கேரளாவில் ஃபாயிஸ் ஏற்படுத்திய தன்னம்பிக்கை புரட்சி

கேரளாவில் ஃபாயிஸ் ஏற்படுத்திய தன்னம்பிக்கை புரட்சி

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

கேரளாவில் ஃபாயிஸ் ஏற்படுத்திய தன்னம்பிக்கை புரட்சி

முஹம்மது ஃபாயிஸ்!மவ்லவி.முனீர் ஸகாஃபி= மைமூனா தம்பதிகளின் அருமை மகன்.
மலப்புரம் மாவட்டம் கொண்டோட்டி இஸ்ஸத் பள்ளிகூடத்தில் 4_ம் வகுப்பு படிக்கிறார்.அவர் பொழுது போக்காக காகிதப்பூ செய்யும் முயற்சியில் ஏற்ப்பட்ட தோல்வியை சமாளிக்க உதிர்த்த இரண்டு வார்த்தைகள் சாதி மத பேதமின்றி கேரள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

நான்கைந்து தினங்களாக கேரள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் ஃபாயிஸ் உதிர்த்த அவ்விரு வார்த்தைகள் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.கூடவே ஃபாயிஸ் தொப்பியுடன் சேனல்களுக்கு அளித்த பேட்டி, சங்க பரிவாரங்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.கேரளாவில் சமூக வலைதளங்களில் பலரும் தொப்பியணிந்து போட்டோ மற்றும் வீடியோ பதிவிட்டு பரிவாரங்களுக்கு சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர்.

கொரோனா கால பொழுது போக்காக காகிதத்தில் கிராஃப்ட் பொருட்கள் செய்து வந்த ஃபாயிஸ் அதை ஒரு வீடியோவாக பதிவு செய்திருக்கிறான்.அவன் வீடியோ பதிவு செய்ததை மறக்கவும் செய்து விட்டான்.குடும்ப உறவினர் ஒருவர் போனை எடுத்து நோண்ட ஃபாயிஸ் காகிதம், பென்சில், கத்தரித்து உபயோகித்து செய்முறை விளக்கத்துடன் காகிதப்பூ தயாரிக்கும் முறையே விவரித்து கொண்டிருப்பதைக் காணுகிறார்.

அவனது முயற்சி சரியாக அமையாததை சமாளித்து சில வார்த்தைகள் பேசுகிறான்.
சிலோலத் ரெடியாகும், சிலோலத் ரெடியாவூலா,
நம்மது ரெடியாயில்லா, நம்மக்கு குயப்பமில்லா
(சிலருக்கு சரியாக அமையும்,சிலருக்கு சரியாக அமையாது,எனக்கு சரியாக அமையவில்லை,
அதனால் பிரச்சனையொன்றுமில்லை) இதை அந்த உறவினர் ஃபாயிஸின் உம்மாவிடம் காட்ட அவர் வெளிநாட்டில் வேலை பார்க்கும் தனது கணவருக்கு அனுப்பி வைக்கிறார்.

முனீர் ஸகாஃபி அதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்ற அந்த டயலாக்கை சோசியல் மீடியாக்கள் வைரல் ஆக்கியது.

இன்று பலர் வாழ்க்கையில் முன்னேற, வெற்றி பெற MOTIVATION (செயல் ஊக்க) வகுப்புகளுக்கு செல்கின்றனர்.அதற்காக ஆயிரக்கணக்கான ரூபாய்களை செலவழிக்கின்றனர்.அந்த வகுப்புகளில் சொல்லி கொடுக்கும் தகவலைத்தான் ஃபாயிஸ் ஒரு பைசா செலவில்லாமல் சொல்லி கொடுக்கிறான்.

காகிதப்பூ செய்வதில் ஃபாயிஸ் வெற்றி பெற்றிருந்தால் இந்த உலகம் அவனை அடையாளம் கண்டிருக்காது.இப்படி ஒரு அழகிய வார்த்தையையும் அவன் மக்களுக்கு சொல்லியிருக்க மாட்டான்.

இதே கேரளாவில் தான் இரண்டு மாதங்களுக்கு முன் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள வசதி வாய்ப்பு இல்லாத காரணத்தால் சிலர் தற்கொலை செய்து கொண்டு தன்னுயிரை மாய்த்துக் கொண்டனர்.

ஃபாயிஸின் தன்னம்பிக்கைக்கு யார் காரணம்?

ஃபாயிஸின் தன்னம்பிக்கைக்கு அவனது தந்தை மவ்லவி.முனீர் ஸகாஃபிதான் காரணம்.ஃபாயிஸின் தந்தையைப்பற்றி அவரது நண்பர் முஸ்தபா சொல்வதைப் பாருங்கள்: முனீர் ஸகாஃபி உஸ்தாத் பல வருடங்களாக என் நெருங்கிய நல்ல நண்பர். ஜித்தாவில் நான் வசித்திருந்த அடுக்கு மாடி குடியிருப்பின் கீழ் நிலையில் இருக்கும் ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.அங்கிருந்து தான் எங்களது நட்பு ஆரம்பித்தது.எந்த கஷ்டமான சுழ்நிலையிலும் பாஸிட்டிவான தகவலை வழங்கும் குணம் கொண்டவர்.குறைந்த ஊதியத்தில் நீண்ட நேரம் வேலை செய்த போதும் எந்த புகாரும் தெரிவிக்காமல் காரியங்களை முறையாக நிர்வகிக்கும் சுபாவமுள்ளவர்.என் குடும்பத்தில் அவரைப் பற்றிய மதிப்பு மிக உயர்வானது.யாரிடத்திலும் முகம் பாராமல் விஷயங்களை வெளிப்படையாக சொல்பவர்.எப்போதும் தெளிவான நிலைப்பாட்டில் மிக உறுதியாக நிற்பவர்.

இருப்பதை வைத்து எந்தச் சூழலையும் எதிர்கொள்ளலாம் என்ற குணம் கொண்ட தந்தையிடமிருந்து தான் மகன் ஃபாயிஸும் நல்ல சுபாவங்களை பெற்றிருக்கலாம்.

வாழ்க்கையில் ஏற்படும் சின்னச்சின்ன விஷயங்களுக்காக உயிரை மாய்த்துக் கொள்ளும் நபர்கள் சமூகத்தில் நிறைய பேர் உள்ளனர்.

அவர்களுக்கு இது நல்லதொரு பாடம்.ஒரு துன்பம் வந்துவிட்டால் அல்லது ஒரு விஷயத்தில் தோல்வியடைந்து விட்டால் அத்துடன் எல்லாம் முடிந்து விட்டது இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று நினைக்காமல் தோல்வியிலிருந்து பாடம் படித்து வாழ்க்கையில் எதிர் நீச்சலடிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். போராட்டம் தான் வாழ்க்கை.

ஃபாயிஸின் தொப்பி

ஃபாயிஸின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானவுடன் ஃபாயிஸை தேடி சானல் காரர்கள் வந்தனர்.அப்போது ஃபாயிஸ் தொப்பி அணிந்து பேட்டி அளித்தான்.இதை பொறுத்துக்கொள்ள முடியாத சங்க பரிவாரங்கள் முகநூலில் விமர்சனங்களை அள்ளி வீசினர்.

அதில் ஒருவர் எழுதிய விமர்சனத்தைப்பாருங்கள்." முதலில் அந்த சிறுவன் பதிவு செய்த வீடியோ அவனுடைய எதார்த்த வாழ்க்கையை பளிச்சென்று காட்டியது.அதில் எங்கேயும் அவனுடைய மதத்தை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.முதலில் மதம் இருக்கவில்லை. இப்போது இருக்கிறது.

மலையாளிகள் அவனே நெஞ்சோடு சேர்த்து அரவணைத்தது அவனுடைய மதத்தை பார்த்து அல்ல.

இன்று கேரளா சந்தித்து கொண்டிருக்கும் மிகப்பெரிய விபத்து முஸ்லிம் இன விரோதமாகும்.எங்கேயும் மதத்தை திணித்தல், ஒன்றும் தெரியாத இந்தப் பாலகனை அவர்கள் அவமானப்படுத்தும் காட்சி இது.நான் எழுதிய இந்த பதிவுக்கு இஸ்லாமியர்கள் பதிவிடும் கருத்துக்களின் மூலம் இஸ்லாத்தின் கலாச்சாரத்தை புரிந்து கொள்ளலாம்.

சங்க பரிவாரங்களின் இது போன்ற அவதூறுகளுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வலைதளங்களில் பலரும் தொப்பியணிந்து போட்டோ மற்றும் வீடியோ பதிவிடும் தொப்பி புரட்சியும் ஏற்ப்பட்டுள்ளது.
சங்கிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஒரு ஸகாஃபி உஸ்தாத் எழுதிய பதிலைப்பாருங்கள்.

புனித இடங்களுக்கு செல்லும் போது கடவுளுக்கு நெருக்கமாவதற்காக தொப்பி அல்லது வேறு எதையாவது தலையில் சூடும் வழக்கம் இந்து மதத்தில் உள்ளதாக நான் படித்திருக்கிறேன்.அதனாலேயே பல துறவிகள் தலைகளில் தொப்பி அல்லது அதற்கு நிகரானவற்றை அணிந்து தலையை மறைக்கின்றனர்.

கிறிஸ்தவ மதத்தின் அனைத்து குழுக்களின் தலைவர்களும் தொப்பியணிந்து வருகின்றனர்.சீக்கியர்களும் யூத ரப்பிமார்களும் தொப்பி அணிகின்றனர்.

கம்யூனிஸ்ட்கள் அணிவகுப்பு நடத்தும் போது தொப்பியுடன் செல்கின்றனர்.அரசர்களின் தொப்பி அணிந்த படங்களைத்தான் பார்த்துள்ளேன்.பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் வாங்குகிற எல்லா மாணவ, மாணவிகளும் தொப்பி அணிகின்றனர்.
மோடியும் பல வேளைகளில் தொப்பி, தலைப்பாகை அணிந்து மேடை ஏறியுள்ளார்.

சேகுவாராவின் தொப்பியணிந்த படத்தை பார்த்துள்ளேன்.பிறகு ஏன் இந்த தொப்பி எதிர்ப்பு? இஸ்லாத்தில் ஒரு முஸ்லிம் கட்டாயமாக தொப்பி அணிய வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை.அதே நேரத்தில் தொப்பி அணிதல் ஊக்குவிக்கப்பட்டுள்ளது

மதத்தை கற்றவர்களும், கற்பிப்பவர்களும்,கற்கிறவர்களும் தொப்பியோ, தலைப்பாகையோ அணிகின்றனர்.இது எல்லா மதங்களிலும் உள்ளன. தலை மறைப்பதை யாரும் வெறுப்பதில்லை.#RSS காரர்கள் கூட தொப்பி அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

செயல் ஊக்க மந்திரம்

ஃபாயிஸின் இந்த MOTIVATION வார்த்தை யை கேரளாவில் சுகாதாரத்துறை, காவல்துறை உட்பட பல்வேறு அரசு துறையினரும் விழிப்புணர்வு வாசகங்களாக பயன்படுத்தி வருகின்றனர்.

கேரளா மில்மா
பால் கம்பெனி இந்த வாசகத்தை தனது பிராண்ட் விழிப்புணர்வுக்கு பயன்படுத்தியது.அனுமதியின்றி அவரது வாசகத்தைப் பயன்படுத்தியதற்கு எழுந்த எதிர்ப்பை தொடர்ந்து மில்மா பால் நிறுவன அதிகாரிகள் நேரடியாக சென்று ஃபாயிஸுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசுத்தொகையும்,
LED.TV யும் அன்பளிப்பாக வழங்கினர்.

மலப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து பரிசாக கிடைத்த மொத்த தொகை 1,0313 ரூபாவை COVID.19 முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கினார் ஃபாயிஸ்.அவர் பணம் வழங்கிய வீடியோ காட்சியை லட்சகணக்கான மக்கள் பார்த்தார்கள்.
பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பகிர்ந்து கொண்டனர்.
நிவாரண நிதிக்கு தான் பெற்ற பரிசை வழங்குவது கூட ஒரு நல்ல முன்மாதிரி தான்.
தொகையை ஒப்படைத்த பிறகு ஃபாயிஸ் சொன்னார்.

சிலர் பிறருக்கு வழங்குவார்கள்.
சிலர் பிறருக்கு வழங்கமாட்டார்கள்.
ஆனால் எல்லாவரும் பிறருக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமென்பதுதான் என் கருத்து.

தோல்வியை கண்டு சோர்வடையாமல் இருக்க ஃபாயிஸ் ஒரு நல்ல செய்தியை சொன்னான்.கேரள மக்கள் அவனை நெஞ்சோடு அணைத்து கொண்டனர்.

பிரச்சனைகளில் மனம் தளராமல் வாழ்க்கையில் வெற்றி பெற்று முன்னேறுவதற்கு இறைவன் நம்அனைவருக்கும்
அருள்புரிவானாக.

ஆக்கம்.
M.சிராஜுத்தீன் அஹ்ஸனி.

இயக்குனர்.
மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ்.
திருவிதாங்கோடு.