இப்ராஹிம் இப்னு அத்ஹம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அழகிய உபதேசம்

இப்ராஹிம் இப்னு அத்ஹம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அழகிய உபதேசம்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

ரமளான் சிந்தனைகள்
பிறை....... 8
#இப்ராஹீம்_இப்னு_அத்ஹம் (ரஹ்) #அவர்களின்_அழகிய_உபதேசம்.....

இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்களிடத்தில் ஒருவர் வந்து நான் அதிகம் பாவம் செய்து கொண்டிருக்கிறேன். அந்த பாவத்தை நான் விடுவதற்கு எனக்கு ஏதாவது உபதேசம் செய்யுங்கள். அந்த பாவத்தை விட்டும் நான் விலகிக் கொள்ளும் படியான ஏதாவது எச்சரிக்கையை எனக்கு ஏற்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார். அப்போது இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் ஐந்து விஷயத்தின் மீது நீ சக்தி பெற்றால் நீ செய்யக் கூடிய எந்த பாவமும் உனக்கு எந்த இடையூறையும் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறினார்கள். அது என்ன ஐந்து விஷயம் என்று அவர் கேட்டார்.

1 வது, நீ பாவம் செய்வதாக இருந்தால் இறைவனுடைய உணவை நீ உண்ணக் கூடாது என்றார்கள். அப்போது அவர் அது எப்படி சாத்தியமாகும்? பூமியிலே இருக்கிற அத்தனையும் இறைவன் கொடுத்த உணவு அல்லவா! என்று கேட்டார். அப்போது இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் அப்படி என்றால் இறைவனுக்கு மாறு செய்து கொண்டு இறைவன் தரக்கூடிய உணவை உண்ணலாமா? என்று கேட்டார்கள். இல்லை என்று அவர் ஒத்துக்கொண்டார்.

#இரண்டாவது நீ பாவம் செய்வதாக இருந்தால் இறைவனுடைய பூமியிலே நீ தங்கக்கூடாது என்றார்கள். அது எப்படி சாத்தியமாகும்? உலகத்தில் இருக்கும் அனைத்தும் இறைவனுடைய பூமி அல்லவா! என்று அவர் கேட்ட பொழுது, இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் அப்படி என்றால் இறைவனுடைய உணவை உண்டு கொண்டு இறைவனுடைய பூமியில் நீ தங்கிக் கொண்டு அவனுக்கு மாறு செய்யலாமா? என்று கேட்டார்கள். இல்லை என்று அவர் ஒத்துக்கொண்டார்.

#மூன்றாவது ; நீ பாவம் செய்வதாக இருந்தால் இறைவன் பார்க்காத இடத்திலிருந்து நீ பாவம் செய் என்றார்கள். அதற்கு அவர் அது எப்படி சாத்தியமாகும்? இறைவன் எல்லாவற்றையும் அறிந்தவன் அல்லவா! அவனுக்கு உள்ளும் புறமும் தெரியும். எல்லாம் அறிந்தவன். அவனுடைய பார்வையை விட்டும் நான் எப்படி தப்பிக்க முடியும்? என்று கேட்டார். அப்போது இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் அப்படி என்றால் இறைவன் உன்னை பார்த்துக் கொண்டிருக்கின்ற நிலையில் நீ பாவம் செய்யலாமா? என்று கேட்டார்கள். இல்லை என்று அவர் ஒத்துக்கொண்டார்.

#நான்காவது ; நீ பாவம் செய்து கொண்டிருக்கின்ற நிலையில் உன் உயிரை கைப்பற்றுவதற்கு மலக்கு உன்னிடத்திலே வந்தால் நான் தவ்பா செய்ய வேண்டும். எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்று கேள் என்றார்கள். அப்போது அவர் உயிரை கைப்பற்றுவதற்கு மலக்கு வந்து விட்டால் எப்படி அவகாசம் கிடைக்கும்? தவ்பா செய்வதற்கு எப்படி சந்தர்ப்பம் கிடைக்கும்? என்று அவர் கேட்டார். அப்போது இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் உயிரை கைப்பற்றுவதற்கு மலக்கு வந்து விட்டால் அதை தாமதப்படுத்த முடியாது. தவாஃப் செய்வதற்கு அவகாசம் கிடைக்காது என்று தெரிந்திருந்தும் நீ எப்படி பாவம் செய்யலாமா? என்று கேட்டார்கள் இல்லை என்று அவர் ஒத்துக்கொண்டார்.

#ஐந்தாவது ; நீ பாவம் செய்து அதே நிலையில் மவ்த்தாகி அல்லாஹ் உனக்கு நரகத்தைக் கொண்டு தீர்ப்பளித்து விட்டால் நரகத்திற்கு உன்னை இழுத்துச் செல்லக்கூடிய மலக்குகள் உன்னிடத்தில் வரும்பொழுது நீ அவர்களோடு செல்லாதே என்றார்கள். அது எப்படி சாத்தியமாகும்? அவர்கள் ரொம்பவும் சக்தி பெற்றவர்கள். வலு உள்ளவர்கள். அவர்களோடு நான் எப்படி செல்லாமல் இருக்க முடியும்? என்னை எப்படி அவர்கள் விடுவார்கள்? நான் ஏதாவது சொன்னால் என்னிடத்திலிருந்து எப்படி அதை ஏற்றுக் கொள்வார்கள்? என்றெல்லாம் அவர் கேட்டார். இப்ராஹீம் பின் அத்ஹம் ரஹ் அவர்கள் அவர்களை விட்டும் தப்பிக்க முடியாது என்று தெரிந்திருந்தும் நீ பாவம் செய்யலாமா? என்று கேட்டார்கள். இல்லை என்று அவர் ஒத்துக் கொண்டார்.

இந்த ஐந்து விஷயங்களையும் கேட்ட பிறகு அவர் மனம் திருந்தி வருந்தி இறைவனிடத்தில் தவ்பா செய்து மீண்டு தூய்மையான வாழ்க்கைக்குத் தயாராகி கொண்டார்.

எனவே இறைவன் நம்மைப் பார்க்கிறான் என்ற உணர்வு வந்து விட்டால் பாவங்களை விட்டும் நாம் தூய்மையாகி விடலாம்.