ஊரடங்கு வேளையில் உஸ்தாதுமார்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தங்கள்
*ஊரடங்கு வேளையில் உஸ்தாதுமார்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தங்கள்.*
*கழிந்த வருடம் ரமளான் மாதம் 27-ம் இரவில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்ச்சியில் தனது வங்கி கணக்கு எண்ணை விளம்பரம் செய்ததற்காக சிலரால் கேலி செய்யப்பட்ட ஒரு ஸெய்யிதை (தங்கள்) உங்களுக்கு நினைவு இருக்கிறதா.?*
*அந்த பேரறிஞர் ஸெய்யித் இப்றாஹீம் கலீலுல் புகாரி தங்களைக் குறித்து மேலும் சில தகவல்களை பார்ப்போம்.*
*ஷெய்குனா பத்ருஸ்ஸாதாத் இப்ராஹிம் கலீல் புகாரி தங்கள் தலைமை தாங்கி நடத்தி கொண்டிருக்கும் மலப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு பெரிய நிறுவனம்தான் மஃதின் அகாடமி.*
*ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு இலவச கல்வி, தங்குமிடம், உணவு, உடை வழங்கி இருபது வருடமாக மிக சிறப்பாக இயங்கும் இந்நிறுவனமும் இந்த லாக்டவுண் தொடங்கியதிலிருந்து மூடப்பட்டுள்ளது.*
*ஆனால் நிறுவனம் வெளியே மூடப்பட்டிருந்தாலும் அதன் நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லை என்று சொல்லாமல் இருக்க முடியாது.*
*மாணவர்களின் நேரம் வீணாகாமல் இருக்க ஆன்லைன் வழியாக தினசரி வகுப்புகள் நடத்த வேண்டுமென்று எல்லா உஸ்தாதுமார்களுக்கும் தங்கள் கட்டளை பிறப்பித்தார்கள். சரியான விதத்தில் வகுப்புகள் நடைபெறுகிறதா என கண்காணிக்கவும் செய்வார்கள்.*
*வகுப்புகள் ஒழுங்காக நடக்கும் போது மாணவர்களின் நேரங்கள் வீணாகாமலும், அவர்களின் கல்வி சரியான முறையில் கிடைக்கவும் செய்யும்.*
*மாணவர்களின் நலனை மட்டும் பார்த்தால் போதுமா? அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் உஸ்தாதுமார்களையும் கவனிக்க வேண்டுமல்லவா?*
*வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கும் குடும்பம், குழந்தைகள், கடமைகள் இருக்குமல்லவா?*
*குறைந்த சம்பளமே முறையாக கொடுக்க முடியாத இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு ஏதாவது உபகாரம் செய்ய வேண்டும். அதற்கு என்ன செய்யலாமென சிந்தித்து கடைசியில் தங்கள் அதற்கும் நல்ல வழியையும் கண்டுபிடித்தார்கள்.*
*தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி அவர்களுக்கு தெரிந்த தனவந்தர்களிடம் விஷயங்களை புரிய வைத்து உஸ்தாத்மார்கள் மூலமாக பல பொருட்களையும் சேகரித்து இறுதியாக அனைத்தையும் சரிசமமாக பங்குவைத்து நூற்றுக்கணக்கான ஆலிம்களுக்கு முஹர்ரம் மாதம் 10- ம் தினம் மஃதின் அகாடமில் வைத்து அழகிய முறையில் விநியோகம் செய்தார்கள்..*
*இனி தங்கள் அவர்கள் என்ன கொடுத்தார்கள் என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாக இருக்குமே..?*
*ஆம்! வெறும் நூறோ ஐநூறோ, ஆயிரமோ விலைமதிப்புள்ள பொருட்களல்ல அவர்கள் கொடுத்தது..*
*இரண்டு மாதத்திற்கு தேவையான அரிசி, அரிசிமாவு, கோதுமை, சீனி, மளிகை சாமான்கள், மசாலா பொருட்கள், தின்பண்டங்கள், தேங்காய், சோப்பு, இது தவிர தேவையான காய்கறிகள், இறைச்சி, கருவாடு, பழவகைகள் என ஏராளமான பொருட்களை வழங்கி உஸ்தாதுமார்களின் கவலைகளை போக்கினார்கள்...*
*மேலும் ரமளானிலும், ஹஜ் பெருநாளிலும், இது போன்று இல்லாவிட்டாலும் இதிலிருந்து கொஞ்சம் குறைவாக தங்கள் அவர்கள் மஃதின் அகாடமியில் பணிபுரியும் நூறுக்கணக்கான உஸ்தாதுமார்களுக்கு வழங்கியுள்ளார்கள்.*
*தன் நிறுவனத்தில் பணி புரியும் உஸ்தாதுமார்களின் மீது தங்கள் கொண்டிருக்கும் அன்பும், கண்ணியமும் நம்மை மெய்சிலிர்க்க வைப்பதோடு சிலவற்றை சிந்திக்க தூண்டுகிறது.*
*வசதியும், வாய்ப்பும், பொருளாதாரமும் இருந்தும் கூட கொரோனா என்ற காரணத்தை காட்டி எத்தனை ஆலிம்கள் நிர்வாகத்தினரால் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்கள்.சில பேருக்கு சம்பளம் குறைத்தும், வேலையை விட்டு தூக்கமாட்டோம் ஆனால் சம்பளம் கிடைக்காது என்று சொல்லியும் ஆலிம்களின் கஷ்டங்களையும், நிலைமைகளையும் புரிந்து கொள்ளாமல் நடந்து கொண்டனர்.அந்த வகையில் நாம் சிந்திக்கும் போது தங்களின் செயலை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.*
*நம் குழந்தைகளுக்கு அலிஃபும், பாஉம் மற்றும் குர்ஆன் ஓதுதலை கற்றுக் கொடுக்கும் உஸ்தாதுமார்களின் வாழ்க்கை நிலையை நாம் ஆராய்ந்தது உண்டா? அதுப்போன்று நமது ஊர்களில் பள்ளிவாசலிலும், அரபிக் கல்லூரிகளிலும் பணிபுரியும் உஸ்தாதுமார்களை நினைத்து பார்த்தது உண்டா? ஒவ்வொரு மஹல்லாக்களிலுள்ள தனவந்தர்கள் நினைத்தால் பரிகாரம் காணமுடிகிற விஷயங்களை உஸ்தாதுமார்களின் தலையில் கட்டி வைத்து ஓய்வு எடுப்பவர்களுக்கு தங்கள் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்கள்...*
*இப்போதும் பல மதரசாக்கள் திறக்காமலும், பள்ளிவாசலில் வேலை இல்லாமலும் எண்ணற்ற உஸ்தாதுமார்கள் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். அல்லாஹ் அனைத்தையும் லேசாக்குவானாக!*
*அல்லாஹ்வின் திருப்பொருத்தம் மட்டுமே கருத்தில் கொண்டு தங்கள் அவர்கள் செய்யும் காரியங்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.அத்தோடு நம் ஊர்களில் பணிபுரியும் உஸ்தாதுமார்களின் தேவைகள் என்னவோ அவற்றை நிறைவேற்றிட நாம் முன்வர வேண்டும். அல்லாஹ் நாம் செய்யும் எல்லா நற்காரியங்களையும் கபூல் செய்வானாக!*
*தகவல்:*
*M.சிராஜுத்தீன் அஹ்ஸனி.*