Sirajudheen Ahsani
எழுத்தாளர்

குமரி மாவட்டம்
திருவிதாங்கோடு மைமூன் பப்ளிஷிங் ஹவுஸின் பத்தாம் வருட துவக்க விழாவை முன்னிட்டு
ரமளான் கால நினைவுகள்
எனும் தலைப்பில்

தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்ற
மாபெரும்
சிறுகதை போட்டியில்
_________________________
முதல் பரிசு பெற்ற சிறுகதை

#லத்தீபாவின்_அமல்கள்

✍️ஆர்னிகா நாசர்.
கோயம்புத்தூர்.

மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ்,
திருவிதாங்கோடு,
குமரி மாவட்டம்.
தொடர்பு எண்:
7598769505
______________________________________________
ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் நேர்வழியை தெளிவுபடுத்தக் கூடியதாகவும் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறியக் கூடியதாகவும் உள்ள குர்ஆன் இறக்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்.
யார் நோயாளியாக
அல்லது பயணத்தில் இருக்கிறாரோ அவர்கள் வேறு நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்.

அல்லாஹ் உங்களுக்கு இலகுவையே விரும்புகிறான்.
அவன் உங்களுக்கு கஷ்டத்தை விரும்பவில்லை. நோன்பின் எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துவதற்காகவும் அல்லாஹ் உங்களை நேர்வழியில் செலுத்துவதற்காக அவனை பெருமை படுத்துவதற்காகவும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் இவ்வாறு செய்தான்.

ஒரு ஹதீஸிலிருந்து

சக்கராத்து ஹாலில் படுத்திருந்தாள் லத்தீபா. வயது எழுபது. 165 செமீ உயரம். முழுதும் நரைத்த தலைக்கேசம். நாடிக்கு கீழே கழுத்து சுருக்கங்கள். கழுத்தில் கருகமணி. காதில் ஒற்றை பொட்டு கம்மல்.

நிச்சலனமாக படுத்திருந்த லத்தீபாவின் உடலில் அசைவு பூத்தது. அறைக்கு வந்த மூத்த மகள் அம்மா அசைவதை பார்த்து விட்டாள்.

'அல்லாஹு அக்பர்' என முணுமுணுத்தாள் லத்தீபா.

"அம்மா! எட்டு மாசத்துக்கு பிறகு வாயை திறந்து பேசுற உன் மககிட்ட ரெண்டு வார்த்தை பேசும்மா!"

"உன் அத்தாவை கூப்பிடுடி மரியம்!'

கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்த சுல்தான் திறன்பேசியை மறித்து "என்னம்மா?" என்றார்.

"அம்மா முழிச்சிருச்சு உங்ககிட்ட பேசணுமாம்!" மூத்தவள் பரபரத்தாள்.

"கடவுள் இருந்தால் நாத்திகத்தைவிட மதங்களே அதிகம் அவரை அவமதிப்பதாக உணர்வார்!" என முணுமுணுத்தார் சுல்தான்.

மனைவியின் அறைக்குள் புகுந்தார் சுல்தான்.

மெல்லிய டெஸிபல்லில் கணவரை அருகில் அழைத்தாள் லத்தீபா.

"என் தலைமாட்ல சேரை போட்டு உக்காருங்க!"

அமர்ந்தார் சுல்தான்.

"நமக்கு என்னைக்கி திருமணம் ஆச்சு?"

"10.06.1980 நமக்கு திருமணமாகி 45 வருடமாகுது!"

"நமக்கு எத்தனை குழந்தைகள்?"

"இரண்டு மகள்கள். இரண்டு மகளையும் திருமணம் செய்து கொடுத்து பேரன் பேத்தி பார்த்து விட்டோம். அதற்கென்ன?"

"நீங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாத கடும் நாத்திகர் என்பது தெரிந்திருந்தால் உங்களை திருமணம் செய்ய சம்மதித்திருக்க மாட்டேன்!"

“உன்னை திருமணம் செய்து கொள்ள டாக்டர் மாப்பிள்ளைகளும் கலெக்டர் மாப்பிள்ளைகளும் க்யூ வரிசையில் காத்திருந்தார்களா?"

"ஏழைக்குகேத்த எள்ளுருண்டையாய் ஜாடிக்கேத்த மூடியாய் ஒருவரை திருமணம் செய்து தடைகளற்ற இறைபக்தியில் ஊறி திளைத்திருப்பேன்!"

"சாலை விபத்தில் உயிர் பிழைத்தவன் கடவுள் புண்ணியத்தில் பிழைத்தேன் என்கிறான். அப்போ செத்தவன் சாவுக்கு அந்த கடவுள் தானே காரணம் என்கிறார் பெரியார். 72 வருடங்களாக கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களிலும் பெரியார் கொள்கைகளிலும் வளர்ந்த நாத்திக மரம் நான்... இல்லாத கடவுளை பற்றி என்னிடம் யாரும் பேசாதீர்கள்!"

"இப்பிரபஞ்சம் இறைவனின் சுயமி.
நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்தாமல் போவதற்கு நாத்திகம் காரணம் என்றால் அந்த நாத்திகத்தை வேரோடு பிடுங்கி எறிய விரும்புகிறேன்!"

"இதை சொல்வதற்கு தான் எட்டு மாதத்திற்கு பிறகு கண் விழித்து பேசினாயா?"

"இன்று நான் பேச விரும்பும் விஷயங்களை எல்லாம் பேச விரும்புகிறேன்!"

"சொல்... இது நமக்கு கடைசிநாளாக இருக்கட்டும்!"

"நாத்திகரில் இருவகை உண்டு. ஒருவகை நாத்திகர் தன்னை சுற்றி ஆத்திகர்கள் இருப்பதை தடுக்க மாட்டார். இன்னொரு வகை நாத்திகர்கள் தன்னை சுற்றி இருக்கும் ஆத்திகர்கள் அனைவரும் நாத்தித்துக்கு வரவேண்டும் என துன்புறுத்துவர். நீங்கள் இரண்டாவது வகை!"

மனைவியை உக்கிரமாக முறைத்தார் சுல்தான்.

"திருமணமான முதல் நாளே என்னை தொழக்கூடாது நோன்பு வைக் கூடாது என கட்டாயப்படுத்துனீர்கள்!"

"என் மனைவியை கட்டாயப்படுத்த எனக்கு முழு உ உரிமை இருக்கிறது. அப்படித்தானே உன்னை 45 வருடங்களாக ஓதாமல், தொழாமல், நோன்பு
வைக்காமல் பதுக்கி வைத்திருந்தேன்!"

"பூனை கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடுமா?

சக்கராத் ஹாலில் விழும் வரை தினம் ஐவேளை தொழுதேன்.
மார்க்கம் அனுமதித்த வருடத்தின் எல்லா நாட்களிலும் நோன்பு வைத்தேன்!"

""பொய் சொல்கிறாய் நீ"

"இறைவனின் மீது ஆணையாக நபிகள் நாயகத்தின் மீது ஆணையா நான் சொல்வதெல்லாம் அக்மார்க் உண்மை!"

"இது எப்படி சாத்தியம்?"

"காதலுடன் நொடிக்கு நொடி மனைவியை பின் தொடரும் கணவரின் கண்களை ஏமாற்றுதல் அரிது. நீங்கள்தான் பிர்அவ்னின் எள்ளு பேரனாயிற்றே! உங்கள் கண்களை ஈகோவும் வறட்டு நாத்திகமும் ஆக்கிரமித்திருந்தன.
அந்த கண்களை ஏமாற்றி என் மார்க்க கடமைகளை முழுமையாக நிறைவேற்றினேன். அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து பஜ்ர் தொழுகை தொழுவேன். நீங்கள் காலை எட்டு மணிக்கு தான் எழுந்திரிப்பீர்கள்.
மதியம் லொஹர் தொழுகை தொழுவேன். இரண்டு மணிக்கு சாப்பிட வருவீர்கள். மீண்டும் நீங்கள் கம்யூனிஸ்ட் அலுவலகம் போனவுடன் அஸர், மஹ்ரிப் தொழுவேன்.
இரவு 7: 15 மணிக்கு வீடு திரும்புவீர்கள். சமையலறைக்குள் இஷா தொழுகை தொழுது விடுவேன்!"

மனைவியை குரோதமாக முறைத்தார் சுல்தான். "என்னை ஏமாற்றியிருக்க?"

"ஏமாத்தி நான் என்ன கெட்டதா செய்தேன்? இஸ்லாமின் ஐபெரும் கடமைகளில் ஒன்றான தொழுகையை நிறைவேற்றினேன்!"

"தொழுது முடித்த உன் கைகளில் அல்லாஹ் சொர்க்கத்தை தங்க தட்டில் கொடுத்து விட்டானா?"

"சொர்க்கத்தை எதிர்பார்த்து நான் தொழுகையில் ஈடுபடவில்லை!"

"!"

"அடுத்து நோன்பு.
இந்த 45 வருடங்களாக மார்க்கம் அனுமதிக்கும் எல்லா நாட்களிலும் நோன்பு நோற்று வந்திருக்கிறேன். நோன்பு என்பது
கூட்டுக்கடமை அல்ல. தனித்து செய்யப்படும் இபாதத். நோன்பு ஈமானின் அடையாளம், 'நோன்பு எனக்குரியது. அதற்குரிய பிரதிபலனை நானே வழங்குவேன்' என்கிறான் இறைவன். நோன்பாளிகளுக்கு இரு மகிழ்ச்சிகள், ஒன்று நோன்பு திறக்கும் வேளை மற்றொன்று மறுமையில் இறைவனை சந்திக்கும் நேரம். நோன்பு உடல் இச்சைகளை கட்டுப்படுத்தும் சுயக்கட்டுப்பாட்டைத் தரும். நோன்பாளிகளுக்கு ரய்யான் என்கிற சொர்க்கவாசல் திறக்கும்!"

"சொல்லி கொடுத்ததை அப்படியே கக்குகிறாய்!"

"உங்கள் நாத்திகம் உங்களை நல்ல மனிதனாக வாழ வைத்திருக்கிறதா? மனைவியை என்றைக்காவது காதலிக்கத் தோன்றியிருக்கிறதா? என்றைக்காவது என்னுடன் அமர்ந்து உணவு அருந்தி இருக்கிறீர்களா? எப்போதாவது நீங்கள் சாப்பிடும் உணவில் சிறு கவளத்தை எனக்கு ஊட்டி விட்டிருக்கிறீர்களா? ஒரே வீட்டில் நாத்திக உலகம் ஆத்திக உலகம் என இரு உலகங்கள் சுழன்று வந்துள்ளன!"

"தொழுதாய் நோன்பு நோற்றாய் ஜக்காத் கொடுத்தாய். கடந்த 45 வருடங்களில் நீ பாவமே செய்யவில்லையா?"

லத்தீபாவின் கண்களில் தாரைதாரையாய் கண்ணீர் பெருக்கெடுத்தோடியது.

"நாத்திக விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூட 'கடவுள் இருந்தாலும் இருப்பார். ஆனால் விஞ்ஞானம் கடவுளின் தேவையின்மையை ஆணித்தரமாக விளக்குகிறது' என்கிறார். நீங்களோ அவரை விட பல படிகள் மேலான வில்லன், உங்களிடம் 45 வருடம் தாம்பத்யம் பண்ணி இரண்டு மகள்களை பெற்றேனே... அது உஹது மலையளவு பாவமில்லையா?"

"அதிகம் படிக்காத நீ என்னை விட்டு வெளியே போயிருந்தால் இரண்டு மகள்களுடன் சிங்கி அடித்திருப்பாய்?"

"உங்களை விட உங்கள் வார்த்தைகள் பாவம் அப்பியவை!"

"என்னை விட்டு வெளியே போய் கோடீஸ்வரி ஆகியிருப்பாயா?"

"உழைத்து சம்பாதித்து என் இரு மகளைகளையும் கரையேத்தி இருப்பேன்!"

"நான் கிளம்பலாமா?"

"தொழுது நோன்பு நோற்று நான் கேட்ட ஒரே துஆ என்ன தெரியுமா? 'யா அல்லாஹ் சிந்திக்கும் அறிவிருந்தும் மூடனாய் விளங்கும் என் கணவருக்கு நல்ல புத்தியைத் தா!' என்பதே!"

"நீ இறந்துவிட்டால் நான் நிம்மதியாக இருப்பேன்!"

"ஒரு துன்மார்க்கனிடமிருந்து எனக்கு இன்று விடுதலை!"

லத்தீபாவுக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது.

"மீண்டும் சக்கராத்து ஹாலுக்கு லத்தீபா போகப் போகிறாள்!" கூட்டத்தினர்.

"பக்கத்து வீட்டு ஓதரம்மாவை கூப்பிட்டு எனக்கு ஒரு ஸ்பூன் பால் கொடுக்கச் சொல்லுங்கள்!" ஓதரம்மா பால் புகட்ட லத்தீபா "லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்!" என முணுமுணுத்தபடி உயிர் நீத்தாள்.

சுற்றி நின்றோர் அழுது வீங்கினர்.

இரு மலக்குகள் சுல்தானை நெட்டித் தள்ளினர்.
கீழே விழுந்த
சுல்தானின் இடதுகாலும் இடதுகையும் செயலற்று போயின. சூழ்ச்சிகாரன்களுக்கு எல்லாம் சூழ்ச்சிக்காரன் அல்லாஹ் சுல்தானின் நிலை பார்த்து பரிகசித்தான். "பொம்மலாட்டக்காரன் நானே.
நான் கயிறு சுண்டுவதை நிறுத்தினால் மூலையில் சரிந்து கிடக்கும் பொம்மைகள் ஆவீர்கள் மடமைவாதக்காரர்களே!"