சவூதி தேசிய தினமும் மீலாத் விழாவும்
*#சவூதி_தேசிய_தினமும்
#மீலாது_விழாவும்*
*அனைத்து நாடுகளிலும் வாழும் முஸ்லிம் பெருங்குடி மக்கள் ரபீஉல் அவ்வல் மாதத்தில் அல்லாஹ்வின் அருட்கொடையாய் அகிலத்தில் அவதரித்த அண்ணல் நபி(ﷺ) அவர்களின் பிறப்பில் நன்றியும்,மகிழ்ச்சியும் கொண்டு அவர்கள் வரலாறு கூறும் மவ்லித் ஓதுகின்றனர்.மீலாது விழாக்கள் கொண்டாடுகின்றனர், அன்னதானம் வழங்குகின்றனர், இஸ்லாமின் விழுமிய கொள்கைகளை பொதுக் கூட்டங்கள் வழியாய் மக்களுக்கு போதிக்கின்றனர். இக_பர நன்மைகளை தந்திட வேண்டி அல்லாஹ்விடம் இதயமுருக இறைஞ்சுகின்றனர்.*
*இத்தகைய மவ்லித், மீலாத் விழாக்களால் இஸ்லாம் பலவீனப்பட்டு போவதாகவும், இஸ்லாமிய கொள்கைகள் தகர்க்கப்படுவதாகவும்,மீலாது விழாக்களில் இஸ்லாமுக்கு உகந்த செயலுமில்லை எனவும்" அன் இன்ஸாப் பீமா கீல பில் மவ்லித்" எனும் தமது புத்தகத்தில் கூறுகிறார் வஹ்ஹாபிய மதத்தை சார்ந்த அபூபக்கர் அல்ஜஸாயிரி என்பவர்.*
*இஸ்லாமை தூய வடிவில் போதிக்க அவதாரம் எடுத்தவர்கள் என்று கூறிக்கொண்டு உலா வரும் உலகெங்குமுள்ள போலி ஏகத்துவ வாதிகள் இதைக் கருத்தைத் தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.*
*ரபீஉல் அவ்வல் மாதம் வந்து விட்டால் " மீலாது விழா கொண்டாடதீர்கள், மவ்லித் ஓதாதீர்கள், அதன் மூலம் பெருமானார் (ﷺ)அவர்கள் மீது கொண்டுள்ள மஹப்பத்தை வெளிப்படுத்துதல் தேவையற்ற செயல்' என்ற இவர்களது ஒப்பாரி மூலை முடுக்கெல்லாம் ஓயாது ஒலிப்பதைக் கேட்கலாம்.*
*மீலாது விழாக்களால் இஸ்லாம் எந்த வகையில் பலவீப்படுகிறது?*
*மீலாது விழாக்களால் இஸ்லாமியக் கொள்கைகள் எப்படி தகர்க்கப்படுகிறது?*
*புரியவில்லை நமக்கு*
*மீலாது விழாக்களில்....*
*மரத்துப் போய்விட்ட நெஞ்சங்களில் இஸ்லாமிய வழிகாட்டுதல்கள் பதிய வைக்கப்படுகிறது.இஸ்லாமின் இனிய கொள்கைகள் போதிக்கப்படுகிறது.*
*அண்ணல் நபி(ﷺ) அவர்களின் சீரிய வரலாற்று நிகழ்வுகள் மக்களுக்கு விளக்கிச் சொல்லப்படுகிறது.*
*மவ்லிதுகளில்....*
*நபி(ﷺ)அவர்கள் மீது புகழ் பாக்கள் பாடப்படுகின்றன.*
*நா மணக்க, இதயம் நிறைய ஸலவாத்துகள் சொல்லப்படுகின்றன.*
*இப்படிப்பட்ட நல்ல விஷயங்கள் இஸ்லாமுக்கு உகந்த விஷயங்களாக இவர்களுக்குப் படவில்லையாம்!*
*இவை இஸ்லாமை தகர்க்கிறதாம்.*
*இஸ்லாமை பலவீனப்படுத்துகிறதாம்!*
*ஆனால் நடுநிலையோடு சிந்தித்தால் மீலாது விழாக்கள் சமுதாயத்திற்கு ஒரு புத்துணர்வை ஏற்ப்படுத்துகின்றன என்ற உண்மை நிலை புரிய வரும்.*
*நபி (ﷺ)அவர்களின் நினைவைப் போற்றுதல் நல்ல விஷயம் அல்ல, இஸ்லாமை பலவீப்படுத்தும், தகர்க்கும் செயல் என்று சொல்பவர்கள் எப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்களாக இருப்பர்? என்பதை சிந்தித்துப் பாருங்கள்.*
*" நபி(ﷺ) அவர்கள் மீதுள்ள நேசம் இறை நம்பிக்கையாளர்களிடம் குடி கொண்டிருக்க வேண்டும். ஒரு போதும் அந்த நேசம் அவரை விட்டு அகலக் கூடாது, ஏனெனில் நபியுல்லாஹ்வை நேசித்தல் கடமையாகும்.எனவே மீலாது விழா என்ற பெயரில் வருடத்திற்கொருமுறை அதை எடுத்துச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை. அப்படிச் செய்தல் வீண் வேலை"*
*" மறந்து போவர் என்று கருதி நினைவு நாட்களை ஏற்பாடு செய்பவன் நபியுல்லாஹ்வை நினைக்காதவனாவான்.நினைப்பவன் மறக்க மாட்டான். எனவே (மீலாது விழா) ஏற்கனவே வழக்கத்திலிருக்கிற ஒன்றை மீண்டும் செய்வதாக ஆகும்.இப்படிச் செய்தல் பாழ் வேலை என்பதும்,அறிவுள்ளவர்கள் செய்யமாட்டார்கள் என்பதும் உறுதி"*
*"மீலாது விழாக்களில் இஸ்லாமுக்கு உகந்த எந்தச் செயலுமில்லை" என்று கூறும் ஜஸாயிரி போன்ற போலி ஏகத்துவ வாதிகள் அதற்குக் கண்டு பிடித்துச் சொல்லும் காரணங்கள் இவை.*
*இந்த வாதத்தை அறிவுள்ளவர்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?*
*தொழுகை இஸ்லாமிய கடமைகளில் ஒன்று.*
*நாளொன்றுக்கு ஐவேளைகள் தொழுதல் கடமை என்பதை அனைத்து முஸ்லிம்களும் தெரிந்து வைத்திருக்கின்றனர்.*
*எனவே தொழுகையை கட்டாயமாக நிறைவேற்றியாக வேண்டும் என்று அறிந்து வைத்திருக்கிற ஒரு முஸ்லிமுக்கு கண்டிப்பாக ஐவேளை தொழுதாக வேண்டும் என்றோ, தொகையை நிறைவேற்றும் முறைகளைப் பற்றியோ எடுத்துச் சொல்தல் இவர்களின் வாதப்படி வீண் வேலை.*
*வருடத்திற்கொருமுறை ரமலான் மாதம் முழுக்க நோன்பிருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் தெரிந்து வைத்திருக்கிருக்கிற காரணத்தால் நோன்பைப் பற்றியோ, அதன் சிறப்பைப் பற்றியோ, நோன்பாளிக்குக் கிடைக்கிற நற்கூலிகளைப் குறித்தோ எடுத்துரைத்தல் இவர்களின் வாதப்படி பாழ் வேலை.*
*ஏனென்றால் வழக்கத்திலிருக்கிற ஒன்றை திரும்பத் திரும்ப நினைவூட்டுதல் பாழ் வேலையும், அறிவுள்ளவர்கள் செய்யாத செயலுமாகும்(!).*
*இன்றைய முஸ்லிம் நாடுகள் அனைத்தும் "ஈத் மீலாதுல் வதனி" என்ற பெயரில் தேசிய தினங்களையும், சுதந்திரத் தினங்களையும் ஆண்டு தோறும் விமரிசையாகக் கொண்டாடுகின்றன.*
*அன்றைய நாள் பொது விடுமுறை அளித்து, பலவித விளையாட்டு, வினோத நிகழ்ச்சிகளை அரசுகளே ஏற்பாடு செய்கின்றன.*
*அரசு தொலைக்காட்சி உட்பட அனைத்து சானல்களிலும் நாள் முழுக்க நாட்டின் உதயம், வளர்ச்சி, ஆட்சியாளர்களின் சேவைகள் பற்றிய கலந்துரையாடல்கள், கறுத்துரங்குகள், குறும்படங்கள், சிறுவர், சிறுமியரின் கலைநிகழ்ச்சிகள் ஒளி பரப்பப்படுகின்றன.*
*செய்தி பத்திரிகைகள் முழுப் பக்க வாழ்த்துச் செய்திகளையும், விளம்பரங்களையும் தாங்கிய பல பக்கச் சிறப்பு மலர்கள் வெளியிட்டு தமது நாட்டுப் பற்றை வெளிப்படுத்தி மகிழ்கின்றன.*
*பிறந்த தேசத்தின் மீது பற்றும், பாசமும் கொள்ள வேண்டும் என்பதை ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து வைத்திருக்கின்றான்.*
*அதனாலேயே அநியாயமாக அபகரித்துக் கைவசப்படுத்தி வைத்திருக்கும் ஃபலஸ்தீன் மண்ணை இஸ்ரேலிய அரக்கர்களிடமிருந்து மீட்டெடுக்க ஒவ்வொரு ஃபலஸ்தீன் ஆணும், பெண்ணும் தமது உயிரைத் துச்சமென மதித்து போராடி வருகின்றனர்.*
*பரங்கியர்களிடமிருந்து இந்தியத் தாய் மண்ணை மீட்டெடுக்க எல்லா தரப்பு மக்களும் உயிரைப் பணயம் வைத்து போராடினர்.அவர்களில் முன்னணிப் போராளிகளாய் இந்திய உலமாப் பெருமக்கள் விளங்கினர்.*
*எனவே எதற்காக ஆண்டு தோறும் இஸ்லாமிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளும் தேசிய தினங்களைக் கொண்டாட வேண்டும்?*
*அன்னிய ஆதிக்க சக்திகளிடமிருந்து நாடு சுதந்திரம் பெற்ற தினத்தைக் கொண்டாட சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்?*
*சவூதி அரேபியா உட்பட முஸ்லிம் நாடுகள் தேசிய தினம் கொண்டாடுவதையும்,சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வதையும் பாழ் வேலை, வீண் வேலை என்று ஜஸாயிரியைப் போன்றவர்கள் ஃபத்வா கொடுப்பார்களா?*
*பொது விடுமுறை அளிக்கும் சவூதி அரசைக் கண்டித்து அறிக்கைகள் விடுவார்களா?*
*தேசிய தினத்தை கோலகலமாக கொண்டாடுவது ஹலாலாம்.*
*குப்ர், ஷிர்க் எனும் மாபாதக அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற்று தந்திட அவதரித்த ஒரு மகானுபவரின் உதய தினத்தை நினைவு கூறுதல் ஹறாமாம். அது இஸ்லாத்துக்கு உகந்ததல்லவாம்.*
*தேசிய தினக் கொண்டாட்டங்களிலாவது ஆட்டம், பாட்டம் நடைபெறுகின்றன.*
*ஆனால் மீலாது விழாக்களில் வீண், விநோத நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை.*
*நபி புகழ்பாடுதல்,ஸலவாத்துச் சொல்தல், பொதுக் கூட்டங்கள் வழியாய் மார்க்க போதனைகள் செய்தல், நபி(ﷺ) அவர்களின் வரலாறு கூறுதல், அன்னதானம் வழங்கல் போன்ற நற்காரியங்கள் மட்டுமே நடைபெறுகின்ற.*
*அநியாயமாக தகர்க்கப்பட்ட பாபரி மஸ்ஜிதுக்காக விளம்பரத்தை மட்டும் கருத்திற் கொண்டு ஆண்டுதோறும் கோலகலமாக விழாக்களும், ஊர்வலங்களும் நடத்துபவர்களின் கண்களுக்கு அகிலத்தின் அருட்கொடை, அழகிய முன்மாதிரிகளின் உறைவிடம் அண்ணல் முஹம்மத் முஸ்தபா(ﷺ) அவர்கள் மீது கொண்டுள்ள நேசத்தின் வெளிப்பாடாகக் கொண்டாடப்படும் மீலாது விழாக்கள் மார்க்க முரணாக தெரிவது வினோதம்...*
*பாபரி மஸ்ஜித் போன்ற கோடானு கோடி மஸ்ஜிதுகள் இப்பூமுகத்து உருவாகவும்,அவற்றில் ஏக இறைவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணங்கப்படவும் காரண கர்த்தராக அமைந்த நபி(ﷺ) அவர்களைப் போற்றும் வகையில் மீலாது விழாக்கள் நடத்துவது கூடாதாம்.*
*அதில் ஷிர்க், பித்அத் வேறு என்னென்ன பெயர்கள் உண்டோ அவை வந்து சேருகிறதாம்...*
*பெருமானார் நபி(ﷺ) அவர்களை நம்மைப் போன்றதொரு மிகச் சாதாரண மனிதர் என்று பார்க்கின்ற அரைகுறைப் பார்வையின் காரணத்தாலேயே இவ்வாறான தவறான சிந்தனைகள் ஏற்படுகின்றன.*
*எனவே "மீலாது விழாக்களும் மவ்லித் பாராயணமும் தவறு" என்று கூறுதல் சிந்தனைக் கோளாறால் ஏற்பட்ட விபத்து இவர்களுக்கு ஆன்மீக மருத்துவம் பார்க்க வேண்டியது அவசியம்.*
*எம். மவ்லவி அப்துல் கரீம் அல்ஜீலி அவர்கள் எழுதிய மவ்லித்_மீலாது விழா என்ற நூலிலருந்து.*
*தகவல்; M.#சிராஜுத்தீன்அஹ்ஸனி.*