சுப்ஹானல்லாஹ். அஹ்லு பைத்திற்கு உதவி செய்த ஒருவருக்கு கிடைத்த பாக்கியத்தை பாருங்கள்

சுப்ஹானல்லாஹ். அஹ்லு பைத்திற்கு உதவி செய்த ஒருவருக்கு கிடைத்த பாக்கியத்தை பாருங்கள்

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#சுப்ஹானல்லாஹ்....
#அஹ்லு_பைத்திற்கு_உதவி_செய்த #ஒருவருக்கு_கிடைத்த_பாக்கியத்தைப் #பாருங்கள்......👇👇👇👇👇

ரபீய் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். நானும் இன்னும் சிலரும் சேர்ந்து ஹஜ்ஜூக்காக பயணம் செய்தோம். நாங்கள் கூஃபா நகரை அடைந்ததும் பயணத்துக்குத் தேவையான சாமான்களை வாங்குவதற்கு கடைவீதிக்கு சென்றோம். அப்போது அங்கு பாழடைந்து போன ஒரு இடத்தில் கோவேறுக் கழுதை ஒன்று செத்து கிடந்தது. பச்சை நிற ஆடை உடுத்திய ஒரு பெண்மணி கத்தியால் அக்கழுதையின் மாமிசத்தை துண்டு துண்டாக அறுத்து ஒரு கூடையில் போட்டுக் கொண்டிருந்தாள்.

நான் அவள் அருகில் சென்று, செத்துப்போன கழுதையின் மாமிசம் உண்ணுவது (ஹராம் எனும்) தடுக்கப்பட்டு இருக்கிறதே?" என்று கூறினேன். அதற்கு அவள், ஆம்! செத்ததைச் சாப்பிடக்கூடாது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். நாங்கள் அருமை நாயகம் (ஸல்) அவர்களின் பரம்பரையைச் சேர்ந்த "சைய்யத்" குடும்பமாகும். எனது கணவர் இறந்துவிட்டார். எனக்கு வயதுக்கு வந்த நான்கு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் நான்கு நாள்களாக பசி பட்டினியோடு தான் இருக்கிறோம். எனவே, தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நிர்பந்த நிலையில் இருக்கும் எங்களுக்கு தற்போது இது ஆகுமானதாக விடுகிறது" என்று கூறினாள்.

நான் அவர்களின் வறுமை நிலையை கேட்டு நிம்மதியற்றவனாய் மன சஞ்சலத்துடன் அழுதுகொண்டே அங்கிருந்து திரும்பினேன்.

நான் இந்த வருடம் ஹஜ்ஜுக்கு வரவில்லை என்று என்னுடன் இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு, நேராக கடைவீதிக்குச் சென்று நான் ஹஜ்ஜுக்கு செல்ல வைத்திருந்த 600 வெள்ளிக்காசுகளில் 100 வெள்ளிக்காசுக்கு கோதுமை மாவு, 100 வெள்ளிக்காசுக்கு துணிமணிகளும், மீதமிருந்த வெள்ளிக்காசுகளையும் மாவுக்குள் மறைத்து வைத்து அச்சாமான்கள் அனைத்தையும் அந்த பெண்மணி வீட்டிற்கு எடுத்துச் சென்று அவளிடம் கொடுத்தேன்.

உடனே அதை வாங்கிக்கொண்ட அப்பெண்மணி அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தியவளாக, “அல்லாஹ் உன்னுடைய சகல பாவங்களையும் மன்னிப்பானாக! உமக்கு ஹஜ்ஜின் நன்மைகளை வழங்குவானாக! உமக்கு சொர்க்கத்தில் உயர்ந்ததொரு இடம் அளிப்பானாக! இந்த உதவிக்கு எவ்வாறான பிரதிபலன் உமக்கு அளிக்கப்பட வேண்டுமென்றால், அது வெளிப்படையாக உமக்கும் தெரிந்து விடவேண்டும்!" என்று மனமுருகி எனக்காக பிரார்த்தனை செய்தாள். அதுபோன்றே அவளின் நான்கு மகள்களும் எனக்காக பிரார்த்தனை செய்தனர்.

சில நாட்களுக்குப் பிறகு ஹாஜிகள் ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தனர். நமக்கு ஹஜ் செய்யும் பாக்கியம் கிடைக்கவில்லையே! என்ற ஏக்கத்தோடு நான் அவர்களிடம் "அல்லாஹ் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல பிரதிபலன் அளிப்பானாக! உங்கள் ஹஜ்ஜை ஏற்றுக் கொள்வானாக! என்று வாழ்த்து கூறினேன்.

அவர்கள், "இந்த பிரார்த்தனை எப்படிப்பட்டது? என்றனர்.
அதற்கு நான் "வாசல் வரை செல்லும் பாக்கியத்தை இழந்த ஒரு மனிதனுடைய பிரார்த்தனை" என்றேன்.

உடனே அவர்கள், "இது ஆச்சரியமான பேச்சாக அல்லவா இருக்கிறது? நீர் அங்கு சென்றிருந்ததை மறுக்கின்றீரே? நீர் அரபகத்தின் வெளியில் எங்களுடன் இருக்கவில்லையா? நீர் எங்களுடன் தவாப் செய்யவில்லையா? நீர் எங்களுடன் ஷைத்தானுக்கு கல்லெறியவில்லையா? என்று அடுக்கிக் கொண்டே போனார்கள். அவர்களில் ஒருவர் சற்று முன்னே வந்து, "சகோதரரே! ஹஜ்ஜுக்கு வரவில்லை என்று ஏன் மறுக்கின்றீர்? அப்படி கூறக் காரணம் என்ன? நீர் எங்களுடன் மக்காவில் இருக்கவில்லையா? அல்லது மதீனாவில் இருக்கவில்லையா? நாம் சங்கைபொருந்திய அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மண்ணறையை ஸியாரத் செய்துவிட்டு, பாபே ஜிப்ரீல் வாசல் வழியாக வெளியே வந்து கொண்டிருக்கும்போது கூட்டத்தின் நெருக்கடியின் காரணமாக இந்தப் பையை என்னிடம் அமானிதமாக வைக்கச் சொல்லி நீர் கொடுக்கவில்லையா? அதன் வாய் முத்திரையின் மீது ( مَنْ عَامَلَنَا رَبِحَ ) "எமக்காக செயல்படுபவர் இலாபமடைவார்" என்று எழுதப்பட்டுள்ளது. இதோ உன்னுடைய பை, திரும்ப பெற்றுக் கொள்வீராக!" என்று கூறி பையை என்னிடம் ஒப்படைத்தார்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அப்பையை அதற்கு முன் பார்த்ததே இல்லை. அதை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினேன். இஷா தொழுதுவிட்டு, வழக்கமாக ஓத வேண்டிய அனைத்தையும் ஓதி முடித்துவிட்டு, நடைபெற்ற சம்பவம் தான் என்ன? என்று சிந்தித்தவாறே தூங்கிவிட்டேன்.

அன்றைக்கு கனவில் அருமை நாயகம் (ஸல்) அவர்களைக் கண்டு சலாம் கூறி, அன்னாரின் திருக்கரங்ககளை பிடித்து முத்தமிட்டேன். நபியவர்களும் புன்முறுவல் பூத்தவாறு பதில் சலாம் கூறினார்கள். மேலும், நபியவர்கள், “நீர் ஹஜ் செய்தாய் என்பதற்கு எத்தனை சாட்சிகளை தான் நாம் நியமிப்பது? நீரோ நம்ப மறுக்கிறீரே! நீர் ஹஜ் செல்வதற்கு வைத்திருந்த தொகையை எம்முடைய குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு நீர் தர்மம் செய்துவிட்டு உனது ஹஜ்ஜை தள்ளிப்போட்டாய். அதனால் நான் அல்லாஹ்விடம் உனக்கு அழகிய பகரம் கிடைக்கவேண்டுமென பிரார்த்தித்தேன்.

எனவே, அல்லாஹ் ஒரு வானவரை உன்னுடைய உருவத்தில் படைத்து, அவருக்கு மறுமைநாள் வரை ஒவ்வொரு ஆண்டும் உன் சார்பாக ஹஜ் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளான். மேலும் அல்லாஹ், உலகில் உனக்கு அந்த 600 வெள்ளிக்காசுகளுக்கு பகரமாக 600 தங்கக்காசுகளை கொடுத்துவிட்டான். எனவே, நீர் சந்தோஷம் பெறுவீராக!” என்று கூறிய பின்னர் நபியவர்களும் அந்த பணப்பையின் முத்திரையில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை கூறினார்கள். நான் தூங்கி எழுந்த பிறகு அந்த பணப்பையை திறந்து பார்த்தபோது அதில் 600 தங்கக்காசுகள் இருந்தன. நூல்:- ருஷ்பதுஸ் ஸாவீ

தகவல்:M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி