மீலாத் விழா கொண்டாடிய அபுலஹபிற்கு அல்லாஹ் வழங்கிய அன்பளிப்பு
மீலாத் மவ்லித்

மீலாத் விழா கொண்டாடிய அபுலஹபிற்கு அல்லாஹ் வழங்கிய அன்பளிப்பு

Sirajudheen Ahsani
எழுத்தாளர்

#மீலாது_விழா_கொண்டாடிய #அபூலஹபிற்கு_அல்லாஹ்_வழங்கிய #அன்பளிப்பு.

உர்வா (ரலி) அவர்கள் வாயிலாக இமாம் புகாரி (ரஹ்) அறிவிப்பு செய்கிறார்கள்.

உர்வா (ரலி) சொல்கிறார்கள்:_ ஸுவைபத் என்கிற பெண்மணி அபூலஹபின் அடிமையாக இருந்தாள்.(நாயகம் (ﷺ) அவர்களின் பிறந்த செய்தியை கேட்டவுடன்) அபூலஹப் அப்பெண்மணியை விடுதலை செய்தான்.அவ்விதம் அப்பெண்மணி நாயகம் (ﷺ) அவர்களுக்கு பால் கொடுத்தார்கள்.அபூலஹப் மரணித்த வேளையில் அவரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் இவரை மோசமான நிலையில் கனவு கண்டார்.அவர் அபூலஹபிடம் அவரின் நிலைப்பற்றி விசாரித்தார்.அப்போது அபூலஹப் சொன்னான்! எல்லா திங்கட்கிழமையிலும் ஸுவைபத்தை விடுதலை செய்த காரணத்தால் என் விரல்களுக்கிடையிலிருந்து அழகிய பானம் வழங்கப்படுகிறது.(புகாரி 5101)

இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் பதிவு செய்த இந்த ஹதீஸிலிருந்து சில விஷயங்களை நாம் புரிந்து கொள்ளலாம்.

1 : இது கேவலம் ஒரு கற்பனைக் கதையல்ல. பகுத்தறிவுக்கு எதிரானவைகளை பதிவு செய்வது இமாம் புகாரி (ரஹ்) அவர்களின் வழக்கமல்ல.

2 : இது ஒரு கற்பனைக் கதையாக இருந்தால் ஹதீஸ் கலை அறிஞர்கள் இதை பதிவு செய்ய முற்பட்டிருக்க மாட்டார்கள்.மாறாக அவர்களே தங்களது நூல்களில் சரியான விதத்தில் பதிவு செய்ததிலிருந்து இது ஒரு கற்பனை பாத்திரமல்ல என்பதை அறிந்து கொள்ளலாம்.

3 : ஸுவைபத்தை அபூலஹப் விடுதலை செய்தது திருநபி பிறந்த மகிழ்ச்சியின் காரணத்தினால் தான் மட்டுமே. (அப்பெண்மணியை திருநபியின் ஹிஜ்ரா வேளையில் விடுதலை செய்யவில்லை) திருநபிக்கு அப்பெண்மணி பால் கொடுத்தது அபூலஹப் அவரை விடுதலை செய்த பிறகு தான் என்பதை ஹதீஸிலிருந்து விளங்கி கொள்ள இயலும்.

4 : புகாரி இமாமுக்கு எதிராக தொடுக்கப்படும் வரலாறு தொடர்பான குற்றச்சாட்டுகளை நிராகரித்து விட வேண்டும். அவையை அங்கீகரிக்க கூடாது.(சில நபர்கள் இமாம் புகாரி மீது பலவீனமான ஹதீஸ்களை பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்) இது நமக்கு ஃபத்ஹுல் பாரியிலிருந்து விளங்கி கொள்ளலாம்.

5 : திருநபியின் பிறந்த தினத்தில் மகிழ்ச்சியடைந்த அபூலஹபிற்கு நரக தண்டனையிலிருந்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் கொஞ்சம் மனநிம்மதி கிடைப்பதாக இமாம் புகாரி (ரஹ்) அறிவிப்பு செய்கிறார்கள்.

6 : காபிர்களின் நற்செயல்கள் அங்கீகரிக்கப்படுவதோ, நன்மை கிடைப்பதோ இல்லை என்று சொல்கிற அறிஞர்கள் நாயகம் (ﷺ) அவர்களை அன்பு வைக்கின்ற காபிர்களுக்கு பலன் கிடைக்குமென இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு சொல்கின்றனர்.
ஃபத்ஹுல் பாரி 1/104.

7 : அபூலஹப் ஸுவைபத்தை விடுதலை செய்தது நாயகம் (ﷺ) அவர்கள் பிறந்த காரணத்தால் தான் என அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இப்னு ஹஜருல் அஸ்கலானி, இப்னு கஸீர் போன்றவர்கள் இவ்விதம் அறிவிப்பு செய்துள்ளார்கள்.

8 : அடிமையை விடுதலை செய்த காரணத்தால் அபூலஹபிற்கு புண்ணியம் கிடைக்கவில்லை.ஏனெனில் காஃபிர்களின் நற்செயல்கள் அங்கீகரிக்கப்பட மாட்டாது. மாறாக திருநபியின் மீது அவர் கொண்டிருந்த அன்பினால்தான் அவருக்கு இந்த மகத்துவம் கிடைக்கிறது. திருநபி மீது அன்பு வைக்கும் காரணமாக இம்மை, மறுமை பலன் காஃபிர்களுக்கும் கிடைக்குமென அறிஞர்கள் விளக்கமளித்துள்ளதை காணலாம்.

9 : அபூலஹபை கனவில் கண்டவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களாகும்.

10 : நபித்தினத்தில் மகிழ்ச்சி வெளிப்படுத்தலாமென இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

ஸஹாபாக்கள் திருநபியின் பிறந்த தினத்தில் நாயகம் (ﷺ) அவர்கள் பிறந்த இடத்தை சந்தித்தும், திங்கட்கிழமை நோன்பு பிடித்தும் மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

இமாம் ஷம்ஸுத்தீன் திமஷ்க் கூறுகிறார்கள்.

நரகத்தில் நிலையானவனும், தன் கரங்களுக்கு நாசம் சம்பவித்தவனும், குர்ஆன் மூலம் பெயர் கூறி சபிக்கப்பட்டவனுமான அபூலஹபிற்கு திருநபியின் பிறந்த தினத்தில் மகிழ்ச்சியடைந்த காரணத்தால் எல்லா திங்கட்கிழமை கிழமையும் நரக தண்டனையிலிருந்து சிறிய சலுகை கிடைக்கிறதென்றால் உண்மையான சத்திய விசுவாசிகளுக்கு தன் வாழ்நாள் முழுவதும் திருநபியின் பிறந்த தினத்தில் மகிழ்ச்சியடையும் காரணம் அவனுக்கு எவ்வளவு மகத்தான நன்மைகள் கிடைக்கும்?
(ஃபத்தாவா ஸுயூத்தி 1/189)

அபூலஹப் ஸுவைபத்தை விடுதலை செய்த சம்பவத்தைபதிவு செய்த பின் இமாம் ஜஸ்ரி (ரஹ்) கூறுகிறார்கள். குர்ஆன் பெயர் எடுத்து கூறி சபித்த இறை நிராகரிப்பாளரான அபூலஹபிற்கு திருநபியின் பிறந்த தினத்தில் மகிழ்ச்சியடைந்த காரணத்தால் நரக தண்டனையிலிருந்து சலுகை வழங்கப்படுமெனில் அவர்கள் பிறந்த தினத்தில் மகிழ்ச்சியடைகிற, காலமெல்லாம் திருநபியின் மீது அன்பு கொள்கிற இந்த உம்மத்திலே விசுவாசிகளுக்கு எவ்வளவு மகத்தான நன்மைகள் கிடைக்கும்.அல்லாஹ் அவனுடைய மாபெரும் அருளால் அந்த மனிதனை சுவனத்தில் நுழைய செய்வான். இதுதான் அந்த மனிதனுக்கு கிடைக்கும் மகத்தான கூலி.

யா அல்லாஹ்! நாயகம் (ﷺ) அவர்கள் மீது அன்பு வைக்கும் காரணமாக எங்களை நாயகத்துடன் சுவனத்தில் நுழைய செய்து, மீலாது விழாக்களை சிறப்பு செய்யும் நல்லடியார்கள் கூட்டத்தினரில் எங்களை சேர்த்து அருள்புரியவாயாக!

தகவல்: M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.
இயக்குனர்:மைமூன் பப்ளிஷிங் ஹவுஸ்
திருவிதாங்கோடு
குமரி மாவட்டம்