ஹாஜியார்

ஹாஜியார்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

.............#ஹாஜியார்...............

*இப்றாஹிமுக்கு அன்று மிகவும் சந்தோஷமாக இருந்தது.விடுதலை அடைந்து விட்ட ஆயுள் தண்டனை கைதி போல ஒரு குதூகலம்.இன்றுடன் தனது கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி விட்டதாகவே அவர் நம்பினார்.அவற்றுக்கெல்லாம்
காரணம் அன்று ஜப்பார் ஊர் வருகிறார்..*

*இவ்வளவுக்கும் இப்ராஹிம் அவருக்கு சொந்தமோ, நட்போ அல்ல.ஆனால் அதற்கும் மேலாக அவருக்கு இவர் கடமைப் பட்டிருக்கிறார் என்று சொல்வதை விட கடன் பட்டிருக்கிறார் என்று சொல்வதை பொருத்தமாக இருக்கும். ஆம் இன்று ஜப்பார் ஊர் வருவதுடன் இப்ராஹிம் அவரிடம் பட்டிருந்த கடமையில் பெரும்பகுதி குறைந்து விடும்.*

*மூன்று மாதங்களுக்கு முன் வரை "வட்டி ஜப்பாராக இருந்தவர்" இன்று ஹாஜி ஜப்பாராக அல்லவா ஊர் வருகிறார்.! அந்த மூன்று மாதங்களுக்கு முன் வரை இப்ராஹிம் ஜப்பாரின் ஒரு வாடிக்கையாளர்.இப்ராஹிமின் தந்தை ஒரே மகனுக்காக வைத்து விட்டுச் சென்ற ஆஸ்திகளில் இன்று மிஞ்சி இருப்பது ஒரு சிறிய வீடும் ஒரு துண்டு நிலமும் தான்.அந்த துண்டு நிலமும் கூட இப்போது ஜப்பாரிடம் தான் இருக்கிறது...*

*இரண்டு வருடங்களுக்கு முன் மூத்த மகள் நஜ்மாவின் கல்யாணத்தின் போதுதான் அதை அடகு வைக்கும் நிலை ஏற்பட்டது.அதன் பிறகு இரண்டு வருடங்களாகவே இப்ராஹிமுடைய வருமானத்தில் எஞ்சிய பகுதி மாதாமாதம் வட்டி கட்டவே சரியாக இருக்கிறது.இதோ இரண்டாவது மகள் ஹமீதாவும் கல்யாணத்திற்கு தயாராகிவிட்டாள். அவளுக்காக இவரால் இதுவரை எதுவுமே சேர்க்கமுடியவில்லை.பாவம் ஒரு சர்க்கரை ஆலைத் தொழிலாளியான அவரால் என்னதான் சேர்க்க முடியும்?மிஞ்சுவதெல்லாம் வட்டிக்கு போய் விடுகிறதே!...*

*இந்த நேரத்தில் வட்டி வியாபாரத்தில் பெரும் புள்ளியாக இருந்த ஜப்பாருக்கு ஹஜ்ஜுக்கு போகும் எண்ணம் ஏற்பட்டது.இதோ ஹாஜியாராகவே ஊர் வந்துவிட்டார்.அவருக்கு இந்த அளவுக்கு நல்ல எண்ணத்தை கொடுத்ததற்கு இப்ராஹிம் நபிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்..*

*இப்ராஹிமுக்கு இந்த விஷயத்தில் சந்தோஷம் ஏற்பட்டதற்கு காரணம் இருந்தது.ஜப்பார் ஹாஜியாரான பிறகு மீண்டும் தனது பழைய வட்டித் தொழிலை தொடர மாட்டார் அல்லவா? இனியும் வட்டி கட்ட வேண்டி இருக்காது, கொஞ்சம் கொஞ்சமாக எப்படியாவது முதலை அடைத்து நிலத்தை திரும்ப பெற்று விடலாம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது.அதைக் கொண்டு ஹமீதாவின் கல்யாணத்தை நிறைவேற்றி விட்டால் அதன் பின் வரும் மாத சம்பளத்தை கொண்டு தன்கடைசி காலத்தை தள்ளிவிட முடியும்...*

*இப்ராஹிம் லுஹர் தொழுதுவிட்டு பள்ளியை விட்டு வெளியே வரும்போது ஜப்பாரின் வீட்டு வாசலில் கார் நின்றிருந்தது..நாலைந்து பேர் காரின் டிக்கியிலிருந்து சாமான்களை இறக்கிக் கொண்டிருந்தார்கள்.ஜப்பார் வந்து விட்டார் போலும் அவரை நேரில் கண்டு சலாம் சொல்ல எண்ணியவர் ஆண்களும் பெண்களுமாய் உறவினர்கள் வந்து போய்க் கொண்டிருந்ததால் " பிறகு வரலாம்" என்ற எண்ணத்தில் திரும்பி விட்டார்...*

*ஹமீதா போட்டுத் தந்த டீயைக் குடித்துக் கொண்டிருந்த இப்ராஹிம் வாசலில் செருப்புச்சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தார. ஜப்பார் வீட்டு கணக்கப் பிள்ளை மெய்தீன்..*

*வாரும் மெய்தீன்! செளக்கியம்தானா?*

*"உம்! செளக்கியம்தான்" என்று அசிரத்தையாக பதில் சொன்ன மெய்தீன் " உம்மை ஹாஜியார் கையோட கூட்டிக்கிட்டு வரச் சொன்னாங்க என்றார்..*

*அவசர அவசரமாக டீயை குடித்து முடித்து சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பினார்..*

*வீட்டுக்குள் நுழைந்த போது ஜப்பார் சாய்வு நாற்காலியில் கண்ணை மூடியபடி சார்ந்திருந்தார்..முதலாளி!என்று மெய்தீன் குரல் கொடுக்க கண்களை திறந்து தலை நிமிர்ந்து பார்த்தார்..*

*இப்ராஹிம் ஓடிச் சென்று சலாம் கொடுத்தார்..*

*"செளக்கியமாண்ணே!*

*இப்ராஹிமை கண்டதும் ஜப்பாரின் முகம் கடுகடுவென மாறியது" செளக்கியமெல்லாம் இருக்கட்டும் மூணுமாசமா நீ வட்டி கட்டவே இல்லையாமே! என்னாச்சி உனக்கு? என்று சீறினார்..*

*இப்ராஹிமுக்கு கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது.." அண்ணே? என்றார் அதிர்ச்சியுடன்..*

*" ஹாஜியாரேன்னு சொல்லும்" கணக்கப்பிள்ளை திருத்தினார்...*

*ஜப்பாரின் முகத்தில் புதிதாக முளைத்த தாடி நீங்கலாக மற்ற பகுதிகள் சிவந்து போய் இருந்தன..*

*" நீங்க ஹஜ்ஜுக்கு போயிருக்கீங்கண்ணுதான்...**

*"ஹஜ்ஜுக்கு போயிருந்தா என்னய்யா? மெய்தீன் இல்லே? அவன் கிட்ட கட்ட வேண்டியதுதானே!!ஆளு இருந்தா ஒரு மாதிரி இல்லேண்ணா ஒரு மாதிரியா? கர்ஜித்தார் ஜப்பார்...*

*அந்த நிமிடம் வரை இப்ராஹிம் மனதில் ஹாஜியார் ஜப்பாராக இருந்தவர் மீண்டும் வட்டி ஜப்பாராக மாறிவிட்டார்...*

*அதற்கு மேல் இப்ராஹிமுக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை.
கொஞ்சம் பொறுத்துங்குங்கண்ணே!! எப்படியும் இன்னும் ஒரு வாரத்துக்குள்ளே கட்டிடுறேன்." என்று சொல்லி விட்டு திரும்பி வந்து செருப்பை மாட்டிக் கொண்டார்..
சிதறிப்போன தனது நம்பிக்கைகளை உதறிவிட்டு நடந்தார்...*

எழுதியவர்:
நாகை B.#ஸலாஹுத்தீன்...

தகவல்:
M.சிராஜுத்தீன்அஹ்ஸனி.