி) அவர்களின் அறிவிப்பில்: சஅத் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
'என் அம்மாவை நான் மிகவும் மதிக்கவும், கண்ணியப்படுத்தவும் செய்து வருகிறேன்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இஸ்லாமிய செயல்களைச் செய்யத் தொடங்கியபோது,
நான் நபி (ஸல்) அவர்களை நம்பினேன், இந்த தகவலை அறிந்த என் தாய் என்னிடம் கூறினார்:
"ஓ சஃத்,
நீ பொய்யான தீர்க்கதரிசியின் மதத்தை ஏற்றுக்கொண்டாய் என்று எனக்குத் தெரியும்,
அதை விட்டு நீ வெளியேறி விடு.
நீ வெளியேறா விட்டால் நான் இனி சாப்பிடவோ குடிக்கவோ மாட்டேன். இதன் விளைவாக நான் இறந்துவிடுவேன்.
பிறகு அதன் கேவலம் உன்னைச் சாரும். மக்கள் உன்னைப் பற்றி சொந்த தாயைக் கொன்றவன் என்று பழிச் சொல்வார்கள்.
நீங்கள் முகமதுவையும் அவருடைய மதத்தையும் விட்டுவிடுவது தான் உமக்கு நல்லது."
'உம்மா, நீங்கள் இந்த முடிவிலிருந்து விலகுங்கள்.
இப்போது, எவ்வளவு பெரிய சிரமங்களை நான் கடக்க வேண்டியிருந்தாலும், நான் இப்போது நம்பும் இஸ்லாம் மதத்தில் இருந்து பின்வாங்கத் தயாராக இல்லை.'
அவரது தாயார் இரண்டு நாட்கள் முழுவதுமாக பட்டினி கிடந்தார்.
இதனால் ஹம்னா பின்த் சுஃப்யான் மிகவும் சோர்வடைந்தார்.
அந்த நேரத்தில்,
ஸஅத் (ரலி) அன்னையிடம் கூறினார்:
'அன்புள்ள உம்மா!!அல்லாஹ் சாட்சியாக,
நீங்கள் நூறு உடல்களைப் பெற்று இருந்து அவை ஒவ்வொன்றும்
நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதால் அவை ஒவ்வொன்றாக மரணித்து சாய்ந்தாலும், நான் இஸ்லாத்தை விட்டு விலகத் தயாராக இல்லை. வேண்டுமானால் நீங்கள் சாப்பிடலாம், இல்லையெனில் சாப்பிடாமல் தவிர்க்கலாம்.
இந்த அறிவிப்பைக் கேட்டதும், ஹம்னாவின் மன உறுதி தளர்ச்சியுற்றது. உண்ணாவிரதத்தை கைவிட்டு, தேவையான அளவு சாப்பிட்டார்கள்.
இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் அத்தியாயம் லுக்மானின் பதினைந்தாவது வசனம் இறங்கியது.
ஆனால், எது பற்றி உனக்கு அறிவு (ஆதாரம்) இல்லையோ அதைக்கொண்டு எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால், அப்போது நீ அவ்விருவருக்கும் கட்டுப்பட வேண்டாம்; ஆனால், இவ்வுலகில் அவ்விருவருடனும் அழகிய முறையில் தோழமை வைத்துக்கொள்! (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக! பின்னர், உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமே உள்ளது; அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்தவைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பேன்.
ஆற்றல் மிக்க சகோதரர்கள்
உமைர் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்கு மூன்று சகோதரர்கள் இருந்தனர்.
அவற்றின் சுருக்கமான விளக்கத்தை கீழே படிக்கலாம்.
1 ஆமீர் பின் அபீ வக்காஸ் (ரலி)
ஆமீர் இப்னு அபி வக்காஸ் (ரஹ்) அவர்கள் உமைர் (ரஹ்) அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் ஆவார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீன் பிரச்சார காலகட்டத்தில் இஸ்லாத்தைத் தழுவிய பதினொன்றாவது நபர் ஆமீர் பின் அபீவக்காஸ் (ரஹ்) என்று இமாம் வாகிதி குறிப்பிடுகிறார். இவர் இஸ்லாம் மார்க்கத்தை தழுவிய போது அவரது தாயார் உண்ணாவிரதம் இருந்தார் என்பதை முந்தைய சம்பவத்தில் இருந்து புரிந்து கொள்ளலாம். அடக்குமுறையாளர்களின் துன்புறுத்தல் தாங்க எல்லை மீறிய போது மகான் அவர்கள் அபிசீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்றார்கள். (உஸ்துல்-காபா. 3/42)
இமாம் அஸ்கலானி (ரஹ்) அவர்களின் பதிவு செய்கிறார்கள்..
ஆமீர் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அபிசீனியாவிற்குள்ள இரண்டாவது இடம்பெயர்ந்ததில் கலந்து கொண்டார். அவருடன் ஜஃபர் (ரலி) அவர்களும் இருந்தார்கள்.
உமர் (ரழி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் சிரியாவில் வைத்து மகான் அவர்கள் மரணமடைந்தார்கள். (அல்-இஸாபா. 3/485)
2 ஸஃத் பின் அபீ வக்காஸ் (ரலி)
கதாநாயகன் உமைர் பின் அபி வக்காஸ் (ரஹ்) அவர்களின் மற்றொரு சகோதரர் தான்
ஸஃத் பின் அபி வக்காஸ் (ரஹ்) அவர்கள்.
அவர் நபித்தோழர்களிடையே பிரபலமானவர்.
சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி அறிவிக்கப்பட்ட பிரமுகர் தான் ஸஃத் இப்னு அபி வக்காஸ் (ரஹ்) அவர்கள்.
சுவனம் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட புகழ்பெற்ற குறிப்பிடத்தக்க அந்த
பத்து பேரில் கடைசியாக மரணித்தவர் ஸஃத் இப்னு அபீ வக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களாகும்.
ஸஃத் இப்னு அபீ வக்காஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
புகழ்பெற்ற பெரிய குதிரைவீரராக திகழ்ந்த அவர்கள்
பிரார்த்தனைகளுக்கு மிக விரைவாக பதிலளிக்கப்பட்ட நபராக இருந்தார்.
ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 51ல் காலமானார்கள். (அல்-இஸாபா. 3/62)
கைஸ் இப்னு அபூஹாஷிம் அறிவிப்பு செய்கிறார்கள்...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'யா அல்லாஹ்,
ஸஃதின் பிரார்த்தனைகள் அனைத்திற்கும் பதில் அளிப்பாயாக.
(திர்மிதி. 3751)
3 உத்பத்து இப்னு அபி வக்காஸ்
உமைர் (ரழி) அவர்களின் மற்றொரு சகோதரர் உத்பத்து இப்னு அபி வக்காஸ் ஆவார். அவரைப் பற்றி இமாம் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் எழுதுவதைப் பாருங்கள்:
'உஹுதுப் போர்க்களத்தில் நபி(ஸல்) அவர்களின் முன்பல்லை உடைத்தவர் உத்பத்து பின் அபீ வக்காஸ் அவர்களாகும்.
இவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை என்றும், காஃபிராக மரணமடைந்தார் என்றும் உஸ்மானுல் ஜஸ்ரி (ரலி) அவர்களின் அறிவிப்பில் காண முடியும்.'
(அல்-இஸாபா. (5/197)
அனஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உஹதுப் போரின் போது, விபத்து ஏற்பட்ட காரணத்தால் முகத்தில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களிடம் ஹாதிப் (ரலி) வந்தார்.
அவர் நாயகத்தின் முகத்தில் இரத்தத்தைப் பார்த்த உடனே கேட்டார்:
'அல்லாஹ்வின் தூதரே, உங்களைத் தாக்கியது யார்?'
'உத்பத்து இப்னு அபி வக்காஸ்.' என்று புனித நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
பிறகு ஹாதிப் (ரலி) அவர்கள் உத்பத்துக்கு எதிராகப் போரிட்டு அவரைக் கொன்றார்கள். (அல்-இஸாபா.5/198)
உமைர் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்கு மூன்று சகோதரிகள் இருந்ததாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள்,
1 காலிதா பின்த் அபி வக்காஸ்.
2 பின்த் அபி வக்காஸ்.
ஆத்திக்கா (ரழி) அவர்கள் ஒரு பிரபலமான ஸஹாபி பெண்மணியாகும்.
ஒரு முறை அவர்கள் சொன்னார்கள்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிற்குள் நுழைந்த போது நான் மற்று எட்டு
பெண்களுடன் நாயகத்தின் திருசந்நிதியில் சென்றேன்.
என் குழந்தைகளும் என்னுடன் இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் இருவரையும் ஆசீர்வதித்துத் தம் மடியில் அமர்த்தினார்கள். (அல்-இஸாபா. 5/54)
3 சகினா பின்த் அபி வக்காஸ்
சகீனா உமைர் (ரழி) அவர்களின் மூன்றாவது சகோதரி ஆவார்.
மஹதி அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நிறைய ஹதீஸ்களையும் அறிவித்துள்ளார்கள். உமைர் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களுக்கு மேலே குறிப்பிட்ட மூன்று சகோதரர்களும், சகோதரிகளும் இருந்தனர்.
அதிர்ஷ்டம் இல்லை!
முஸ்அப் பின் ஸஅத் (ரலி) அவர்கள் தம் தந்தையிடமிருந்து பின்வருமாறு அறிவிக்கிறார்கள்.
“ஒருமுறை நபி(ஸல்) அவர்களிடம்
ஒரு தட்டு நிறைய உணவு கொண்டு வரப்பட்டது.
அதில் இருந்து சாப்பிட்டு விட்டு, ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
"சுவன வாசிகளை சேர்ந்த ஒரு நபர் இப்போது இந்தப் பாதையைக் கடந்து செல்வார்." இந்த தட்டில் மீதி சாப்பாடு அவருக்கே.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்ட போது, உமைர் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் அந்தப் பகுதியில் வுளூஃ செய்து கொண்டிருந்தார்கள். இதைக் கண்ட ஸஃத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
"சுவர்க்கம் நுழைவார் என்று நபி (ஸல்) அவர்கள் அறிவித்தவர் எனது சகோதரர் உமைர் ஆவார்."
ஆனால் உமைர் (ரலி) அவர்கள் நாயகத்தின் அருகில் வருவதற்கு முன் முன், அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) அவர்கள் அந்த வழியாக வந்து தட்டில் இருந்த மீதம் இருந்த உணவைச் சாப்பிட்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் பாக்கியவான்களாக அறிவிக்கப்பட்ட நபர் அவராகவே இருந்தார்..
(முஸ்னத் அஹ்மத், 1458)
நபி (ஸல்) அவர்கள் அவ்வேளையில் அறிவித்த அந்த பாக்கியம் கிடைக்கவில்லை என்றாலும் அதைவிட பெரிய அதிர்ஷ்டம் பத்ரில் கிடைத்தது என்பதை நினைவில் கொள்க..
முஹாஜிர்களின் பெருமை
ஒரு பிராந்தியத்திலிருந்து மற்றொரு பகுதிக்கு இடம்பெயர்ந்தவருக்கு முஹாஜிர் என்று அழைக்கப்படும். இருப்பினும், மக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம்பெயர்ந்தவர்களுக்கு இந்த வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. மதீனாவில் அவர்களை வரவேற்று உபசரித்தவர்கள் அன்சாரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவ்விரு குழுக்களைச் சேர்ந்த தோழர்கள் பத்ரில் கலந்து கொண்டனர்.
ஆனால் முஹாஜிர்களிலிருந்து ஆறு பேர் பத்ரில் ஷஹீதானார்கள். அவர்களில் முதன்மையானவர் உமைர் இப்னு அபீ வக்காஸ் (ரலி) ஆவார். மற்ற ஐவர் உபைதத்து இப்னுல் ஹாரிஸ் (ரழி), துஷ்ஷிமாலைன் (ரழி), ஆகீல் இப்னுல் புகைர் (ரலி), மிஹ்ஜஃ (ரலி), மற்றும் ஸஃப்வான் போன்றவர்களாகும் (ரழியல்லாஹு
அன்ஹும்).
பதினான்கு தியாகிகளில், மீதமுள்ள எட்டு பேர் அன்சாரிகள். உமைர் (ரலி) அவர்கள் மிகவும் துணிச்சலான தியாகத்தை வெளிப்படுத்தினார்.
மறைந்திருந்த குழந்தை
பத்ருக்குச் சென்றவர்களில் வயதில் இளையவர்
உமைர் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள்
அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி).
"நாங்கள் பத்ருக்குப் புறப்படுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது, என் சகோதரர் உமைர் மற்றவர்களிடையே ஒளிந்து இருப்பதை நான் கவனித்தேன்.
'ஏய் உமைர், ஏன் ஒளிந்து இருக்கிறாய்?!' - நான் உமைரிடம் கேட்டேன்.
பின்னர் அவர் கூறினார்:
'ஓ ஸஃதே, நபி(ஸல்) அவர்கள் என்னைப் பார்க்காது இருப்பதற்கு தான் நான் ஒளிந்து கொண்டிருக்கிறேன்.
என்றார்கள்...
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்டால் என்ன?!' -
என நான் ஆச்சரியத்துடன் கேட்டேன்.
'நான் சின்னப் பிள்ளையல்லவா..? என்னைப் பார்த்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போருக்கு அனுமதி அளிக்க வாய்ப்பில்லை.
நானோ பத்ருக்கு வர மிகவும் ஆசையுடன் இருக்கிறேன்.. ஒருவேளை இறைவன் எனக்கு அங்கே தியாகி ஆகும் வாய்ப்பு தரவில்லையெனில் உமைர் பதிலளித்தார்.
இவ்வாறு உமைர் (ரழி) அவர்கள் கூறிக் கொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் அவரைக் கண்டு திரும்பிச் செல்லும்படி கட்டளையிட்டார்கள். இதைக் கேட்ட உமைர் (ரலி) அவர்கள் கதறி அழுது பத்ருக்குச் செல்ல அனுமதி கேட்டார்கள். இறுதியாக நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். அன்றைய தினம் தனது வாளை உறையில் இடுவதற்கு வேறொருவரின் உதவி தேவைப்பட்டது என்று ஸஅத் (ரலி) கூறினார்.
அப்படிப்பட்ட சிறு குழந்தையாக இருந்தார் உமைர் பானு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் (ஹயாத்துஸ் ஸஹாபா, 2/226)
தியாகியின் வயது
பத்ர் போரில் வீர மரணமடைந்தவர்களில்மிகவும் வயது குறைவாக இருந்தார் உமைர் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள். நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் பத்ருக்குப் புறப்பட்டு, மதீனாவிலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள அபூ அய்யூபா என்ற கிணற்றின் அருகே அனைவரையும் ஒன்று சேர்த்தார்கள்.
அப்போது அந்தக் குழுவில் சில குழந்தைகள் சேர்ந்திருப்பதை நபி (ஸல்) அவர்கள் கவனித்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் எல்லாக் குழந்தைகளையும் அங்கேயே திருப்பி அனுப்பினார்கள். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), உஸாமத் இப்னு ஜைத்(ரலி),
ராஃப் இப்னு கதீஜ்(ரலி), பராஅப ஆசிப்(ரலி), உசைத் இப்னு ஹுலைர்(ரலி), ஜைத் இப்னு தாபித்(ரலி) போன்றோர் திருப்பி அனுப்பப்பட்டவர்களில் இருந்தனர்.
ஆனால் உமைர் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் நாயகத்தின் முன் அழுது புலம்பி தனது நோக்கத்தில் வெற்றி அடைந்தார்.
மகான் அவர்கள் பத்ர் போரில் வீரமரணம் அடைந்தபோது அந்த மாபெரும் வீரனுக்கு பதினாறு வயது. (சுபுலுல்ஹுதா 4/23)
அம்ர் இப்னு அப்துவுத் என்ற எதிரிதான் உமைர் ரழி அவர்களை கொடூரமாக கொலை செய்தான்.
(உஸ்துல் காபா. 3/796)
பத்ர் போர்க்களத்தில்தான்
உமைர் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்கள்
அடக்கம் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
பெருமகனாரின் பறக்கத்தைக் கொண்டு வல்லோன் அல்லாஹ் நமக்கு இரு உலகிலும் வெற்றியைத் தந்தருள்வானாக. ஆமீன்.
குறிப்புகள்
சுனன் திர்மிதி
முஸ்னது அஹ்மத்
தஃப்ஸீருல் குர்துபி
தஃப்ஸீர் இப்னு கஸீர்
சுபுலுல் ஹுதா
அத்-தபகாத்துல்-குப்ரா
மஃரிஃபத் ஸஹாபா
உஸ்துல் காபா
அல்-இஸாபா
முஃஜமுஸ்-ஸஹாபா
ஹயாத்துஸ்-ஸஹாபா....