Sirajudheen Ahsani
எழுத்தாளர்

குமரி மாவட்டம் திருவிதாங்கோடு மைமூன் பப்ளிஷிங் ஹவுஸின்
பத்தாம் வருட துவக்க விழாவை முன்னிட்டு #ரமளான்_கால_நினைவுகள் எனும் தலைப்பில்

தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்ற மாபெரும் சிறுகதை போட்டியில்
#ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை

#இறைவனிடம்_கையேந்துங்கள்
✍️ நிலா மகன், கோயம்புத்தூர்.
_____________________________________________

மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ்,
திருவிதாங்கோடு,
குமரி மாவட்டம்.
தொடர்பு எண்:
7598769505

*************************************************

பைரோஸ்கான் பாகவி தனது பழைய ஸ்கூட்டி பெப்பில் ரசாக் தேநீர் விடுதிக்கு முக்கிதக்கி வந்து நின்றார்.

"யா அல்லாஹ்!" என்றபடி வாகனத்தை ஸ்டாண்டிட்டார்.

பைரோஸ்கான் வயது 37. உயரம் 160 செமீ எடை 45 கிலோ சிறிய உருவம். தலையில் தலைப்பாகை. சுருமா ஈஷிய பெரிய கண்கள் திரிதிரியாய் தொங்கும் தாடி. வெள்ளை நிற கைலி வெள்ளை நிற ஜிப்பா, அவரது உருவத்துக்கு சற்றும் பொருந்தாத மகரந்தக் குரல்,

"அஸ்ஸலாமு அலைக்கும் இமாம்!"

திருநெல்வேலியிலிருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருந்த்து அந்த கிராமம். அந்த கிராமத்தின் பெயர் உமர் பாளையம் ஜனத்தொகை எட்டாயிரம். அந்த கிராமத்திற்கு ஒரே ஒரு பள்ளிவாசல்தான் இருந்தது. பள்ளியின் இமாம் கம் மோதினார் பைரோஸ்கான் பாகவிதான். சம்பளம் 6000 ரூபாய். தங்குமிடமும் உணவும் இலவசம். குடும்பம் தக்கலையில் இருந்தது. மாதத்திற்கு ஒருமுறை மனைவியையும் மகனையும் பார்த்துவிட்டு பணம் கொடுத்து விட்டு வருவார் பைரோஸ்கான் பாகவி.

"வஅலைக்கும் ஸலாம் அமீர்ஜான் பாய்!"

"நலமா?"

"இறைவனின் அருளால் நான் நலம்!"

"தேநீர் குடிப்போமா?"

"தாராளமாக உங்களுக்கும் நானே வாங்கித் தருகிறேன்!"

தேநீர் விடுதி மரப்பெஞ்சில் இருவரும் அமர்ந்தனர். பைரோஸ் கான் பாகவி மீது அத்தர் வாசனை.

இருவருக்கும் தேநீர் வந்தது.

"என்ன படித்துள்ளீர்கள் இமாம்?"

"ஆலிமுக்கு படித்துள்ளேன். தவிர அரசியல் விஞ்ஞானத்திலும் சரித்திரத்திலும் இரு முதுகலை பட்டங்கள் பெற்றுள்ளேன்!"

"ஏழு வருடங்களாக உங்களை இந்த கிராமத்து பள்ளி இமாமாக பார்த்து வருகிறேன். எவ்வித பொருளாதார முன்னேற்றமும் இல்லாமல் தேங்கி கிடக்கிறீர்கள். பெருநகரம் ஏதாவது ஒன்றில் நீங்கள் இமாமாக போக வேண்டியதுதானே?"

"இங்கேயே திருப்தியாகத்தான் உள்ளேன்!"

“அரபிக் மொழி தனியாக படித்தீர்களா?"

"இல்லை!"

"உங்கள் அரபி உச்சரிப்பு அபாரம்!"

"மாஷா அல்லாஹ்!"

"நீங்கள் தனியாக யூட்யூப் சானல் வேறு நடத்துகிறீர்கள் போல..."

"ஆமாம்.. சானலின் பெயர் 'மக்கத்து நிலவே... யாரசூலுல்லாஹ்!."

"எத்தனை பார்வையாளர்கள்?"

"இருநூற்றி அறுபத்தி ஏழு பேர்கள்!"

"உங்கள் சானலில் என்னென்ன வரும்?"

"நான் தொழுகை நடத்துவது- பயான் செய்வது- பாங்கு சொல்வது எல்லாம் வரும்!"

“இப்படியே போனால் அறுபது வயது வரை அந்த பள்ளியில் பத்தாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டு குப்பை கொட்டப் போகிறீர்கள்... சானலின் பார்வையாளர்கள் ஐநூறை தாண்டாது!"

சிரித்தார் பைரோஸ்கான் பாகவி.

"இறைவன் விரும்பினால் அற்புதங்கள் நிறைவேறும்!"

"அற்புதங்கள் நடக்க வேண்டுகிறீர்களா என்ன?"

"வேண்டுகிறேன்... மார்க்கத்தின் சிறப்பான ஆளுமைகளில் ஒன்றாக வேண்டுகிறேன்.. சானலின் பார்வையாளர்கள் ஒரு இலட்சத்தை தாண்ட வேண்டும் என்று வேண்டுகிறேன்... மனைவியின் திருப்திக்காக மகனின் கல்விக்காக கிராம முன்னேற்றத்துக்காக இஸ்லாமியர் நலனுக்காக உலக மக்கள் ஒற்றுமைக்காக வேண்டுகிறேன்.. !"

“நடக்கும் என நம்புகிறீர்களா?"

"ஏன் நம்பாமல்? நாகூர் ஹனீபாவின் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்வதில்லை' என்கிற பாடலை கேட்டிருக்கிறீர்களா? இறைவன் கொடுத்தும் ரட்சிப்பான் கொடுக்காமலும் ரட்சிப்பான்..."

"எனக்கு வரவர ஈமான் குறைந்து கொண்டே போகிறது..."

"ஈமான் சென்செக்ஸ் புள்ளிகள் அல்ல திடீரென்று இறங்க திடீரென்று ஏற இமாம் பணி இல்லாமல் நடுரோட்டில் நின்றாலும் என் ஈமான் குறையாது!"

எனக்கும் உங்களுக்கும் ஒரு சவால்!

"என்ன?"

"உங்கள் வாழ்வில் அடுத்த ஒரு மாதத்தில் இறைவன் ஏதாவது ஒரு அற்புதம் நிகழ்த்தட்டும் பள்ளிக்கு ஐந்துதடவைகள் தொழ வருகிறேன்!"

சிரித்தார் பைரோஸ்கான்.

"அற்புதங்கள் நிகழ்த்த இறைவனுக்கு ஒரு மாதம் தேவையில்லை ஒரு மைக்ரோ நொடி போதும்... இறைவன் அற்புதம் நடத்த விரும்பா விட்டாலும் என் ஈமான் தொடரும்!"

“பொறுத்திருந்து பார்ப்போம்!"

தேநீருக்கு பணம் கொடுத்துவிட்டு இமாம் புறப்பட்டார். வாகனம் ஓட்டும் போதே நாகூர் ஹனீபாவின் இன்னொரு பாடல் பாடினார்.

"மௌத்தையே நீ மறந்து வாழலாகுமா?" காற்றில் தேவகானம் வழிந்தது.

இரண்டு வாரங்கள் கழித்து...

சௌதி அரேபியாவின் அல் ஹதா மாவட்டத்தின் ரியாத்தின் வடமேற்காக அல் யமாமா அரண்மனை அமைந்திருந்தது.

இத்தாலியின் மார்பிள் சாகசம்.

மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சாத் கம்பீரமாக அமர்ந்திருந்தார். வயது 89. சிவப்பு வெள்ளை கட்டங்கள் கொண்ட துணியை தலையில் போர்த்தி இருந்தார். அதன் மேல் கறுப்பு வளையம் கணுக்கால் வரை நீண்ட அங்கி.

அவரருகே அவரது ஏழாவது மகன் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அமர்ந்திருந்தார்.

மன்னர் இளவரசருக்கு எதிரே மஸ்ஜித் அல் ஹரத்தின் தலைமை இமாம் அப்துல் ரகுமான் அல் சூடாய்ஸ் அமர்ந்திருந்தார்.

ஹரத்தின் மற்ற இமாம்களும் ஹத்தீப்களும் அமர்ந்திருந்தனர்.

அழகிய முகமன்கள் பரிமாற்றம்.

மன்னர் பேச ஆரம்பித்தார். "கடந்த ஒரு சில மாதங்களாக யூட்யூப்பில் சில வீடியோக்களை கண்டு வருகிறேன். அந்த வீடியோக்களில் முழுக்க முழுக்க வருபவர் தென்னிந்தியாவை சேர்ந்த பைரோஸ்கான் பாகவி. அவரது தொழ வைக்கும் விதம், பாங்கு, பயான் அனைத்தும் அபாரம். அசத்தல். அரபியில் இருக்கும் ஹெச் சப்தம் வேறெந்த மொழியிலும் இல்லை. 'தத்' என்கிற சப்தமும் அப்படியே அரபிக்மொழி அறிவை கூர்மைப்படுத்துகிறது தகவல் தொடர்பை மேம்படுத்துகிறது. அரபிமொழியை ஆயிரம் வருடங்கள் படித்து பாண்டித்துவம் பெற்றது போல் இருக்கிறது பைரோஸ்கான் பாகவி உச்சரிப்பு. பைரோஸ்கான் முழு குர்ஆனையும் வாசிக்கும் விடியோ பார்த்து மெய் மறந்து விட்டேன்!"

மன்னர் என்ன சொல்ல வருகிறார் என்பதனை புரிந்து கொண்டார் தலைமை இமாம்

"பைரோஸ்கான் பாகவியை கெளரவப்படுத்த முடிவு செய்து விட்டேன்!"

"சொல்லுங்கள் மன்னரே... மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவோம்!" என்றார் யாசர் அல் டோசரி.

"மஸ்ஜித் அல் ஹரம் நூறு பில்லியன் அமெரிக்கன் டாலர் செலவில் கட்டப்பட்டது. அதில் ஒரே நேரத்தில் 820000 பேர் தொழலாம். இன்ஷா அல்லாஹ் ஒரு வெள்ளிக்கிழமையின் ஐவேளை தொழுகையையும் பாங்கையும் பயானையும் செய்ய பைரோஸ்கானுக்கு ஒரு வாய்ப்பு தர போகிறேன்"

"ஒருநாள் இமாம் ஹத்தீப் முஅத்தின் மரியாதை மஸ்ஜித் அல் ஹரத்தின் இமாமாக பணியாற்ற ஒருவர் சௌதி அரேபியா குடிமகனாக இருக்க வேண்டும். ஷரீயா விஞ்ஞான கல்லூரியில் ஒரு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்!" என்றார் இளவரசர்.

"விதிகளை தளர்த்துவோம்!"

"இந்த ஒரு நாள் இமாம் மரியாதை தலைமை இமாமையும் மற்ற இமாம்களையும் மனதளவில் காயப்படுத்துமோ?”

'பைரோஸ்கான் பாகவியின் விடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். ஸஹாபிகளின் குரல் வளம், குரல் இனிமை, மொழி வளம், உச்சரிப்பு பைரோஸ்கானிடம். பைரோஸ்கானுக்கு ஒரு நாள் இமாம் மரியாதை கொடுப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இறைவன் மகத்தானவன்!"

ஷேக் பத்ர் அல் துர்கி மற்றும் ஷேக் டாக்டர் அல் வாலித் அலி ஷாம்சேனும் ஆமோதித்தனர்.

-தனி விமானத்தித்ல பைரோஸ்கான் பாகவி வந்திறங்கினார். மன்னரும் இளவரசரும் தலைமை இமாமும் வரவேற்றனர்.

அழகிய முகமன்கள் பரிமாற்றம். அரண்மனையில் விருந்தினராக தங்க வைக்கப்பட்டார் பைரோஸ் ரோல்ஸ்ராய்ஸ் போட் டெய்ல் காரில் மஸ்ஜித்துக்கு அழைத்து வரப்பட்டார் பைரோஸ்.

பாங்கு சொன்னார் பைரோஸ். "அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்!" மெக்கா நகரமே தேனில் மூழ்கியது. தொடர்ந்து வெள்ளிக்கிழமையின் ஒருநாள் இமாமாக மஸ்ஜித் அல் ஹரத்தில் பணியாற்றினார் பைரோஸ்கான் பாகவி.

மேலும் ஒரு வாரம் அரசு விருந்தாளியாக இருந்தார் பைரோஸ். பைரோஸ் விடைபெறும்போது மன்னரும் இளவரசரும் முசாபஹா செய்து ஒரு லட்சம் அமெரிக்கன் டாலர் பரிசளித்தனர்.

மன்னர் பைரோஸ் காதுகளில் முணுமுணுத்தார். “மெக்கா நகரில் நீங்கள் இமாமாக தொடர விரும்பினால் மகிழ்ச்சி மெக்கா காத்திருக்கிறது!"

"மனைவி மகனுடன் மஷ்வரா செய்கிறேன் இரு புனித மசூதிகளின் காவலரே!"

பைரோஸ்கானின் யூட்யூப் சானலுக்கு இரண்டே முக்கால் கோடி பார்வையாளர்கள் எகிறினர்.

கிராமத்துக்கு திரும்பிய பைரோஸ்கானுக்கு ராஜ வரவேற்பு.

"பார்த்தீர்களா அமீர்ஜான் இறைவனின் அற்புதத்தை! அல்லாஹ் அற்புதங்களின் அற்புதம்”

அமீர்ஜான் பள்ளியில் தொழுது தொழுது இறைவனிடம் மன்னிப்பை மன்றாடினான்.

தர்க்க நியாயங்களுக்கு அப்பாற்பட்டு மாயப் புன்னகை வெடித்தான் இறைவன்.