அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவோம்
ரமளான் சிந்தனைகள்
பிறை... 9
அல்லாஹ்வின்
நிஃமத்துக்களுக்கு நன்றி செலுத்துவோம்...
அல்லாஹ் நம் வாழ்க்கையில் நமக்கு எண்ணற்ற ஏராளமான நிஃமத்துகளை செய்திருக்கிறான். அல்லாஹ்வினுடைய கோடிக் கணக்கான நிஃமத்துகளை நாம் அனுதினமும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நம் உடலிலேயே ஆயிரம் நிஃமத்துகள் இருக்கிறது. ஐம்புலன்களைத் தந்திருக்கிறான்.
ஜோடியான உறுப்புக்களைக் கொடுத்திருக்கிறான். உள்ளுறுப்புகள் வெளி உறுப்புக்கள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலையைச் செய்கின்றன. உடலிலிருந்து அனைத்து கழிவுகளும் வெளியாகி மனிதன் ஆரோக்கியாக வாழ்வதற்குத் தேவையான 9 துவாரங்களை உடலில் அல்லாஹ்கொடுத்திருக்கிறான், அதன் வழியே வெவ்வேறு தன்மையுடைய கழிவுகள் வெளியேறும்படி அமைத்திருக்கிறான். இவ்வாறு நம் உடலை நாம் மேலோட்டமாக பார்த்தாலே அல்லாஹ்வின் எண்ணற்ற நிஃமத்துக்களை அறிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு அல்லாஹ்வின் கோடிக்கணக்கான நிஃமத்துக்களை நாம் ஒவ்வொரு நாளும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நாம் சாதாரணமாக குடிக்கும் ஒரு மிடர் தண்ணீரும் மிகப்பெரிய நிஃமத். அல்லாஹ்வின் உதவி இல்லாமல் ஒரு மிடர் தண்ணீர் நம் உடலுக்குள் செல்லாது. ஒரு மிடர் தண்ணீர் நம் உடலை விட்டும் வெளியேறாது.
دخل ابن السماك على الرشيد، فاستسقى الرشيد ماءً، فقال له ابن السماك : بالله يا أمير المؤمنين لو منعت هذه الشربة بكم تشتريها ؟ قال : بملكي , قال : لو منعت خروجها ، بكم كنت تشتريه ؟ قال : بملكي , فقال : إن ملكًا قيمته شربة ماء لجدير ألا ينافس عليه» .
ஒருமுறை இப்னுஸ் ஸம்மாக் என்ற மாமேதை கலீஃபா ஹாரூன் ரஷீத் பாதுஷா அவர்களிடம் வருகிறார்கள்.பாதுஷா அவர்கள் தண்ணீர் குடிப்பதற்காக தண்ணீர் குவலையை வாயை நோக்கி உயர்த்திக் கொண்டிருப்பதைக் கண்ட இப்னுஸ் ஸம்மாக் அவர்கள் கலீஃபா அவர்களே! சற்று தாமதியுங்கள் என்று சொல்லி உள்ளே வந்து அமர்ந்து அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் ஒரு கேள்வி கேட்கிறேன் ; இந்த தண்ணீர் குடிக்க நீங்கள் தடை செய்யப்பட்டால், இந்த தண்ணீர் உங்களுக்கு மறுக்கப்பட்டால் அதை என்ன விலை கொடுத்து நீங்கள் வாங்குவீர்கள் ? என்றார்கள்.அப்போது என் ராஜாங்கத்தின் பாதியைக் கொடுத்து அதை வாங்குவேன் என்று கலீஃபா அவர்கள் பதில் சொன்னார்கள்.சரி இப்போது நீங்கள் குடிக்கலாம் என்று இப்னுஸ் ஸம்மாக் அவர்கள் கூற கலீஃபா அவர்களும் அதை குடிக்கிறார்கள்.இப்போது அல்லாஹ்வின் மீது சத்தியமாக இன்னொரு கேள்வி கேட்கிறேன் ; குடித்த அந்த நீர் வெளியே வர வில்லையென்றால் அதற்காக எவ்வளவு செலவு செய்வீர்கள் ? என்றார்கள்.அதற்கு கலீஃபா அவர்கள் என் முழூ ராஜாங் கத்தையும் கொடுத்து அதற்கு மருத்துவம் பார்ப்பேன் என்று கூறினார் கள். அப்போது இப்னு ஸம்மாக் ரஹ் அவர்கள் உங்களின் இந்த பிரமாண்டமான ராஜாங்கம் இந்த ஒரு மிடர் தண்ணீருக்குக் கூட ஈடாகாது என்றார்கள்.
இன்றைக்கு நாம் சிலரைப் பார்க்கிறோம். எல்லா வசதியும் இருக்கிறது. கோடிக்கணக்கான சொத்துக்கள் இருக்கிறது. ஆனால் அவரால் ஒரு பிடி உணவை சாப்பிட முடியாது. இன்னும் சில பேருக்கு அவர்களின் உடம்பிலிருந்து கழிவுகள் வெளியேறாது. எனவே நாம் சாதாரணமாக பார்க்கின்ற ஒவ்வொன்றும் அல்லாஹ்வின் மிகப்பெரிய நிஃமத்துக்கள் என்பதை உணர வேண்டும்.
மகான்மார்களில் ஒருவர் கூறுவார்கள் ; நான் குளிர்ந்த நீரை அருந்தினால் என் மனதின் அடி ஆழத்திலிருந்து அல்லாஹ்வுக்கு ஷுக்ரு (நன்றி செலுத்துதல்) வெளிப்படுகிறது