ஒரு நிமிடம் கவனியுங்கள்
ஒரு நிமிடம் கவனியுங்கள்......
இறையருளால் ஓரளவு மலையாள மொழியை வாசிக்கவும், எழுதவும், பேசவும் தெரியும்.
அதனால் மலையாள புத்தகங்கள், பத்திரிகைகள், கேரள நண்பர்களின் முகநூல் பதிவுகளை வாசிப்பது வழக்கம்.
அண்மையில் மலையாள சமூக ஊடகங்களில் அதிகமாக வலம் வந்த ஒரு பதிவைப் படித்தேன்.
அதை வாசித்து முடித்தவுடன் என் நெஞ்சம் விம்மியது.
கண்கள் குளமாயின.
அரேபியாவில் வேலை பார்த்து வந்த புலம்பெயர் சகோதரர் கோயா என்பவருடன் ஒரே அறையில் தங்கியிருந்த மூவர் பகிர்ந்த செய்தி அது.
அச்செய்தியை தமிழில் மொழிபெயர்த்து முகநூலில் பதிவேற்ற வேண்டுமென நினைத்தேன்.
காரணம் நம் குடும்ப உறவுகளில் யாராவது ஒருவர் நிச்சயம் வெளிநாட்டில் இருப்பார்.
அவர்களின் ஆசைகள், எதிர்பார்ப்புகள்,வலிகள்,துயரங்களை நாம் அறிய வேண்டும்.நம் குடும்பத்தினர் புரிய வேண்டும். என்ற நல்ல நோக்கில் மொழிமாற்றம் செய்திட துணிந்தேன்.
முகநூலில்"மரணித்த அரேபியக்காரரின் பெட்டி" என்று தலைப்பிட்டு அதைப்பதிவிட்டேன்.
சுப்ஹானல்லாஹ்!
சில மணித்துளிகளில் அப்பதிவு மிக வேகமாக பலராலும் பகிரப்பட்டது.
ஜாதி,மத பேதமின்றி ஏராளமான சகோதரர்கள் பின்னூட்டமிட்டனர்.
பல சகோதரர்களின் பின்னூட்டங்களை வாசிக்க முடியவில்லை.அவ்வளவு சோகமாக இருந்தன.
வெளிநாடு வாழ் சகோதரர்கள் பலரும் தங்கள் மன வேதனைகளை கொட்டியிருந்தனர்.
அரபு தேசத்தில் வசித்தவர்களால் மட்டுமே இந்த சோகங்களை முழுமையாக உணர முடியும்.வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ரணங்கள் அவை அனைத்தும்.
வெளிநாட்டுக்காரனின் பணத்தை அனுபவிக்கும் நாம் அவனுக்குள் இருக்கும் துயரங்களை மறந்து விடுகிறோம்.
தாய்,தந்தை,மனைவி மக்களைவிட்டு,தான் வாழ்ந்து மகிழ்ந்த ஊரைவிட்டு ஏதோ ஒரு தேசத்தில் தன் குடும்பத்துக்காக அல்லும் பகலும் கஷ்டப்படுகிற நம் வெளிநாடு சகோதரர்களை நினைத்து பாருங்கள்.
குறித்த நேரத்தில் உண்ணாமல்,உறங்காமல்,ஓய்வு எடுக்காமல் உழைத்து கொண்டிருக்கும் பாவங்கள்.
ரமளான், பக்ரீத், வீட்டு விஷேஷங்கள்,துக்கங்கள்,என எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள இயலாமல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற சிரமப்பட்டு பணத்தை அள்ளிதரும் புண்ணியவான்கள் அவர்கள்.
ஏராளமான பள்ளிவாசல்கள், கல்வி நிறுவனங்கள்,அரபிக்கல்லூரிகள்,மதரசாக்கள் என பல்வேறு நிறுவனங்கள் அரேபிய வாழ் சகோதரர்களின் நன்கொடைகளாலும்,அன்பளிப்புகளாலும்தான் நடைபெற்றுக்கொண்டிரிக்கின்றன.
ஒரு அரேபிய வாழ் சகோதரனைப் பொறுத்தமட்டில் அவன் தன் குடும்பத்துக்காக மட்டும் பாடுபடுபவன் அல்ல.
தன் ஊருக்கும், சமுதாயத்திற்கும் சேர்த்துதான் உழைக்கிறான்.
அவர்களின் பணம் மூலமாகத்தான் பல ஏழை குமருகளின் திருமணங்கள் நடக்கின்றன. பல ஏழைகளுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகின்றன.வசதி வாய்ப்பில்லாத பல மாணவர்கள் உயர் கல்வி கற்று உயர்ந்த வேலையில் அமர்கின்றனர்.பல அனாதைகளின் வாழ்க்கையில் சுபிட்சம் ஏற்படுகிறது.
வெளிநாடுகளில் எல்லா மதத்தினரும் வேலை செய்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் இது போன்ற ஏராளமான அனுபவங்கள் இருக்கலாம். எனவேதான் மதவேறுபாடின்றி ஏராளமானோர் நமது இப்பதிவை சோகத்துடன் பகிர்ந்து கொண்டனர்.
கோயாஅண்ணன் யார்? என்று நமக்கு தெரியாது, அவரை நாம் பார்த்ததுமில்லை.ஆனால் அவருடன் ஏழாண்டுகள் ஒரே அறையில் ஒன்றாக வாழ்ந்த தோழர்களின் இதயத்தைக்கசியச்செய்த ஒரேயொரு பதிவின் மூலமாக எல்லா மதத்தவர்களின் பிரார்த்தனையையும் அவர் பெற்றிருக்கிறார்.
இந்த எளியவனின் சின்னதொரு முயற்சி ஆயிரக்கணக்கானவர்களின் பிரார்த்தனையை கோயா அண்ணனுக்குப்பெற்றுத்தந்துள்ளது.அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன்.
வெளிநாடு வாழ் சகோதரர்களின் அனுபவங்கள் கூறும் புத்தகங்கள் தமிழில் வெளிவர வேண்டும்.அதன் மூலம் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம்.
இறைவன் அருள் புரிவானாக.
M.சிராஜுத்தீன் அஹ்ஸனி.
இயக்குனர்.
மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ்.
திருவிதாங்கோடு.
தொடர்புக்கு. 7598769505.